என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கோவை அணி தரப்பில் அபிஷேக் தன்வர், பாலு சூர்யா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • அதிரடியாக விளையாடிய கோபிநாத் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 11-வது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் -சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் இழந்து அந்த அணி தடுமாறியது. அதன்பின்னர் கோபிநாத் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த முருகன் அஸ்வின் 31 ரன்களும், பிரணவ் குமார் 34 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் சேலம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. கோவை அணி தரப்பில் அபிஷேக் தன்வர், பாலு சூர்யா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 147 ரன்கள் இலக்குடன் கோவை அணி விளையாடி வருகிறது.

    • இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்திய இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் 11 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 6 ஆண்டுகளுக்கு பிறகு டாப் 10 இடத்தை இழந்துள்ளார். மோசமான பேட்டிங் காரணமாக அவர் 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம், இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 9-வது இடத்தில் நீடிக்கிறார். ஜடேஜா 8 இடங்கள் முன்னேறி 34-வது இடத்தை பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து தொடர் மற்றும் இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்திய இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் 11 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இடத்திலும் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் 2-வது இடத்திலும் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 4-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

    அதேபோல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் பும்ரா 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ஜடேஜா முதல் இடம் பிடித்துள்ளார்.

    • இங்கிலாந்து அணியின் வெற்றிப் பயணம் தொடரும்.
    • இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 நாளை நடக்கிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. முதலில் டி20 போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நாளை (7-ந் தேதி) நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய டி20 அணிக்கு இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனான பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து அணியின் வெற்றி நம்பமுடியாத வகையில் இருந்தது. இந்த டெஸ்ட் அணியில் இருந்து சிறப்பான ஆட்ட நுணுக்கங்களை பெறுவதுடன் இங்கிலாந்து அணியின் வெற்றிப் பயணம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிராக பட்லர் தலைமையில் ஆடிய இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

    கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்தது இங்கிலாந்து அணி. எச்சரிக்கை விடுத்தது போல டெஸ்ட் போட்டியை வென்றது. நாளை டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில் இந்திய டி20 அணிக்கு பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எச்சரிக்கையை மீறி ரோகித் சர்மா தலைமையிலான அணி இங்கிலாந்தின் கோட்டையை தகர்க்குமா என இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

    • இந்திய அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது.
    • ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சவாலை எதிர்கொண்ட விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது என வாசிங் ஜாபர் கூறினார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் 378 ரன்களை இங்கிலாந்து அணி சேசிங் செய்து சாதனை படைத்தது. இரண்டாவது இன்னிங்சில் ஜானி பேர்ஸ்டோவ் - ஜோரூட் சதம் அடித்து அசத்தினர்.

    இந்நிலையில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் சிறப்பான பேட்டிங் ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது. ஜோரூட் -ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பான ஃபார்மில் இருந்து பேட்டிங்கை மிகவும் எளிதாக்கியுள்ளனர். உறுதியான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் ஒரு முன்னாள் வீரர் இருவரையும் பாராட்டியுள்ளார். இந்திய அணியின் தொடக்கக்காரரான வாசிங் ஜாபர் கூறியதாவது:- இரண்டு பேருக்கும் போதிய பாராட்டு இல்லை. ஜோரூட் இப்போது சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனால் ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சவாலை எதிர்கொண்ட விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கோலி தனது 27-வது சதத்தை பதிவு செய்த போது ரூட் 16 சதங்களை மட்டுமே அடித்திருந்தார்.
    • ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி 27 சதம் அடித்துள்ளனர்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

    இதற்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதை தொடர்ந்து இந்திய அணியையும் வீழ்த்தியுள்ளது. இந்த தொடரின் மூலம் ஜோரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜோரூட் 737 ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் ஜோரூட் 4 சதங்களை விளாசியுள்ளார்.

    5-வது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஜோரூட் சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28-வது சதத்தை பதிவு செய்தார். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி 27 சதம் அடித்துள்ளனர். கோலி தனது 27-வது சதத்தை பதிவு செய்த போது ரூட் 16 சதங்களை மட்டுமே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணிக்கு எதிராக 9 சதங்களை பதிவு செய்த ரூட் வரலாற்று சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஸ்மித் (8), ரிக்கி பாண்டிங் (8), ரிச்சர்ட்ஸ்(8) மற்றும் கேரி சோபர்ஸ் (8) ஆகியோரின் சாதனையை ஜோரூட் தகர்த்துள்ளார்.

    முன்னாள் இங்கிலாந்து கேப்டன் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நம்பமுடியாத அளவில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டில் ரூட் 11 சதங்கள் உட்பட 2,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடந்த மாதம் ரூட் டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்கள் கடந்தார்.

    • எதிராளி தயாராக இல்லாததால் சர்வீஸ் செய்யவில்லை என்று சிந்து கூறிய விளக்கத்தை நடுவர் ஏற்க மறுத்து விட்டார்.
    • தனக்கு இழைக்கப்பட்ட தவறான தண்டனை குறித்து சிந்து உலக பேட்மிண்டன் சம்மேளனம் மற்றும் ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    பிலிப்பைன்சில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து 2-வது செட்டில் 14-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது போட்டி நடுவர் சிந்துவுக்கு ஒரு புள்ளியை அபராதமாக விதித்தார். அதாவது அந்த புள்ளி எதிராளி கணக்கில் சேர்க்கப்பட்டது. சர்வீஸ் செய்ய சிந்து அதிக நேரம் எடுத்து கொண்டதாக கூறி நடுவர் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

    எதிராளி தயாராக இல்லாததால் சர்வீஸ் செய்யவில்லை என்று சிந்து கூறிய விளக்கத்தை நடுவர் ஏற்க மறுத்து விட்டார். நடுவரின் முடிவை எதிர்த்து தலைமை நடுவரிடம் அப்பீல் செய்தும் பலன் இல்லை. அதன் பிறகு விரக்தியில் ஆடிய சிந்து அந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தார்.

    தனக்கு இழைக்கப்பட்ட தவறான தண்டனை குறித்து சிந்து உலக பேட்மிண்டன் சம்மேளனம் மற்றும் ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் ஆசிய போட்டியில் நடுவரின் தவறான முடிவுக்கு ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பின் டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் சிக் ஷின் சென், சிந்துவிடம் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் சிந்துவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'எதிர்பாராதவிதமாக அந்த நேரத்தில் நடுவர் செய்த தவறை திருத்த முடியவில்லை. இருப்பினும் இதுபோன்ற மனித தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2019-ம் ஆண்டு 359 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் இருவரின் கூட்டணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் 4 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும் இங்கிலாந்து 1 போட்டியிலும் வென்று இருந்தது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது. கடந்த ஆண்டு கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட 5-வது போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடத்தப்பட்டது.

    5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே விட்டு கொடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 378 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2019-ம் ஆண்டு 359 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்தியாவுக்கு எதிராக 378 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளது. அதற்கு முன்பு 1928-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 332 ரன்கள் சேசிங் செய்தது.


    டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் இருவரின் கூட்டணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருவரின் கூட்டணியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 3-0 என தொடரை கைப்பற்றியது. அதை தொடர்ந்து இந்திய அணியையும் அபாரமாக வென்றுள்ளது.

    எங்களது அதிரடியான அணுகுமுறையை கண்டு இனி எதிரணியினர் பயப்படுவார்கள் என பென் ஸ்டோக்ஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வுபெற்று உள்ளனர்.
    • 3 பேரும் காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாடு வாள்வீச்சு சங்க ஆதரவுடன் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார்கள்.

    காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கேடட் (17வயதுக்குட்பட்டோர்) பிரிவுக்கான பந்தயம் ஆகஸ்ட் 9-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லண்டனில் நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்தவற்கான போட்டிகள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் 2 நாட்கள் நடந்தது.

    தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வுபெற்று உள்ளனர். ஜாய்ஸ் அஷிதா (சென்னை), ஜெனிஷா (கன்னியாகுமரி), ஆகியோர் பாயில் பிரிவிலும், ஜெபர்லின் (கன்னியாகுமரி) சபரே பிரிவிலும் பங்கேற்றார்கள்.

    இந்த 3 பேரும் காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாடு வாள்வீச்சு சங்க ஆதரவுடன் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார்கள். இந்த 3 பேருக்கும் செல்வகுமார் பயிற்சி அளிக்கிறார்.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தை நிர்வகிக்கும் அடாக் கமிட்டி தலைவர் தனசேகரன், கன்வீனர் கருணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். 

    • எங்களது வெவ்வேறு விதமான திட்டமிடல் எல்லாம் 5 வாரத்துக்கு முன்பு இருந்து தொடங்கியது.
    • இது போன்று விளையாடும் போது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய ரசிகர்களை கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன்.

    பர்மிங்காம்:

    டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை விரட்டி பிடித்த பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், 'வீரர்கள் இது போன்று விளையாடும் போது எனது பணி எளிதாகி விடுகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருந்து விட்டால் இத்தகைய இலக்கை அடைவது எளிது.

    5 வாரங்களுக்கு முன்பு 378 ரன்கள் இலக்கு என்பது அச்சத்தை அளித்திருக்கும். ஆனால் இப்போது எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லா பெருமையும் பேர்ஸ்டோ, ஜோ ரூட்டையே சாரும். இங்கிலாந்து மண்ணில் எப்படி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். எங்களது வெவ்வேறு விதமான திட்டமிடல் எல்லாம் 5 வாரத்துக்கு முன்பு இருந்து தொடங்கியது.

    டெஸ்ட் கிரிக்கெட் எப்படி விளையாடப்படுகிறது என்பதை மாற்றி எழுத முயற்சிக்கிறோம். இது போன்று விளையாடும் போது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய ரசிகர்களை கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன் ' என்றார். மேலும் அவர், 'எங்களது அதிரடியான அணுகுமுறையை கண்டு இனி 3-வது இன்னிங்சில் எதிரணியினர் பயப்படுவார்கள். அதாவது எவ்வளவு இலக்கு நிர்ணயித்தால் போதுமானதாக இருக்கும், நாங்கள் 4-வது இன்னிங்சில் எந்த மாதிரி ஆடுவோம் என்பதில் தெளிவு கிடைக்காமல் குழம்புவார்கள்' என்றும் குறிப்பிட்டார்.

    • நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
    • ரோகித் சர்மா நாளைய 20 ஓவர் போட்டியில் இடம்பெறுவாரா? என்பது உறுதியில்லை.

    சவுத்தம்டன்:

    இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 378 ரன் இலக்கை எட்டி பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.

    கடந்த ஆண்டு கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட இந்த போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நாளை (7-ந் தேதி) நடக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா கொரோனா பாதிப்பு காரணமாக டெஸ்டில் விளையாடவில்லை.

    அதில் இருந்து குணமடைந்து விட்டாலும் நாளைய 20 ஓவர் போட்டியில் இடம்பெறுவாரா? என்பது உறுதியில்லை. அவர் ஆடாமல் போனால் ஹர்த்திக்பாண்ட்யா தலைமை தாங்கலாம். ஏற்கனவே அவர் அயர்லாந்துக்கு எதிரான தொடருக்கு கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தார்.

    2 ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றி இருந்தார்.

    டெஸ்டில் ஏற்பட்ட மோசமான தோல்வியில் இருந்து மீண்டு இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். டெஸ்டில் ஆடிய விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஆகியோர் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை.

    பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாகும். ஜேசன் ராய், மொய்ன்அலி, லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், சாம்கரண் போன்ற சிறந்த வீரர்கள் இந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகள் இடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் சொந்த மண்ணில் நடந்த 20 ஓவர் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 20 ஓவர் போட்டின் 20-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 19 ஆட்டத்தில் இந்தியா 10-ல், இங்கிலாந்து 9-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. சோனிடென் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • ஜெர்மனி வீராங்கனை தாட்ஜனா மரியா முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • 34 வயதான தட்ஜனா மரியா இரு குழந்தைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபீருடன் மோதினார். இதில் 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஒன்ஸ் ஜபீர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 97-வது இடம் வகிக்கும் ஜெர்மனியின் ஜூலி நீமையர், சக வீராங்கனை தட்ஜனா மரியாவுடன் மோதினார். இதில் தட்ஜனா மரியா 4-6, 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    ஜெர்மனியின் 34 வயதான தட்ஜனா மரியா இரண்டு குழந்தைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    • உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் காலிறுதி சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் முதல் இரு செட்களை 7-5, 6-2 என சின்னர் கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோபின், அமெரிக்காவின் கேமரூன் நூரியுடன் மோதினார். இதில் இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதி செட்டை நூரி கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 7-5, 2-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்ற நூரி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் நூரி உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

    ×