search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பும்ராவை பேபி பவுலர் என ஏன் அழைக்கக் கூடாது: தனது கருத்தை நியாயப்படுத்தும் பாகிஸ்தான் பிரபலம்
    X

    பும்ராவை "பேபி பவுலர்" என ஏன் அழைக்கக் கூடாது: தனது கருத்தை நியாயப்படுத்தும் பாகிஸ்தான் பிரபலம்

    • வாசிம் அக்ரம், மெக்ராத் உடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது
    • பும்ரா சிறந்த பவுலர் இல்லை என ஒருபோதும் நான் சொல்லவில்லை

    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார். தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் 10 விக்கெட்டிற்கும் அதிகமாக வீழ்த்தியுள்ளார்.

    கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய வேகப்பந்து வீச்சு குழுவை வழி நடத்தி வருகிறார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் அப்துல் ரசாக். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர், மெக்ராத் உள்ளிட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தவர்.

    இவரிடம், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து கடந்த 2019-ம் ஆண்டு கேள்வி கேட்கப்பட்டது, டி.வி. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பும்ரா "பேபி பவுலர்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளார். தற்போது 4 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையில் பும்ரா சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அப்துல் ரசாக்கிடம், பும்ரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவரை "பேபி பவுலர்" என அழைத்ததை நியாயப்படுத்தினார்.

    இதுகுறித்து அப்துல் ரசாக் கூறியதாவது:-

    கடந்த 2019 பேட்டியின்போது நான் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன். ஆகவே, பும்ரா எனக்கு முன் ஒரு "பேபி பவுலர்". அவரை நான் எளிதாக எதிர்கொண்டு, பந்தை அடித்து துவம்சம் செய்திருப்பேன் என்று கூறினேன்.

    நான் என்னக் கூறினேனோ, அதை தவறான முறையில் விளக்கப்பட்டுள்ளது. என்னிடம் மெக்ராத், வாசிம் அக்ரம், பும்ரா, அக்தர் போன்றோரை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களுக்கு முன் பும்ரா "பேபி பவுலர்" எனத் தெரிவித்தேன்.

    பும்ராவை சிறந்த பந்து வீச்சாளர் இல்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் வாசிம் அக்ரம், மெக்ராத்துடன் தொடர்புப்படுத்தி பாருங்கள். அப்போது நான் சொன்னதில் தவறு உள்ளதா? என்று தெரிவியுங்கள். நான் பாகிஸ்தான் அணிக்கு வரும்போது, வாசிம் அக்ரம் முன் நான்கு எப்போதுமே பேபிதான்.

    இவ்வாறு அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×