என் மலர்
விளையாட்டு
- காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வெலிங்டன் மசகட்சா இடம்பெறவில்லை.
- சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்று ஜிம்பாப்வே கைப்பற்றியதால் நம்பிக்கையுடன் உள்ளது.
ஹராரே:
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வருகிற 18-ந்தேதி ஹராரேவில் நடக்கிறது.
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. துணை கேப்டன் லோகேஷ் ராகுல் காயம் மற்றும் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டதால் ஜிம்பாப்வே தொடரில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. கேப்டனாக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இதற்கிடையே லோகேஷ் ராகுல் குணமடைந்து முழு உடல் தகுதி பெற்றதால் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷிகர் தவான் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கேப்டன் கிரேக் எர்வின் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்கு பதில் கேப்டனாக ரெஜிஸ் சகாப்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணி வீரர்கள் விபரம் வருமாறு:-
ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), சிக்கந்தர் ராசா, இன்னசென்ட் கையா, கைடானோ, வெஸ்சி மாதேவெரே, ரியான் பர்ல், தனகா ஷிவாண்டா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, கிளைவ் மாடண்டே, ஜான் மசோரா, முன்யோங்கா, ரிச்சர்ட் நகர்வா, ரிக்டர் நகராவா, நியுச்சி, மில்டன் ஷூம்பா, டிரிபாகோ.
காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வெலிங்டன் மசகட்சா இடம்பெறவில்லை. சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்று ஜிம்பாப்வே கைப்பற்றியதால் நம்பிக்கையுடன் உள்ளது.
- கோவா அணிக்கு மாறுகிறார் அர்ஜூன் டெண்டுல்கர்.
- கோவா அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ள அர்ஜூன், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 22 வயதான அர்ஜூன் 2020-21-ம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடினார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதே போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தாலும் இந்த சீசனில் ஒரு ஆட்டத்திலும் களம் இறக்கப்படவில்லை.
இந்த நிலையில் அவர் மும்பை அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். அண்டை மாநிலமான கோவா அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ள அர்ஜூன், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.
அர்ஜூன் மைதானத்தில் நீண்ட நேரம் விளையாட வேண்டியது முக்கியம். அணி மாறுவதன் மூலம் நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அவரது ஆட்டத்திறன் மேம்படும் என்று நம்புகிறோம். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய கட்டத்தை தொடங்குகிறார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- எம்.ஐ. கேப்டவுன் அணியில் ரஷித்கான், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், காகிசோ ரபடா, டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கேப்டவுன்:
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் லீக் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகளையும் இந்திய தொழிலதிபர்களே வாங்கியுள்ளனர்.
முதலாவது தென்ஆப்பிரிக்க 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கிறது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி எம்.ஐ. கேப்டவுன் அணியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்கள் லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபடா, இளம் வீரர் டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தங்கள் அணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக எம்.ஐ. கேப்டவுன் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்சுக்கு சொந்தமான ஜோகன்னஸ்பர்க் அணியில் தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உலக கோப்பை கால்பந்து போட்டியில் நம்பர் ஒன் அணியான பிரேசில் ஜி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
- முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி ஆகியவை இ பிரிவில் இடம் பிடித்துள்ளன.
தோஹா:
32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
ஏ பிரிவில் கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து
பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
சி பிரிவில் அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து
டி பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, ஆஸ்திரேலியா
இ பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ஜப்பான், கோஸ்டாரிகா
எப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா
ஜி பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
எச் பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில், உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20-ம் தேதி மோதுகின்றன என பிபா தெரிவித்துள்ளது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 122 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து 125 ரன்கள் எடுத்து வென்றது.
பெல்பாஸ்ட்:
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
முதல் டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தினர். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹஷ்மதுல்லா ஷஹிதி 36 ரன்கள் எடுத்தார்.
அயர்லாந்து சார்பில் ஜோஷ்வா லிட்டில், மார்க் அடைர், காம்பெர் மற்றும் டெலானி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. பால்பரின் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் அவுட்டானார். டக்கர் 27 ரன் எடுத்தார்.
இறுதியில், அயர்லாந்து 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாக்ரெல் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் அயர்லாந்து அணி டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- துணை கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
மும்பை:
இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. கடந்த மாதம் 30-ம் தேதி அறிவித்தது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் எனவும், ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் பங்கேற்கவில்லை. தற்போது அவர் முழு உடற்தகுதியை பெற்றுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளதால் ஜிம்பாப்வே தொடரில் விளையாட உள்ளார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.
- சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
- காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் முன்னணி ஜோடியை சானியா மிர்சா ஜோடி வீழ்த்தியது.
ஒட்டாவா:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
நேற்று முன்தினம் நடந்த முதல்சுற்றில் சானியா- மேடிசன் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த நிலையில் காலிறுதிக்கு முந்தய சுற்றில் இந்திய-அமெரிக்க ஜோடி, ரஷியாவின் முன்னணி வீராங்கனைகள் வெரோனிகா குடெர்மெடோவா மற்றும் எலிஸ் மெர்டென்சை இன்று எதிர்கொண்டனர். இந்த போட்டியில் சானியா- மேடிசன் ஜோடி 3-6, 6-4, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
- நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளையாக இருப்பவர்களுக்கான விளையாட்டாகும்.
- பல தருணங்களில் எங்களது உடைமாற்றும் அறையில் அந்த நிகழ்வு அரகேறியுள்ளது.
நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ராஸ் டைலர் கடந்த 2006 முதல் சர்வதேச அளவில் 3 வகையான கிரிக்கெட்டிலும் தனது அபார பேட்டிங் திறமையால் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரராக வரலாற்று சாதனை படைத்துள்ள இவர் கடந்த பிப்ரவரியில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சொந்த மண்ணில் ரசிகர்கள் முன் நிலையில் ஓய்வு பெற்றார்.
பொதுவாக நிறைய நட்சத்திர விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் தங்களது வாழ்க்கையை பற்றிய சுய சரிதையை புத்தகமாக வெளியிடுவார்கள். அந்த வகையில் நியூசிலாந்தின் ஜாம்பவானான இவர் ப்ளாக் & வைட் என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகத்தை வெளியிட்ட நிகழ்வில் பேசிய அவர் நியூசிலாந்துக்காக விளையாடும் போது பெரும்பாலும் வெள்ளை வீரர்களைக் கொண்ட தனது அணியில் தாம் மட்டும் மாநிறத்தை கொண்டவராக விளையாடியதால் நிறைய தருணங்களில் கிண்டல்களுக்கு உள்ளானதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளையாக இருப்பவர்களுக்கான விளையாட்டாகும். எனது வாழ்நாளில் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் வெண்ணிலாவை போன்ற வெள்ளை நிற வரிசையில் ஒரு மாநிறம் நிறைந்த பழுப்புநிற முகமாக இருந்ததால் பல சவால்கள் இருந்தன.
அவற்றில் பல உங்கள் அணி வீரர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரியாது. பல தருணங்களில் எங்களது உடைமாற்றும் அறையில் அந்த நிகழ்வு அரகேறியுள்ளது. ஒரு சக அணி வீரர் எப்போதும் என்னிடம் ராஸ் நீங்கள் பாதி நல்ல மனிதர் ஆனால் எந்த பாதி நல்லது? என்று கூறுவார். இங்கு நான் எதை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு தெரியாது. மற்ற வீரர்களும் தங்கள் இனத்தைப் பற்றிய கருத்துக்களை கூற வேண்டியிருந்தது.
எல்லா நிகழ்வுகளிலும் வெள்ளை நியூசிலாந்து வீரர்களிடம் அந்த வகையான கருத்துக்களைக் கேட்கும் போது இது கொஞ்சம் கேலிக்குரியது போல என்று நினைத்துக் கொள்வேன். இருப்பினும் நிறைய தருணங்களில் இது நட்புரீதியான கருத்துக்கள் என அவ்வாறு கேலி செய்யும் நபர்கள் கூறுவதால் பொதுமக்களிடம் இதைப்பற்றி அந்த பாதிப்புக்குள்ளாகும் நியூசிலாந்து வீரர்கள் கூறுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக பாப் டூ பிளிசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
- பாப் டூ பிளிசிஸ் கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
அந்த வகையில் ஜோகன்னஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. தற்போது அணிக்கு ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என பெயர் வைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக பாப் டூ பிளிசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அவர், அந்த லீக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வீரர் ஆவார். மேலும் சிஎஸ்கே நிர்வாகத்துடன் நல்ல நட்பில் இருப்பதால், அவர் தான் ஜோகனஸ்பர்க் அணியின் கேப்டனாக இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இம்ரான் தாஹிர், டுவைன் பிரிட்டோரியஸ், பிராவோ ஆகியோர் ஜோகனஸ்பர்க் அணிக்கும் விளையாட வாய்ப்பு உள்ளது. இதனிடையே, ஜோகனஸ்பர்க் அணியை தயார்படுத்தும் பணியை தோனி தான் மேற்கொள்வார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த அணிக்கும் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய பாப் டூ பிளிசிஸ் கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வில் ஸ்மீத் 50 பந்துகளை சந்தித்து 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லண்டனில் 100 பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் பர்மிங்காம் பீனிக்ஸ்-சதர்ன் பிரேவ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 100 பந்துகள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சதர்ன் பிரேவ் அணி களமிறங்கியது. அந்த அணி 85 பந்துகளில் 123 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக இங்கிலாந்தை சேர்ந்த இளம் வீரர் வில் ஸ்மீத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 50 பந்துகளை சந்தித்து 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடங்கும். இந்த சதத்தின் மூலம் இந்த தொடரில் அவர் சாதனை படைத்துள்ளார்.

100 பந்துகள் போட்டியில் யாரும் சதம் அடித்தது இல்லை. முதல் முறையாக இளம் வீரரான வில் ஸ்மீத் இந்த தொடரில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
- பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
- காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை சுந்தர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் காயம் அடைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது.
மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக லங்காஷயர் அணிக்காக களமிறங்கும் போது வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது. அவரின் காயத்தின் அளவு தெரியவில்லை. ஆனால் அவருக்கு உடற்தகுதியில் தொடர்ந்து சிக்கல்கள் உள்ளன.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் காயம் ஒரு பெரிய பயமாக உள்ளது.
பிப்ரவரி 2022 முதல் சுந்தர் இந்தியாவுக்காக விளையாடவில்லை. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை சுந்தர் தவறவிட்டார்.
பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. ஐபிஎல் 2022-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் முதல் ஆட்டத்தில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் கையில் ஏற்பட்ட காயத்தால் விலகினார்.
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை சுந்தர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிரிக்கெட்டில் பேட்டிங் நுணக்கம் என்பது தான் நிரந்தரம். பார்ம் வெறும் தற்காலிகமான ஒன்று தான்.
- விராட் கோலி மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான திறமைகளை பெற்றவர்.
துபாய்:
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. சமீபகாலமாக அவர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லை.
3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார்.
33 வயதான விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு இதுவரை சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தது இல்லை. மோசமான 'பார்ம்' காரணமாக இந்திய அணி விளையாடிய சில தொடர்களில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.
அவரது பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலியின் இடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது.
இதற்கிடையே ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியின் அடிப்படையில் தான் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும்.
இந்த நிலையில் விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விராட் கோலி தற்போது எதிர் கொண்டு வரும் சூழல் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால் அவர் தரமான ஆட்டக்காரர். அவர் மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான திறமைகளை பெற்றவர்.
கடந்த காலங்களில் அவர் இது மாதிரியான சூழ்நிலையை கடந்து வந்துள்ளார். அதே போல விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கிரிக்கெட்டில் பேட்டிங் நுணக்கம் என்பது தான் நிரந்தரம். பார்ம் வெறும் தற்காலிகமான ஒன்று தான்.
இவ்வாறு ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.
விராட் கோலி சர்வதேச போட்டியில் மொத்தம் 23, 726 ரன்கள் (டெஸ்ட் 8074, ஒரு நாள் ஆட்டம் 12,344, 20 ஓவர் போட்டி 3308) எடுத்துள்ளார். 70 சதங்களை (டெஸ்ட் 27+ ஒருநாள் போட்டி 43) அடித்துள்ளார்.






