என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரைவில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மருத்துவ அதிகாரிகள் நிர்மல்குமார், தீபிகா, சாஜிதா பானு ஆகியோரிடம் 104 கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பன போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.

    கொரோனா சம்பந்தமான ஆவணங்களை பார்த்து முத்தியால்பேட்டை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் தொற்று காலத்தில் மருத்துவமனை ஊழியர்களின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    அதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட சக்தி நகருக்கு சென்றார். அங்கு 4-வது குறுக்குதெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஓமியோபதி மாத்திரைகளை நாராயணசாமி வழங்கினார்.

    கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கும் ஓமியோபதி மாத்திரையை வழங்கி, அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்றும் கூறினார். அப்போது ஜான்குமார் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
    புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை அதிக நாட்களாக நடத்த வேண்டும் என சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தை ஆளும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபை கூட்டத்தொடரில் பொதுமக்களின் பிரச்சினைகளை விவாதிக்க மறுத்து வருகிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதியை இதுவரை ஒன்று நிறைவேற்றவில்லை. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை தீர்வு காணவில்லை.

    பட்ஜெட் தாக்கல் என்பது சம்பந்தப்பட்ட அதிகாரியை வரவைத்து எம்.எல்.ஏ.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சரியான தீர்வை எழுத்து மூலமாக பதில் அளித்து அதற்கான தீர்வை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் குறிப்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அனுமதி அளிக்காமலும் போதிய கால அவகாசம் வழங்காமலும் சபாநாயகர் செயல்படுகிறார்.

    இந்தியாவில் புதுச்சேரியில் மட்டும் தான் குறைந்த நாட்கள் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மக்கள் பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமல் நடத்தப்படுகிறது. இது காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பட்ஜெட். அரசுக்கு தைரியம் இருந்தால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை அதிக நாட்களாக நடத்த வேண்டும். கொரோனாவை தொற்று சமூக இடைவெளியை காரணம் காட்டக்கூடாது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இதுவரை நடத்திய கூட்டத்திலோ அல்லது போராட்டத்திலோ எதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.

    தேவையெனில் சமூக இடைவெளியுடன் கம்பன் கலையரங்கத்தில் கூட இந்த சட்டபை கூட்டத்தொடரை நடத்துங்கள். தங்களின் இயலாமையை மறைக்க கவர்னரை காரணம் காட்டி ஆட்சியை நடத்தும் தாங்கள் இந்த முறை நடத்தும் பட்ஜெட் தொடர் மக்கள் நலனுக்காக இருக்கவேண்டும். இந்த கூட்டத்தொடரை கூடுதல் நாட்கள் நடத்துவது சம்பந்தமாக சட்டசபை செயலருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் பேரிடர் நிவாரணமாக வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    மத்திய அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வராத நிலையில் பட்ஜெட் குறித்து விவாதிக்க அமைச்சரவையை கூட்டியது ஏன்? என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் கேள்வி விடுத்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அ.தி.மு.க. மாநில கழக இணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி அரசின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து அதிகார பூர்வமான, எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் வராமலே பட்ஜெட் பற்றி விவாதிப்பதற்கு அமைச்சரவை கூட்டி 5 நிமிடங்களில் கலைத்திருப்பது இந்த அரசின் திறமையின்மைக்கு உதாரணமாகும். அரசாங்க விதிப்படி எதுவுமே வாய்மொழி உத்தரவு மூலம் நடக்கக்கூடாது. எழுத்துப்பூர்வ உண்மைகளின் அடிப்படையில் தான் ஒரு அரசு முடிவு எடுக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அமைச்சரவையை கூட்டியது ஏன்? புதுவை அரசு அனுப்பிய பட்ஜெட்டின் எல்லா முடிவுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு கொடுத்து உள்ளதா? முடிவுகளை மாற்றி இருக்கிறதா? பட்ஜெட் நிதிக்கு ஒப்புதல் கொடுத்து இருக்கிறதா? என்ற விவரங்கள் எல்லாம் எழுத்துப்பூர்வ கடிதத்தில் தான் தெரியும். இந்த அடிப்படை ஆவணம் இல்லாமல் அமைச்சரவை எப்படி பட்ஜெட்டை பற்றி விவாதிக்க முடியும்.

    கடந்த பிப்ரவரி மாதமே பட்ஜெட் தயாரிப்பு வேலைகள் நடந்து மார்ச் மாதமே பட்ஜெட் சமர்ப்பித்து இருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியபோது முதல்-அமைச்சர் பட்ஜெட் ஆவணத்தை கவர்னருக்கு பிப்ரவரி மாதத்திலேயே அனுப்பினோம். அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவிட்டார் என்று கூறினார்.

    இப்போது பட்ஜெட் பலமாதங்களாக மத்திய அரசிடம் கிடப்பில் உள்ளதால் பட்ஜெட் நேரத்தோடு சமர்ப்பிக்க முடியவில்லை என்று கூறுகிறார். இது தவறு. தன் சக்திக்கு மீறிய பட்ஜெட் தொகையை அனுப்பியதால் மத்திய அரசு கேள்வி கேட்டு விளக்கம் பெறுவது ஒரு இயற்கையான நிகழ்வு தானே தவிர காலதாமதம் அல்ல. இந்த ஆண்டு தான் மாநில திட்ட வாரியத்தின் ஒப்புதலை பெறாமல் பட்ஜெட்டின் நிதிஅளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஜனநாயக மரபை மீறிய செயல். உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வேன் என்று இந்திய அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்துக்கொண்ட முதல்-அமைச்சர் அதற்கு நேர்மாறாக நடப்பது புதுச்சேரியின் மாண்பையும் புகழையும் குறைக்கும் செயலாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுவையில் மேலும் 26 இடங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.சாரம் வெங்கட்டா நகர் சன்னதி வீதி வழு அப்பார்ட்மென்ட், 2.பழைய சாரம் வடக்கு வீதி, 3.காலாப்பட்டு கனகசெட்டிக்குளம் மாமர் வீதி, 4.சண்முகாபுரம் சுப்ரமணியர் கோவில் வீதி, 5.கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகர் 4-வது குறுக்குத்தெரு, 6.பெத்துச்செட்டிப்பேட்டை விநாயகர் கோவில் வீதி, 7.சாரம் வெங்கடேஸ்வரா நகர் சேரன் வீதி, 8.ரெட்டியார்பாளையம் கவுண்டன்பாளையம் சுப்பையா வீதி, 9.சாரம் கிழக்கு ரெயின்போ நகர் 7-வது குறுக்குத்தெரு, 10.சாரம் ரெயின்போ நகர் 3-வது குறுக்குத்தெரு,

    11.சாரம் கவிக்குயில் நகர் 3-வது குறுக்குத்தெரு, 12.ரெட்டியார்பாளையம் ஜான்சிநகர் சுவர்ணாலயம் அபார்ட்மென்ட்ஸ், 13.பாக்கமுடையான்பேட்டை பேசின் நகர் கோகுலம் அப்பார்ட்மென்ட்ஸ், 14.லாஸ்பேட்டை அசோக் நகர், செண்பகராமன் வீதி, 15.வடமங்கலம் புதுநகர், 16. ஒதியம்பட்டு புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் வீதி, 17. வி.மணவெளி திருவேணி நகர்-விரிவு 2-வது குறுக்குத்தெரு, 18. கூடப்பாக்கம் பெருமாள் கோவில் வீதி, 19.சுல்தான்பேட்டை ஜாகீர்உசேன் நகர் முதல் குறுக்குத்தெரு, 20.சுல்தான்பேட்டை கால்வாய் வீதி பாத்திமா அப்பார்ட்மென்ட், 21. அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகர் சேக்கிழார் வீதி, 22. திருக்கனூர் காந்தி நகர், 23.வி.மணவெளி நமச்சிவாயம் நகர், 24.வி.மணவெளி புதிய கிணறு வீதி, 25.பொறையூர்பேட் புதுநகர், 26.பொறையூர்பேட் புதுநகர் களத்துமேடு உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவை ஜிப்மர் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்த டாக்டர் திடீரென உயிரிழந்தார். அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    நேபாள நாட்டை சேர்ந்தவர் டாக்டர் சஞ்சீவ் (வயது26). இவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுநிலை மருத்துவம் 2-ம் ஆண்டு (எம்.எஸ்.) படித்துக் கொண்டே டாக்டராக பணியாற்றி வந்தார். இதற்காக ஜிப்மர் மருத்துவமனை வளாகம் டாக்டர்கள் குடியிருப்பில் 2-வது மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார்.

    அவருடன் பணியாற்றி வந்த டாக்டர் ஹசானா பணிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் சஞ்சீவின் அறையை தட்டிப்பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. கதவை திறக்க முயன்றபோது உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அதற்கும் பதில் இல்லை.

    இதனால் சந்தேகமடைந்த சக டாக்டர்கள் குடியிருப்பு பணியாளர் கண்ணப்பன் உதவியுடன் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு டாக்டர் சஞ்சீவ் இடது கையில் மருந்து ஏற்றிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அறையின் வலி நிவாரண மருந்துகள் அதிக அளவில் இருந்தன.

    இதுகுறித்து ஜிப்மர் டீன் பங்கஜ் குந்ரா கோரிமேடு போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சஞ்சீவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் சஞ்சீவ் வலி நிவாரண மாத்திரை மருந்துகளை அதிக அளவு எடுத்துக்கொண்டதனால் உயிரிழந்தாரா? அல்லது விஷ ஊசிப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவர்னர் கிரண்பேடிக்கு தனி சட்டம் கிடையாது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    மாநிலத்தில் தொகுதி வாரியாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சிடம் கூறி வந்தேன். நாளை (இன்று ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் அதற்கு அடுத்த வாரம் முதல் ஊரடங்கை அமல்படுத்துவது நல்லது என்று சுகாதாரத்துறை மூலம் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன்.

    புதுவையில் கவர்னர் கிரண்பேடி கொரோனா தொடர்பாக தகவல்களை தவறாக கூறி வருகிறார். கொரோனா தொடர்பான தகவல்களை தெரிவிப்பது அவரது பணியல்ல. இவ்வளவு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கவர்னர் சொல்ல தேவையில்லை. தன்னுடைய பணிகளை விட்டு விட்டு மற்றவர்களின் பணிகளில் தலையிடுவதே அவருக்கு வழக்கம்.

    கவர்னர் கிரண்பேடிக்கு மக்கள் பணியில் அனுபவம் கிடையாது. அவருக்கு 4 ஆண்டுகள் தான் அனுபவம் உள்ளது. ஆனால் எனக்கு 31 ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்ட அனுபவம் உள்ளது. மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை நான் யோசித்து செய்கிறேன். நீங்கள் (கவர்னர்) 4 ஆண்டுகளாக புதுச்சேரியை கெடுத்துவிட்டீர்கள். உங்களால் நிலைமையே மாறிவிட்டது. நான் 24 மணி நேரம் வேலை செய்கிறேன்.

    புதுச்சேரியை எப்படி முன்னேற்றலாம் என்று யோசியுங்கள். இந்தியாவில் எந்த கவர்னர் இப்படி கூறுகிறார் என்று பாருங்கள். உங்களுக்கு என்று தனி சட்டம் இல்லை. அனைத்து கவர்னர்களுக்கும் ஒரே சட்டம்தான். கவர்னர் மாளிகையில் ஒருவருக்கு தொற்று என்று கூறினேன். அது இல்லை என்று கவர்னர் மறுத்து கூறுகிறார். பொய்யான தகவலை மக்களுக்கு தெரிவிக்கிறார். பொறுப்புள்ள ஒரு பதவியை பிரதமர் கொடுத்துள்ளார். அதன் வழியில் செயல்படுங்கள். உங்களை பற்றி அனைத்தும் மக்களுக்கு தெரிந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கிராமப் புறங்களில் மக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    களஆய்வாளர்கள் தருகின்ற தகவல் அறிக்கைகள் கடைக்காரர்கள், பொதுமக்கள் யாரையும் குற்றம்சாட்டுவதற்காக இல்லை. அவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக தான். சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கும்படி வலியுறுத்துவதின் அவசியத்தை கடைக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நோயாளிகள் இப்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தொடங்கி விட்டனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் பின்பற்றுவதில்லை.

    நம்முடைய அரசின் கவனம் முழுவதும் நகரப் பகுதிகளிலும், முக்கியமான சாலைப் பகுதிகளிலும் மட்டுமே உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் யாரும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. அவர்களை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பரிசோதனை செய்து கொரோனா தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்தி இந்த சமூகம் அவர்களை ஓரங்கட்டுவதாகவும் கருதுகின்றனர்.

    மக்கள் தங்களுக்கு நோய் அறிகுறிகள் (காய்ச்சல், வறட்டு இருமல்) இருந்தாலும் வெளியே செல்ல தயங்கு கின்றனர். எனவே அவர்களாகவே மருந்து எடுத்துக் கொள்கின்றனர். எனவே மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை செய்தித்தாள்கள், தொலைக் காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும். கொரோனா தொற்றை ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை பெறுவதால் விடுபடமுடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் வளர்க்க வேண்டும்.

    கடந்த சிலவாரங்களில் நாங்கள் மேற்கொண்ட களஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை இவை. இந்த இக்கட்டான காலகட்டத்தில் மற்றவர்களுக்கு உதவ ஒரு வாய்ப்பை வழங்கிய நிர்வாகத்திற்கு என்னுடை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் கொரோனா வைரசை வென்று மக்கள் மீண்டும் தங்களுடைய 100 சதவீத இயல்பு வாழ்க்கையை திரும்புவார்கள். உள்ளாட்சித் துறை, கிராமப்புறத்தில் உள்ள போலீசார், தொழிலாளர், வருவாய் அதிகாரிகள், மீன்வள அதிகாரிகள் அனைத்து மத ஆலயங்களிலும், போக்குவரத்து துறைகளிலும் கண்காணிப்பு பணிகள் மற்றும் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஹாலோகிராம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூரில் மங்கலம் சாலையில் தனியார் மதுபான ஆலை உள்ளது. இங்கு போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டி மோசடியில் ஈடுபட்டதாக ஆலையின் உரிமையாளர் சேகர், பொதுமேலாளர் பொன்னா ராவ், கலால்துறை வருவாய் அதிகாரி அருண் பிரசாத், மதுபான ஆலை உரிமையாளர் டிரைவர் கார்த்திகேயன் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் ஆலையின் உரிமையாளர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றார். பொதுமேலாளர் பொன்னாராவ், கலால்துறை வருவாய் அதிகாரி அருண்பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களும் ஜாமீன் பெற்றனர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டிரைவர் கார்த்திகேயனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். அவரை கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து அதிகாரபூர்வமாக உத்தரவு வரவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய நலத்துறை மந்திரி இந்தியாவில் எந்த பகுதியிலும் கொரோனா தொற்று சமூக பரவலாக இல்லை என்று கூறியுள்ளார். அதுபோல் புதுவையிலும் இது சமூக பரவலாக மாறவில்லை. தொற்று ஒருவருக்கு வந்தால் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் வருகிறது.

    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம். தற்போது மருத்துவ பரிசோதனையை அதிகரித்துள்ளோம். இதனால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிகிறது.

    புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா, இல்லையா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. தற்போது 970 பேர் பரிசோதனை செய்தால் 70 பேருக்கு உறுதியாகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநிலத்தின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில் பொதுமக்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும். கடைகளை மூடுவதால் மட்டும் கொரோனா பரவுவதைத் தடுத்து நிறுத்த முடியாது.

    நாளை மறுநாள் (அதாவது ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள். அன்று பல நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே முழு ஊரடங்கு அமல்படுத்தினால் பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது.

    புதுவை மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகள் மத்திய நிதி அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளன. அதாவது, பஞ்சாலை நிலத்தை விற்பனை செய்வது, தொழில் முனைவோர் கார்ப்பரேஷன் கோப்பு கவர்னரால் அனுப்பப்பட்டு முடிவு எடுக்க முடியாமல் கிடப்பில் உள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை விற்பதற்கு கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார். எந்த கோப்பை அனுப்பினாலும் அதனை தடுத்து நிறுத்தி மாறாக உத்தரவு போட்டு நிர்வாகத்தை முடக்கும் வேலையை செய்கிறார்.

    கொரோனா தொற்று நேரத்தில் கூட அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார். பல கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பி காலதாமதம் செய்து மாநிலத்தின் நிர்வாகத்தை வீணடிக்கிறார். தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்கினால் அதனை கொடுக்க தடையாக இருக்கிறார். தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று உத்தரவு போடுகிறார்.

    எளிய மக்களுக்கான நிதி, வீடு கட்டும் திட்ட நிதி, மீனவர்கள் ஓய்வூதிய நிதி உள்பட பல்வேறு திட்டங்களை தடுக்கிறார். இதுபோன்ற செயல்களால் அரசால் செயல்பட முடியாத நிலை உள்ளது. இதனை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்.

    புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆன்மிகம், ஓய்வு, பாரம்பரியம் என 3 வகை சுற்றுலாக்கள் உள்ளன. இதன் மூலமான வளர்ச்சிக்கும் கவர்னர் தடையாக உள்ளார். புதுவைக்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்க வேண்டும்.

    இதுபோன்ற விவரங்களை மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன்ரெட்டியிடம் காணொலி காட்சி மூலம் தெரிவித்துள்ளேன்.

    புதுவை மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு தரப்பில் காலதாமதம் இல்லை. அந்த கோப்பு பல மாதங்கள் டெல்லியில் இருந்ததால் தான் உடனடியாக தாக்கல் செய்ய முடியவில்லை. தற்போது பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர். அதற்கான அதிகாரபூர்வமான உத்தரவு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிளஸ்-2 மறுதேர்வு எழுதும் மாணவர்கள் நுழைவுச்சீட்டுகளை தங்களது பள்ளி முதல்வர், துணை முதல்வரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி இயக்கக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த 24.3.2020 அன்று நடைபெற இருந்த (வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்) தேர்வுகள் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மாணவர்கள் வருகிற 27-ந் தேதி ஏற்கனவே அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம். தனித்தேர்வர்கள் ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய மையங்களில் எழுதலாம்.

    மறுதேர்வு எழுதும் மாணவர்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை புதிய தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை தங்களது பள்ளி முதல்வர், துணை முதல்வரிடம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று HALL TICKET என்ற வாசகத்தை ‘கிளிக்’ செய்து பதிவு எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வுக் கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் நுழைவு சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    புதுவையில் அபராத வசூலில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த கூடாது என போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்ளாட்சித் துறையானது கொரோனா விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதித்து வருகிறது. அபராதங்களை வசூலித்தல், பணி நடைமுறைகளுக்கு பயன்படுத்துதல் போன்றவற்றுக்காக தன்னார்வலர்களை போலீசார் ஈடுபடுத்துவதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்து புகார் வருவதற்கு ஏதுவாகவும், பொதுமக்களுக்கு எதிராக அதிகாரத்தை பயன்படுத்துவதாகவும், தன்னார்வலர்கள் தடி மற்றும் லத்தி போன்றவற்றை வைத்துக்கொண்டு சுற்றுவதாகவும் தெரியவந்தது.

    எனவே பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் தொற்றுநோய் சட்டம் 1897 சட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை அமலாக்க நடவடிக்கைகள், அபராதம் வசூலித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது. காவல் துறையானது முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விழிப்புணர்வு பணிகளில் மட்டும் தன்னார்வலர்களை பயன்படுத்தலாம். இந்த ஆணை கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு பொருந்தாது. மேற்கண்ட விதிமுறைகளில் மீறல்கள் இருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த உத்தரவை அமல்படுத்த காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவை கடற்கரை சாலை திறக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் கடற்கரை சாலை கடந்த மார்ச் மாதம் முதல் முழுமையாக மூடப்பட்டது. கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் கடற்கரை சாலை மூடப்பட்டது.

    இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரை சாலை நேற்று முதல் நடைபயிற்சிக்கு மட்டும் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை மழை பெய்ததாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை பின்பற்றுகிறார்களா? என்று நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.
    ×