search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி வீரர்கள்
    X
    இந்திய அணி வீரர்கள்

    டி20 உலக கோப்பை: 2 வீரர்கள் காயத்தால் இந்திய அணியில் மாற்றம் - கிரிக்கெட் வாரிய செயலாளர் விரைவில் முடிவு

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஹர்‌ஷல் படேல், வெங்கடேஷ் அய்யர், ஷிவம் மவி ஆகிய 3 வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்ந்து தங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுகிறது. இந்த சுற்றில் 12 நாடுகள் பங்கேற்கிறது. இதில் 8 நாடுகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளன. மீதியுள்ள 4 அணிகள் தகுதி சுற்று மூலம் முன்னேறுகிறது.

    இந்திய அணி ‘குரூப்-2’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் அந்த பிரிவில் இடம்பெற்றுள்ளன.

    இந்திய அணி வருகிற 24-ந் தேதி பாகிஸ்தானையும், 31-ந் தேதி நியூசிலாந்தையும், நவம்பர் 3-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர் கொள்கிறது. 5 மற்றும் 8-ந் தேதிகளில் தகுதி சுற்று அணிகளுடன் மோதுகிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

    உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அணியில் உள்ள ஹர்த்திக் பாண்ட்யா ஐ.பி.எல். போட்டியில் பந்து வீசவில்லை.

    இதனால் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டோனி, கேப்டன் கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் விரைவில் ஆலோசனை செய்து முடிவை அறிவிக்கிறார்கள்.

    தேர்வு குழுவினருடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு அணி மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டு வருகிற 15-ந் தேதி இந்திய அணியில் மாற்றம் செய்யப்படும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஹர்‌ஷல் படேல் (பெங்களூர்), வெங்கடேஷ் அய்யர், ஷிவம் மவி (கொல்கத்தா) ஆகிய 3 வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்ந்து தங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    அணியில் மாற்றம் செய்யப்படும்போது அவர்கள் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இங்கிலாந்துடன் வருகிற 18-ந் தேதியும் (இரவு 7.30 மணி), ஆஸ்திரேலியாவுடன் 20-ந் தேதியும் (மாலை 3.30 மணி) மோதுகிறது.

    Next Story
    ×