என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மேக்ஸ்வெல், பரத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் எவின் லீவிஸ், ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் பவர்-பிளேயில் விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் குவித்தது. 8 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 71 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் எப்படியும் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    9-வது ஓவரை கிறிஸ்டியன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய ஜெய்ஸ்வால் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 8.2 ஓவரில் 77 ரன்கள் எடுத்திருந்தது.

    ஹர்ஷல் பட்டேல்

    மறுமுனையில் எவின் லீவிஸ் அதிரடியால் 31 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 37 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 11.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் சஞ்சு சாம்சன் (19), லோம்ரோர் (3), லிவிங்ஸ்டன் (6), ராகுல் டெவாட்டியா (2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன்வேகம் அப்படியே குறைந்தது. மிடில் மற்றும் டெத் ஓவர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் சிறப்பாக வீச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே அடிக்க முடிந்தது. ஆர்.சி.பி. அணியில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டும் சஹல், ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி. அணி பேட்டிங் செய்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 25 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பரத்

    அதன்பின் வந்த ஸ்ரீகர் பரத், மேக்ஸ்வெல் ஜோடி அபாரமாக விளையாடியது. ஸ்ரீகர் பரத் 35 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 30 பந்தில் அரைசதம் அடிக்க, டி வில்லியர்ஸ் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    எம்எஸ் டோனி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டம் இழந்த விதம் அவரின் பேட்டிங் திறனை இழந்து விட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திரசிங் டோனி.

    2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை டோனி பெற்றுக்கொடுத்தார். அதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    மேலும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை 2013-ம் ஆண்டு அவரது தலைமையிலான அணி வென்றது. 2 உலககோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக்கொடுத்த டோனி கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2019-ம்ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை அரைஇறுதிப் போட்டி அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.

    40 வயதான டோனி ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 3 முறை (2010, 2011, 2018) ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

    கடந்த முறை பிளேஆப் சுற்றுக்கு நுழையாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐ.பி.எல். போட்டியில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆப் சுற்றுக்குள் கிட்டத்தட்ட நுழைந்து விட்டது.

    இந்தநிலையில் இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெற்று விடுவார் என்று ஆஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட்ஹாக் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:-

    பிராட்ஹாக் - எம்எஸ் டோனி

    சி.எஸ்.கே. கேப்டன் டோனிக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல். சீசன்தான் கேப்டனாகவும், வீரராகவும் கடைசி சீசனாக இருக்கும் என நான் நம்புகிறேன். டோனி தனது பேட்டிங் திறனை இழந்து விட்டார். இந்த காரணத்தினால்கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அவர் ஒதுங்கி விடலாம்.

    டோனி பேட்டிங் செய்யும் விதத்துக்கும், கால் நகர்த்தும் விதத்துக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டம் இழந்த விதம் அவரது பேட்டிங் திறனை இழந்து விட்டதாகவே கருதுகிறேன். 40 வயதான டோனிக்கு தளர்வு வந்து விட்டது. எனவே இந்த ஆண்டு சீசன் முடிந்த பிறகு டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவிக்கலாம்.

    2022-ம் ஆண்டு சீசனுக்கு மெகா ஏலம் நடக்க உள்ளது. இதில் டோனி இல்லாவிட்டால் சி.எஸ்.கே. அணிக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கும். அதன்பின் டோனியை வேறு பணிகளில் சி.எஸ்.கே. அணி பயன்படுத்தும்.

    20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணிக்கு ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டது வரவேற்கதக்கது. டோனிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பதவி சி.எஸ்.கே. அணியில் அவர் நிர்வாக ரீதியிலான பதவிக்கு கொண்டு வர வழிவகுக்கும். மேலும் தலைமை பயிற்சியாளராக கூட ஆகலாம்.

    இந்திய கிரிக்கெட் மற்றும் சி.எஸ்.கே. அணியின் வளர்ச்சிக்கு டோனியின் தலைமை பண்பு மிகவும் நல்லது. ஜடேஜா அணியில் வளர்வதற்கும், இளம் வீரர்களை மேம்படுத்துவதற்கும் டோனி உதவி செய்கிறார்.

    இவ்வாறு பிராட்ஹாக் கூறி உள்ளார். 

    ராஜஸ்தானுக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றாலும், தோற்றாலும் அந்த அணி அதே 3-வது இடத்தில் நீடிக்கும்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இதுவரை 42 ஆட்டங்கள் முடிந்து உள்ளன. ஆனால் எந்த ஒரு அணியும் அதிகாரப்பூர்வமாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

    சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் 16 புள்ளிகள் பெற்று உள்ளன. இந்த 2 அணிகளும் கிட்டத்தட்ட பிளேஆப் வாய்ப்பை நெருங்கி விட்டன. சென்னை அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன. அதே நேரத்தில் டெல்லி அணிக்கு 3 ஆட்டமே எஞ்சி உள்ளது.

    பெங்களூர் அணி 12 புள்ளிகளுடனும், கொல்கத்தா, மும்பை தலா 10 புள்ளிகளுடனும், பஞ்சாப், ராஜஸ்தான் தலா 8 புள்ளிகளுடனும், ஐதராபாத் 4 புள்ளிகளுடனும் உள்ளன. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    43-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. இதில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி ராஜஸ்தானை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் அந்த அணி அதே 3-வது இடத்தில் நீடிக்கும்.

    முதல் கட்ட போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும்.

    புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூருக்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் மோதிய போட்டியில் பெங்களூர் 11 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளன. 2 போட்டி முடிவு இல்லை. இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 136 ரன் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணியால் கஷ்டப்பட்டுதான் எட்ட முடிந்தது குறிப்பிடத்தக்கது.
    ஐ.பி.எல். 2021 டி20 கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மார்கிராம் 42 ரன்கள் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, பொல்லார்டு ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. மிகக்குறைந்த இலக்காக இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் எளிதாக அடிக்க முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இது நீண்ட தூரம் கொண்ட தொடர். நாங்கள் எங்களுடைய திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். சூழ்நிலையை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அதில் இருந்து ஏராளமான உறுதியை பெற முடியும்.

    ஹர்திக் பாண்ட்யா சூழ்நிலையை புரிந்து கொண்டது அணியின் பார்வையில் அது மிகவும் முக்கியமானது. காயத்திற்குப் பிறகு அவர் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியது அவருக்கும் முக்கியமானது’’ என்றார்.
    மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்ட நிலையில், இன்சமாம் உல் ஹக் வீடு திரும்பியுள்ளார்.
    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர் இன்சமாம் உல் ஹக். மைதானத்தில் சாந்தமாக இருக்கும் இன்சமாம் உல் ஹக் பேட்டிங்கில் அதிரடி காட்டக்கூடியவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது. இன்சமாம் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்திருந்தது. சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மானேஜர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்சமாம் உல் ஹக் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இந்த சூழ்நிலையில் இருந்து வலுவாக திரும்பி வருவீர்கள் என நம்புவதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இன்சமாம் உடல் நிலை குறித்து சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நீங்கள் எப்போதும் அமைதியாக இருந்தாலும் போட்டிக்குரியவராகவும், களத்தில் ஒரு போராளியாகவும் இருந்தீர்கள். இந்த சூழ்நிலையில் இருந்து நீங்கள் மிகவும் வலிமையானவராக திரும்புவீர்கள் என நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன். விரைவில் நலம் பெறுங்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க இருக்கும் மேலும் இரண்டு அணிகள் எவை என்பதை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு அடுத்த நாள் அறிவிக்கிறது பி.சி.சி.ஐ.
    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 8 அணிகள் என்பதை 10 அணிகளாக அதிகரிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்தது. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் இருந்து 10 அணிகள் விளையாடும் என அறிவித்த பி.சி.சி.ஐ. அணிகளை வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. முதலில் அக்டோபர் 5-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் எனத் தெரிவித்தது. பின்னர் 10-ந்தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24-ந்தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன. அதற்கு அடுத்த நாள் இரண்டு புதிய அணிகள் எவை? என்பதை பி.சி.சி.ஐ. அறிவிக்கும் என ஐ.பி.எல். நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அணிகள் அறிவிக்கப்பட்டது. 2023-2027 ஐ.பி.எல். மீடியா உரிமையாக்கான டெண்டர் விடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    நான்கு ஓவரில் 40 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
    ஐ.பி.எல். 2021 டி20 கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மார்கிராம் 42 ரன்கள் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, பொல்லார்டு ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் 16 ரன்னுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு டி காக் உடன் சவுரப் திவாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. டி காக் 27 ரன்னிலும், சவுரப் திவாரி 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா உடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தபோது, மும்பை இந்தியன்ஸ் 15.1 ஓவரில் 92 ரன்கள் எடுத்திருந்தது.  29 பந்தில் 45 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவர் முடிவில் 97 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 4 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்டது.

    17-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் 11 ரன்கள் கிடைத்தது. 18-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் பொல்லார்டு ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ராகுல் சாஹர்

    இதனால் மும்பை இந்தியன்ஸ்க்கு கடைசி 2 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஷமி வீசினார். 3-வது பந்தையும், 5-வது பந்தையும் பவுண்டரிக்கு தூக்கிய ஹர்திக் பாண்ட்யா, கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 40 ரன்கள் எடுத்தும், பொல்லார்டு 7 பந்தில் 15 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
    சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற இருக்கின்றன.
    ஐ.பி.எல். 2021 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 56 லீக் ஆட்டங்கள் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கின்றன. கடைசி நாளான 8-ந்தேதி இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    முதல் போட்டி அபு தாபியில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும். இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகளும், துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

    கேன் வில்லியம்சன், ரோகித் சர்மா

    தற்போது இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில், அதாவது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏதாவது ஒரு போட்டியை மட்டுமே நேரலையாக பார்த்து ரசிக்க முடியும்.
    பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரே ஒரு மாற்றமாக அகர்வால் நீக்கப்பட்டு மந்தீப் சேர்க்கப்பட்டார்.
    அபுதாபி:

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கே.எல்.ராகுல்  தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகள் பெற்றுள்ளன.ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்றைய போட்டியின் முடிவு முக்கியமானதாக அமையும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரே ஒரு மாற்றமாக அகர்வால் நீக்கப்பட்டு மந்தீப் சேர்க்கப்பட்டார்.

    மும்பை அணியில் மாற்றங்களாக இஷான் கிசன், மில்னே வுக்கு பதிலாக திவாரி மற்றும் கவுல்டர் நைல் சேர்க்கப்பட்டனர்.
    ஒரு கட்டத்தில் இயான் மார்கன், தினேஷ் கார்த்திக் விக்கெட்டுகளை கைப்பற்றி டெல்லி, கொல்கத்தாவுக்கு நெருக்கடி கொடுத்தது.
    ஷார்ஜா:

    ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனின் 41வது ஆட்டம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் இன்று நடந்தது.

    போட்டிக்கான டாஸ் வென்ற கொல்கத்தா அணி, டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ஓப்பனர்களான ஸ்மித் மற்றும் தவான் முறையே 39 மற்றும் 24 ரன்கள் அடித்தனர்

    அதன் பிறகு வந்த கேப்டன் ரிஷப் பண்ட் மட்டுமே 39 ரன்கள் குவித்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கு ரன்னில் அவுட்டாகினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவில் தொடக்க வீரர்களில் ஒருவரான வெங்கடேஷ், 14 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இன்னொரு தொடக்க வீரர் சுப்மன் கில், 33 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த நிதிஷ் ராணா, அதிரடி ஆட்டத்தை கடைபிடிதார். அவர் 22 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார்.

    ஒரு கட்டத்தில் இயான் மார்கன், தினேஷ் கார்த்திக் விக்கெட்டுகளை கைப்பற்றி டெல்லி, கொல்கத்தாவுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் அடுத்து வந்த சுனில் நரைன், 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் 10 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

    முடிவில் 19வது ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்தது கொல்கத்தா அணி. அந்த அணிக்காக நிதிஷ் ராணா, அதிகபட்சமாக 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
    கிரிக்கெட் வீரர் மொயின் அலி தனது டெஸ்ட் கெரியரில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்பதையும் அவர் தெரிவித்தார். கிரிக்கெட் வீரர் மொயின் அலி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், மொயின் அலி தனது டெஸ்ட் கெரியரில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

    அதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் திடீரென என்னை அழைத்து ‘வலிமை’ அப்டேட் என கேட்டார். அதை என்னால் மறக்க முடியாது என்று மொயின் அலி கூறியுள்ளார். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஸ்வின், ‘அப்பவே சொன்னேன்’ என்று சிரிக்கும் எமோஜிகளுடன் பதிவிட்டுள்ளார்.


    ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஆவார். அவர் 378 போட்டிகளில் 11,739 ரன் எடுத்துள்ளார். 10 சதமும், 83 அரை சதமும் அடித்துள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக். 1992-ம் ஆண்டு பாகிஸ்தான் உலக கோப்பையை வெல்ல இவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.

    இந்தநிலையில் 51 வயதான இன்சமாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு மருத்துவ மனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. தற்போது இன்சமாம் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஆவார். அவர் 378 போட்டிகளில் 11,739 ரன் எடுத்துள்ளார். 10 சதமும், 83 அரை சதமும் அடித்துள்ளார்.

    டெஸ்டில் அதிக ரன் எடுத்த 3-வது பாகிஸ்தான் வீரர் ஆவார். 120 டெஸ்டில் 8,830 ரன் எடுத்து உள்ளார். பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான கேப்டனில் ஒருவரான அவர் 2007-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பல்வேறு பொறுப்புகளையும் அவர் வகித்து வந்தார்.

    இதையும் படியுங்கள்... கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம்- மத்திய அரசு உத்தரவு

    ×