என் மலர்
விளையாட்டு



முதலாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் வீராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தநிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைக்க விரும்புகிறோம் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீரர் போல்ட் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
நியூசிலாந்து அணி சொந்த மண்ணிலும், உலகின் பல இடங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதை பார்க்கும் போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலும் புதிய வரலாறு படைக்கும் தகுதி நியூசிலாந்துக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன்.
இந்த போட்டியில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களில் வாய்ப்பு கிடைத்தால் மும்பை அணிக்காக மீண்டும் களம் இறங்குவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பு நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரும், 18 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) தொடக்க சுற்றில் அமெரிக் காவை சேர்ந்த டெனிஸ் சாண்ட்கிரணை எதிர்கொண்டார். 2016-ம் ஆண்டு சாம்பியனான ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் 13 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்), 9-வது நிலை வீரரான பெரிடினி (இத்தாலி), 10-வது இடத்தில் உள்ள டியாகோ சுவார்ட்சன்மேன் (அர்ஜெண்டினா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
14-வது வரிசையில் உள்ள பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் தொடக்க சுற்றில் தோற்று வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) 7-5, 6-4 என்ற கணக்கில் குரோஷியாவை சேர்ந்த ஜோனா வெகிக்கை வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் முதல் வரிசையில் உள்ள ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா), 18-ம் நிலை வீராங்கனையான கரோலினா முஜ்கோவா (செக்குடியரசு), ஸ்டெப் கென்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவரும், 7 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவருமான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலே தோல்வி அடைந்தார்.
ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டராவோ 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்தார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்று கேப்டன் மகேந்திரசிங் டோனி. அவரது தலைமையில் இந்திய அணி 2 உலக கோப்பைகளை கைப்பற்றி உள்ளது.
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையும் டோனி கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அதோடு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக்கொடுத்தார். இந்திய டெஸ்ட் அணியை நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேற்றினார்.
முன்னாள் கேப்டனான டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் பிரபலமானவர். இதேபோல அவரது விக்கெட் கீப்பிங் பணியும் பாராட்டுதலுக்குரியது.
ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டு பந்து வீச்சாளரிடம் அவர் தெரிவித்த வியூகம் பலமுறை அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளது.
டோனியை விக்கெட் கீப்பராக முதலில் கண்டு பிடித்தவர் கிரண் மோரே. முன்னாள் விக்கெட் கீப்பரான அவர் 2002 முதல் 2006 வரை தேர்வுக்குழு தலைவராக பணியாற்றினார். அப்போதுதான் டோனி சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.
டோனி அணிக்கு தேர்வானது குறித்து கிரண் மோரே தற்போது வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-
இந்திய அணியில் ராகுல் டிராவிட்டுக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை தேடி வந்தோம். கிரிக்கெட் முறைகள் மாறிக்கொண்டிருந்த போது பேட்டிங் வரிசையில் 6, 7-வது இடத்தில் களம் இறங்கி அதிரடி காட்டுபவராக இருக்க வேண்டும் என எண்ணிணோம். அப்போது தான் டோனியை உள்ளூர் போட்டியில் பார்த்தேன். அணியின் ஸ்கோர் 170 தாக இருந்த நிலையில் டோனி மட்டும் 130 ரன்களை விலாசி இருந்தார். இதை பார்த்து நான் வியப்படைந்தேன்.

இதைத்தொடர்ந்து டோனிக்கு அணியில் விக்கெட் கீப்பர் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கங்குலியிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஏனென்றால் தீப்தாஸ் குப்தா ஏற்கனவே விக்கெட் கீப்பிங் பணியை செய்து வந்தார்.
பின்னர் கங்குலியை சமாதானப்படுத்த எங்களுக்கு 10 நாட்கள் தேவைப்பட்டது. டோனிக்காக நான் அவருடன் 10 நாட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.
இவ்வாறு கிரண் மோரே கூறி உள்ளார்.
டோனி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐ.பி.எல். போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை (2010, 2011, 2018) ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து சென்றுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், இந்த பயணத்துடன் ஓய்வு பெற உள்ள விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் பேட்டிங்கிலும், நீல் வாக்னெர், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், கைல் ஜாமிசன் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் வலுவாக உள்ளனர்.
உள்ளூர் சீதோஷ்ண நிலை இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்தாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடிய பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், மொயீன் அலி ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதும், காயத்துக்கு ஆபரேஷன் செய்ததால் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விலகி இருப்பதும் இங்கிலாந்துக்கு கொஞ்சம் பின்னடைவு தான்.
பேட்டிங்கில் கேப்டன் ஜோ ரூட், ஜாக் கிராவ்லி, டாம் சிப்லி ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் அனுபவ வீரர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், புதிய துணை கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் மிரட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளனர். 38 வயதான ஆண்டர்சனுக்கு இது 161-வது டெஸ்டாகும். இதன்மூலம் இங்கிலாந்து வீரர்களில் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றவரான அலிஸ்டர் குக்கின் சாதனையை சமன் செய்கிறார்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் சாண்ட்கிரென் ஆகியோர் மோதினர்.
தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அனுபவ வீரரான ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் சாண்ட்கிரெனை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் உருகுவே வீரர் பாப்லோ குவாசுடன் மோத உள்ளார்.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கம் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இதில் பி.சி.சி.ஐ. சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி, வருங்கால போட்டி அட்டவணை, அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

20 ஓவர் உலக கோப்பை போட்டியை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவது என்றும், 2024, 2026, 2028, 2030 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கையை 16-ல் இருந்து 20 ஆக உயர்த்துவது என்றும், இதே போல் 2027-ம் ஆண்டு நடக்கும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 14 ஆக உயர்த்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
2024-ம் ஆண்டில் இருந்து 2031-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்குள் டாப்-8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ்கோப்பை போட்டியை 2 முறையும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றை 4 முறையும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
பேட்மிண்டனில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சமீபத்தில் பயிற்சியின் போது இடது கால்முட்டியில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் முட்டியின் தசைநாரில் கிழிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் சில தினங்களில் ஆபரேஷன் செய்ய இருக்கிறார். இதையடுத்து ஜூலை 23-ந்தேதி டோக்கியோவில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.







