என் மலர்
விளையாட்டு
- அமெரிக்கா, ஜப்பான், அர்ஜென்டினா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே கத்தார் சென்று விட்டன.
- உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் நேற்று காட்சி போட்டியில் விளையாடியது.
தோகா:
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் வருகிற 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடக்கிறது. போட்டி தொடங்க இன்னும் 3 நாட்களே இருப்பதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கத்தார் நாட்டு அரசு செய்து உள்ளது. இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை வளத்தால் அங்கு பணம் கொழிக்கிறது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக அந்நாட்டு அரசு கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து வருகிறது.
உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் கத்தார் வந்த வண்ணமாய் உள்ளன. அமெரிக்கா, ஜப்பான், அர்ஜென்டினா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே கத்தார் சென்று விட்டன.
இந்த நிலையில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் தோகா சென்றடைந்தன. அந்நாட்டு வீரர்களுக்கு கத்தாரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டு அணியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டல்களுக்கு சென்று பிறகு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் நேற்று காட்சி போட்டியில் விளையாடியது. அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர்.
- ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல்கேரியா பயிற்சி முகாமில் பங்கேற்கிறார்.
காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பல்கேரியா நாட்டின் பெல்மிகினில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள நிதி உதவி வழங்குமாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 2,600 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த முகாமில் நவம்பர் 7-ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை 19 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முன்னாள் வீரர் செரஃபிம் பாசர்கோ தலைமையின் கீழ், நடைபெறும் இந்த முகாமில் தமது உடலியக்க நிபுணர் அஷ்வினி படேலுடன் வினேஷ் போகத் கலந்து கொள்கிறார்.
ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டத்தின் கீழ் வினேஷ் போகத் மற்றும் அவருடைய உடல நல நிபுணருக்கான விமானப்பயணக் கட்டணம், தங்குமிடம், உள்ளூர் பயணம் ,உணவு செலவு உள்ளிட்டவற்றிற்கு நிதி அளிக்கப்படுகிறது. இதர செலவுக்காக நாள் ஒன்றுக்கு 50 டாலர் படியாக வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் போட்டி சமனில் முடிந்தது
- தபாங் டெல்லியை வீழ்த்தியது யு.பி.யோத்தா.
புனே:
9-வது புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது புனே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 33-33 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணி வீரர் நரேந்தர் 3 போனஸ் புள்ளிகள் உட்பட 16 புள்ளிகளை குவித்து அசத்தினார். இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், தபாங் டெல்லி-யு.பி.யோத்தா அணிகள் மோதின. இதில் யு.பி.யோத்தா அணி 50-31 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 7-வது வெற்றியை பெற்ற யு.பி.யோத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.
- எம்.எஸ்.டோனி ஒரு கேப்டனாக வெற்றிகண்டுள்ளார்.
- அதிக வாய்ப்புகளை கொடுத்தால் தான் சில சிறந்த வீரர்களை கண்டுபிடிக்க முடியும்.
மும்பை:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி மிகவும் மோசமாக சொதப்பியது. 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அரையிறுதி போட்டியில் தோற்றதை இன்றும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து அடுத்த முறையாவது இந்திய அணி வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், யார் யாரையெல்லாம் மாற்ற வேண்டும் என விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளது.
அதில் பலரின் வாய்களில் இருந்து வரும் பெயர் எம்.எஸ்.டோனி தான். அதாவது இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் டோனி ஓய்வு அறிவிக்கலாம். அதன்பின் அவரை இந்திய அணியின் இயக்குநராக முழு நேர பதவி கொடுக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்காக டோனிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் புதிய யோசனையை வழங்கியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
வி.வி.எஸ்.லக்ஷ்மண் மற்றும் விரேந்திர சேவாக் போன்ற வீரர்கள் மிகவும் சிறந்தவர்கள் தான். ஆனால் ஒரு பயிற்சியாளருக்கு தலைமை பண்பு மற்றும் வியூகங்கள் வகுப்பதில் அதிக அனுபவம் வேண்டும். அப்போது தான் வீரர்களுக்கு யோசனைக்கூற முடியும். அதற்கு டோனி தான் சரிபட்டு வருவார்.
எம்.எஸ்.டோனி ஒரு கேப்டனாக வெற்றிகண்டுள்ளார் என்பதை பாருங்கள். எனவே அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட வைக்க வேண்டும். அப்போது தான் இந்திய அணிக்கு நல்லதாக இருக்கும். இது ஒருபுறம் இருக்க டோனி சிஎஸ்கே அணிக்கும் ஆலோசகராக செயல்படுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை தரவேண்டும். அதில், ரிஸ்க் எடுக்காமல் எதுவுமே வராது. எல்லா முறையும் வெற்றி மட்டுமே வரும் என நினைக்கக்கூடாது. அதிக வாய்ப்புகளை கொடுத்தால் தான் சில சிறந்த வீரர்களை கண்டுபிடிக்க முடியும்.
என சல்மான் பட் கூறியுள்ளார்.
- இந்திய அணியை மிகவும் குறைவான செயல்பாட்டை கொண்ட அணி என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்திருந்தார்.
- ஒன்றரை வருடங்களாக இந்தியாவுக்காக விளையாடி வருவதால், சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை வெளிப்படுத்த அவர்களுக்கு போதுமான நேரம் கிடைத்துள்ளது.
வெல்லிங்டன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர்களுடைய கருத்தை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும். சர்வதேச அளவில் விளையாடும் போது நாங்கள் யாருக்கும் எங்களை நிரூபிக்க அவசியமில்லை என நினைக்கிறேன். இது ஒரு விளையாட்டு, இதில் நீங்கள் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வீர்கள். அதற்கான முடிவுகள் நடக்கும் போது நிச்சயம் நடக்கும். நாங்கள் இன்னும் டி20 கிரிக்கெட்டில் சில விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அதனை வருங்காலங்களில் சரி செய்து சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்வி எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் தொழில் முறை கிரிக்கெட் வீரராக இருக்கும் நீங்கள் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டு அதில் இருந்து மீண்டு வந்து எப்படி வெற்றி அடைய வேண்டும் என்பது குறித்து தான் யோசிக்க வேண்டும் . முன்னேறிச் செல்வது மட்டும்தான் ஒரே வழி.தவறுகளை திருத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
அடுத்த டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அடுத்த டி20 உலக கோப்பைக்கான பயணம் நியூசிலாந்து தொடருடன் தொடங்குகிறது. இது ஒரு புதிய தொடக்கம். எங்களுக்கு இன்னும் நிறைய காலங்கள் இருக்கிறது.
அதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அமர்ந்து பிறகு யோசிப்போம். இப்போது எங்களுடைய வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்ப.ம் எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செய்யப்படவுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது
- வரும் ஏலத்தில் மும்பை அணி நிச்சயம் பெரிய வீரருக்காக பணத்தை செலவளித்தாக வேண்டும்.
- மும்பை அணிக்கு உள்ளூர் வீரர் தேவை இதே போல அயல்நாட்டு ஸ்பின்னர்களை வாங்கக்கூடாது.
மும்பை:
ஐபிஎல் 2023-ம் ஆண்டு தொடருக்காக மும்பை அணி மீண்டும் பெரிய தவறை செய்துள்ளதாக வசீம் ஜாஃபர் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் நவம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் அனைத்து அணிகளும் முன்னணி வீரர்களை கூட விடுவித்து பெரிய முடிவுகளை எடுத்திருந்தது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்ல பெரும் வியூகத்தை அமைத்துள்ளது. மும்பை அணி பட்டியல் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் மீண்டும் மும்பை அணியிலேயே இணைந்துள்ளார்.
ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு விளையாடிய அவரை ட்ரேடிங் முறையில் மும்பை அணி வாங்கியுள்ளது. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அவர் மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்தால், ட்ரெண்ட் போல்ட் இருந்த போது ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்நிலையில் மும்பை அணி சுழற்பந்து வீச்சில் வீக்காக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாபர் பேசியுள்ளார்:
இது குறித்து அவர் கூறியதாவது:-
பெஹ்ரண்டோர்ஃப் மற்றும் பும்ரா நல்ல காம்போ தான். ஆனால் அவர்களுடன் இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பெரிய பிரச்சினை.
ஏனென்றால் உலக தரத்தில் வேறு வேகப்பந்துவீச்சாளர் இல்லை. இந்திய இளம் வீரர் ஆகாஷ் மாத்வால் சற்று சிறப்பாக செயல்படுவார். இதே போல சுழற்பந்துவீச்சிலும் மும்பை வீக்காக உள்ளது. மயங்க் மார்காண்டே, முருகன் அஸ்வின் உள்ளிட்ட ஸ்பின்னர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆஃப் ஸ்பின்னர் ஹிர்திக் சோக்கீன் மிகக்குறைவான போட்டியிலேயே ஆடியுள்ளர். மேலும் வான்கடேவில் ஆஃப் ஸ்பின் எடுபடாது. குமார் கார்த்திகேயா ஓரளவிற்கு சிறப்பாக உள்ளார். ஆனால் வரும் ஏலத்தில் மும்பை அணி நிச்சயம் பெரிய வீரருக்காக பணத்தை செலவளித்தாக வேண்டும். உள்ளூர் வீரர் தேவை இதே போல அயல்நாட்டு ஸ்பின்னர்களை வாங்கக்கூடாது.
ஏனென்றால் டிம் டேவிட் நிச்சயம் ஆடுவார். ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ஆர்ச்சர், பெஹண்டோர்ஃப் ஆகியோரும் ஆடுவார்கள். இப்படி இருக்கையில் ப்ளேயிங் 11-ல் அயல்நாட்டு ஸ்பின்னர் சூட் ஆக மாட்டார். எனவே இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்களுக்கு தான் வலைவிரிக்க வேண்டும் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிராவோ, ராபின் உத்தப்பா உள்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது.
- 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளன.
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
16-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23-ந்தேதி கொச்சியில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான வீரர்கள் தக்க வைப்பு, விடுப்பு பட்டியலை 15-ந்தேதிக்குள் (நேற்று) சமர்பிக்க கெடுவிதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் விவரத்தையும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் விவரங்களையும் வெளியிட்டுள்ளன.
10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 85 வீரர்களை விடுவித்து உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிராவோ, ராபின் உத்தப்பா உள்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் ஓய்வு பெற்ற பொல்லார்டு, பேபியன் ஆலன், மில்ஸ் உள்பட 13 வீரர்களையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன் உள்பட 12 வீரர்களையும், பஞ்சாப் கிங்ஸ் மயங்க் அகர்வால், ஓடியன் சுமித் உள்பட 9 வீரர்களையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச் உள்பட 16 வீரர்களையும் விடுவித்தன.
பெர்குசன், ஜேசன் ராய் உள்பட 6 வீரர்கள் குஜராத் அணியில் இருந்தும், மனிஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர் உள்பட 7 பேர் லக்னோ அணியில் இருந்தும், ரூதர் போர்டு உள்பட 5 பேர் பெங்களூர் அணியில் இருந்தும், ஜேம்ஸ் நீசம், கருண் நாயர் உள்பட 9 பேர் ராஜஸ்தான் அணியில் இருந்தும், ஷர்துல் தாகூர் உள்பட 5 வீரர்கள் டெல்லி அணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டன.
10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளன. சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.20.45 கோடி கையிருப்பு இருக்கிறது. பெங்களூர் அணியிடம் ரூ.8.75 கோடி யும், ராஜஸ்தானிடம் ரூ.13.2 கோடியும், டெல்லியிடம் ரூ.19.45 கோடியும், மும்பை யிடம் ரூ.20.55 கோடியும், பஞ்சாப்பிடம் ரூ.32.2 கோடியும், கொல்கத்தா விடம் ரூ.7.05 கோடியும், குஜராத்திடம் ரூ.19.25 கோடியும், ஐதராபாத்திடம் ரூ.42.25 கோடியும், லக்னோ விடம் ரூ.23.75 கோடியும் கையிருப்பு இருக்கிறது.
- தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் 35 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.
- இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி-உபி. யோதா மோதுகின்றன.
புனே:
புரோ கபடி 'லீக்' போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் 35 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. பாட்னாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் ஆடும்.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி-உபி. யோதா மோதுகின்றன. இரு அணிகளும் 7-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.
- எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது.
- டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி அரையிறுதியில் தோற்று வெளியேறின. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து செல்ல உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் செயல்படுவார். இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக வில்லியம்சன் தொடர்கிறார். டிரண்ட் போல்ட் மற்றும் கப்திலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவுடனான தொடர் குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது. டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார். அவரை மீண்டும் நியூசிலாந்து அணியில் பார்ப்போம் என நம்புகிறேன்.
இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.
- டி20 மற்றும் ஒருநாள் அணியில் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை
- 20 ஓவர் போட்டிக்கு ஹர்த்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெலிங்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடர்களில் ரோகித் சர்மா, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந் தேதியும், 3-வது போட்டி 22-ந் தேதியும் நடக்கிறது.
3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் 25-ந் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் நியூசிலாந்துக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டிக்கு ஹர்த்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி20 மற்றும் ஒருநாள் அணியில் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை. இந்த இரண்டு தொடரிலும் அதிவேக இளம் பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம்பெற்றுள்ளார்.
இந்திய ஒருநாள் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், சக்ரன் யாதவ். மாலிக், குல்தீப் சென்.
இந்திய டி20 அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் சிராஜ், முகமது சிராஜ், முகமது சிராஜ் குமார். சிங், உம்ரான் மாலிக்.
- போட்டியில் களம் இறங்க மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
- உலக கோப்பை கால்பந்தில் வாகை சூடுவது யார்? என்பதை கணிப்பது மிகவும் கடினம்.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.
அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் (இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) சந்திக்கின்றன. இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வரும் 35 வயதான நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சிக்கு (அர்ஜென்டினா) இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கலாம்.
அவரிடம் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மெஸ்சி கூறுகையில், 'இது பற்றி விவாதிக்கும் போதெல்லாம் குறிப்பிட்ட அணிகள் குறித்து தான் நாம் பேசுகிறோம். மற்றவர்களை விட பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கு சற்று வாய்ப்பு அதிகமிருப்பதாக நினைக்கிறேன்.
ஆனால் உலக கோப்பை கால்பந்தில் வாகை சூடுவது யார்? என்பதை கணிப்பது மிகவும் கடினம். சவால் நிறைந்த இந்த போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். போட்டியில் களம் இறங்க மிகவும் ஆர்வமாக உள்ளோம். ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம்' என்றார். 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் அர்ஜென்டினா அணி தனது முதல் ஆட்டத்தில் சவுதிஅரேபியாவை 22-ந்தேதி எதிர்கொள்கிறது.
- கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடி
- 2018-ம் ஆண்டு ரஷியாவில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடியாகும்.
தோகா:
உலகின் 2-வது மிகப் பெரிய விளையாட்டு திருவிழா, உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.
கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் 2018ம் ஆண்டு நடந்தது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 20-ந் தேதி கத்தாரில் தொடங்குகிறது. டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் கால்பந்து திருவிழா நடக்கிறது.
இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் நேரடியாக தகுதி பெற்று உள்ளது. மீதமுள்ள 31 அணிகளும் தகுதி சுற்று மூலம் தேர்வு பெற்றன.
இந்த 32 நாடுகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வோரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெரும்.
உலக கோப்பை கால்பந்து போட்டியின் பரிசு தொகை விவரம் வெளியாகி உள்ளது. மொத்த பரிசு தொகை ரூ.3586 கோடியாகும். இது கடந்த முறையை விட ரூ.328 கோடி கூடுதலாகும். 2018-ம் ஆண்டு ரஷியாவில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடியாகும்.
சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசாக கிடைக்கும். 2-வது இடத்துக்கு ரூ.244 கோடி வழங்கப்படும். 3-வது இடத்துக்கு ரூ.219 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.203 கோடியும் கிடைக்கும்.
கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடியும், 2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும்.






