என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 1999-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தை வீழ்த்தியதில்லை.
    • உலகக் கோப்பையில் 8 தடவை மோதியதில் நியூசிலாந்து 6 ஆட்டத்திலும், தென்ஆப்பிரிக்கா 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன.

    புனே:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 32-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி தனது முதல் 4 ஆட்டங்களில் இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வென்றது. அதன் பிறகு அந்த அணி 2 ஆட்டங்களில் முறையே 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும், 5 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடமும் வீழ்ந்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 389 ரன் இலக்கை நெருங்கி வந்து தோற்றது.

    நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா (406 ரன்கள்), டேரில் மிட்செல் (322), டிவான் கான்வே, வில் யங்கும், பந்து வீச்சில் சான்ட்னெர், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், கிளென் பிலிப்ஸ்சும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வலுவான நியூசிலாந்து அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் களம் காணும்.

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா 6 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது. தனது 3-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 38 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த தென்ஆப்பிரிக்கா மற்ற ஆட்டங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளை பதம் பார்த்து 2-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா அதே உத்வேகத்துடன் வரிந்துகட்டும்.

    தென் ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ள குயின்டான் டி காக் (3 சதம் உள்பட 431 ரன்கள்), மார்க்ரம் (356), ஹென்ரிச் கிளாசென், வான்டெர் டஸன் வலுசேர்க்கிறார்கள். டேவிட் மில்லர் தனது அதிரடியை வெளிப்படுத்தினால் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, ரபடா, கேஷவ் மகராஜ், ஷம்சி கலக்குகிறார்கள். முதுகு வலி காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத ரபடா அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.

    அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கும் இவ்விரு அணிகளும் தங்களது நிலையை முன்னோக்கி நகர்த்த முழுமுயற்சி மேற்கொள்ளும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணியிலும் அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

    சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 71 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 25-ல் நியூசிலாந்தும், 41-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருக்கின்றன. 5 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் 8 தடவை மோதியதில் நியூசிலாந்து 6 ஆட்டத்திலும், தென்ஆப்பிரிக்கா 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன.

    கிரிக்கெட்டில் 1999-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தை வீழ்த்தியதில்லை. உலகக் கோப்பையில் கடைசி 5 ஆட்டங்களில் நியூசிலாந்திடம் தொடர்ந்து தோற்றுள்ள தென்ஆப்பிரிக்கா அந்த சோகத்துக்கு முடிவு கட்டுமா என்பதை பார்க்கலாம்''

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    நியூசிலாந்து: டிவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன் அல்லது டிம் சவுதி.

    தென்ஆப்பிரிக்கா: பவுமா (கேப்டன்), குயின்டான் டி காக், வான்டெர் டஸன், மார்க்ரம், கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி அல்லது இங்கிடி.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன.
    • ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் (நவம்பர் 7), முதல் அரை இறுதி ஆட்டமும் (நவம்பர் 15) அங்கு நடக்கிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மும்பை, டெல்லியில் பட் டாசு வெடிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து உள்ளது. காற்று மாசு காரணமாக இந்த இரு நகரங்களிலும் எஞ்சிய போட்டிகளின் போது வான வேடிக்கை நிகழ்த்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

    மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன. ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் (நவம்பர் 7), முதல் அரை இறுதி ஆட்டமும் (நவம்பர் 15) அங்கு நடக்கிறது. டெல்லியில் ஒரே ஒரு ஆட்டம் நடைபெற உள்ளது. இலங்கை-வங்காளதேசம் அணிகள் 6-ந்தேதி அங்கு மோதுகின்றன.

    • நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா 6 வெற்றிகளுடன் (12 புள்ளி) கம்பீரமாக பயணிக்கிறது.
    • தென்ஆப்பிரிக்கா இப்போதுள்ள பார்முக்கு 3 ஆட்டங்களிலும் வாகை சூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை. இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டன. அரைஇறுதிக்கான 4 இடத்துக்கு 8 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. யார்-யாருக்கு எப்படி வாய்ப்பு என்பது பற்றிய ஒரு அலசல்:-

    இந்தியா : நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா 6 வெற்றிகளுடன் (12 புள்ளி) கம்பீரமாக பயணிக்கிறது. இந்தியா அரைஇறுதியை எட்டிவிட்டது என்று 99 சதவீதம் சொல்லலாம். ஆனாலும் அதிகாரபூர்வமாக உறுதி செய்ய இன்னும் ஒரு வெற்றி தேவை. மற்றபடி இந்தியாவுக்கு எந்த சிக்கலும் இல்லை.

    மோத வேண்டிய ஆட்டங்கள்: இலங்கை (நவ.2), தென்ஆப்பிரிக்கா (நவ.5), நெதர்லாந்து (நவ.12).

    தென்ஆப்பிரிக்கா: அதிரடியில் பிரமாதப்படுத்தும் தென்ஆப்பிரிக்க அணி 5 வெற்றி, ஒரு தோல்வி என்று 10 புள்ளியுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அத்துடன் 2-க்கும் மேல் ரன்ரேட் வைத்திருப்பது தென்ஆப்பிரிக்காவுக்கு இன்னொரு பிளஸ் பாயிண்டாகும். எஞ்சிய நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றாக வேண்டும். வலுவான ரன்ரேட்டுடன் இருப்பதால் குறைந்தது ஒரு வெற்றியாவது அவசியம். தென்ஆப்பிரிக்கா இப்போதுள்ள பார்முக்கு 3 ஆட்டங்களிலும் வாகை சூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    மோத வேண்டிய ஆட்டங்கள்: நியூசிலாந்து (நவ.1), இந்தியா (நவ.5), ஆப்கானிஸ்தான் (நவ.10).

    நியூசிலாந்து: முதல் 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றிகளை வாரி சுருட்டிய நியூசிலாந்து அணி, கடைசி இரு ஆட்டங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அந்த அணி இன்னும் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கையுடன் மல்லுக்கட்ட வேண்டி உள்ளது. இவற்றில் கட்டாயம் 2-ல் வெற்றி பெற்றாக வேண்டும். ஒன்றில் மட்டும் வென்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

    மோத வேண்டிய ஆட்டங்கள்: தென்ஆப்பிரிக்கா (நவ.1), பாகிஸ்தான் (நவ.4), இலங்கை (நவ.9).

    ஆஸ்திரேலியா: 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் இரு ஆட்டங்களில் தோற்றாலும் அடுத்த 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிக்கனியை பறித்து 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா இப்போது சிறந்த நிலையில் இருப்பதால் மீதமுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெறுவது பெரிய அளவில் பிரச்சினையாக இருக்காது. அதுவும் வங்காளதேசம், ஆப்கானிஸ்தானுடன் எல்லாம் ஆட்டங்கள் இருப்பதால் ஆஸ்திரேலியா அரைஇறுதியை எட்டிவிடும் என்பதே நிபுணர்களின் கணிப்பு.

    மோத வேண்டிய ஆட்டங்கள்: இங்கிலாந்து (நவ.4), ஆப்கானிஸ்தான் (நவ.7), வங்காளதேசம் (நவ.11).

    ஆப்கானிஸ்தான்: சிறிய அணி என்று வர்ணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் வியப்பூட்டும் வகையில் எழுச்சி கண்டுள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான் 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் நல்ல நிலையில் உள்ளது. அந்த அணி எஞ்சிய லீக் அனைத்திலும் (நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) வென்றால் முதல்முறையாக அரைஇறுதிக்குள் கால்பதித்து வரலாறு படைக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஒரு வேளை ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் ஒன்றுக்கு ஆப்கானிஸ்தான் 'ஆப்பு' வைத்தால், ஜாக்பாட் அடிக்கலாம்.

    மோத வேண்டிய ஆட்டங்கள்: நெதர்லாந்து (நவ.3), ஆஸ்திரேலியா (நவ.7), தென்ஆப்பிரிக்கா (நவ.10).

    மற்ற 3 அணிகள்

    பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் ஒரே மாதிரியான நிலைமையில் தவிக்கின்றன. அரைஇறுதி வாய்ப்பில் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த அணிகள் தங்களது எஞ்சிய ஆட்டங்களில் முழுமையாக வென்றால் அதிகபட்சமாக 10 புள்ளி வரை எட்ட முடியும். அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும் என்றால், மற்ற அணிகளின் முடிவுகள் ஒருசேர சாதகமாக அமைய வேண்டும். குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தங்களது எஞ்சிய ஆட்டங்களில் மண்ணை கவ்வ வேண்டும். மேலும் ரன்ரேட்டிலும் ஏற்றம் காண வேண்டும்.

    இதில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, மீதமுள்ள இரு ஆட்டங்களில் நியூசிலாந்து (நவ.4) மற்றும் இங்கிலாந்தை (நவ.11) சந்திக்கிறது.

    • பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி
    • இங்கிலாந்து, நெதர்லாந்து போன்ற அணிகள் 4 வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஏறக்குறைய கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாட வேண்டும். தற்போது பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ளன.

    நேற்று பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டிகளில் வங்காளதேசம் தோல்வியடைந்தது. இதன்மூலம் 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. அந்த அணி வருகிற 6-ந்தேதி இலங்கையையும், 11-ந்தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளின் முடிவால் வங்காளதேசத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தோல்வியடைந்தால், அந்த அணிகளுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இங்கிலாந்து 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை. 4-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 8-ந்தேதி நெதர்லாந்தையும், 11-ந்தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் நான்கு வெற்றிகள் பெற்றிருக்கும்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் வருகிற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளின் முடிவைப் பொறுத்து ஒருவேளை அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம். அது மிகவும் கடினம்.

    இன்று தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். ஏற்கனவே ஐந்து வெற்றிகளை பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தாலும், அந்த அணிக்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஒருவேளை தோல்வியடைந்தால் நான்கு வெற்றிகளை பெற்றுள்ள நியூசிலாந்து அடுத்த இரண்டு போட்டிகளில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை கட்டாயம் தோற்கடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இந்தியா 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் பெற்றி பெற்று நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 5 போட்டிகளில் வெற்றி பெற்ற 2-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    பாகிஸ்தான் 3-ல் வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 3 வெற்றியுடன் 6-வது இடத்தில் உள்ளது. இலங்கை, நெதர்லாந்து அணிகள் தலா இரண்டு வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் இலங்கை 7-வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 8-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    • வங்காளதேசம் அணியின் லிட்டன் தாஸ் 45 ரன்களை குவித்து அசத்தினார்.
    • பாகிஸ்தான் சார்பில் பஹார் ஜமான் அதிரடியாக விளையாடினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    வங்காளதேசம் அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, அப்துல்லா ஷபீக் மற்றும் பஹார் ஜமான் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அப்துல்லா ஷபீக் சிறப்பாக விளையாடி 68 ரன்களை குவித்தார். பஹார் ஜமான் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களுக்கு நடையை கட்டினார்.

    அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களையும், இஃப்திகார் அகமது 17 ரன்களையும் அடித்தனர். போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • வங்காளதேசம் அணியின் லிட்டன் தாஸ் 45 ரன்களை குவித்து அசத்தினார்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த மஹ்மதுல்லா நிதானமாக விளையாடி 56 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 43 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காளதேசம் அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
    • கொல்கத்தாவில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் இன்று மோதுகின்றன.

    கொல்கத்தா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, வங்காளதேசம் அணி முதலில் களமிறங்குகிறது.

    • நியூசிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா உள்ளது.
    • நியூசிலாந்து அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 32-வது லீக் ஆட்டம் புனேயில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா- டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    தென்ஆப்பிரிக்கா அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி இலங்கை (102 ரன்), ஆஸ்திரேலியா (134 ரன்), இங்கிலாந்து (229 ரன்), வங்காளதேசம் (149 ரன்), பாகிஸ்தான் (1விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. நெதர்லாந்திடம் 38 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    நியூசிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. நாளையும் இந்த வெற்றி நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்வதில் திணறுகிறது. பாகிஸ்தானுக்கும் எதிராக இதை காண முடிந்தது. முதலில் ஆடினால் மட்டுமே அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கிறது.

    நியூசிலாந்து அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டத்தில் (இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்) வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தியா (4 விக்கெட்), ஆஸ்திரேலியா (5 ரன்) அணிகளிடம் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் நியூசிலாந்து இருக்கிறது.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இரு அணிகளும் 71 முறை மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா 41-ல், நியூசிலாந்து 25-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லை.

    • 1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போகும்.
    • வங்காளதேச அணிக்கு உலகக் கோப்பை மோசமாகவே அமைந்திருக்கிறது.

    கொல்கத்தா:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை அணிகளை தோற்கடித்து நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் அதன் பிறகு அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் வரிசையாக உதை வாங்கியது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது. அந்த அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் இமாலய வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவும் ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே அரையிறுதி அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது.

    1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போகும். எனவே இது பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாகும்.

    பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம், சாத் ஷகீல், இமாம் உல்-ஹக்கும், பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம், உஸ்மா மிர் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும் அந்த அணியில் பந்து வீச்சு எடுபடும் ஆட்டத்தில், பேட்டிங் கைகொடுப்பதில்லை. பேட்டிங்கில் அசத்தும்போது, பந்து வீச்சு சொதப்புகிறது. இரண்டும் ஒருசேர நன்றாக அமையாததே அந்த அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது. கடந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் போராடி தோற்ற பாகிஸ்தான் அணி முந்தைய தோல்விகளை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்பி அரையிறுதி வாய்ப்பில் ஒட்டி கொண்டிருக்க ஆர்வம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    வங்காளதேச அணிக்கும் இந்த உலகக் கோப்பை மோசமாகவே அமைந்திருக்கிறது. தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த வங்காளதேச அணி அதன் பிறகு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய பலமான அணிகளிடம் அடுத்தடுத்து பணிந்தது. அத்துடன் முந்தைய லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம் 87 ரன் வித்தியாசத்தில் தோற்று அரையிறுதி வாய்ப்பை அடியோடு இழந்தது. அந்த அணிக்கு எதிராக 230 ரன் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேம் 142 ரன்னில் அடங்கிப் போனது. டாப்-6 பேட்ஸ்மேன்களில் 4 பேர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

    இந்த தோல்விக்கு பிறகு வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேசுகையில், 'இது எங்களுக்கு மோசமான உலகக் கோப்பை போட்டி என்று சந்தேகத்துக்கு இடமின்றி சொல்லலாம். இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினம். ஆனால் இதுபோன்று கிரிக்கெட்டில் நடக்கும்' என்று வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அடுத்த சுற்று வாய்ப்பை எற்கனவே பறிகொடுத்து விட்டதால் இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் வங்காளதேசம் வரும் ஆட்டங்களில் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்க தீவிரம் காட்டும். மேலும் புள்ளி பட்டியலில் டாப்-7 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 33 ஆட்டங்களில் பாகிஸ்தானும், 5 ஆட்டங்களில் வங்காளதேசமும் வென்று இருக்கின்றன. உலகக் கோப்பையில் இரண்டு முறை மோதியதில் தலா ஒரு வெற்றி கண்டுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, சாத் ஷகீல், ஷதப் கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ரவுப்.

    வங்காளதேசம்: லிட்டான் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, மஹிதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம்.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

    • 2023-ம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி வென்றார்.
    • எட்டாவது முறையாக இந்த விருதை வென்று அவர் சாதனை படைத்துள்ளார்.

    பாரிஸ்:

    கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்த மெஸ்சி, 7 கோல் அடித்ததுடன், 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    மெஸ்சி 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வென்று அசத்தியிருந்தார். ஏற்கனவே, இந்த விருதுக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்திருந்தார்.

    பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருதை உலக கோப்பை வென்ற ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அடானா பொன்மதி கைப்பற்றினார்.

    • இலங்கை அணியின் பதும் நிசங்கா 46 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹமத் ஷா 62 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிசங்கா மற்றும் கருணரத்னே முறையே 46 மற்றும் 15 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கேப்டன் குசல் மெண்டிஸ் 39 ரன்களையும், சதீர சமரவிக்ரம 36 ரன்களையும் எடுத்தனர். சரித் அசலங்கா 14 ரன்களையும், மேத்யூஸ் 23 ரன்களிலும், சமீரா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய தீக்ஷனா பொறுப்பாக ஆடி 29 ரன்களை எடுத்தார். போட்டி முடிவில் இலங்கை அணி 241 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரகுமான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரஷித் கான், அப்துல்லா உமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய ரஹ்மதுல்லா குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய இப்ராஹிம் சத்ரான் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹமத் ஷா 62 ரன்களையும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 58 ரன்களையும் எடுத்தார்.

    இவருடன் விளையாடிய அஸ்மதுல்லா உமர்சாய் அரைசதம் அடித்தார். போட்டி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 45.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 242 ரன்களை அடித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
    • ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் பதவியை லூயிஸ் ரூபியேல்ஸ் ராஜினாமா செய்தார்.

    மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

    மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.

    இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். எனினும், கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி வீராங்கனைகள் தெரிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து, ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் பதவியை லூயிஸ் ரூபியேல்ஸ் ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு ஃபிஃபா மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து இருக்கிறது. இது தொடர்பான விசாரணை நடத்திய குழு தீர்ப்பு குறித்த முழு விவரங்களை வழங்கவில்லை. வீராங்கனைகளுக்கு முத்தமிட்ட விவகாரத்தில் லூயிஸ் மீது ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

    ×