என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டி காக் 114 ரன்களிலும் வான் டெர் டுசென் 133 ரன்களிலும் சவுத்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக்- பவுமா ஜோடி களமிறங்கினர்.

    சிறப்பான தொடக்கத்தை கொடுத்த பவுமா 24 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து டி காக்- வான் டெர் டுசென் ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எளிதாக விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.

    டி காக் 114 ரன்களிலும் வான் டெர் டுசென் 133 ரன்களிலும் சவுத்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கிளாசென்- மில்லர் ஜோடி அதிரடியாக விளையாடினார். அதிரடி ஆட்டத்தை வேளிப்படுத்திய மில்லர் 30 பந்தில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 357 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வான் டெர் டுசென் 133 ரன்களும் டி காக் 114 ரன்களும் எடுத்திருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • பவுமா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • டிகாக் இந்த உலகக் கோப்பை தொடரில் 4-வது சதத்தை விளாசியுள்ளார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக்- பவுமா ஜோடி களமிறங்கினர்.

    அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய பவுமா 24 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிகாக் - வான்டெர் டஸன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிகாக் சதம் அடித்து அசத்தினார்.

    இந்த உலகக் கோப்பை தொடரில் இது இவருக்கு 4-வது சதம் ஆகும். ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் டிகாக் உள்ளார். முதல் இடத்தில் ரோகித் (5 சதம்) 2-வது இடத்தில் குமார் சங்ககாரா (4) உள்ளனர்.

    மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்காக தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 21 சதங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் ஹசிம் அம்லா (27 சதம்) டி வில்லியர்ஸ் (25 சதம்) ஆகியோர் உள்ளனர்.

    மிக முக்கிய வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். ஒரு உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற வரலாற்று சாதனையை டி காக் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கல்லீஸ் 9 இன்னிங்சில் விளையாடி 485 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதனை டிகாக் முறியடித்துள்ளார்.

    • ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது.
    • ஆஸ்திரேலிய அணி 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை.

    இதில் பங்கேற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. பின்னர் எழுச்சி பெற்று தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 4-ம் தேதி இங்கிலாந்துடன் விளையாட உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

    குஜராத்தில் கோல்ப் வண்டியில் சவாரி செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார். மேக்ஸ்வெல் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    • அப்ரிடி 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை கைப்பற்றி உள்ளார்.
    • டாப் 10-ல் இந்திய பந்து வீச்சாளர்களில் சிராஜ், குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அப்ரிடி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை கைப்பற்றி உள்ளார்.

    டாப் 10-ல் இந்திய பந்து வீச்சாளர்களில் சிராஜ், குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சிராஜ் 3-வது இடத்திலும் குல்தீப் 7-வது இடத்தில் உள்ளனர். பும்ரா 11-வது இடத்தில் தொடர்கிறார்.

    முதல் இடத்தை பிடித்துள்ள அப்ரிடி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பாவுடன் இணைந்துள்ளார். இருவரும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    • இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    • இங்கிலாந்து 6 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 31 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் உள்ளன. கடைசி இடத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி உள்ளது.

    இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. வங்காளதேசம் அணியிடம் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 33 வயதான இவர் இங்கிலாந்து அணிக்காக 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 43 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    • வாசிம் அக்ரம், மெக்ராத் உடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது
    • பும்ரா சிறந்த பவுலர் இல்லை என ஒருபோதும் நான் சொல்லவில்லை

    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார். தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் 10 விக்கெட்டிற்கும் அதிகமாக வீழ்த்தியுள்ளார்.

    கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய வேகப்பந்து வீச்சு குழுவை வழி நடத்தி வருகிறார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் அப்துல் ரசாக். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர், மெக்ராத் உள்ளிட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தவர்.

    இவரிடம், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து கடந்த 2019-ம் ஆண்டு கேள்வி கேட்கப்பட்டது, டி.வி. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பும்ரா "பேபி பவுலர்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளார். தற்போது 4 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையில் பும்ரா சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அப்துல் ரசாக்கிடம், பும்ரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவரை "பேபி பவுலர்" என அழைத்ததை நியாயப்படுத்தினார்.

    இதுகுறித்து அப்துல் ரசாக் கூறியதாவது:-

    கடந்த 2019 பேட்டியின்போது நான் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன். ஆகவே, பும்ரா எனக்கு முன் ஒரு "பேபி பவுலர்". அவரை நான் எளிதாக எதிர்கொண்டு, பந்தை அடித்து துவம்சம் செய்திருப்பேன் என்று கூறினேன்.

    நான் என்னக் கூறினேனோ, அதை தவறான முறையில் விளக்கப்பட்டுள்ளது. என்னிடம் மெக்ராத், வாசிம் அக்ரம், பும்ரா, அக்தர் போன்றோரை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களுக்கு முன் பும்ரா "பேபி பவுலர்" எனத் தெரிவித்தேன்.

    பும்ராவை சிறந்த பந்து வீச்சாளர் இல்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் வாசிம் அக்ரம், மெக்ராத்துடன் தொடர்புப்படுத்தி பாருங்கள். அப்போது நான் சொன்னதில் தவறு உள்ளதா? என்று தெரிவியுங்கள். நான் பாகிஸ்தான் அணிக்கு வரும்போது, வாசிம் அக்ரம் முன் நான்கு எப்போதுமே பேபிதான்.

    இவ்வாறு அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

    • சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 71 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • உலகக் கோப்பையில் நியூசிலாந்திடம் கடைசி 5 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா தோல்வி அடைந்துள்ளது.

    புனே:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 71 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 25-ல் நியூசிலாந்தும், 41-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருக்கின்றன. 5 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் 8 தடவை மோதியதில் நியூசிலாந்து 6 ஆட்டத்திலும், தென்ஆப்பிரிக்கா 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன.

    1999-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தை வீழ்த்தியதில்லை. உலகக் கோப்பையில் கடைசி 5 ஆட்டங்களில் நியூசிலாந்திடம் தொடர்ந்து தோற்றுள்ள தென்ஆப்பிரிக்கா அந்த சோகத்துக்கு முடிவு கட்டுமா என்பதை பார்க்கலாம்.

    போட்டிக்கான ஆடும் லெவன்:-

    நியூசிலாந்து:

    டிவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி.

    தென்ஆப்பிரிக்கா:

    பவுமா (கேப்டன்), குயின்டான் டி காக், வான்டெர் டஸன், மார்க்ரம், கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, இங்கிடி.

    • கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா்.
    • வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர் உள்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்குரிய டெண்டுல்கர் மும்பையை சேர்ந்தவர் ஆவார். மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி முடிவடைந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.


    அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 சதங்களுடன் 15, 921 ரன்னும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களுடன் 18,426 ரன்களும் குவித்துள்ளார். 'சாதனை நாயகன்', 'கிரிக்கெட் கடவுள்' என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

    மராட்டிய மாநிலம் அகமதுநகரை சேர்ந்த பிரபல சிற்ப கலைஞர் பிரமோத் காம்ளே அந்த சிலையை வடிவமைத்துள்ளார்.

    வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.

    சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வங்களாதேசம் அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக வங்காளதேசம் அணி பேட்டிங் செய்த போது ரிஸ்வான் செய்த காரியத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அப்ரிடி வீசிய 43-வது ஓவரில் டஸ்கின் அகமதுக்கு அப்பில் கேட்கப்பட்டது. நடுவர் அதனை நிராகரித்தார். உடனே கீப்பரான ரிஸ்வான் பேட்டில் படவில்லை எனவும் ரிவ்யூ கேட்கலாம் என பாபர் அசாமிடமும் அப்ரிடியிடமும் முறையிட்டார்.

    அவர்கள் இருவரும் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் ரிஸ்வான் ரிவ்யூ கவுண்டவுன் ஓடிக் கொண்டிருக்கும் போதே பேட்ஸ்மனிடம் பந்து பேட்டில் பட்டதா என கேட்டார். அதற்கு பேட்டர் பதில் அளித்தவுடன் பாபரிடம் பார்த்தியா நான் சொல்லுவது சரி என்பது போல கூறினார். இதை சற்றும் எதிர்பாராத பாபர் அசாம், ரிவ்யூ கேட்காமல் நிராகரித்தார்.

    பொதுவாக ரிவ்யூ கவுண்டவுன் முடிந்தவுடன் தான் பேட்டரிடம் பேட்டில் பட்டதா இல்லையா என்பது குறித்த சந்தேகத்தை எதிரணியினர் கேட்பார்கள். ஆனால் இவர் கவுண்டவுன் ஓடிக்கொண்டிருக்கும் போதே கேட்டது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    • ஆஸ்திரேலிய அணி தங்களுக்கு என தனி செஃப்-ஐ பயன்படுத்தி வருகிறது
    • இந்திய வீரர்கள் சிலர் இதுபோன்று நியமித்துள்ளதால், தானும் வைத்துள்ளதாக ஸ்டோய்னிஸ் கூறுகிறார்

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. சுமார் ஒன்றரை மாத காலம் நடைபெறும் நீண்ட தொடர் என்பதால், வீரர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். அப்போதுதான் தொடர் முழுவதும் திறம்பட விளையாட முடியும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உணவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும்போது, இந்தியாவின் வெப்பத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவதிப்படுவார்கள். அதேபோல் உணவும் அவர்களுக்கு ஏற்றபடி இருக்காது.

    இதனால் பெரும்பாலும் தங்களுக்கென தனி செஃப்-ஐ வைத்துக் கொள்வார்கள். தற்போது, இந்தியா வந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தங்களுக்கென தனியாக செஃப்-ஐ ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த நிலையில், தனது உடதற்குதியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பிய அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனக்கென தனி செஃப்-ஐ நியமித்துள்ளார். இவர் போட்டிகளுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். அவருடன் அவரது செஃப்-வும் இந்தியாவை சுற்றி வருகிறார். இந்த செஃப் பிரெஞ்ச் உணவு தயாரிப்பதில் கைத்தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

    "இந்திய வீரர்களின் சிலர் இதுபோன்று தனியாக செஃப் வைத்துள்ளனர். அதனால் எனக்கும் அதுபோன்று யோசனை தோன்றியது" என ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார். மேலும், "நான் எப்போதும் எனது உணவு மற்றும் போட்டியாக்காக தன்னை தயார்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    சல்தான்ஹா என்ற அந்த செஃப், அமெரிக்காவின் சிகாகோ மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ள பிரபலமான ரெஸ்டாரன்டில் பணிபுரிந்தவர். லக்னோ அணியின் கே.எல். ராகுல் பரிந்துரை செய்ததன் பேரில், ஐ.பி.எல். போட்டியின்போது மார்கஸ் ஸ்டோய்னிஸ், இவரை சந்தித்துள்ளார். தற்போது உலகக் கோப்பையின்போது செஃப்-ஆக பயன்படுத்திக் கொண்டார்.

    ஸ்டோய்னிஸ் இந்த உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடி 5, 20 (நாட்அவுட்), 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    • 1999-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தை வீழ்த்தியதில்லை.
    • உலகக் கோப்பையில் 8 தடவை மோதியதில் நியூசிலாந்து 6 ஆட்டத்திலும், தென்ஆப்பிரிக்கா 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன.

    புனே:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 32-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி தனது முதல் 4 ஆட்டங்களில் இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வென்றது. அதன் பிறகு அந்த அணி 2 ஆட்டங்களில் முறையே 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும், 5 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடமும் வீழ்ந்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 389 ரன் இலக்கை நெருங்கி வந்து தோற்றது.

    நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா (406 ரன்கள்), டேரில் மிட்செல் (322), டிவான் கான்வே, வில் யங்கும், பந்து வீச்சில் சான்ட்னெர், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், கிளென் பிலிப்ஸ்சும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வலுவான நியூசிலாந்து அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் களம் காணும்.

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா 6 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது. தனது 3-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 38 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த தென்ஆப்பிரிக்கா மற்ற ஆட்டங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளை பதம் பார்த்து 2-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா அதே உத்வேகத்துடன் வரிந்துகட்டும்.

    தென் ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ள குயின்டான் டி காக் (3 சதம் உள்பட 431 ரன்கள்), மார்க்ரம் (356), ஹென்ரிச் கிளாசென், வான்டெர் டஸன் வலுசேர்க்கிறார்கள். டேவிட் மில்லர் தனது அதிரடியை வெளிப்படுத்தினால் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, ரபடா, கேஷவ் மகராஜ், ஷம்சி கலக்குகிறார்கள். முதுகு வலி காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத ரபடா அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.

    அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கும் இவ்விரு அணிகளும் தங்களது நிலையை முன்னோக்கி நகர்த்த முழுமுயற்சி மேற்கொள்ளும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணியிலும் அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

    சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 71 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 25-ல் நியூசிலாந்தும், 41-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருக்கின்றன. 5 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் 8 தடவை மோதியதில் நியூசிலாந்து 6 ஆட்டத்திலும், தென்ஆப்பிரிக்கா 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன.

    கிரிக்கெட்டில் 1999-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தை வீழ்த்தியதில்லை. உலகக் கோப்பையில் கடைசி 5 ஆட்டங்களில் நியூசிலாந்திடம் தொடர்ந்து தோற்றுள்ள தென்ஆப்பிரிக்கா அந்த சோகத்துக்கு முடிவு கட்டுமா என்பதை பார்க்கலாம்''

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    நியூசிலாந்து: டிவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன் அல்லது டிம் சவுதி.

    தென்ஆப்பிரிக்கா: பவுமா (கேப்டன்), குயின்டான் டி காக், வான்டெர் டஸன், மார்க்ரம், கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி அல்லது இங்கிடி.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன.
    • ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் (நவம்பர் 7), முதல் அரை இறுதி ஆட்டமும் (நவம்பர் 15) அங்கு நடக்கிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மும்பை, டெல்லியில் பட் டாசு வெடிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து உள்ளது. காற்று மாசு காரணமாக இந்த இரு நகரங்களிலும் எஞ்சிய போட்டிகளின் போது வான வேடிக்கை நிகழ்த்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

    மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன. ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் (நவம்பர் 7), முதல் அரை இறுதி ஆட்டமும் (நவம்பர் 15) அங்கு நடக்கிறது. டெல்லியில் ஒரே ஒரு ஆட்டம் நடைபெற உள்ளது. இலங்கை-வங்காளதேசம் அணிகள் 6-ந்தேதி அங்கு மோதுகின்றன.

    ×