என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து தகுதி பெற்று இருக்கிறார்.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து தகுதி பெற்று இருக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வரும் 25 வயதான பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    பேட்மிண்டனில் பெண்கள் பிரிவை பொறுத்தமட்டில் ‘டாப்-10’ வீராங்கனைகள் அனைவரும் ஒரே மாதிரியான தரத்தை உடையவர்கள். ஒரு வீராங்கனை (நடப்பு சாம்பியன் கரோலினா மரின் காயத்தால் விலகல்) விளையாடவில்லை என்பதற்காக அதனை எளிதாக எடுத்து கொள்ள முடியாது. மற்ற சிறந்த வீராங்கனைகளான தாய் ஜூ யிங், ராட்சனோக், நஜோமி ஒகுஹரா, அகானே யமாகுச்சி ஆகியோர் ஒலிம்பிக் களத்தில் உள்ளனர். எனவே நான் எந்த வகையிலும் மெத்தனமாக இருக்க முடியாது. அதுவும் ராட்சனோக் போன்று மிகவும் திறமையான, தந்திரமான ஒன்றிரண்டு வீராங்கனைகள் உள்ளனர். அவர்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    கொரோனா பாதிப்பால் கிடைத்த இடைவெளி என்னை பொறுத்தமட்டில் திறமையையும், ஆட்ட நுணுக்கத்தையும் மேம்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பாகும். வழக்கமாக தவறுகளை திருத்தி கொள்ளவும், புதிய திறன்களை கற்றுக்கொள்ளவும் நேரம் கிடைக்காது. ஏனெனில் அதற்கு அதிக நேரம் பிடிக்கும். எனவே கிடைத்து இருக்கும் இந்த நல்ல சமயத்தை புதிய நுணுக்கத்தையும், திறனையும் கற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் எனது ஆட்டத்தில் நீங்கள் புதிய நுணுக்கங்களை பார்க்கலாம்.

    இவ்வாறு
    சிந்துகூறினார்.
    லார்ட்ஸ் டெஸ்டில் ஹென்ரி நிக்கோல்ஸ் அரைசதம் அடிக்க, அறிமுக வீரர் டேவன் கான்வே அபாரமாக விளையாடி இரட்டை சதம் விளாசினார்.
    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் டேவன் கான்வே சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. நிக்கோல்ஸ் 46 ரன்களுடனும், டேவன் கான்வே 136 ரன்களுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நிக்கோல்ஸ் அரைசதம் அடித்து 61 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த வாட்லிங் (1), கிராண்ட்ஹோம் (0), சான்ட்னெர் (0), ஜேமிசன் (9), டிம் சவுத்தி (8) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


    இதனால் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. ஒருபக்கம் 6 விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் கான்வே நம்பிக்கையுடன் விளையாடி இரட்டை சதம் நோக்கி நகர்ந்தார். கடைசி விக்கெட்டாக நீல் வாக்னர் களம் இறங்கினார். அப்போது கான்வே 186 ரன்கள் எடுத்திருந்தார்.

    நீல் வாக்னர்

    194 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிக்சர் விளாசி அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்தார். அவர் 347 பந்தில் 22 பவுண்டரி, 1 சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார். ஆனால் அடுத்த ஓவரில் ரன்அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    கான்வே சரியாக 200 ரன்கள் எடுத்தார். நீல் வாக்னர் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், மார்க் வுட் 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் 95 பேர் 12 விளையாட்டு பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறார்கள்.
    ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் பல்வேறு இடங்களில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    கிரண் ரிஜிஜு

    இந்த நிலையில் இன்று மத்திய இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் அணியும் சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்.

    கிரண் ரிஜிஜு

    ‘‘பிரதமர் மோடி ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது குறித்து தெரிந்து கொள்ள ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த அனைவருக்கும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
    பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்சி மேலும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரது ஒப்பந்தம் வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.
    பார்சிலோனா:

    உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    மெஸ்சி தனது சிறு வயதில் இருந்தே பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி அந்த அணியை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றார். 33 வயதான அவர் கடந்த சில ஆண்டாகவே பார்சிலோனா கிளப்பில் இருந்து விலகி மான்செஸ்டர் அணிக்கு விளையாடுவார் என்று கூறப்பட்டது.

    ஆனால் சட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலை காரணமாக மெஸ்சியால் பார்ச்சிலோனா கிளப்பை விட்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்சி மேலும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரது ஒப்பந்தம் வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    மெஸ்சியின் ஒப்பந்தத்தை நீட்டித்து கொள்ள பார்சிலோனா கிளப் முடிவு செய்தது. இது தொடர்பாக அந்த கிளப்பின் நிர்வாகிகள் அவருடன் தொடர்பு பேசினார்கள். பார்சிலோனா கிளப்பில் நீடிக்க மெஸ்சி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

    வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி செட்டில் செரீனா சுதாரித்து ஆடி 6-1 என்ற கணக்கில் எளிதில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது.

    23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், 7-வது வரிசையில் இருப்பவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்று ஆட்டத்தில் ருமேனியாவை சேர்ந்த பூசன்நெசுவை எதிர்கொண்டார்.

    பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 3 முறை வென்ற செரீனா வில்லியம்ஸ் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் வென்றார். ஆனால் 2-வது செட்டில் பூசன் நெசு 7-5 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார்.

    இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் செரீனா சுதாரித்து ஆடி 6-1 என்ற கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-3, 5-7, 6-1.

    மற்றொரு ஆட்டத்தில் 3-வது இடத்தில் உள்ள அர்யானா ‌ஷபலேன்கா (பெலாரஸ்) 7-5, 6-3 என்ற கணக்கில் சக நாட்டை சேர்ந்த சாஸ்லோவிச்சை தோற்கடித்தார்.

    15-வது வரிசையில் உள்ள விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), 23-வது இடத்தில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா), டோமிபவுலை (அமெரிக்கா) எதிர்கொண்டார். இதில் மெட்வதேவ் 3-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    5-ம் நிலை வீரரான சிட்சி பாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயினை சேர்ந்த பெட்ரோ மார்ட்டீனசை தோற்கடித்தார்.

    மற்ற ஆட்டங்களில் 12-வது வரிசையில் உள்ள பஸ்டா (ஸ்பெயின்), இஸ்னெர் (அமெரிக்கா), பாக்னி (இத்தாலி), பாடிஸ்கா அகுக் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    இந்திய வீரர் ரோகித் சர்மா 825 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை தக்க வைத்து உள்ளார்.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இலங்கை-வங்காள தேச அணிகள் இடையே சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்திய அணி கேப்டன் வீராட் கோலி 857 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா 825 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை தக்க வைத்து உள்ளார்.

    மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப் 10-ல் இடம் பெறவில்லை. ஷிகர் தவான் 18-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 865 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

    ரோஸ் டெய்லர் (நியூசிலாந்து), ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), பேர்ஸ்டோவ் ( இங்கிலாந்து), பஹர் ஜமான் (பாகிஸ்தான்), டுபிளசிஸ் (தென் ஆப்பிரிக்கா) வார்னர் (ஆஸ்திரேலியா), ஷாய்ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் 4 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.

    பந்துவீச்சு வரிசையில் இந்தியாவை சேர்ந்த ஜஸ்பிரீத் பும்ரா 690 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளார்.

    வங்காள தேச தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை சேர்ந்த துஸ்மந்தா சமீரா மற்றும் இலங்கை கேப்டன் குஷால் பெரேராஆகியோர் முன்னேற்றம் அடைந்து உள்ளனர்.

    நியூசிலாந்தை சேர்ந்த டிரெண்ட் போல்ட் 737 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். மெகதி ஹசன் (வங்காளதேசம்), முஜிபுர் ரகுமான் (ஆப்கானிஸ்தான்), மேட் ஹென்றி (நியூசிலாந்து) ஆகியோர் 2 முதல் 4-வது இடங்களில் உள்ளனர்.

    ரபடா(தென் ஆப்பிரிக்கா), கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து), ஹாசல் வுட் (ஆஸ்திரேலியா) முஸ்டாபிசுர் ரகுமான் (வங்காளதேசம்), கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் 6 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.
    கடுமையான சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் விளையாட்டுகளை நடத்துவதாக ஒலிம்பிக் அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் உறுதியளித்துள்ளன.
    டோக்கியோ:

    கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பானில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒங்கிணைக்க உதவும் பணியில் ஈடுபட்டுள்ள 10000 தன்னார்வலர்கள் விலகி உள்ளனர். அவர்கள் விலகியதற்கு கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம் என போட்டி அமைப்பாளர்கள் கூறுகின்றனர். 

    கடுமையான சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் விளையாட்டுகளை நடத்துவதாக ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் உறுதியளித்துள்ளன. எனினும், பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன. தன்னார்வலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா என்று தெரியவில்லை. 

    கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருந்த நிலையில், ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதும், பல தன்னார்வலர்கள் விலகியதற்கு மற்றொரு காரணம் என அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
    இங்கிலாந்து மண்ணில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்பட ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணி நேற்றிரவு இங்கிலாந்து புறப்பட்டு சென்றது.
    கடந்த 2019-ல் இருந்து 2021 வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் வருகிற 18-ந்தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    இதற்கான இந்திய அணி நேற்றிரவு மும்பையில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. புறப்படுவதற்கு முன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இரண்டரை ஆண்டுகள் நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியை 3 ஆட்டங்களாக நடத்தியிருக்க வேண்டும். ஒரே ஆட்டத்தின் மூலம் வெற்றியாளரை தீர்மானிப்பது சரியல்ல. வருங்காலத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து நடத்த விரும்பினால், இறுதிப்போட்டியை 3 ஆட்டங்கள் கொண்டதாக நடத்துவதே சிறந்தது.

    தற்போது முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இது மிகப்பெரிய போட்டியாக இருக்கப்போகிறது. டெஸ்ட் கிரிக்கெட்தான் உங்களது உண்மையான திறமையை சோதிக்கும் ஒன்றாக இருக்கும். இது ஒன்றும் மூன்று அல்லது மூன்றரை மாதங்களில் நடந்து முடிந்துவிடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதி இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிசுற்றை எட்டியுள்ளன.

    இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
    இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு இருந்தாலும், அதுபற்றி நாங்கள் நினைக்கவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த டெஸ்ட் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. 
    அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் நாட்டிங்காமில் ஆகஸ்டு 4-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்காக மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் நேற்று நள்ளிரவில் மும்பையில் இருந்து தனிவிமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டனர். அவர்கள் இன்று லண்டனை சென்றடைகிறார்கள். அதன் பிறகு அங்கும் சில நாட்கள் தனிமையில் இருப்பார்கள்.

    இங்கிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அதிக மதிப்பு கொண்டது. நாம் அனைவரும் கடினமான இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது பெருமைக்குரிய விஷயமாகும். கடந்த 6 ஆண்டுகளாக இந்திய அணி நிறைய மாற்றங்களை கண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இறுதிப்போட்டியில் ஆடுவதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. இதற்கு முன்பும் இருந்ததில்லை. இந்திய அணியை தொடர்ந்து முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுதான் எனது மனதில் உள்ளது.

    இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று நினைக்கவில்லை. இரு அணிக்கும் சரிசம வாய்ப்பு உள்ளதாக கருதுகிறோம்.

    நியூசிலாந்து அணி முன்கூட்டியே அங்கு சென்று தங்களை தயார்படுத்தி வருவது குறித்து கேட்கிறீர்கள். இதற்கு முன்பு 3 நாட்களுக்கு முன்பாக போட்டி நடக்கும் இடத்துக்கு சென்று கூட நாங்கள் சாதித்து இருக்கிறோம். அது மட்டுமின்றி நாங்கள் இங்கிலாந்துக்கு செல்வது இது முதல்முறையல்ல. அங்குள்ள சீதோஷ்ண நிலையை நன்கு அறிவோம். ஆனால் அங்குள்ள சூழல் நமக்கு பழக்கப்பட்டிருந்தாலும் கூட, உற்சாகமான மனநிலையில் களம் இறங்காவிட்டால், முதல் பந்திலேயே விக்கெட்டை இழப்பீர்கள் அல்லது விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு தடுமாறுவீர்கள். எல்லாமே மனநிலையை பொறுத்துதான் அமையும்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட அதீத ஆர்வமுடன் இருக்கும்போது, அந்த ஆட்டத்திற்கு முன்பாக வெறும் 4 பயிற்சி பகுதிகள் மட்டுமே இருக்கிறது என்பது எல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

    இந்திய வீரர்

    இந்த இறுதிப்போட்டியோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.

    இந்த இடத்திற்கு செல்ல நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். இது கால்பந்து போன்றது. நீங்கள் ஒரு சாம்பியன்ஸ் லீக்கை வென்றால் அத்துடன் உங்களது கடின உழைப்பை நிறுத்திவிடமாட்டீர்கள். தொடர்ந்து மேலும் சில கோப்பையை வெல்ல விரும்புவீர்கள். சரியாக அந்த மனநிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பது நல்லவிஷயமாகும். இது வீரர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் உதவும். அதுமட்டுமின்றி இது போன்ற 5 போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்பாக வலுவாக ஒன்றிணைவதற்கு இந்த அவகாசம் தேவையாகும்.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.
    கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஏமாற்றம் அளித்தாலும், அறிமுக வீரர் டேவன் கான்வே அபாரமாக விளையாடி சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
    இங்கிலாந்து- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேட்பன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே அறிமுகம் ஆனார். இங்கிலாந்து அணியில் ராபின்சன், இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் பிரேஸ், ஒல்லி ராபின்சன் ஆகியோர் அறிமுகம் ஆகினர்.

    நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லாதம் மற்றும் டேவன் கான்வே ஆகியோர் களமிறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 23 ரன்கள் எடுத்திருந்த டாம் லாதம் இங்கிலாந்து வீரர் ராபின்சன் பந்து வீச்சில் வெளியேறினார்.

    அடுத்துவந்த கேப்டன் வில்லியம்சன் 13 ரன்னிலும், ராஸ் டெய்லர் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், நியூசிலாந்து அணி 114 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.


    பின்னர் களமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ் உடன் ஜோடி சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் குவித்துள்ளது.

    ஹென்ரி நிக்கோல்ஸ்

    240 பந்துகளை சந்தித்த டேவன் கான்வே 136 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருக்கு உறுதுணையாக நிக்கோல்ஸ் 149 பந்துகளில் 46 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    இம்ரான் கான், ஜாவித் மியான்தத் உடன் இணைந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்து, பந்து வீச்சில் தனி முத்திரை படைத்தவர்.

    இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்றாலே. சற்றென்று நினைவுக்கு வருபவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் அக்ரம்தான். இவருக்கு இன்று பிறந்த நாள். 55 வயதை கடந்து 56-வது வயதிற்குள் நுழைந்துள்ளார்.

    இளம் தலைமுறை பந்து வீச்சாளர்களிடம் நீங்கள் யாரை போன்று பந்து வீசி விரும்புகிறீர்கள் என்று கேட்டால், சந்தேகமின்றி வாசிம் அக்ரமைத்தான் கூறுவார்கள்.

    நேர்த்தியான யார்க்கர் வீசுவது, பந்தைத ஸ்விங் செய்வதில் இவரை மிஞ்சிய நபர் இல்லை என்று சொல்லலாம். 1984-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2003-ம் அண்டு வரை சுமார் 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாடி டெஸ்ட் போட்டியில் 414 விக்கெட்டுகும், ஒருநாள் போட்டியில் 502 விக்கெட்டுகளும் வீழத்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.

    1992-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்ல இவரது பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது என்றால் அது மிகையாகாது. மேலும், டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 257 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

    வாசிம் அக்ரம்

    1993 முதல் 1999-ம் ஆண்டு வரை கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி 1999-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. இதில் பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 17 டெஸ்ட் போட்டியில் 79 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    வாசிம் அக்ரம் 30 வயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளானார். என்றாலும் மருந்து எடுத்துக் கொண்டு பந்து வீச்சில் அபாரமாக ஜொலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    லாரட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் டாம் லாதம், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஏமாற்றம் அளித்தனர்.
    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டேவன் கான்வே அறிமுகம் ஆன நிலையில், இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் பிரேஸ், ஒல்லி ராபின்சன் ஆகியோர் அறிமுகம் ஆகினர்.

    இங்கிலாந்து அணி ஆண்டர்சன், பிராட், ராபின்சன், மார்க் வுட் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

    டாம் லாதம் டேவ் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 16 ஓவர் வரை தாக்குப்பிடித்தது. டாம் லாதம் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஒல்லி ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    அடுத்து வந்த அனுபவ வீரர் ராஸ் டெய்லர் 14 ரன்னில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அறிமுக வீரர் டேவன் கான்வே அபாரமாக விளையாடி 163 பந்தில் 11 பவுண்டரியுடன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    அவருடன் ஹென்ரி நிக்கோல்ஸ் பொறுப்புடன் விளையாடி வருகிறார். நியூசிலாந்து அணி 74 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்துள்ளது, டேவன் கான்வே 121 ரன்களுடனும், ஹென்ரி நிக்கோல்ஸ் 33 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
    ×