என் மலர்
விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘யார்க்கர்’ பந்து வீச்சில் அசத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்துக்கான இந்திய அணிக்கு முதல்முறையாக தேர்வானார். நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்ததுடன் தன் மீதான எதிர்பார்ப்பையும் மெய்யாக்கினார்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த 29 வயதான நடராஜன் ஏழ்மையை வென்று தனது விடாமுயற்சியால் இந்திய அணியில் இடம் பிடித்ததை தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சர்வதேச முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டினார்கள்.
இந்த நிலையில் நடராஜன் நேற்று தனது டுவிட்டர் பதிவில், ‘இந்திய அணிக்காக ஆடியது நம்ப முடியாத, புதுமையான அனுபவமாக இருந்தது. எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. கூடுதல் சவால்களை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் நேற்று நடந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேக்கப்பந்து வீச்சாளர் நடராஜன் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே இரண்டு முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது, சேலம் அருகே தாரமங்கலத்தை அடுத்த சின்னப்பம்பட்டி தான் நடராஜனின் சொந்த ஊர். தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கரம்பாக கிடக்கும் வயல்வெளி பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடுவார்கள். நடராஜனும் அவ்வாறு விளையாடியவர்தான். கல்லூரியில் படிக்கும்போது அவர் வகுப்பறையில் இருந்த நேரத்தைவிட கிரிக்கெட் விளையாட்டுக்காக மைதானத்தில் இருந்த நேரம் அதிகம்.
இவரின் தந்தை தங்கராஜ் ரெயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை பார்த்தவர். தாயார் சாந்தா கூலி தொழிலாளி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் நடராஜன். கிரிக்கெட்டில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற வேட்கை நடராஜனுக்கு இருந்தது.
சிறிய வயதில் இருந்தே வறுமையின் பிடியில் சிக்கி, பல போராட்டங்களை சந்தித்த இவர், பென்சில், பேனா போன்ற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கே சிரமப்பட்டுள்ளார். 5 வயதில் டென்னிஸ் பந்தின் மூலம் கிரக்கெட் விளையாட தொடங்கிய நடராஜன், தனது 20-வது வயதில் தான், கிரிக்கெட் பந்தை முதன்முறையாக பார்க்கிறார்.
கடினமாக பயிற்சி செய்து, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய அவரை ஜெயப்பிரகாஷ் என்பவர்தான் சென்னை கிரிக்கெட் கிளப்பில் சேர்த்துவிட்டார். கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் டிவிஷ்னல் மேட்சுக்கு தேர்வானார். பின்னர் சென்னை கிரிக்கெட் அணியின் கீழ்நிலைப் பிரிவில் சேர்ந்தார்.
இந்த சமயங்களில் அவர் காயத்தால் பலமுறை அவதிப்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு திறமையை நிரூபிக்க துவங்கினார். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2017-ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை 3 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்து 2019ம் ஆண்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நகர்ந்தார்.
இந்த சீசனில் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக வெளியேறியதால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘யார்க்கர் கிங்’ என்னும் பட்டத்தைச் சொந்தமாக்கி, ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்.
நவ்தீப் சைனி முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால், ஒருநாள் தொடரிலும் மாற்று வீரராக நடராஜன் பெயர் இடம்பெற்றது. இதற்கான அறிவிப்பை, முதல் ஒருநாள் போட்டி தொடங்கும்முன் பிசிசிஐ அறிவித்தது. இருப்பினும். நவ்தீப் சைனி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றார், இரண்டாவது போட்டியில் 7 ஓவர்களுக்கு 70 ரன்கள் வாரி வழங்கியதால் நடராஜன் அணியில் சேர்க்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
3-வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய நடராஜன் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மார்னஸ் லபுஷேன், ஆஸ்டன் ஆகர் ஆகியோரை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவரது விளையாட்டை அவரது சொந்த ஊர் மக்கள் டிவியில் பார்த்து ரசித்தனர். எப்போதும் கிரிக்கெட்டே பார்க்காத அவரது ஊர் மக்கள் தனது சொந்த ஊர் பையன் விளையாடுகிறான் என்று டிவியில் கிரிக்கெட்டை பார்த்தனர். முதல் போட்டியிலேயே 2 விக்கெட் எடுத்ததால் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.
அவரது தாய் சாந்தா, தங்கை தமிழரசி, உறவினர்கள் அனைவரும் நடராஜனின் பந்து வீச்சையும், கிரிக்கெட்டையும் டிவியில் பார்த்து ரசித்தனர். சர்வதேச போட்டியில் விளையாடும் மகனை டிவியில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக தாய் சாந்தா தெரிவித்தார். அவரது தங்கை தமிழரசி மற்றும் உறவினர்கள் நடராஜன் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை படைப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
நடராஜனின் சாதனைப் பயணம் மேலும் தொடர வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நாளை முதல் தொடங்க உள்ள டி-20 தொடரிலும் இவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேமில்டன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் 5 விக்கெட்டிலும், 2-வது ஆட்டத்தில் 72 ரன் வித்தியாசத்திலும் நியூசிலாந்து வெற்றிபெற்றது. 3-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் ஹேமில்டனில் இன்று தொடங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டாம் லாதமும், வில்யங்கும் களம் இறங்கினார்கள்.
யங் 5 ரன்னில் கேப்ரியல் பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு லாதமுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை விளாசி தள்ளி ரன்களை சேர்த்தது.
இருவரும் சிறப்பாக ஆடி அரை சதத்தை தொட்டனர். டாம் லாதம் 86 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை கேமர்ரோச் கைப்பற்றினார். அப்போது வில்லியம்சன் 63 ரன்னில் இருந்தார். அடுத்து முன்னாள் கேப்டன் ரோஸ்டெய்லர் களம் வந்தார்.
இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 243 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளனர். கேப்டன் வில்லியம்சன் 97 ரன்களுடனும் டெய்லர் 31 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
கான்பெரா:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்று 20 ஓவர் தொடரின் முதல் போட்டி கான்பெராவில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி 20 ஓவர் தொடரையாவது கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கடைசி ஒருநாள் போட்டியில் பெற்ற ஆறுதல் வெற்றி இந்திய வீரர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. இந்திய அணி கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துடன் 20 ஓவர் தொடரில் மோதியது.
இதில் 5 போட்டியிலும் வென்று அந்த அணியை அதன் சொந்த மண்ணில் ‘ஒயிட்வாஷ்’ செய்தது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்திடம் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஓவர் போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 2 போட்டியில் வெற்றி பெற்றது.
இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. 3 போட்டி கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
தற்போதுள்ள இந்திய அணி பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறது. ஹர்த்திக் பாண்ட்யா சிறந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இந்த தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இதேபோல கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், தவான், ஸ்ரேயாஷ் அய்யர், ஜடேஜா ஆகியோரும் 20 ஓவர் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீரர் டி.நடராஜன், சுழற்பந்து வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 2 தமிழக வீரர்கள் இடம்பெற்று உள்ளனர்.
இதில் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தினார். தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலேயே அவர் சாதித்தார். 20 ஓவர் போட்டியிலும் அவர் ஆதிக்கத்தை செலுத்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் நடராஜன் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். யார்க்கர் பந்து வீசுவதில் அவர் வல்லவர். இதேபோல வாஷிங்டன் சுந்தரும் நேர்த்தியுடன் பந்துவீசக் கூடியவர்.
இதேபோல பும்ரா, முகமது ஷமி, தீபக் சாஹர், யசுவேந்திர சாஹல் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர்.
ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் பேட்டிங், பந்து வீச்சில் அந்த அணி சம பலத்துடன் உள்ளது.
கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், கும்மின்ஸ், ஹாசல்வுட் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர். வார்னே விளையாடாதது அந்த அணிக்கு பாதிப்பே.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவிஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.






