என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அசோக் சிகாமணியை எதிர்த்து போட்டியிட தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் பிரபு
    • கிரிக்கெட் சங்க செயலாளராக பழனி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ரூபா 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர்  தலைவர் பதவி தேர்வு செய்யப்படாமல் இருந்தது. துணைத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி இருந்து வந்தார்.

    இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தலைவர் பதவிக்கான போட்டியில் அசோக் சிகாமணி, பிரபு ஆகியோர் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரபு தனது மனுவை வாபஸ் பெற்று தேர்தலில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து அசோக் சிகாமணி போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வானார். இதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழனி  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    • ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
    • இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    சூப்பர் 12 சுற்றில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி குரூப்-2 பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்திலும், சிட்னியில் நடைபெற்ற 2-வது போட்டியில் நெதர்லாந்தை 56 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. பெர்த்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 4-வது போட்டியில் வங்காள தேசத்தை 5 ரன்னில் வென்றது.

    இந்திய அணி 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை நாளை (6- ந் தேதி ) எதிர் கொள்கிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி 8 புள்ளியுடன் அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. அரை இறுதியில் நுழைய இந்திய அணி வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

    வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் திக்கு முக்காடிதான் வெற்றி பெற்றது. அதாவது தோல்வியில் இருந்து தப்பி வெற்றி கிடைத்தது.

    இதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும். ஜிம்பாப்வே அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்கா-நெதர்லாந்து, பாகிஸ்தான்-வங்காள தேசம் மோதும் போட்டிக்கு பிறகுதான் இந்தியா விளையாடும் ஆட்டம் இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் ஆடும்.

    பேட்டிங்கில் விராட் கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். 4 ஆட்டத்தில் 3 அரை சதத்துடன் 220 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து நிலையாகவும், அதிரடியாகவும் விளையாடி வருகிறார்.

    லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் திரும்பி இருப்பது அணிக்கு சாதகமே.

    தினேஷ் கார்த்திக் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் கேப்டன் ரோகித் சர்மா நாளைய ஆட்டத்திலாவது அவருக்கு பதிலாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்று எதிர் பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் (9 விக்கெட்), ஹர்த்திக் பாண்ட்யா (6 விக்கெட்), முகமது ஷமி (4 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர்.

    ஜிம்பாப்வே அணி ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி 3 புள்ளியுடன் இருந்தது. பாகிஸ்தானை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப் பட்டது. வங்காளதேசம், நெதர்லாந்து அணிகளிடம் தோற்று இருந்தது.

    ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    • உலகக் கோப்பையில் இரண்டு அரைசதம் விளாசியுள்ளார்.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெர்த்தில் அடித்த அரைசதம் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் விராட் கோலி அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    அவருக்கு இணையாக இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி 3 அரைசதம் அடித்துள்ள நிலையில், சூர்யகுமார் இரண்டு அரைசதம் அடித்துள்ளார். குறிப்பாக பெர்த் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூர்ய குமார் விளையாடிய விதம் அனைவரும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது.

    மைதானத்தில் எந்த திசைக்கும் பந்தை துரத்தும் வல்லவை அவரிடம் உள்ளது. இதனால் டி வில்லியர்ஸ்க்கு பின் 360 டிகிரி என ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சகர்களாலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் அவருக்கு 360 டிகிரி என பெயர் வைக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காம்பீர் கூறியதாவது:-

    சூர்யகுமாரை 360 டிகிரி போன்ற பெயர்களால் அழைக்க வேண்டாம். அதற்காக அவர் இன்னும் அதிக அளவில் உழைக்க வேண்டும். அவருக்கு ஏராளமான திறமைகள் உள்ளது. அது 360 டிகிரி, 180 டிகிரி அல்ல ஒரு டிகிரி என்பது விஷயம் அல்ல.

    அவரிடம் விளையாட்டு இருக்கிறது. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். பாரம்பரிய பயிற்சியாளர் அவரை பார்க்கும்போது, அவர் திறமையான பேட்ஸ்மேனுக்கான லைனை தாண்டவில்லை என்றாலும், அவர் பெற்றுள்ள திறமையால் வெற்றிகரமாக திகழ்வார் என்று நிலையை எடுப்பார். முதல்தர கிரிக்கெட் மற்றும் எல்லா வகையிலான கிரிக்கெட்டிலும் ரன்கள் குவித்தள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பிடித்து, சிறப்பாக செயல்படுவார் என் நம்பிக்கை உள்ளது'' என்றார்.

    மேலும், ''மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் போன்று கவர் டிரைவ் அடிக்காமல் இருக்கலாம். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்களை விட நினைத்து பார்க்க முடியாத வகையில் 180 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்'' என்றார்.

    • நடுவர் அதை பார்த்து இருந்தால் 5 ரன் அபாரமாக கொடுத்திருப்பார்.
    • இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பையில் வங்காள தேசத்துக்கு எதிராக நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லிவிஸ் விதிப்படி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் வீராட் கோலி தங்களை திசை திருப்பும் முயற்சியாக போலியாக பீல்டிங் செய்ததாக வங்காளதேச வீரர் நூருல்ஹசன் குற்றம் சாட்டி இருந்தார்.

    அக்‌ஷர் படேல் வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தை லிட்டன்தாஸ் அடிக்க பவுண்டரி லைன் அருகே நின்ற அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்து வீச விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதை பிடித்தார். ஆனால் இடையே நின்றிருந்த விராட் கோலி பந்து தன்னை கடக்கையில் அதை பிடித்து பந்து வீச்சாளர் பகுதியை நோக்கி எறிவது போல் பாவனை காட்டினார்.

    ஆனால் கோலியின் அந்த செயலை வங்காளதேச பேட்ஸ் மேன்களான லிட்டன்தாசும், நஜ்குல ஹூசைனும் கவனிக்காமல் 2 ரன்கள் எடுத்தனர். இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு தான் நூருல்ஹசன் மைதான நடுவர்களை விமர்சித்துள்ளார்.

    நடுவர்கள் அதை முறையாக கவனித்து இந்திய அணிக்கான தண்டனையாக வங்காள தேசத்துக்கு 5 ரன்கள் வழங்கி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு கிடைத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும் என்றும் கூறினார்.

    ஐ.சி.சி. விதிப்படி போலியான பீல்டிங் பாவனையால் பேட்ஸ்மேன்கள் திசை திருப்பப்பட்டதாக நடுவர்கள் கண்டறிந்திருந்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்குவர். ஆனால் கோலியின் பாவனை நடுவர்களால் கவனிக்கப்படவில்லை என்றாலும் பேட்ஸ்மேன்கள் அந்த செயலால் திசை திருப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலி 100 சதவீதம் போலியான பீல்டிங்தான் செய்தார் என்றும் அவர் தவறு செய்துவிட்டார் என்றும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலி செய்தது கண்டிப்பாக 100 சதவீத போலி பீல்டிங்தான். பந்தை பிடிக்காமலேயே பேட்ஸ்மேனை ஏமாற்றும் விதமாக தான் 'துரோ' எறிவது போல் ஆக்‌ஷன் செய்தார். நடுவர் அதை பார்த்து இருந்தால் 5 ரன் அபாரமாக கொடுத்திருப்பார்.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றது. எனவே நாம் தப்பித்தோம். இந்த விஷயத்தில் வங்காள தேச வீரரின் குற்றச்சாட்டு சரியானவைதான்.

    இவ்வாறு சோப்ரா கூறி உள்ளார்.

    • இந்த ஆட்டத்தில் இலங்கை வாகை சூடினால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும்.
    • இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைக்கும் என்பதால் ஹசரங்கா, தீக்‌ஷனா ஆகியோரின் சுழல் தாக்குதலை இலங்கை அதிகமாக நம்பி இருக்கிறது.

    சிட்னி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று (சனிக்கிழமை) சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 5 புள்ளிகள் (2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறி விடும். தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டும்.

    அதே சமயம் 4 புள்ளியுடன் உள்ள (2 வெற்றி, 2 தோல்வி) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அழுத்தம் இன்றி விளையாடுவார்கள். தொடரை வெற்றியோடு நிறைவு செய்யும் முனைப்புடன் அவர்கள் தயாராகி வருகிறார்கள்.

    இந்த ஆட்டத்தில் இலங்கை வாகை சூடினால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும். அதனால் இலங்கை வெற்றிக்காக ஆஸ்திரேலிய ரசிகர்களும் பிரார்த்திப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஆனாலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக திகழும் இங்கிலாந்தை இலங்கை சமாளிக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 13 இருபது ஓவர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 9-ல் இங்கிலாந்தும், 4-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. 20 ஓவர் கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி, இங்கிலாந்தை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைக்கும் என்பதால் ஹசரங்கா, தீக்‌ஷனா ஆகியோரின் சுழல் தாக்குதலை இலங்கை அதிகமாக நம்பி இருக்கிறது. போட்டிக்கு மழை ஆபத்து இல்லை.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • லிட்டோன் தாஸ் இந்தியாவுக்கு எதிராக 21 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • கே.எல். ராகுல் ரன்அவுட் ஆக்கியதாகல் இந்தியா வெற்றி பெற முடிந்தது.

    இந்தியா- வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த 2-ந்தேதி அடிலெய்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 184 ரன்கள் குவித்தது. பின்னர் வங்காளதேசம் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது.

    இவ்வாளவு பெரிய ஸ்கோரை வங்காளதேசம் சேஸிங் செய்ய வாய்ப்பில்லை, வெற்றி இந்தியாவுக்கு என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வங்காளதேச அணியின் தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாடி இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்தார்.

    அர்ஷ்தீப் வீசிய போட்டியின் 2-வது ஓவரில் 3 பவுண்டரிகள், புவி வீசிய 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ், ஷமி வீசிய 6-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என தெறிக்கவிட்டார். இதனால் வங்காள தேசம் 6 ஓவரில் 60 ரன்களை எட்டியது. அத்துடன் தாஸ் 21 பந்தில் அரைசதம் விளாசினார்.

    இதனால் இந்திய அணி தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. ஆனால், 7 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியதும், லிட்டோன் தான் 27 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டு ரன்களுக்கு ஓடும்போது, பவுண்டரி கோடு அருகில் இருந்து கே.எல். ராகுல் வீசிய பந்து ஸ்டம்பை நேரடியாக தாக்கியதால் ரன்அவுட் ஆனார்.

    இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்த லிட்டோன் தாஸ்க்கு இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி, பேட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளின் சேர்மன் ஜலால் யூனுஸ் கூறியதாவது:-

    டைனிங் ஹாலில் நாங்கள் உட்கார்ந்து இருக்கும்போது, விராட் கோலி அங்கு வந்தார். அப்போது லிட்டோன் தாஸ்க்கு அவருடைய பேட்டை பரிசாக வழங்கினார். என்னைப் பொறுத்த வரையில், லிட்டோன் தாஸ்க்கு இது ஒரு உத்வேகத்திற்கான தருணம், என்றார்

    • ரிஷப் பந்த் ஒவ்வொரு போட்டியிலும் இந்த உலகக் கோப்பையில் ஆடியிருக்க வேண்டும்.
    • சில வேளைகளில் அணித் தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் பார்மை வைத்து வீரர்களை தேர்வு செய்கின்றனர்.

    சிட்னி:

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்னும் 4 லீக் ஆட்டங்களே உள்ளன. இந்நிலையில் இதுவரை நியூசிலாந்து அணி மட்டுமே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

    இந்திய அணி தனது கடசி லீக் ஆட்டத்டில் ஜிம்பாப்வே அணியை எதிர் கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தனது பிரிவில் முதல் இடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி ( பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம் ) , 1 தோல்வி ( தென் ஆப்பிரிக்கா) எடுத்துள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்ய வேண்டும் என இயன் சேப்பல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டிம் டேவிட் சர்வதேச அளவில் என்ன செய்து விட்டார்? சில வேளைகளில் அணித் தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் பார்மை வைத்து வீரர்களை தேர்வு செய்கின்றனர்.

    இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்தியா, அவர்கள் ரிஷப் பந்த்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை பிளேயிங் லெவனில் தேர்வு செய்கின்றனர். இது பெரிய முட்டாள்தனம், நான் என்ன சொல்கிறேன் என்றால் ரிஷப் பந்த் ஒவ்வொரு போட்டியிலும் இந்த உலகக் கோப்பையில் ஆடியிருக்க வேண்டும்.

    மேலும், அந்தப் பேட்டியில் டிம் டேவிட்டை பற்றி கூறும்போது, உள்நாட்டு கிரிக்கெட்டில் தனியார் லீக்குகளில் மணிக்கு 120 கிமீ வேகம் வீசும் பவுலர்களை விளாசுவதை வைத்து சர்வதேச போட்டிகளுக்கு தேர்வு செய்தால் அங்கு மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை எப்படி அடிக்க முடியும்.

    அதனால் தான் சில சர்வதேசப் போட்டிகளையாவது ஆடவிட்டு பிறகு உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும். மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை இஷ்டத்துக்கு விளாசுவதெல்லாம் சுலபமானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
    • இதையடுத்து ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து நபி விலகியுள்ளார்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் 3 தோல்வி அடைந்துள்ளது. அந்த அணியின் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நிறைவு செய்துள்ளது. இதனால் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகியுள்ளார்.

    இதுதொடர்பாக முகமது நபி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஆப்கானிஸ்தான் அணியின் டி20 உலக கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. போட்டிகளின் முடிவுகளால் ரசிகர்களை போலவே நாங்களும் விரக்தி அடைந்துள்ளோம்.

    கடந்த சில சுற்றுப்பயணங்களில் அணி நிர்வாகம், தேர்வுக் குழு மற்றும் எனது முடிவுகளில் வேறுபாடு இருந்துள்ளது. இது அணியின் சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்தியது. எனவே, உடனடியாக கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன். அணி நிர்வாகம் விரும்பினால் ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயாராக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்கு தேர்தல் நடத்த கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டது.
    • நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது

    புதுடெல்லி:

    சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தவும் கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கால நிர்ணயத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

    மேலும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் செயற்குழு வாரிய கூட்டம் வருகிற டிசம்பர் 5-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டதால் இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலை அதற்கு முன்னதாக டிசம்பர் 3-ந் தேதி நடத்தவும் ஒப்புதல் அளித்தது.

    மேலும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையில் குழு ஒன்றை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க வரைவு திருத்த விதிகளை தயாரித்த நீதிபதி குழு, சங்கத்தின் செயற்குழு தேர்தலை டிசம்பர் 10-ந் தேதி நடத்தலாம் என புதிய தேதியை சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரைத்தது.

    நீதிபதி நாகேஸ்வரராவ் குழுவின் பரிந்துரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திர சூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பரிந்துரையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

    இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினர்களுக்கு வரைவு திருத்த சட்ட நகல்களை சுற்றறிக்கையாக அனுப்புவதற்காக வழிமுறைகளையும் நீதிபதி நாகேஸ்வர ராவ் தெரிவிப்பார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும் நீதிபதி நாகேஸ்வர ராவுக்கு சம்பளமாக ரூ.20 லட்சம் நிர்ணயித்து உத்தரவிட்டனர்.

    • ரஷித் கான் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் சேர்த்தார்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் சம்பா, ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணி வீரர்கள் அதிரடியால் ஸ்கோர் 200-க்கு மேல் வரும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் துல்லியமான் பந்து வீச்சால் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

    அதிகப்பட்சமாக மேக்ஸ்வெல் அரை சதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் - கானி ஆடினர். கானி தொடக்க முதலே தடுமாறினார். அவர் 7 பந்துகளில் 2 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த இப்ராஹிம் பொறுமையாக விளையாடினார். ஒருபக்கம் அதிரடி காட்டிய குர்பாஷ் 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.

    இதனையடுத்து இப்ராஹிம் - குல்பாடின் நைப் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற சதவிதத்தில் ஆப்கானிஸ்தான் 66 சதவிதமும் ஆஸ்திரேலியா 34 சதவிதமும் இருந்தது.

    இந்நிலையில் 13-வது ஓவரை ஆடம் ஜம்பா வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்க முயற்சித்த போது குல்பாடின் நைப் ரன் அவுட் ஆனார். 2-வது பந்தில் இப்ராஹிம் 26 ரன்னிலும் 4-வது பந்தில் நஜிப்புல்லா 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த ஓவரில் நபி 1 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனால் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. 14.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 103 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்ததாக ரஷித்கான் -ரசூல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ரஷித் கான் 3 சிக்சர்களை விளாசினார்.

    கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கானின் அதிரடியில் கடைசி 2 பந்தில் ஆப்கானிஸ்தானுக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் 2 ரன்னும் கடைசி பந்தில் பவுண்டரியும் எடுக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடைசி வரை வெற்றிக்கு போராடிய ரஷித் கான் 23 பந்தில் 48 ரன்னில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சம்பா, ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • இது இந்த உலக கோப்பையில் இரண்டாவது ஹாட்ரிக் ஆகும்.
    • இலங்கைக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுழற்பந்து வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். 19-வது ஓவரில் வில்லியம்சன் (61 ரன்) நீசம் (0), சான்ட்னெர் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இது இந்த உலக கோப்பையில் இரண்டாவது ஹாட்ரிக் ஆகும்.

    ஏற்கனவே முதல் சுற்றில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுழற்பந்து வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 2-வது அயர்லாந்து வீரர் ஜோஷ் லிட்டில் ஆவார்.

    • அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிதாஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் டிம் டேவிட் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மிட்செல் ஸ்டார்க்கு பதிலாக ரிச்சர்சன் அணியில் இடம் பிடித்தார். கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

    முதலில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னர் - கீரின் பேட்டிங் செய்தனர். கீரின் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மிட்செல் மார்ஸ் - டேவிட் வார்னர் ஜோடி அதிரடியாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 50 எடுத்த போது வார்னர் 25 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ஸ்மித் (4 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய மார்ஸ் 45 ரன்னிலும் ஸ்டோய்னிஸ் 25 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த கேப்டன் வேட் 6 ரன்னிலும் போல்ட் ஆனார்.

    கடைசி வரை போராடிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ×