search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    பட்ஜெட்டுக்கு அதிகாரபூர்வ உத்தரவு வரவில்லை: முதல்-அமைச்சர் நாராயணசாமி

    புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து அதிகாரபூர்வமாக உத்தரவு வரவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய நலத்துறை மந்திரி இந்தியாவில் எந்த பகுதியிலும் கொரோனா தொற்று சமூக பரவலாக இல்லை என்று கூறியுள்ளார். அதுபோல் புதுவையிலும் இது சமூக பரவலாக மாறவில்லை. தொற்று ஒருவருக்கு வந்தால் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் வருகிறது.

    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம். தற்போது மருத்துவ பரிசோதனையை அதிகரித்துள்ளோம். இதனால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிகிறது.

    புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா, இல்லையா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. தற்போது 970 பேர் பரிசோதனை செய்தால் 70 பேருக்கு உறுதியாகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநிலத்தின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில் பொதுமக்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும். கடைகளை மூடுவதால் மட்டும் கொரோனா பரவுவதைத் தடுத்து நிறுத்த முடியாது.

    நாளை மறுநாள் (அதாவது ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள். அன்று பல நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே முழு ஊரடங்கு அமல்படுத்தினால் பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது.

    புதுவை மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகள் மத்திய நிதி அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளன. அதாவது, பஞ்சாலை நிலத்தை விற்பனை செய்வது, தொழில் முனைவோர் கார்ப்பரேஷன் கோப்பு கவர்னரால் அனுப்பப்பட்டு முடிவு எடுக்க முடியாமல் கிடப்பில் உள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை விற்பதற்கு கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார். எந்த கோப்பை அனுப்பினாலும் அதனை தடுத்து நிறுத்தி மாறாக உத்தரவு போட்டு நிர்வாகத்தை முடக்கும் வேலையை செய்கிறார்.

    கொரோனா தொற்று நேரத்தில் கூட அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார். பல கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பி காலதாமதம் செய்து மாநிலத்தின் நிர்வாகத்தை வீணடிக்கிறார். தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்கினால் அதனை கொடுக்க தடையாக இருக்கிறார். தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று உத்தரவு போடுகிறார்.

    எளிய மக்களுக்கான நிதி, வீடு கட்டும் திட்ட நிதி, மீனவர்கள் ஓய்வூதிய நிதி உள்பட பல்வேறு திட்டங்களை தடுக்கிறார். இதுபோன்ற செயல்களால் அரசால் செயல்பட முடியாத நிலை உள்ளது. இதனை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்.

    புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆன்மிகம், ஓய்வு, பாரம்பரியம் என 3 வகை சுற்றுலாக்கள் உள்ளன. இதன் மூலமான வளர்ச்சிக்கும் கவர்னர் தடையாக உள்ளார். புதுவைக்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்க வேண்டும்.

    இதுபோன்ற விவரங்களை மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன்ரெட்டியிடம் காணொலி காட்சி மூலம் தெரிவித்துள்ளேன்.

    புதுவை மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு தரப்பில் காலதாமதம் இல்லை. அந்த கோப்பு பல மாதங்கள் டெல்லியில் இருந்ததால் தான் உடனடியாக தாக்கல் செய்ய முடியவில்லை. தற்போது பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர். அதற்கான அதிகாரபூர்வமான உத்தரவு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×