என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் அருகே அரியூர் குமரன் நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது54). இவர் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் (வங்கி) மானேஜராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும், தேவநாதன் (22) என்ற மகன், சுகந்தி(26) என்ற மகளும் உள்ளனர்.
சுகந்தி பி.டெக் படித்து விட்டு அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். தேவநாதன் பி.டெக் படித்து விட்டு வேலை தேடி வருகிறார்.
இதற்கிடையே குப்புசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் பணிபுரிந்த இளங்கோ என்பவருக்கு வங்கி மூலம் ரூ.3 லட்சம் கடன் பெற்றுக்கொடுத்தார். அதற்கு குப்புசாமி ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார்.
ஆனால் வங்கியில் பெற்ற கடனை இளங்கோ திருப்பி செலுத்தாமல் இருந்து வந்தார். இதனை பலமுறை இளங்கோவிடம் குப்புசாமி எடுத்துக்கூறி பணத்தை திருப்பி செலுத்தும்படி அறிவுறுத்தி வந்தார். ஆனால் குப்புசாமி பணத்தை செலுத்த முன்வரவில்லை.
இதனால் குப்புசாமி தனது சம்பள பணத்தில் இருந்து கடனை செலுத்தி கொண்டிருந்தார். இதன் காரணமாக குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லாமல் குப்புசாமி கஷ்டப்பட்டு வந்தார்.
இதனை குப்புசாமியுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் ஏளனமாக பார்த்து அவமதித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குப்புசாமி மனஉளைச்சலில் இருந்து வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் குப்புசாமி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இதனால் குப்புசாமி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் நள்ளிரவில் குப்புசாமி வீட்டின் குளியல் அறைக்கு சென்று அங்குள்ள ஷவர் குழாயில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார் நேற்று காலை அவரது மனைவி கலா குளியல் அறைக்கு சென்ற போது அங்கு கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குப்புசாமியை தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குப்புசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் தேவநாதன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வங்கியில் கடன் பெற்றவர் பணத்தை திருப்பி செலுத்தாதால் ஜாமீன் போட்ட மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை காமராஜ் நகர் நாராயணதாஸ் வீதியில் வசித்து வருபவர் சித்தார்த்தன். இவர், புதுவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை இவர் தனது காரை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றார்.
பின்னர் சித்தார்த்தன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் காரின் கதவை திறந்து திருடும் முயற்சியில் பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என பார்த்தார்.
இதனை கண்ட டாக்டர் சித்தார்த்தன் அந்த வாலிபரிடம் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் திட்டி டாக்டர் சித்தார்த்தனை கையால் தாக்கினார்.
உடனே டாக்டர் சித்தார்த்தன் செல்போனில் இதுபற்றி போலீசில் தகவல் தெரிவிக்க முயன்றார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் டாக்டர் சித்தார்த்தனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து டாக்டர் சித்தார்த்தன் பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டரை தாக்கி அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவர் புதுவை குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது.
இவர் பெரிய மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் டாக்டரிடம் இருந்து பறித்து சென்ற மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.






