என் மலர்
விளையாட்டு

புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்கிறது.
20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுகிறது. இந்த சுற்றில் 12 நாடுகள் பங்கேற்கிறது. இதில் 8 நாடுகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளன. மீதியுள்ள 4 அணிகள் தகுதி சுற்று மூலம் முன்னேறுகிறது.
இந்திய அணி ‘குரூப்-2’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் அந்த பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி வருகிற 24-ந் தேதி பாகிஸ்தானையும், 31-ந் தேதி நியூசிலாந்தையும், நவம்பர் 3-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர் கொள்கிறது. 5 மற்றும் 8-ந் தேதிகளில் தகுதி சுற்று அணிகளுடன் மோதுகிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அணியில் உள்ள ஹர்த்திக் பாண்ட்யா ஐ.பி.எல். போட்டியில் பந்து வீசவில்லை.
இதனால் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டோனி, கேப்டன் கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் விரைவில் ஆலோசனை செய்து முடிவை அறிவிக்கிறார்கள்.
தேர்வு குழுவினருடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு அணி மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டு வருகிற 15-ந் தேதி இந்திய அணியில் மாற்றம் செய்யப்படும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஹர்ஷல் படேல் (பெங்களூர்), வெங்கடேஷ் அய்யர், ஷிவம் மவி (கொல்கத்தா) ஆகிய 3 வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்ந்து தங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அணியில் மாற்றம் செய்யப்படும்போது அவர்கள் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இங்கிலாந்துடன் வருகிற 18-ந் தேதியும் (இரவு 7.30 மணி), ஆஸ்திரேலியாவுடன் 20-ந் தேதியும் (மாலை 3.30 மணி) மோதுகிறது.
ஷார்ஜா:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “குவாலிபயர்2” ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடக்கிறது.
இதில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி தொடரில் டெல்லி அணி சிறப்பாக ஆடி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 10-ல் வெற்றி பெற்றது. 4 லீக் ஆட்டத்தில் தோற்றது. “குவாலியர் 1” போட்டியில் சென்னை சூப்பர் கிங்சிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேற முடியவில்லை.
கொல்கத்தாவை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக ஐ.பி.எல். இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் டெல்லி அணி இருக்கிறது. அந்த அணியில் ஷிகர் தவான் (551 ரன்), பிரித்வி ஷா (461), கேப்டன் ரிஷப்பண்ட் (413) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், அவேஷ்கான் (23 விக்கெட்), அக்ஷர் படேல் (15), ரபடா (13), ஆன்ரிச் நோர்ட்ஜே (10) போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
கொல்கத்தா அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றி இருந்தது.
எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியிருந்ததால், அந்த அணி டெல்லியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். கொல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி (383 ரன்), சுப்மன் கில் (381), நிதிஷ் ரானா (370) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், வருண் சக்கரவர்த்தி (14 விக்கெட்), சுனில் நரீன் (14), பெர்குசன் (12) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.
சென்னை:
ஆன்லைன் சூதாட்டம் மூலம் லட்சக்கணக்கான ரூபாயை பொதுமக்களிடம் இருந்து பறித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படியில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிகிருஷ்ணன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போதும் அதனை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி ஐ.பி.எல். போட்டிகளை பயன்படுத்தியும் ஹரிகிருஷ்ணன் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? என்பது பற்றிய விசாரணையும் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 வடிவிலான (டெஸ்ட், ஒரு நாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர்) போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி இருக்கிறார்.
கேப்டன் பதவியால் தனது பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாக கோலி கருதியுள்ளார். இதைத் தொடர்ந்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் ஏற்கனவே அறிவித்தார்.
அதே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட் டியில் தொடர்ந்து அவர் கேப்டனாக இருப்பார். 20 ஓவர் அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் அறிவித்திருந்தார்.
விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். 2013-ம் ஆண்டு முதல் அந்த அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுக்கவில்லை.
இதற்கிடையே இந்த ஐ.பி.எல். போட்டியோடு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். கோப்பையுடன் வெளியேற இருந்த அவரது கனவு தகர்ந்தது. எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்றதால் ஐ.பி.எல். கோப்பையை விராட் கோலியால் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பெங்களூர் அணிக்காக தான் கடைசிவரை விளையாடுவேன் என்று அவர் கொல்கத்தாவுடன் மோதிய போட்டிக்கு பிறகு தெரிவித்தார்.
இந்த நிலையில் பெங்களூர் அணியின் உரிமையாளராக நான் இருந்திருந்தால் விராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க சொல்லி இருப்பேன் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் மட்டும் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேப்டன் பொறுப்பை தொடருமாறு கேட்டிருப்பேன். ஏனென்றால் ஒரு வீரராகவும், ஒரு அணியின் தலைவராகவும் அவரை இருவேறு நபராக நான் பார்க்கிறேன்.
மிகவும் திறமை வாய்ந்த, வயதில் இளையவரான அவர் எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார். இத்தகைய சூழலில் அவர் வேறொரு வீரரின் கீழ் ஆடுவதை நான் பார்க்க விரும்பவில்லை.
கோலி கேப்டனாக இல்லாத பெங்களூர் அணி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அதனால் தான் சொல்கிறேன் நான் உரிமையாளராக இருந்தால் மீண்டும் ஒருமுறை முற்றிலும் மாறுபட்ட அணியை உங்களது (கோலி) தலைமையில் அமைத்து விளையாடுவோம் என்று சொல்வேன்.
பெங்களூர் அணியில் தற்போது உள்ள வீரர்களில் விராட் கோலி, மேக்ஸ்வெல், படிக்கல் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு லாரா கூறியுள்ளார்.








