என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுவையில் அரசு ஆஸ்பத்திரி டாக்டரை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற தொழிலாளி கைது

    புதுவையில் அரசு ஆஸ்பத்திரி டாக்டரை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜ் நகர் நாராயணதாஸ் வீதியில் வசித்து வருபவர் சித்தார்த்தன். இவர், புதுவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை இவர் தனது காரை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றார்.

    பின்னர் சித்தார்த்தன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் காரின் கதவை திறந்து திருடும் முயற்சியில் பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என பார்த்தார்.

    இதனை கண்ட டாக்டர் சித்தார்த்தன் அந்த வாலிபரிடம் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் திட்டி டாக்டர் சித்தார்த்தனை கையால் தாக்கினார்.

    உடனே டாக்டர் சித்தார்த்தன் செல்போனில் இதுபற்றி போலீசில் தகவல் தெரிவிக்க முயன்றார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் டாக்டர் சித்தார்த்தனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து டாக்டர் சித்தார்த்தன் பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டரை தாக்கி அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவர் புதுவை குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது.

    இவர் பெரிய மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் டாக்டரிடம் இருந்து பறித்து சென்ற மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×