search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    100 சதவீதம் விராட் கோலி தவறு செய்து விட்டார்- முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஒப்புதல்
    X

    100 சதவீதம் விராட் கோலி தவறு செய்து விட்டார்- முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஒப்புதல்

    • நடுவர் அதை பார்த்து இருந்தால் 5 ரன் அபாரமாக கொடுத்திருப்பார்.
    • இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பையில் வங்காள தேசத்துக்கு எதிராக நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லிவிஸ் விதிப்படி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் வீராட் கோலி தங்களை திசை திருப்பும் முயற்சியாக போலியாக பீல்டிங் செய்ததாக வங்காளதேச வீரர் நூருல்ஹசன் குற்றம் சாட்டி இருந்தார்.

    அக்‌ஷர் படேல் வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தை லிட்டன்தாஸ் அடிக்க பவுண்டரி லைன் அருகே நின்ற அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்து வீச விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதை பிடித்தார். ஆனால் இடையே நின்றிருந்த விராட் கோலி பந்து தன்னை கடக்கையில் அதை பிடித்து பந்து வீச்சாளர் பகுதியை நோக்கி எறிவது போல் பாவனை காட்டினார்.

    ஆனால் கோலியின் அந்த செயலை வங்காளதேச பேட்ஸ் மேன்களான லிட்டன்தாசும், நஜ்குல ஹூசைனும் கவனிக்காமல் 2 ரன்கள் எடுத்தனர். இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு தான் நூருல்ஹசன் மைதான நடுவர்களை விமர்சித்துள்ளார்.

    நடுவர்கள் அதை முறையாக கவனித்து இந்திய அணிக்கான தண்டனையாக வங்காள தேசத்துக்கு 5 ரன்கள் வழங்கி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு கிடைத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும் என்றும் கூறினார்.

    ஐ.சி.சி. விதிப்படி போலியான பீல்டிங் பாவனையால் பேட்ஸ்மேன்கள் திசை திருப்பப்பட்டதாக நடுவர்கள் கண்டறிந்திருந்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்குவர். ஆனால் கோலியின் பாவனை நடுவர்களால் கவனிக்கப்படவில்லை என்றாலும் பேட்ஸ்மேன்கள் அந்த செயலால் திசை திருப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலி 100 சதவீதம் போலியான பீல்டிங்தான் செய்தார் என்றும் அவர் தவறு செய்துவிட்டார் என்றும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலி செய்தது கண்டிப்பாக 100 சதவீத போலி பீல்டிங்தான். பந்தை பிடிக்காமலேயே பேட்ஸ்மேனை ஏமாற்றும் விதமாக தான் 'துரோ' எறிவது போல் ஆக்‌ஷன் செய்தார். நடுவர் அதை பார்த்து இருந்தால் 5 ரன் அபாரமாக கொடுத்திருப்பார்.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றது. எனவே நாம் தப்பித்தோம். இந்த விஷயத்தில் வங்காள தேச வீரரின் குற்றச்சாட்டு சரியானவைதான்.

    இவ்வாறு சோப்ரா கூறி உள்ளார்.

    Next Story
    ×