search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியம்சன்
    X
    வில்லியம்சன்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் - வில்லியம்சன் இரட்டை சதம்

    ஹாமில்டனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 519 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    ஹாமில்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஹாமில்டனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நியூசிலாந்து தொடக்க வீரர் யங் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் டாம் லாதம் - கேப்டன் வில்லியம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. டாம் லாதம் 86 ரன்னில் ஆட்டம் இழந்தார். வில்லியம்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 78 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்திருந்தது. வில்லியம்சன் ஆட்டம் இழக்காமல் 97 ரன்னுடனும், டெய்லர் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. வில்லியம்சன் தனது 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். டெய்லர் 38 ரன்னிலும், அடுத்து வந்த நிக்கோலஸ் 7 ரன்னிலும், பிளன்டெல் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    ஆனாலும் வில்லியம்சன் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜேமிசன் உறுதுணையாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தார். இது அவரது 3-வது இரட்டை சதம் ஆகும். அவர் 251 ரன்னில் ஆட்டம் இழந்தார். இது இன்னிங்சில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    நியூசிலாந்து அணி 145 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜேமிசன் 51 ரன்களுடனும், டிம்சவுத்தி 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச், கேப்ரியல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை விளையாடியது. ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 49 ரன் எடுத்து இருந்தது. கேம்பல் 22 ரன்னுடனும், பிராத்வெயிட் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    Next Story
    ×