என் மலர்
புதுச்சேரி
திருக்கனூரை அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜமூர்த்தி (வயது 70). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவர் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று காலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.
கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதியம் 1 மணியளவில் மீண்டும் புதுச்சேரி புறப்பட்டனர். காரை ராஜமூர்த்தியின் மகன் முருகசாமி (35) ஓட்டினார். காரைக்கால் எல்லையான பூவம் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி அருகே சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ராஜமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காரில் பயணம் செய்த ராஜமூர்த்தி மனைவி பச்சையம்மாள் (57), மகன் முருகசாமி (35), முருகசாமியின் மனைவி சுகன்யா (25), குழந்தைகள் விசுவநாதன் (12), சுபத்திரா (10), விஜயபாஸ்கரன் (5), சர்வேஸ்வரன் (4) ஆகிய 7 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.
படுகாயமடைந்த ராஜமூர்த்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜமூர்த்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை கடற்கரை சாலையில் தலைமை செயலகம் அருகே போர்வீரர் நினைவிடம் உள்ளது. இங்கு போர்வீரர் நினைவு தூண்கள் அமைக்கப்பட்டு நடுவில் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி இருக்கும். அந்த துப்பாக்கியின் மேல் ஹெல்மெட் ஒன்று மாட்டி வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை இந்த ஹெல்மெட் மாயமாகி இருந்தது.இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள் பெரியகடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நினைவு தூணில் இருந்த ஹெல்மேட்டை மர்ம ஆசாமிகள் யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஹெல்மெட்டை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். தற்போதும் அதேபோல் மீண்டும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தலைமை செயலகத்தில் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்படியிருக்க அதன் எதிரேயே திருட்டு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 19-ந்தேதி முதல் திருப்புதல் தேர்வும் தொடங்கும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் வருகிற 31-ந்தேதி வரை 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற 19-ந்தேதி தொடங்க உள்ள திருப்புதல் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி பாடத்திட்டத்தை பொறுத்தவரை தமிழக பாடத்திட்டமே பின்பற்றப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி புதுவையிலும் கொரோனா தொற்று பரவல் அசுர வேகத்தில் பரவி வருகிறது.
இதற்கிடையே மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பெற்றோரிடம் அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இதற் கிடையே ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
இந்தநிலையில் புதுவையில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுமா? என்று கல்வித்துறை பொறுப்பு வைக்கும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 40 சதவீத மாணவர்கள் தடுப்பூசி போடவில்லை.
பள்ளிகள் நடந்தால் தான் அவர்களுக்கு தடுப்பூசி போட முடியும். எனவே நேரடி வகுப்புகளை ரத்து செய்வது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி:
புதுவையில் காணும் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும்.
புதுவை மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு காணும் பொங்கலன்று மக்கள் குடும்பம், குடும்பமாக படையெடுத்து வருவர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை கிடைப்பதால் தென் மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு புதுவைக்கு வருவர்.
சமீபகாலமாக உருமாறிய கொரோனா ஒமைக்ரான் தொற்று பரவலால் புத்தாண்டுக்கு பிறகு புதுவை யில் சுற்றுலா பயணிகளின் வருகை வார இறுதி நாட்களில் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரமே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் மாநில எல்லைகளில் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் தமிழகத்திலிருந்து வருவோர் எண்ணிக்கை குறைந்தது.
காணும் பொங்கலான இன்றும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தின் எல்லைகளான கோரிமேடு, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கனகசெட்டிகுளத்தில் தமிழக போலீசார் புதுவையிலிருந்து தமிழகத்துக்குள் செல்ல முயன்றவர்களை தடுப்பு அமைத்து தடுத்தனர்.
தமிழகத்திலிருந்து புதுவைக்கு வந்தவர்களையும் புதுவை போலீசார் தடுத்தனர். மருத்துவம், அத்தியாவசிய காரணங்களுக்கு ஆதாரங்களுடன் வந்தவர்கள், 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தமிழக எல்லைக்குள் நுழைந்தே புதுவைக்குள் வர முடியும் என்பதால் அவர்களும் வரவில்லை. ஏற்கனவே, வெள்ளிக்கிழமையே வந்த சுற்றுலா பயணிகள் நேற்று இரவே சொந்த மாநிலத்துக்கு திரும்பி விட்டனர்.
இதனால் புதுவையில் காணும் பொங்கல் களையிழந்தது. வழக்கமாக காலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம், ஊசுடு படகு குழாம், பாண்டி மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கூடுவார்கள்.
ஆனால் இன்று சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்திலிருந்து புதுவைக்கும், புதுவையிலிருந்து தமிழகத்துக்கும் பஸ்கள் இயக்கப் படாததால் பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் பிரதானசாலைகளை கைவிட்டு சில கிராமப்புற சாலைகள் வழியாக புதுவை எல்லைகளில் உள்ள மதுபான கடைகளுக்கு வந்து தமிழக பிரியர்கள் மது அருந்திச்சென்றனர்.
அதேநேரத்தில் புதுவை மக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்களை வழக்கம் போல் வீடு தேடி சென்று சந்தித்து பொங்கல் பரிசு பெற்றனர்.
மாலையில் கடற்கரை சாலை, பாண்டி மெரீனா, வீராம்பட்டினம் கடற்கரையில் புதுவை மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






