என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 355 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய வீரர் டிராவிட் ஹெட் 152 ரன்கள் அடித்தார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக இந்த போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர் டிராவிட் ஹெட்152 ரன் குவித்தார். மற்றொரு வீரர் வார்னர் 106 ரன்கள் அடித்தார்.

    இதன் மூலம் 48 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 355 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ஸ்டோன் 4 விக்கெட் எடுத்தார். திருத்தப்பட்ட 364 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜெசன் ராய் 33 ரன் அடித்தார். வின்ஸ் 22 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.

    இங்கிலாந்து 31.4 ஓவர்களில் 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 221 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஆடம் சம்பா 4 விக்கெட்களை வீழ்த்தினார். கம்மின்ஸ், அபோட் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

    • இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது.
    • இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நேப்பியர்:

    இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 160 ரன்களில் சுருண்டது. இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. 9 ஓவர்கள் மட்டுமே முடிந்திருந்தது. மழை விட்டதும் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணிக்கு தேவையான ரன்கள் இருந்ததால், போட்டி டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, 3 போட்டி கொண்ட டி2௦ தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.

    • டி20-யில் இந்தியாவின் அணுகுமுறை குறித்து விமர்சனம்
    • உலகக் கோப்பை தோல்விக்குப்பின் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்பு

    டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணி பவர் பிளேயில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது முக்கிய காரணம் என விமர்சிக்கப்பட்டது. மேலும், டி20-யில் பயமில்லாமல் விளையாடும் அணுகுமுறை இந்திய வீரர்களிடம் இல்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது.

    இதனால் இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், இந்திய அணி நியூசிலாந்தில் விளையாடி வருகிறது.

    இந்த தொடரில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இஷான் கிஷன், ரிஷப் பண்ட், புவி, வாசிங்டன் சுந்தர் இடம் பிடித்திருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

    இன்று 3-வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வாசிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு ஹர்சல் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார். உம்ரான் மாலிக், சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டது ரசிகர்களை கோப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், பல வருடங்களாக வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சஞ்சு சாம்சன், அதிவேகமாக பந்து வீசும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காதது குறித்து டுவிட்டர்வாசிகள் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

    ஹிமான்ஷு பரீக் என்பவர் ''சஞ்சு சாம்சன் மீண்டும் புறந்தள்ளப்பட்டுள்ளார். கேப்டன், அணி நிர்வாகம் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை'' எனப் பதவிட்டுள்ளார்.

    சுஷாந்த் மேத்தா ''சஞ்சு சாம்சன் இல்லை. உம்ரான் மாலிக் இல்லை. இன்னும் புவனேஷ்வர் குமார் ஏன் அணியில் உள்ளார்? இதற்கு யாராவது ஒருவர் விளக்கம் அளிக்க முடியுமா?'' என பதிவிட்டுள்ளார்.

    அவினாஷ் அர்யன் ''சஞ்சு சாம்சன், உங்கள் பொறுமைக்கு தலை வணங்குகிறேன். ஒருவர் வீரர் 60 போட்டிகளுக்கும் மேல் விளையாடிய நிலையில் தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் பார்த்துக் கொண்டிருக்கிறார்'' என பதிவிட்டுள்ளார்.

    வைபவ் போலா ''சஞ்சு சாம்சன் இல்லை. ஷுப்மான் கில் இல்லை. உம்ரான் மாலிக் இலலை. குல்தீப் யாதவ் இல்லை... இது நகைச்சுவை'' என பதிவிட்டுள்ளார்.

    சந்தோஷ் ஆர். கோடேட்டி ''மீண்டும் சாம்சன், உம்ரான் மாலிக் பெஞ்சில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத மோசமான நிர்வாகம். புவிக்கு இன்னும் எவ்வளவு வாய்ப்பு வழங்குவீர்கள்?'' என பதிவிட்டுள்ளார்.

    • டிராவிஸ் ஹெட் 152 ரன்களும், வார்னர் 106 ரன்களும் விளாசினர்
    • இங்கிலாந்து அணி 66 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது

    இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக ஓவர்கள் 48 ஆக குறைக்கப்பட்டது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் டிராவிட் ஹெட், டேவிட் வார்னர் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து ரன் குவித்தனர். இருவரும் சதம் கடந்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்தனர். டிராவிஸ் ஹெட் 152 ரன்களிலும், வார்னர் 106 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் ஸ்டீவன் ஸ்மித் 21, ஸ்டாய்னிஸ் 12, மார்ஷ் 30, அலெக்ஸ் காரே ஆட்டமிழக்காமல் 12 ரன்கள், லபுசங்கே ஆட்டமிழக்காமல் 8 ரன்கள் எடுக்க, 48 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ஸ்டோன் 4 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 356 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாநது களமிறங்கியது. திருத்தப்பட்ட இலக்கு 364 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டேவிட் மலன் 2 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஜேசன் ராய் 33 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். சாம் பில்லிங்ஸ் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 66 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, இலக்கை எட்ட கடுமையாக போராடியது.

    • நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • பிரான்ஸ் அணி பல வீனமான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று முதல் 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    லுசாயில் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் 'சி' பிரிவில் உள்ள அர்ஜென்டினா-சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. 2 முறை சாம்பியனான அந்த அணி உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. 18-வது உலக கோப்பையில் விளையாடும் அர்ஜென்டினா அணி சவுதியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகள் மோதிய 4 ஆட்டத்தில் அர்ஜென்டினா இரண்டில் வெற்றி பெற்றது. 2 போட்டி 'டிரா' ஆனது. 80 ஆயிரம் ரசிகர்கள் அமரும் ஸ்டேடியத்தில் போட்டி நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் 'டி' பிரிவில் உள்ள டென்மார்க்-துனிசியா அணிகள் மோதுகின்றன.

    ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த டென்மார்க் தர வரிசையில் 10-வது இடத்தில் உள்ளது. 6-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள துனிசியா 30-வது இடத்தில் இருக்கிறது. டென்மார்க் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. துனிசியா 'டிரா' செய்யும் வகையில் விளையாடும். அல்ரேயானில் உள்ள எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் போட்டி நடக்கிறது.

    இரு அணியும் இதற்கு முன்பு ஒரு முறை மோதிய ஆட்டத்தில் டென்மார்க் வெற்றி பெற்றது.

    3-வது ஆட்டம் இந்திய நேரப்படி 9.30 மணிக்கு தோகாவில் உள்ள ஸ்டேடி யம் 974-ல் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் உள்ள மெக்சிேகா-போலந்து அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 8 ஆட்டத்தில் மோதியுள்ளன. மெக்சிகோ 3 ஆட்டத்திலும், போலந்து 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி 'டிரா' ஆனது.

    நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் 'டி' பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அல்வராகாவில் உள்ள அல் ஜனோபா மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.

    பிரான்ஸ் அணி பல வீனமான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும். அந்த அணி தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 38-வது வரிசையில் உள்ளது. இரு அணிகள் மோதிய 5 போட்டியில் பிரான்ஸ் 3-ல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் 'டிரா' ஆனது.

    • அதிரடியாக ஆடிய டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
    • இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    நேப்பியர்:

    இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து மணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    துவக்க வீரர் பின் ஆலன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மென் 12 ரன்களில் வெளியறினார். அதிரடியாக ஆடிய டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ் இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பிலிப்ஸ் 54 ரன்களிலும், கான்வே 59 ரன்களிலும் அவுட் ஆகினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களில் சுருண்டது.

    இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • சவுதி அரேபியா, ஈரான், ஓமன், கத்தார், பஹ்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • துருக்கி நாட்டில் முட்டை விலையை இருமடங்காக உயர்த்தி விட்டது.

    நாமக்கல்:

    இந்திய அளவில் முட்டைகள் அதிகம் உற்பத்தியாகும் மண்டலமாக நாமக்கல் உள்ளது. இங்கு ஆயிரத்து நூறு கோழி பண்ணைகள் மூலம் நாள்தோறும் 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் சத்துணவு திட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து 80 சதவீத முட்டைகள் அனுப்பப்படுகின்றன.

    சவுதி அரேபியா, ஈரான், ஓமன், கத்தார், பஹ்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக அரேபிய நாடுகளான துபாய், ஓமன், கத்தாருக்கு மட்டும் மாதம் 1.50 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது கத்தார் நாட்டில் கடந்த 20-ம் தேதி தொடங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த மாதம் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்க சுமார் 32 நாட்டு வீரர்களும், பார்வையாளர்களும் முகாமிட்டுள்ளனர் .இதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக துருக்கி, உக்கரைன் நாடுகளில் இருந்து கத்தாருக்கு முட்டை விற்பனைக்கு வரும். உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால் முட்டை கொள்முதல் தடைப்பட்டுள்ளது .

    இந்த நிலையில் துருக்கி நாட்டில் முட்டை விலையை இருமடமாக உயர்த்தி விட்டது. இதனால் நாமக்கல் மண்டலத்திலிருந்து முட்டைகள் கொள்முதல் செய்யும் பணியை கத்தார் மற்றும் பிற அரபிய நாடுகள் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் மாதம் 1.50 கோடி முட்டைகள் என்ற நிலையானது தற்போது மாறி 4 கோடியாக அதிகரித்துள்ளது.

    கேரளாவில் ஏற்பட்ட பறவை காய்ச்சலால் முடங்கி கிடந்த கோழி பண்ணையாளர்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர். இது குறித்து நாமக்கல் மண்டல முட்டை ஏற்றுமதியாளரும் கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி பண்ணை உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் செந்தில் கூறியதாவது:-

    2010, 2018-ம் ஆண்டு வரையில் ஏற்றுமதியானது மிகவும் நலிவடைந்து இருந்தது. மொத்தமாகவே மாதத்தில் 1.50 கோடி முட்டைகள் தான் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின .தற்போது கத்தாரில் நடைபெறும் உலக கோப்பையால் அங்கு முட்டையின் தேவை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சென்று கொண்டிருந்த 50 லட்சம் முட்டைகள் என்பது 1.50 கோடியாக உயர்ந்துள்ளது. இதர அரபு நாடுகளுக்கு 2.50 கோடி முட்டைகள் அனுப்பப்படுகின்றன. தினசரி 3 கண்டெய்னர்களில் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    கால்பந்து போட்டிகள் முடிவடையும் வரையில் ஏற்றுமதி அதிகரித்து காணப்படும் .அதன்பிறகு படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. முட்டை ஏற்றுமதி மானியம் 7 சதவீ தத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைந்து விட்டது. இதனை மீண்டும் 7 சதவீதமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அப்படி சூழல் ஏற்பட்டால் முட்டை ஏற்றுமதி மீண்டும் வளர்ச்சி பெரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கொல்லத்தில் நடந்த பேரணியில் பிரேசில், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    கொல்லம்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் அணிகளுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். உலக கால்பந்து போட்டி தொடங்கிய நாளன்று தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியின் டி-சர்ட்டுகளை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர்.

    அந்த வகையில், கேரள மாநிலம் கொல்லத்தில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பிரேசில், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் எத்தனை பேருக்கு காயம் ஏதும் ஏற்பட்டது? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    உள்ளூர் பிரமுகர் ஒருவர் இரு அணி ரசிகர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்த மோதல் தொடர்பாக புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    இதேபோல் பாலக்காட்டிலும் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்பந்து ரசிகர்கள் மோதிக் கொண்டபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • வணிகம் தொடர்பான குறியீடுகளை பயன்படுத்த பிஃபா தடை
    • பெல்ஜியம் பாரம்பரிய சிவப்பு ஜெர்சியில் இருந்த வெள்ளை நிறத்திற்கு மாறியது

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய பெடரேசனான பிஃபா இந்தத் தொடரை நடத்துகிறது. இந்த தொடரில் வீரர்கள் தங்களுடைய ஜெர்சியில் விளம்பரம் தொடர்பான லோகோவை அணிந்து விளையாடக் கூடாது.

    பெல்ஜியம் வீரர்கள் பாரம்பரியமாக பல வண்ணங்களுடைய சிகப்பு நிற ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள். Tomorrowland என்ற பெயரில் மியூசிக் திருவிழா பெல்ஜியத்தில் நடைபெற்றது. இந்த Tomorrowland கடந்த டிசம்பர் மாதம் பல வண்ணங்கள் (பெல்ஜியம் ஜெர்சி) பன்முகத்தன்மை, ஒற்றுமை, உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான சின்னம் என அறிவித்தது.

    இதனால் அந்த ஜெர்சியுடன் விளையாடினால் அந்த வணிகத்திற்காக ஒரு நிறுவனத்தை பிரபலப்படுத்துவதாக இருக்கும் என பிஃபா தடைவிதித்தது. இதனால் பெல்ஜியம் அணி வெள்ளை நிற ஜெர்சியுடன் களம் இறங்குகிறது.

    மேலும், டி-சர்ட்டின் காலரில் Love என்ற வார்த்தையை பயன்படுத்தவும் தடைவிதித்து.

    ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுமார் 8 அணிகளின் கேப்டன்கள் தங்கள் கையில் அணியுடன் பட்டையில் பல நிறங்களை உள்ளடக்கிய இதயம் வடிவிலான லோகோவில் Love என்ற வார்த்தை பயன்படுத்த கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கும் பிஃபா தடை விதித்துள்ளது. ஒருவேளை கேப்டன் தடையை மீறி அணிந்தால் மஞ்சள் அட்டை வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் நெதர்லாந்தில் பாகுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம் நடைபெற்று வருகிறது. அப்போது One Love என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டது. இதனால் பிஃபா தடைவிதித்துள்ளது.

    • நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
    • இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் களமிறங்குகிறார்.

    நேப்பியர்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. நேப்பியரில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்ற நிலையில், டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

    போட்டி ஒரு சில நிமிடங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆடுகளம் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது. லேசான மழை என்பதால் விரைவில் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

    • இங்கிலாந்து அணி அடுத்த மாதம் பாகிஸ்தான் சென்று 3 டெஸ்டில் விளையாடுகிறது.
    • டி20 தொடரின் போது வழங்கப்பட்ட உணவு உயர் தரமாக இல்லை என்று வீரர்கள் அதிருப்தி.

    இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஏழு டி20 போட்டிகளில் விளையாடியது. இந்தத் தொடரை 4-3 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதன்பின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியது.

    தற்போது இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

    அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது.

    டி20 தொடரின்போது இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கிய உணவு தரமாக இல்லை எனவும், சில வீரர்களுக்கு வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் டெஸ்ட் போட்டிக்கான அணியுடன் சமையல் கலைஞரை (Chef) அனுப்ப இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன் 2018 உலகக் கோப்பை கால்பந்து மற்றும் யூரோ 202 கால்பந்து தொடரின்போது இங்கிலாந்து கால்பந்து அணியுடன் இதுபோன்று செஃப் அனுப்பப்பட்டார்.

    தற்போது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முதன்முறையாக செஃப்-ஐ அனுப்ப இருக்கிறது.

    பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் டிசம்பர் 1-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் முல்தானிலும், 3-வது டெஸ்ட் கராச்சியில் நடைபெற இருக்கிறது.

    • டி20 உலகக் கோப்பையில் குரூப் 12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம்.
    • தோல்வி குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அரையிறுதிக்கு முந்தைய குரூப் 12 சுற்றுக்கு தரவரிசை அடிப்படையில் 8 அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றன. மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி வர வேண்டும்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக தகுதி பெறாததால், தகுதிச் சுற்றில் விளையாடியது. ஆனால் சுற்றில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் குரூப் 12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது மிகப்பெரிய அவமானமாக கருதப்படுகிறது.

    தோல்வி குறித்து ஆராய பிரையன் லாரா உள்பட 3 பேர் கொண்டு குழுவியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு அமைத்துள்ளது. இந்த நிலையில் டி20 அணி கேப்டனாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எனது முடிவுக்கு இதுதான் காரணம் என பூரன் தெரிவித்துள்ளார்.

    தொடக்க சுற்றில் ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்திருந்தனர். ஒரேயொரு வெற்றியுடன் வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

    பொல்லார்டு ஓய்வையடுத்து மே மாதம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பூரன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×