என் மலர்
விளையாட்டு
- ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
- காயம் காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார்.
புதுடெல்லி:
ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.
முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
பெங்காலை சேர்ந்த ஷாபாஸ் 18 முதல் தர போட்டிகளில் விளையாடி 7 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 1041 ரன்கள் எடுத்துள்ளார். 57 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவர் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 314 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய நெதர்லாந்து 298 ரன்கள் எடுத்து போராடி தோற்றது.
ரோட்டர்டாம்:
நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ரோட்டர்டாம் நகரில் நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சதமடித்து அசத்தினார். அவர் 109 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 74 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய ஷதாப் கான் 28 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. எளிதில் வெற்றி பெறலாம் என நினைத்த பாகிஸ்தான் அணிக்கு நெதர்லாந்து வீரர்கள் சவாலாக ஆடினர்.
கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 71 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் மற்றும் டாம் கூப்பர் தலா 65 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில், நெதர்லாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.
- காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கங்கள் வென்ற சரத்கமலுக்கு 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் வழங்கினார் முதல்வர்
- கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள பிரணவ் வெங்கடேஷ்-க்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தில் (Elite Sportsperson Scheme) ஏ.சரத்கமல், சத்தியன் செல்வி பவானி தேவி ஆகியோருக்கும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் (Mission International Medals Scheme) சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல் ஆகியோருக்கும் தொடர் பயிற்சி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 28.7.2022 முதல் 8.8.2022 வரை இங்கிலாந்து நாட்டின், பர்மிங்காமில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ. சரத்கமலுக்கு மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழுப்போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி, ஒற்றையர் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி, என மொத்தம் 4 பதக்கங்களை வென்றதற்காக உயரிய ஊக்கத்தொகையாக 1 கோடியே 80 இலட்சம் ரூபாயும்,
மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழுப்போட்டியில் 1 தங்கம், இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி மற்றும் ஒற்றையர் போட்டியில் 1 வெண்கலம், என மொத்தம் 3 பதக்கங்களை வென்றதற்காக ஜி. சத்தியனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 1 கோடி ரூபாயும்,
ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சவ்ரவ் கோஷலுக் உயரிய ஊக்கத்தொகையாக 40 இலட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டிகளில் 1 வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கலுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 20 இலட்சம் ரூபாயும் மற்றும் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்கள் 5 நபர்களுக்கு மொத்த ஊக்கத்தொகையாக 51 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 3 கோடியே 91 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.
மேலும், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் பெண்கள் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பவானி தேவிக்கு ஊக்கத்தொகையாக 35 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள செல்வன் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ஊக்கத்தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் முதலமைச்சர் வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் கா. ப. கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு அணியும் ஏலத்துக்கு முன்பு 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்யலாம்
- 38 வயதான டூ பிளெசிஸ் சி.எஸ்.கே. அணிக்காக 100 ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். போட்டியை போன்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் 'லீக்' போட்டியை நடத்துகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த போட்டி நடக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள இந்த 20 ஓவர் 'லீக்' தொடரில் விளையாட உள்ள 6 அணிகளை 6 ஐ.பி.எல். உரிமையாளர்கள் வாங்கி உள்ளனர்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி நிர்வாகம் ஒரு அணியை வாங்கியுள்ளது. அந்த அணி ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் (ஜே.எஸ்.கே.) என்று அழைக்கப்படுகிறது.
6 அணியும் 17 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஏலத்துக்கு முன்பு 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்யலாம் என்று போட்டி அமைப்பு குழு தெரிவித்து இருந்தது. எஞ்சிய 12 வீரர்களை செப்டம்பர் மாதம் 20-ந் தேதி நடைபெறும் ஏலத்தில் தேர்ந்து எடுக்கலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு டூ பிளெசிஸ் கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டோனி ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அவரால் வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாது.
டூ பிளெசிஸ் ரூ.2.98 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டனான அவர் 2011 முதல் 2015 வரையிலும், 2018 முதல் 2021 வரை ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
38 வயதான டூ பிளெசிஸ் சி.எஸ்.கே. அணிக்காக 100 ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.
டூ பிளெசிஸ் தவிர மேலும் 4 வீரர்கள் ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி உள்ளனர். இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொய்ன் அலி ரூ.3.18 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
இலங்கையை சேர்ந்த தீக்சனா (ரூ.1.59 கோடி), வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமரியோ ஷெப்பர்டு (ரூ.1.39 கோடி), தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் ஜெரால்டு கோட்சீ (ரூ.39 லட்சம்)ஆகியோரும் ஒப்பந்தமாகி உள்ளனர். இதுகுறித்து சி.எஸ்.கே. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
இதில் மொயின் அலி, தீக்சனா ஐ.பி.எல். போட்டி யில் சி.எஸ்.கே. அணிக்கு ஆடி வருகிறார்கள்.
மேலும் சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பார்.
சிம்மன்ஸ், அல்பி மார்கல் ஆகியோரும் பயிற்சி யாளர் குழுவில் இடம் பெற்று இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கின்றன.
- 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
- இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
புதுடெல்லி:
17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது.
மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிபா முடிவு செய்துள்ளது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 132 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெல்பாஸ்ட்:
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல், 2வது டி20 போட்டியில் அயர்லாந்தும், 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 11 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது. அந்த நஜிபுல்லா அரை சதமடித்தார். கடைசி கட்டமாக அதிரடி காட்டிய ரஷித்கான் 10 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. டாக்ரெல் அதிகபட்சமாக 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
டி20 தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகிக்கிறது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.
- பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
- காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை சுந்தர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 18-ம் தேதி (பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் நடக்கிறது. நேற்று முன்தினம் ஹராரே சென்றடைந்த இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக விலகி உள்ளார். மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் களமிறங்கும் போது வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது.
2022 பிப்ரவரியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
- 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவிபிஷ்னோய் ஆகியோர் சுழற்பந்து வீரர்களாக உள்ளனர்.
தொடரை பொறுத்தும், திறமையை பார்த்தும் அவர்களது தேர்வு இருக்கிறது. இவர்களில் யாரெல்லாம் 20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா, யுசுவேந்திர சாஹல், ரவிபிஷ்னோய் ஆகிய 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியின் அடிப்படையில் தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும்.
இந்த நிலையில் உலக கோப்பையில் ஜடேஜாவால் விக்கெட்டுகளை எடுக்க முடியாது என்று முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பை அணியில் ஜடேஜா இடம் பெற்றாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியாது. 2021 உலக கோப்பைக்கு பிறகு விளையாடிய 7 போட்டிகளில் அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய பவுலிங் சராசரி 43க்கு மேல் உள்ளது. ஒரு ஓவருக்கான ரன்னும் அதிகமாக இருக்கிறது.
அவர் மட்டுமின்றி அக்ஷர் படேல், அஸ்வினும் 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கைப்பற்றும் பவுலர்களாக இல்லை. அக்ஷர் படேல் கடந்த உலக கோப்பைக்கு பிறகு 13 போட்டிகளில் 12 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஜடேஜா, அஸ்வின், அக்ஷர் படேல் ஆகிய 3 பேரால் 2 போட்டிகளுக்கு ஒரு விக்கெட்டை தான் எடுக்க முடிகிறது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர்.
அவருக்கு அடுத்தபடியாக அணியின் பொருத்த மான சுழற்பந்து வீச்சாளர் யார் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும்.
இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
- நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது.
- 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கிங்ஸ்டன்:
வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 146 ரன் இலக்காக இருந்தது.
பிலிப்ஸ் அதிகபட்சமாக 26 பந்தில் 41 ரன்னும் ( 4 பவுண்டரி , 2 சிக்சர் ), கேப்டன் வில்லியம்சன் 24 ரன்னும் ( 2 பவுண்டரி ) எடுத்தனர். ஓடியன் சுமித் 3 விக்கெட்டும் , அகீல் ஹூசைன் 2 விக்கெட்டும் , டொமினிக் டிரேக்ஸ், ஹைடன் வால்ஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார் கள்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கோப்பை வென்ற நியூசிலாந்து அணி வீரர்கள்
புரூக்ஸ் 56 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), பிரண்டன் கிங் 35 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி , 3 சிக்சர்) போவெல் 15 பந்தில் 27 (2 பவுண்டரி , 2 சிக்சர் எடுத்தனர். சவுத்தி, சோதிக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
முதல் 2 போட்டியிலும் தோற்று தொடரை இழந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது ஆறுதல் வெற்றியாகும். 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் வருகிற 17-ந்தேதி பிரிட்ஜ் டவுனில் நடக்கிறது.
- இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடந்தது.
- சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடந்தது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டி நடைபெற்றது.
அடுத்து சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது.
ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி சென்னையில் 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 1997 முதல் 2001 வரை கோல்டு பிளேக் ஓபன் என்ற பெயரிலும், 2002 முதல் 2004 வரை டாடா ஓபன், 2005 முதல் 2009 வரை சென்னை ஓபன், 2010 முதல் 2017 வரை ஏர்செல் சென்னை ஓபன் என்ற பெயரிலும் இந்த போட்டி நடைபெற்றது.
21 ஆண்டுகள் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 2018-ம் ஆண்டு இந்த போட்டி மராட்டிய மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12-ந்தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 18-ந்தேதி வரை இந்த போட்டி ஒரு வாரம் நடக்கிறது.
விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகவும் பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தது. தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவரும், முன்னாள் வீரருமான விஜய் அமிர்தராஜ் கூறியதாவது:-
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மகளிர் டென்னிஸ் போட்டி தொடரை வெற்றிகரமாக நடத்த ஆர்வமாக உள்ளோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மகளிர் டென்னிஸ் பிரபலமாகவும், வளர்ச்சி அடையவும் இந்த போட்டி உதவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சோனி டெலிவிஷன் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிபோட்டியில் பாப்லோ புஸ்டா, ஹல்க்ராசுடன் மோதினார்.
- இதில் பாப்லோ புஸ்டா வெற்றி பெற்றுக் கோப்பையை கைப்பற்றினார்.
டொரண்டோ:
கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் ஸ்பெயின் வீரர் பாப்லோ புஸ்டா, போலந்து வீரர் ஹுபர்ட் ஹல்க்ராசை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் செட்டை ஹல்க்ராஸ் 6-3 என கைப்பற்றினார். அடுத்து சுதாரித்துக் கொண்ட பாப்லோ புஸ்டோ அடுத்த இரு செட்களை கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், புஸ்டா 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஹல்கிராசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிபோட்டியில் சிமோனா ஹாலெப், மியாவுடன் மோதினார்.
- இதில் சிமானோ ஹாலெப் வென்று கோப்பையை கைப்பற்றினார்.
டொரண்டோ:
கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் ரோமானியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாத் மியாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை மியா 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், சிமோனா ஹாலெப் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் மியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.






