என் மலர்
விளையாட்டு
- அமெரிக்கா,வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
- அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் தலா ஒரு கோல் அடித்தன.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் சிறப்பாக ஆடியது அமெரிக்க அணி. முதல் பாதியின் 36-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 82-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வேல்ஸ் வீரர் பாலே அபாரமாக கோலாக மாற்றினார்.
இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
- ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பல நகரங்களில் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
தோகா:
ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மாஷா அமினி (22), என்ற இளம்பெண் இறந்த பிறகு போராட்டம் வலுவடைந்துள்ளது.
பல்வேறு நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது. போலீசார், போராட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 2022 உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஈரான், இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டி தொடங்கும் முன் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது. அதில், ஈரான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அந்நாட்டின் வீரர்கள் யாரும் தேசிய கீதத்தை பாடவில்லை. ஈரான் வீரர்கள் அனைவரும் தங்கள் வாயை அசைக்காமல் அப்படியே நின்றனர். இது தற்போது பேசுபொருளாகி உள்ளது
ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுக்கு எதிராகவும் ஈரானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலக கோப்பை போட்டியின்போது ஈரான் கால்பந்து வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் நின்றனர்.
- உலகளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இது முதல் முறை.
- இத்தொடரில் தொடர்ந்து 5 சதமடித்து தமிழக கிரிக்கெட் அணி வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரு:
38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன்மூலம் தமிழக அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நேற்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், என்.ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக ஆடினர். தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகள் பறந்தன.
ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர் உள்பட 277 ரன்களையும், சாய் சுதர்சன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 406 ரன்களைக் குவித்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இதையடுத்து, 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்திய அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தமிழ்நாடு அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
உலக அளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல் முறையாகும்.
இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
- 2வது பாதியில் நெதர்லாந்து அணி 2 கோல்களை அடித்து வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் செனகல், நெதர்லாந்து அணிகள் மோதின.
தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர்கள் போராடினர். ஆட்டத்தின் 84 வது நிமிடத்தில் கோடி கேக்போ ஒரு கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டம் முடிந்ததும் கூடுதலாக 10 நிமிடம் அளிக்கப்பட்டது. 99வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டேவி கிளாசன் ஒரு கோல் அடித்தார்.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தியது.
- இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து வலுவான முன்னிலை பெற்றது.
- போட்டியை எப்படியாவது டிரா செய்துவிடவேண்டும் என ஈரான் வீரர்கள் தொடர்ந்து போராடினர்.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், இன்று கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற குரூப்-பி முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதின.
துவக்கத்தில் இருந்தே ஆட்டத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து வலுவான முன்னிலை பெற்றது. ஜூட் பெலிங்காம் (35வது நிமிடம்), புகாயோ சகா (43), ரகீம் ஸ்டெர்லிங் (45+1) கோல் அடித்தனர்.
இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. புகாயோ சகா 62வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
இங்கிலாந்து வீரர்களுக்கு பதிலடி கொடுக்க ஈரான் அணியின் வீரர்கள் ஆக்ரோஷமாக முன்னேறினர். போட்டியை எப்படியாவது டிரா செய்துவிடவேண்டும் என தொடர்ந்து போராடினர். 65-வது நிமிடத்தில் அந்த அணியின் மெஹ்தி கோல் அடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு 71வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். போட்டியின் இறுதிக்கட்டத்தில் ஜேக் கிரீலிஸ் (89வது நிமிடம்) கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 6-1 முன்னிலை பெற்றது. கூடுதல் நேரத்தில் ஈரான் வீரர் மெஹ்தி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 6-2 என அபார வெற்றி பெற்றது.
- அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும்.
- எப்பொதுமே தோற்று விடுவோம் என்ற பயத்தை நான் களத்திற்கு எடுத்து வருவதில்லை.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது.
அதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 126 ரன்னில் சுருண்டது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் நீங்கள் தான் அடுத்த ஏபி டீ வில்லியர்ஸா? என்று நேற்றைய போட்டி முடிவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எப்போதுமே நான் முதல் சூர்யகுமார் யாதவாக இருக்க விரும்புகிறேன் என்று அடக்கமாக பதிலளித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகிலேயே ஒரே ஒரு மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் மட்டுமே உள்ளார். அவருக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை நான் பெறவில்லை. ஆனால் அவரிடம் நான் நிறைய பேசியுள்ளேன். மேலும் தற்போது செய்வதை தொடர விரும்பும் நான் அடுத்த சூர்யகுமார் யாதவாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.
என்னைப் பற்றி வாழ்த்து செய்திகளும் ட்வீட்களும் வரும் போது நான் நல்லபடியாக உணர்கிறேன். ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடிய போது நிறைய கற்றுக் கொண்டேன். தற்போது விராட் கோலியுடன் இணைந்து கற்றுக்கொண்டு விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அனைத்து புறங்களிலும் அடிப்பதில் ரகசியம் ஒன்றுமில்லை. பயிற்சியில் என்ன நான் செய்கிறேனோ அதை மாற்றாமல் களத்தில் அதிரடியாக அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்கிறேன்.
அதுதான் முக்கியம். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் பொறுமையை பற்றி நினைக்காமல் அதிரடியாக விளையாட வேண்டும். அதில் எப்படி விளையாட வேண்டும் என்பதை பயிற்சி மற்றும் ஹோட்டல் அறையில் நினைக்க வேண்டுமே தவிர களத்தில் நினைக்க கூடாது. மேலும் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். எப்பொதுமே தோற்று விடுவோம் என்ற பயத்தை நான் களத்திற்கு எடுத்து வருவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நியூசிலாந்து அணி நாளைய போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும்.
- சூர்யகுமார் யாதவ் நேற்றைய போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.
நேப்பியா:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
கடந்த 18-ந்தேதி இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
மவுண்ட் மாங்கானுவில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியாரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் நேற்றைய போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார். இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா போன்ற சிறந்த வீரர்களும் அணியில் உள்ளனர்
நியூசிலாந்து அணி நாளைய போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும். சொந்த மண்ணில் விளையாடும் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
தோற்றால் அந்த அணி 20 ஓவர் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
- இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா சாதனையை ஜெகதீசன் முறியடித்தார்.
- இறுதியில் தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்கள் குவித்தது.
இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே 2022 தொடரின் லீக் சுற்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. அதில் எலைட் சி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழகம் முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்த நிலையில் இன்று நடைபெற்ற 100வது லீக் போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை எதிர்கொண்டது.
பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தமிழக அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் நாராயன் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலிருந்தே அருணாச்சல பிரதேச பவுலர்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாமல் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டனர். பவர் பிளே முடியும் போதே 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்த ஜோடி.
எதிரணி பவுலர்களை கதற கதற அடித்த இந்த ஜோடியில் ஜெகதீசன் முதலாவதாக சதமடித்தார். அவருக்கு போட்டியாக சாய் சுதர்சன் சதமடிக்க அவரையும் மிஞ்சிய பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெகதீசன் இரட்டை சதமடித்தும் நிற்காமல் தொடர்ந்து அதிரடியாக ஆடினார்.
மொத்தம் 38.3 ஓவர்கள் வரை சிம்ம சொப்பனமாக நின்ற இந்த ஜோடி 416 ரன்கள் குவித்து மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தது. சாய் சுதர்சன் 154 (102) ரன்களில் ஆட்டமிழந்த போது பிரிந்தது. சில ஓவர்களில் 25 பவுண்டரி 15 மெகா சிக்சருடன் 277 (141) ரன்களை குவித்த ஜெகதீசனும் ஒரு வழியாக ஆட்டமிழந்தார்.
இறுதியில் தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் 277 ரன்கள் குவித்த தமிழக வீரர் ஜெகதீசன் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் இரட்டை சதமடித்த முதல் தமிழக வீரர் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த தமிழக வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் 154 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் இத்தொடரில் ஏற்கனவே 4 சதங்களை அடித்திருந்த அவர் இப்போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து 5 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற விராட் கோலி உள்ளிட்ட 4 இந்திய வீரர்களின் சாதனையை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்தார்.
அந்த பட்டியல்:
1. நாராயண் ஜெகதீசன் : 5* (2022)
2. விராட் கோலி : 4 (2008)
3. பிரிதிவி ஷா : 4 (2021)
4. ருதுரா கைக்வாட் : 4 (2021)
5. தேவ்தூத் படிக்கல் : 4 (2021)
அத்துடன் விஜய் ஹசாரே கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் பறக்க விட்ட வீரர் என்ற வரலாற்றையும் ஜெகதீசன் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. நாராயன் ஜெகதீசன் : 15, அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக, 2022*
2. ஜெய்ஸ்வால் : 12, ஜார்கண்டுக்கு எதிராக, 2019
கடைசி 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக சதமடித்துள்ள அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 போட்டிகளில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் இலங்கையின் குமார் சங்ககாரா (2105), தென் ஆப்பிரிக்காவின் அல்வீரோ பீட்டர்ஸன் (2014/15), இந்தியாவின் தேவதூத் படிக்கல் (2021) ஆகியோர் அதிகபட்சமாக 4 போட்டிகளில் 4 தொடர்ச்சியான சதங்களை அடித்ததே முந்தைய சாதனையாகும்.
அது போக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற புதிய உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. நாராயன் ஜெகதீசன் : 277*, அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக,
2022* 2. அலி ப்ரவுன் : 268, கிளாமோர்கன் அணிக்கு எதிராக, 2002
3. ரோஹித் சர்மா : 264, இலங்கைக்கு எதிராக, 2014
4. டார்சி ஷார்ட் : 257, குயின்ஸ்லாந்துக்கு எதிராக, 2018
மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த பேட்ஸ்மேன் என்ற ஆஸ்திரேலியாவின் டிராவீஸ் ஹெட் உலக சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.
அந்த பட்டியல்: 1. நாராயன் ஜெகதீசன் : 114 பந்துகள், அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக, 2022*
2. டிராவிஸ் ஹெட் : 114 பந்துகள், குயின்ஸ்லாந்துக்கு எதிராக, 2021
- சூர்யகுமார் யாதவ் சதம் வீளாசியதன் மூலம் ரோகித் சர்மா சாதனையை சமன் செய்தார்.
- சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டிற்குள் வந்தே 20 மாதங்கள் தான் ஆகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 126-க்கு ஆல் அவுட்டானது.
இதனால் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். ஒற்றையாளாக போராடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் தனது 7-வது ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். விராட் கோலி 6 முறை பெற்றிருந்தார். சூர்யகுமார் யாதவை போலவே ஜிம்பாப்வே அணியின் சிகாந்தர் ராசாவும் 7 முறை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.
இதே போல ரோகித் சர்மாவின் சாதனையையும் சூர்யகுமார் முறியடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 2 சதங்களை விளாசிய ஓரே இந்தியராக ரோகித் சர்மா மட்டுமே இருந்தார். ஆனால் நேற்றைய சதத்தின் மூலம் ரோகித்தை சமன் செய்தார் சூர்யகுமார் யாதவ்.
சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டிற்குள் வந்தே 20 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் குறைந்த காலத்திலேயே உலகின் நம்பர் 1 வீரராக திகழ்கிறார். அதுவும் டி20 கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். 39 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1,395 ரன்களை விளாசியிருக்கிறார்.
- சூர்ய குமாரின் இன்னிங்ஸ் உலகத்தரம் வாய்ந்தது.
- அவருடைய ஆட்டம் தான் இன்று மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மவுண்ட் மவுங்கனி:
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ், மூன்றாவது வீரராக களம் இறங்கி 51 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டர்களும், ஏழு சிக்சர்களும் அடங்கும். நடப்பாண்டில் சூர்யகுமார் யாதவ் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இது எங்களுடைய சிறந்த ஆட்டம் கிடையாது என்று குறிப்பிட்டார். நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படவில்லை. சூர்ய குமாரின் இன்னிங்ஸ் உலகத்தரம் வாய்ந்தது. என் வாழ்நாளில் பார்த்த சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. சூர்யகுமார் ஆடிய சில ஷாட்களை என் வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்ததே இல்லை.
அனைத்தும் பிரமிக்கும் வகையில் இருந்தது. நாங்கள் இன்று சரிவர செயல்படவில்லை. எங்களுக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒரு உத்வேகம் கிடைக்கவில்லை. நாங்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தாமல் இருந்தோம். இதேபோன்று முக்கிய நேரத்தில் பேட்டிங்கில் நான் சோபிக்கவில்லை.நிச்சயமாக இந்த தோல்வி வெறுப்பை தருகிறது. மீண்டும் சொல்கிறேன் சூர்யகுமார் யாதவ் மட்டும் தான் இதற்கு காரணம்.
அவருடைய ஆட்டம் தான் இன்று மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. இதனை பயன்படுத்திக் கொண்டு இந்திய வீரர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.எங்களுடைய ஆட்டத்தில் சில குறைகள் இருக்கிறது. அதனை நாங்கள் சரி செய்ய வேண்டும். சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். சிறு தவறுகளால் தான் சில சமயம் போட்டியின் முடிவே மாறுகிறது.
சில சமயம் சூர்யகுமார் யாதவ் போன்று சிலர் சிறப்பான இன்னிங்ஸை ஆடுவார்கள். அது நமக்கு தோல்வியை தரலாம்.தற்போது உலகத்தில் சூர்ய குமார் தான் சிறந்த வீரராக இருக்கிறார் என்று வில்லியம்சன் கூறினார்.
- மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோத்தா-குஜராத் ஜெய்ன்ட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
- நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 35-33 என்ற புள்ளி கணக்கில் ஐதராபாத்தை தோற்கடித்தது. 10-வது வெற்றியை பதிவு செய்தது.
ஐதராபாத்:
9-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 35-33 என்ற புள்ளி கணக்கில் ஐதராபாத்தை தோற்கடித்தது. 10-வது வெற்றியை பதிவு செய்தது.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி அணி 42-30 என்ற புள்ளி கணக்கில் அரியான ஸ்டீலர்சை வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றது.
இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), உ.பி. யோத்தா-குஜராத் ஜெய்ன்ட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
- இறுதி ஆட்டத்தில் ஆர்.எம்.கே. 15-6, 15-7 என்ற நேர் செட் கணக்கில் ஆர்.எம்.டி. கல்லூரியை தோற்கடித்தது.
- கைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் ஆர்.எம்.கே. என்ஜினீயரிங் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் நடந்த மண்டல அளவிலான கைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் ஆர்.எம்.கே. என்ஜினீயரிங் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.
ஆவடியில் உள்ள ஆலிம் முகமது கல்லூரியில் நடந்த இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆர்.எம்.கே. 15-6, 15-7 என்ற நேர் செட் கணக்கில் ஆர்.எம்.டி. கல்லூரியை தோற்கடித்தது.






