என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான வழக்குகள், கல்வித்தகுதி தொடர்பாக தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான வழக்குகள், கல்வித்தகுதி தொடர்பாக தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில் குற்றப்பின்னணி வேட்பாளர்களில் ஆய்வு செய்யப்பட்ட 323 பேரில் 54 பேர் மீது (17 சதவீதம்) கிரிமினில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 28 பேர் மீது (9 சதவீதம்) கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    2 வேட்பாளர்கள் மீது கொலை வழக்கும், ஒரு வேட்பாளர் மீது கொலை முயற்சி வழக்கும். ஒரு வேட்பாளர் மீது பெண்ணை மானபங்கம்படுத்தி தாக்கிய வழக்கும் உள்ளது. இது கடந்த 2016 தேர்தலில் 30 பேராக இருந்தது.

    கட்சி ரீதியாக கிரிமினல் வழக்கு விவரம்:

    அ.தி.மு.க.வில் 5 வேட்பாளர்களில் 3 பேர் மீதும் (60 சதவீதம்), பா.ஜனதாவில் 9 வேட்பாளர்களில் 5 பேர் மீதும் (56 சதவீதம்), தி.மு.க. வேட்பாளர்கள் 13 பேரில் 7 பேர் மீதும் (54 சதவீதம்), காங்கிரசில் 14 வேட்பாளர்களில் 4 பேர் மீதும் (29 சதவீதம்) கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    கடுமையான கிரிமினல் வழக்குகள் விவரம்:

    அ.தி.மு.க.வில் 5 வேட் பாளர்களில் 2 பேர் மீதும் (40 சதவீதம்), பா.ஜனதாவில் 9 வேட்பாளர்களில் 2 பேர் மீதும் (22 சதவீதம்), காங்கிரசில் 14 வேட்பாளர்களில் 2 பேர் மீதும் (14 சதவீதம்), என்.ஆர்.காங்கிரசில் 16 வேட்பாளர்களில் ஒருவர் மீதும் (6 சதவீதம்), சுயேட்சை வேட்பாளர்களில் 96 பேரில் 4 பேர் மீதும் (4 சதவீதம்) கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    புதுவையில் 162 வேட்பாளர்கள் 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். இது 50 சதவீதமாகும். 133 பேர் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் (41 சதவீதம்), 18 பேர் பட்டயப்படிப்பும், 6 பேர் படிக்காதவர்கள் என்றும், 4 பேர் ஓரளவு படிக்கத்தெரியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    புதுவையில் போட்டியிடுவோரில் 175 பேர் 41 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். இது 54 சதவீதமாகும். அதே போல் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் 109 பேர். 61 முதல் 80 வயதுக்கு உட்பட்டோர் 39 பேர்.

    புதுவையில் பெண் வேட்பாளர்கள் 35 பேர் களத்தில் உள்ளனர். அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 343 பேரில் 26 பேர் களத்தில் இருந்தனர்.

    புதுவையில் தேர்தல் உயர்மட்ட அதிகாரிகள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியுள்ளது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநில குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை பா.ஜ.க.வினர் வாக்காளர்களின் தொலைபேசி எண்களுக்கு பா.ஜ.க.வில் சேருங்கள் என்கிற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளனர்.

    இதுதொடர்பாக பிரதேச குழு உறுப்பினர் ஆனந்த், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கு 24-ந் தேதியும், 26-ந் தேதியும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பல கேள்விகளை முன் வைத்துள்ளனர்.

    தனி நபர் தரவுகள் எப்படி பா.ஜ.க.வுக்கு கிடைத்தது என்று அறிக்கை அளிக்க கோரி புதுவை அரசுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும், ஆதார் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தனி நபர் விவரங்கள் பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றமே பல உத்தரவுகளை வழங்கி உள்ளது.

    அப்படி இருக்கும்போது, தனிநபர் பற்றி விவரங்கள் பா.ஜ.க.வால் எப்படி சேகரிக்க முடிந்தது. குறிப்பாக பூத் வாரியாக வாக்காளர்களுக்கு தொலைபேசி எண்ணுக்கு பா.ஜ.க.வில் சேருங்கள் என லிங்க் அனுப்பி உள்ளனர்.

    அவர்களுக்கு எப்படி வாக்காளர்களின் தொலைபேசி எண் கிடைத்தது? என்பது சம்பந்தமாக புதுவை தேர்தல் அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை. இதுபோன்ற குறுந்தகவலை அனுப்ப பா.ஜ.க. எவ்வித அனுமதியும் பெறவில்லை என தேர்தல் துறை கூறியிருக்கிறது.

    அனுமதியின்றி தகவல் பரப்பியது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே, பா.ஜ.க.வின் அனைத்து வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். புதுவையில் தேர்தல் உயர்மட்ட அதிகாரிகள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் என தொடர்ந்து நாங்கள் விமர்சனம் செய்து வருகிறோம்.

    தேர்தல் ஆணையத்திடம் பல முறை புகார் அளித்துள்ளோம். இந்த சூழ்நிலையில் தேர்தல் உயர்மட்ட அதிகாரிகளுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இப்படிப்பட்ட விதிமீறல்கள் நடக்க வாய்ப்பில்லை.

    எனவே, புதுவை தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை தேர்தல் பணியில் இருந்து உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

    குறிப்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    புதுவையில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
    புதுச்சேரி:

    புதுவைக்கு ஒரு நாள் பயணமாக வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    அதைத்தொடர்ந்து காரைக்கால் செல்வதாக இருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு புதுவையில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிக்க தொடங்கினார்.

    அவரை வரவேற்கும் விதத்தில் மேளதாளங்கள் இசைக்கப்பட்டன. அப்போது பெண்கள் ஆரத்தி, மாலை அணிவித்தனர்.

    நெல்லித்தோப்பு பெரியார் நகர் கஸ்தூரிபாய் வீதியில் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் சென்றபோது, அங்கிருந்த பெண் ஒருவர், மத்திய மந்திரி தலையில் சூடிக்கொள்ள மல்லிகை பூ சரத்தை கொடுத்தார்.

    அதை மகிழ்வுடன் அவர் பெற்றுக்கொண்டு நடந்து அடுத்த வீட்டுக்கு சென்றபோது, அங்கிருந்த பெண்ணின் தலையில் பூ இல்லாமல் இருந்ததை பார்த்தார். அவரை அழைத்து அந்த பெண் தலையில் மல்லிகை பூ சரத்தை சூட்டினார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

    புதுவையில் பாமக கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் தலைமையில் பாட்டாளி மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு தொகுதி ஒதுக்காததால் தனித்து போட்டியிட போவதாக பா.ம.க. மாநில அமைப்பாளர் தன்ராஜ் அறிவித்தார்.

    இதைதொடர்ந்து 10 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனால், இடையில் பா.ஜ.க.வுடன் உடன்பாடு ஏற்பட்டு அனைவரின் வேட்பு மனுக்களையும் வாபஸ் வாங்குவதாக தன்ராஜ் கூறினார்.

    இந்த நிலையில் புதுவையில் பா.ம.க. கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் தலைமையில் பாட்டாளி மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

    பா.ம.க.வில் இருந்து கோபி தலைமையில் நிர்வாகிகள் விலகி இந்த அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

    இதுபற்றி அவர்கள் கூறுகையில், பா.ம.க. மாநில அமைப்பாளர் தன்ராஜின் செயல்பாடு சரியாக இல்லை. வாட்ஸ்அப் மூலமே கட்சியை நடத்துகிறார்.

    30 ஆண்டுகளாக பா.ம.க.வில் பணியாற்றி வருவோரை வயது முதிர்ந்து விட்டது என்று கூறி மதிப்பதில்லை. அதனால் கலந்து ஆலோசித்து புதிய அமைப்பை உருவாக்கி உள்ளோம்.

    சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம். விரைவில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சந்தித்து ஆதரவு கடிதம் அளிப்போம். என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று குறிப்பிட்டனர்.

    பா.ம.க.வில் இருந்து விலகி புதிய அமைப்பை உருவாக்கியவர்கள் பா.ஜ.க. கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரசை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.

    தேசிய நகர மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் உள்ளாட்சி துறையின் புதுச்சேரி நகர மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும் நகர அபிவிருத்தி தொடர் திட்டத்திற்கு ரூ.4 கோடியே 9 லட்சம் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மார்ச் மாதம் இலவச அரிசி வழங்க ரூ.600, வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மக்களுக்கு ரூ.300 என இலவச அரிசிக்கு மானியம் வழங்கும் திட்டத்திற்கு ரூ.15 கோடியே 71 லட்சம் செலவின கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    தேசிய நகர மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் உள்ளாட்சி துறையின் புதுச்சேரி நகர மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும் நகர அபிவிருத்தி தொடர் திட்டத்திற்கு ரூ.4 கோடியே 9 லட்சம் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார். 2019 மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் நகர்புறத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம், கிராமப்புறத்தில் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரொக்க பணமும் வழங்கும் திட்ட செலவு ரூ.2 கோடியே 2 லட்சத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருபுவனை அருகே தனியார் கம்பெனி காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    திருபுவனை அருகே செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). இவர் திருபுவனையில் உள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலைசெய்து வந்தார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒருமகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கொத்தபுரிநத்தம் செல்லும் சாலையில் உள்ள அய்யனார் கோவில் அருகே மர்மமான முறையில் குணசேகரன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குணசேகரன் மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுவையில் வெளிநாட்டு பெண் ஆசிரியை வீட்டில் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    ஐரி‌‌ஷ் நாட்டை சேர்ந்தவர் பிரைன் சித்தார்தா இங்கில்(வயது 56). ஆசிரியை. கடந்த 10 ஆண்டுகளாக புதுவை வைத்திக்குப்பம் பாப்பாம்மாள் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவர் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் ர‌‌ஷிய மொழி வகுப்புகள் நடத்தி வருகிறார். மாணவர்கள் கட்டணமாக வெளிநாட்டு கரன்சிகளை கொடுத்தாலும் அதனை பெற்றுக்கொள்வார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டு பீரோவில் இருந்த ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பலான அமெரிக்க டாலர், யூரோ போன்ற வெளிநாட்டு கரன்சிகளை காணவில்லை. ஆனால் பீரோ உடைக்கப்படாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது வீட்டில் வேலை செய்யும் பெண் வள்ளி (45) என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் பிரைன் சித்தார்தா இங்கில் வீட்டில் இருந்து வெளிநாட்டு கரன்சிகளை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அந்த கரன்சிகளை முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்த பிரதாபன்(45) என்பவர் உதவியுடன் இந்திய நோட்டுகளாக மாற்றியதை ஒப்புக்கொண்டார்.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்துனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
    10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வர உள்ளதால் வகுப்புகள் நடத்தலாம். பெற்றோர் அனுமதி கடிதம் பெற்ற பிறகே வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை பள்ளிக்கல்வித்துறை இணைஇயக்குனர் மைக்கேல் பென்னோ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் 1 முதல் பிளஸ்-1 வரை வழக்கமான அல்லது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. பிளஸ்-2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு வருவதால் சிறப்பு வகுப்பு நடத்தலாம்.

    சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு வழக்கமான சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.

    10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வர உள்ளதால் வகுப்புகள் நடத்தலாம். பெற்றோர் அனுமதி கடிதம் பெற்ற பிறகே வகுப்புகளை நடத்த வேண்டும்.

    கொரோனா தொற்றால் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் அவர்களை அனுப்ப கட்டாயப்படுத்தக்கூடாது. பொதுத்தேர்வு நடைபெறும் வரை விதிமுறைகளுடன் வகுப்புகள் நடத்த வேண்டும்.

    விதிமீறல் தொடர்பாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி இன்று முதல் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தலையொட்டி ஒட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    இன்று முதல் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்குகிறது. புதுவையில் 30 தொகுதிகளிலும் 324 பேர் போட்டியிடுகின்றனர்.

    புதுவையில் 23 தொகுதிகளில் ஆயிரத்து 217 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. புதுவை ரெட்டியார் பாளையம் ஜெயா நகர் பகுதியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து லாஸ்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு ஆயிரத்து 822 ஓட்டு எந்திரங்கள் ஆயிரத்து 724 வி.வி.பேட் எந்திரம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

    வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி சுதாகர் கூறுகையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

    இன்று முதல் 2 நாட்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெறும் என தெரிவித்தார்.

    புதுவையில் 60, காரைக்காலில் 32, ஏனாமில் 2, மாகியில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 60, காரைக்காலில் 32, ஏனாமில் 2, மாகியில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் தற்போது 205, காரைக்காலில் 47, ஏனாமில் ஒருவர், மாகியில் 4 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 9, ஏனாமில் ஒருவர், மாகியில் 3 பேர் என 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 40 ஆயிரத்து 836 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 257 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 402 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 316, காரைக்காலில் 143, ஏனாமில் 11, மாகியில் 28 பேர் என 498 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 755 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 679 பேர் பலியாகியுள்ளனர்.

    இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால்தான் புதுவையின் தனித்தன்மை மேம்பாடு அடையும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலாசீத்தாராமன் கூறினார்.
    புதுச்சேரி:

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலாசீத்தாராமன் ஆனந்தா இன் ஓட்டலில் இன்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி தேவைப்படும். அதனால் தான் நிதி மந்திரியை அனுப்பி வைத்துள்ளார்கள். அது உண்மைதான். மறுக்கவும் கூடாது.

    தேர்தல் அறிக்கையில் புதுவையில் 51 சதவீதம் பெண்கள் வாக்குறுதியை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். பெண்களுக்கு வாக்குறுதிகள் சொல்லவே வந்துள்ளேன். பா.ஜனதாவில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும்.

    2008-ல் பா.ஜனதாவில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியில் கிராமப்புறத்தில் இருந்து உயர்மட்ட பதவி வரை வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அப்போது முதல் தற்போது வரை பெண்களுக்கு மரியாதை தரும் கட்சியாக உள்ளது.

    அரசியலில் பெண்களா? என குடும்பத்தில் யோசிப்பர். இடஒதுக்கீடு மூலம் உரிய அங்கீகாரம் கொடுத்து நான் உயர் பதவிக்கு வந்துள்ளேன். பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் கட்சி. தற்போது நிதி மந்திரியாக நான் இங்கு வந்திருக்க முடியாது.

    2-வது பெண் நிதி மந்திரி. ஆனால், முதலில் இருந்தவர் யார்? பிரதமராக இருந்தபோது நிதி மந்திரியாகவும், பாதுகாப்பு துறை மந்திரியாகவும் இருந்தார்.

    ஆனால், பா.ஜனதாவில் நான் பிரதமராக இல்லை, எனக்கு அந்த பதவிகளை கொடுத்தனர். பெண்களை முன்னேற்ற வேண்டும், வாய்ப்பு தர வேண்டும், ஆதரவு தர வேண்டும் என பா.ஜனதா நினைக்கும் கட்சி. இதனால்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    பல மாநிலங்களில் அளித்த வாக்குறுதிகள்போல இங்கும் அளிக்கப்பட்டுள்ளது. பல மாநிலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அதே போல இந்த வாக்குறுதிகள் புதுவையிலும் நிறைவேற்றப்படும்.

    அடித்தட்டு மக்களிடம் பெற்ற கோரிக்கைகள் வாக்குறுதிகளாகி உள்ளது. பிரதமர் மோடிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என பல திட்டங்களை புதுவையில் நிறைவேற்றவில்லை.

    மக்களுக்காக இதனை செய்திருக்க வேண்டாமா? உங்கள் நலனுக்காகவா மக்கள் தேர்வு செய்தார்கள். ரே‌ஷன்கடையை மூடினால் என்ன மாதிரி ஆட்சி? மீனவர்கள், ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தை மோடி செயல்படுத்தினார். ஆனால், இதனை நிறைவேற்றவில்லை. புதுவையில் சுற்றுலா, கல்வி, மருத்துவமனைக்காக அதிகமானவர்கள் வந்து சென்றனர்.

    ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. பிரதமர் மோடி சிறந்த மாநிலமாக புதுவையை மாற்றுவோம் என வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதுதான் தேர்தல் அறிக்கை.

    மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைத்தது பிரதமர். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ராகுலிடம் மொழிமாற்றம் செய்தது போல மக்கள் குறைகளை திரித்து சொல்லவில்லை. மீனவர்கள் விரும்பியதை சொல்லியுள்ளோம்.

    விவசாயிகள் போல மீனவர்களுக்கும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும். புதுவையில் துறைமுகம் ஆழம் குறையாமல் இருக்க வேண்டும். 2009 முதல் துறைமுகம் தூர்வாரப்படவில்லை. இந்த துறைமுகம் கட்டப்படும்.

    மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல மீனவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். மற்ற மாநிலங்கள்போல புதுவை முன்னேற வேண்டும் என்ற ஆசை பிரதமருக்கு உள்ளது. அதனால்தான் என்னை புதுவைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    மத்தியிலும் பா.ஜனதா, மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி வர வேண்டும். அப்படி வந்தால்தான் தடைபட்டு வந்த நிலை மாறி, முழு வேகத்தில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

    தொண்டர்கள் தளர்ச்சியடையாமல் வீடு, வீடாக சென்று தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி ஏன் தாமரை மலர வேண்டும் என எடுத்து கூற வேண்டும். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால்தான் புதுவையின் தனித்தன்மை மேம்பாடு அடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    உரிய விசாரணை இன்றி பாஜகவை நேரடியாக தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். 

    அவர் தனது மனுவில், வாக்காளர்களின் மொபைல் எண்களை ஆதார் மூலம் சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாகவும், இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

    வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு ஒத்தி வைத்தனர்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், எஸ்எம்எஸ் மூலம் பிரசாரம் மேற்கொள்ள பாஜக முன் அனுமதி பெறவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    சைபர் கிரைம் போலீஸ் விசாரணை அறிக்கையை பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிய விசாரணை இன்றி பாஜகவை நேரடியாக தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. நீதிமன்றம் வேண்டுமானால் விசாரணையை கண்காணிக்கலாம் என்றும் தெரிவித்தது.

    இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், பாஜக மீதான எஸ்எம்எஸ் பிரசாரம் குறித்த புகாரை விசாரித்து முடிக்கும்வரை புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

    மேலும் புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது? என்பது பற்றி ஆதார் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    ×