என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த மாணவர்களின் பெற்றோருக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி வழங்கி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 3--ந்தேதி முதல் 15 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுவை அரசின் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு, பள்ளி கல்விதுறை  இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவவையில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி 2004 முதல் 2007 வரை  பிறந்த மாணவர்களுக்கு (15 முதல் 17 வயது வரை) பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தில் இதுவரை 60 சதவீதம் மாணவ--மாணவிகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

    பெற்றோர்கள் ஒப்புதல் பெறப்படாத காரணத்தால் 40 சதவீதம் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பள்ளி பொறுப்பு ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் 15 முதல் 17 வயது வரை உள்ள 100 சதவீதம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருக்கனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிமூலம் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே கொடாத்தூரில் சங்கராபரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரத்தை சேதப்படுத்தி மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தப்படுவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், வேலு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜார்லேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள ஆற்றில் இருந்து மணலை திருடி மாட்டு வண்டியில் கடத்தி வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தமிழக பகுதியான வி.நெற்குணம் புதுகாலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடபதி (வயது 32), முட்றாம்பட்டு காலனியை சேர்ந்த அய்யனார் (45), கடலூர் உச்சிமேடு சாலை தெருவை சேர்ந்த தேவநாதன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    தீபாவளி - பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய பொருட்களுக்கு பதிலாக ரூ.1000 வழங்க வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    10 பொருட்கள் அடங்கிய ரூ.490 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். பொங்கல் தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கடந்த 9-ந்தேதி முதல்-அமைச்சர் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் ஆகியோரால் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தப் பகுதியிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்படவில்லை. 

    பொங்கல் தொகுப்பில் உள்ள வெல்லம், ஏலக்காய் முந்திரி போன்ற பொருட்கள் பொங்கலன்று வழங்கப்பட்டால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். பொங்கல்  முடிவடையும் நிலையில் பெரும்பாலான மக்களுக்கு பொங்கல் தொகுப்பு போய் சேராததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

    பொங்கல் பண்டிகை முடிந்த பின் பொங்கல் தொகுப்பு வழங்கி எந்த பயனும் இல்லை. எனவே பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரொக்கமாக ரூ.500,  தீபாவளிக்கு வழங்க வேண்டிய அரிசிக்கு ஈடாக ரூ.500 சேர்த்து  ரூ.ஆயிரத்தை  ஒவ்வொரு குடும்ப அட்டைக்காரர் களுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் வழங்க வேண்டும். குறைந்தபட்சம்  முதலியார்பேட்டை தொகுதியில் மட்டுமாவது ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில்  2 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக ஆயிரத்து 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் ஆயிரத்து 100, காரைக்காலில் 93, ஏனாமில் 3, மாகியில் 17 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை  பெற்று வருகின்றனர். புதுவையில் 82, காரைக்காலில் 20, ஏனாமில் 3, மாகியில் 18 பேர் என 123 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 6 ஆயிரத்து 785 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். மாகியில் 2 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 886 ஆக உயர்ந் துள்ளது.   புதுவையில்  2-வது தவணை  உட்பட 14 லட்சத்து 95 ஆயிரத்து 877 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை  சுகாதா ரத்துறை  தெரிவித்துள்ளது. 

    கொரோனா தொற்று எண்ணிக்கையோடு, பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள திருமணம் மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட  லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர்.  அப்போது அங்கு சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் சோதனை நடத்திய போது அவர்கள் 3  நம்பர் லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தனர். 

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முருங்கப்பாக்கம், அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த முருகன் (வயது 52),  உருளையன்பேட்டை,  ஒத்தவாடை தெருவை சேர்ந்த ராஜாராம் (56)  என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3,500 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    புதுவை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுமா? என்பது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் பதில் அளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆண்டுக்கு முன்பு கொரோனா பரவ தொடங்கியது. அப்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக  மாற்றப்பட்டது. அங்கு கொரோனா நோயாளிகள் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

    2-வது அலையின்போது அதிகளவில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டது. காசநோய்   மருத்துவ மனையிலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. 

    புதுவை அரசு ஆஸ் பத்திரியில் கொரோனா வார்டு மட்டும் அமைக்கப்பட்டு இருந்தது. அதோடு பிற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையிலும் கொரோனாவுக்கு மட்டும் சிகிச்சை   அளிக்கப்பட்டது. படிப்படியாக தொற்று குறைய தொடங்கியதால் மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    புதுவையில் கொரோனா 3-ம் அலை தொடங்கியுள்ள நிலையில் கதிர்காமம் அரசு  மருத்துவ கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படவில்லை. பாரதி பூங்கா அருகில் உள்ள அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    மேலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகளிடையே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.  கடந்த காலத்தைபோல கதிர்காமம் மருத்துவ மனையை கொரோனா மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
     
    இதுதொடர்பாக சுகா தாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு கூறியதாவது:-

    கோரிமேடு காசநோய் மருத்துவமனையில் 180 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இங்கு தற்போது 30 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள படுக்கைகள் காலியாக உள்ளது. 
    நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் பயன்படுத்த கடந்த காலத்தை போல அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா வார்டு உருவாக்கி உள்ளோம். இங்கு 160 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. அவசர சிகிச்சை பிரிவும் இயங்குகிறது. பிற நோய் களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    புதுவை முதலியார்பேட்டை ராமலிங்க சாமி மடத்தில் 18-ந்தேதி ஜோதி தரிசன விழா நடக்கிறது.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் 73-ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது.  இதையொட்டி 17-ந்தேதி காலை 6 மணிக்கு அகவல் உணர்ந்தோதுதல், சத்தியஞான கொடியேற்றுதல் நடக்கிறது. 

    அன்று காலை 8 மணிக்கு வள்ளலார் திருவுருவப்பட ஊர்வலம் நடக்கிறது. 10 மணிக்கு சன்மார்க்கம் தழைக்க பெண்களின் பங்கு என்ற தலைப்பில் ராணிராஜதுரை, வள்ள லாரின் மொழிப்புலமை தலைப்பில் தமிழ் மல்லன், புரட்சியாளர் வள்ளலார் தலைப்பில் தமிழ்மணி, கண்மூடி பழக்கங்கள் தலைப்பில் கோதண்டபாணி ஆகியோரின் சொற் பொழிப்பு நடக்கிறது. 

    18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு 7 திரை நீக்கி அருட்பெருஞ்ஜோதி காட்சி வழிபாடு நடக்கிறது. காலை 9 மணிக்கு பசிப்பிணி மருத்துவர் தலைப்பில் வேல்முருகன், வள்ளலாரின் சமூகப்பணி தலைப்பில் ராமதாஸ் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். 

    11 மணிக்கு யோகா, பரதநாட்டிய நிகழச்சிகள் நடக்கிறது. பகல் 1 மணி, இரவு 8 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சமரச சுத்த சன்மார்க்க  சத்திய சங்க பொறுப்பு தலைவர் ஜெகநாதன், நிர்வாக அலுவலர் கோபி ஆகியோர் செய்து வருகின்றனர்.
    இனியாவது மோடியும், அமித்ஷாவும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க குறுக்கு வழியில் பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தக்கூடாது என நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் புதுவையில் விதைத்த விதையை இப்போது உத்தரபிரதேசத்தில் அறுவடை செய்கின்றனர். கடந்த ஆண்டு புதுவையில் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினர். 

    வருமான வரித்துறை,  அமலாக்க பிரிவு, மத்திய உளவுத்துறை மூலம் மிரட்டி வழக்கு போடுவோம் எனக் கூறி தங்கள் பக்கம் இழுத்தனர். புதுவையில் காங்கிரஸ்  கூட்டணியை தோற்கடிக்க பா.ஜ.க. கடைபிடித்த யுக்தி இப்போது உத்தரபிரதேசம், கோவா, ஜார்கண்ட் மாநிலங்களில் திருப்பி அடிக்கிறது.  

    மோடியும், அமித்ஷாவும் அரசியல் கட்சி நடத்தாமல் வியாபார நிறுவனம் நடத்துகின்றனர். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி  கவிழ்ப்பு செயலை செய்கின்றனர். கொள்கை இல்லாமல் பணம், அதிகார பலத்தை நம்பி தேர்தலை சந்திப்பவர்களுக்கு அழிவு காலம்  வெகுதூரத்தில் இல்லை. இனியாவது மோடியும், அமித்ஷாவும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க குறுக்கு வழியில் பண பலத்தையும், அதிகார  பலத்தையும் பயன்படுத்தக்கூடாது. அந்த ஆட்சி நிலைக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

    புதுவையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதால் அரசு விழிப்போடு செயல்பட வேண்டும். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாத வேதனையில் பேக்கரி கடை ஊழியர் நண்பர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்தி நகரை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் அஸ்வின் (வயது 21). இவர் புதுவையில் தங்கி இந்திராகாந்தி சிலை சதுக்கம் அருகே உள்ள  ஒரு தனியார் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 
    இவர் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட திட்டமிட்டு இருந்தார். ஆனால் திடீரென அதற்கான சூழல் ஏற்படவில்லை என தெரிகிறது.  இதனால் அஸ்வின் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.  

    இந்த நிலையில் நேற்று தன்னுடன் வேலை பார்க்கும் திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு சீனிவாசா நகரில் உள்ள ராஜகுரு (23) என்பவர் வீட்டுக்கு அஸ்வின் சென்றார். அங்கு திடீரென வீட்டின் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    தற்கொலை செய்வதற்கு முன்பு அஸ்வின் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொள்வதாக அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து அவரது நண்பர் ராஜகுரு கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அஸ்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தி.மு.க. அலுவலகத்தில் திருவள்ளுவர் தினம் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் கொண்டாடப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை லப்போர்த்  வீதியில் உள்ள தி.மு.க. மாநில தலைமை அலுவலகத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கி, திருவள்ளுவர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார், துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஏ.கே.குமார், செந்தில்குமார், சண்.குமரவேல், பெல்லாரி கலியபெருமாள், குணா திலீபன், சுந்தரி அல்லிமுத்து, அமுதா குமார், பொருளாளர் லோகையன். எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, தைரியநாதன், இளங்கோவன், ஜே.வி.எஸ். சரவணன, பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல்,  வேலன், அருள்செல்வி, கோகுல், பழனி, பிரபாகரன், சத்தியா ஆறுமுகம், குப்புசாமி,  ரவீந்திரன், பாஸ்கர், டாக்டர் நித்தீஷ், மாநில பிரச்சார குழு செய லாளர் நளினி சாரங்கம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
    புதுவையில் போலீஸ் தேர்வுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை காவல் துறை  தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தகுதியான விண்ணப்பதாரர்கள்,  உடல் தகுதித்தேர்வுக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் அறிக்கை சமர்ப்பிக்க  வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதில் சிரமம் உள்ளதாக ஆட்சேபனை எழுந்தது. 

    இதனால் புதுவை பிராந்திய விண்ணப்பதாரர்கள்  கொரோனா தொற்றுக்கான விரைவு ஆண்டிஜென் சோதனையை (ரேட்) தங்கள் அனுமதி அட்டையை காண்பித்து, காவல்துறை விருந்தினர்  மாளிகையில் அமைந்துள்ள பரிசோதனை மையத்தில் வரும் 18-ந்தேதி முதல் சனிக்கிழமை தவிர, தினமும் காலை 9 மணி முதல் மதியம் ஒரு  மணி வரை பரிசோதனை செய்து கொள்ளலாம். 

    காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய விண்ணப்பதாரர்கள், அந்தந்த பிராந்தியத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்யலாம். தகுதித்தேர்வு தேதி, நேரத்துக்கு ஒரு நாள் முன்னதாக ரேபிட் ஆன்டிஜென் சோதனையை செய்ய வேண்டும். முடிவு ஒரு மணி நேரத்துக்குள் வழங்கப்படும்.  தொற்று உறுதி செய்யப்பட்டால் ஆஸ்பத்திரிக்கு பரிந்துரைக்கப்படுவர். 10 நாள்  சிகிச்சைகச்கு பின் தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுவையில் டெரக்கோட்டா கலைஞர் வரைந்த கண்கவர் கோலங்கள் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டு பெற்று வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் பெரம்பை ரோட்டில வசிப்பவர் வெங்கடேச பெருமாள். டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்ப கலைஞர். இவர் தனது வீட்டின் முன்பு பொங்கல் பண்டிகையை 2 கோலம் வரைந்திருந்தார். 

    அதில், அழிந்துவரும் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், கரகாட்டம், தேவராட்டத்தை மிக தத்ரூபமா வண்ண கோலமாவால் நேர்த்தியாக கோலமிடப்பட்டிருந்தது. மற்றொன்றில் பொங்கலையொட்டி சூரிய பகவானை ஒரு குடும்பத்தினர் பொங்கலிட்டு வழிபடுவது போல மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. 

    இந்த கோலங்கள் அந்த வழியே சென்ற அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒரு சிலர் கோலத்தை படம் எடுத்து முகநூலில் பதிவிட பலரும் அதை பகிர்ந்தனர். மேலும் சிலர் நேரில் சென்று கோலத்தை பார்வையிட்டு பதிவிட்டனர். வெங்கடேச பெருமாளையும் போனில் தொடர்புகொண்டு வாழ்த்தினர். 

    இதுகுறித்து வெங்கடேச பெருமாளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சிறுவயது முதல் எனக்கு கோலம் என்றால் மிகவும் பிடிக்கும். அழகான கோலங்களை தத்ரூபமாக வெளிப்படுத்த வேண்டும் என விரும்புவேன். டெரகோட்டா சிலைகள் அமைக்கும்போது சிற்பங்கள் வடிப்பதால் அந்த கலை நயம் கோலத்திலும் வெளிப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் சிறிய அளவிலான, வித, விதமான கோலங்களை வரைந்தேன். 

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் கோலங்களை வரைந்தேன். என் குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் கோலத்துக்கு வண்ணமிட்டனர். காண்போரை கவர்ந்ததால் இந்த கோலங்கள் இப்போது வைரலாக பரவியுள்ளன. முகம்தெரியாத பலரும் தொடர்புகொண்டு வாழ்த்து வது கலைக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×