என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சர்க்கரை பொங்கலை கொடுப்பதால் மாடுகளின் செரிமானம் பாதிக்கப்படும் என்று பிராணிகள் நல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை பிராணிகள் நல இயக்க தலைவரும், அரசு கால்நடை டாக்டருமான செல்வமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் மாட்டுப்பொங்கலின் ஒரு பகுதியாக விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் படையலிட்டு அதில் சர்க்கரை மற்றும் வெல்லம் கலந்து கொடுக்கிறார்கள். சர்க்கரை கலந்த பொங்கலை  உண்ணக் கொடுப்பதனால் மாடுகளுக்கு வயிற்று உபாதை ஏற்படும். 

    வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகி வயிறு உப்புசம் ஏற்பட்டு செரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும். இறுதியில் மாடுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.  மேலும், மாடுகளின் வயிற்றில் நன்மை செய்யக் கூடிய நுண்ணுயிர் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து செரிமானத்தை தடைசெய்கிறது. 

    இதனால், பாதிக்கப்பட்ட மாடுகள் தீவனம் உண்ணா மல் ஒரு மந்த நிலையில் தள்ளப் படுகிறது. நாளடைவில்  வயிற்றில் உள்ள இரைப்பை பெரிதாகி அருகில் உள்ள உறுப்புகளான நுரையீரலில் அழுத்தம் கொடுத்து அதை தள்ளுவதால் மாடுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறுதியில் உயிரிழப்பு ஏற்படுகிறது.  

    இந்த உயிர் இறப்பில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி விட்டு படைத்த பொங்கலை  குறைந்த அளவில் உண்ணக் கொடுக்க வேண்டும். பொங் கலை மறுநாள் வைத்து அது கொதித்த பின் கொடுக்க வேண்டாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
    போலீஸ்காரர் பணி செய்த அலுவலகத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு பூத்துறை சாலை அரிநமோ நகரை சேர்ந்தவர் அரிதாஷ். இவர் புதுவை காவல்துறையில் ஏட்டாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

    இவரது மகன் மகேஷ் குமார் (வயது 35). இவர் புதுவை போலீஸ் பயிற்சி பள்ளியில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக மகேஷ்குமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவர் டாக்டரிடம் சிகிச்சையும் பெற்று வந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே வருகிற 19-ந்தேதி போலீஸ் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணியில் மகேஷ்குமார் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மகேஷ்குமார் கோரிமேட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள அலுவலகத்துக்கு பணிக்கு வந்தார்.

    திடீரென அவர் பயிற்சி பள்ளியின் 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், சுபம் கோஷ், தீபிகா மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி மகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பணி சுமை காரணமாக மகேஷ்குமார் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ்காரர் மகேஷ் குமார் பணி செய்த அலுவலகத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    புதுவையில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க, பா.ஜ.க. கடைப்பிடித்த யுக்தி, தற்போது உத்தரபிரதேசம், கோவா மாநிலங்களில் திரும்பி உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் வீடுகளில் உபயோகப்படுத்துவதற்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு 35 காசு உயர்த்தப்பட உள்ளது. ஏப்ரல் முதல் இது அமலுக்கு வருகிறது.  இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் புதுச்சேரி மாநிலத்தில் விதைத்த விதையின் அறுவடையை இப்போது உத்தரபிரதேசத்தில் பார்கிறார்கள். புதுவை மாநிலத்தில் கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, மத்திய உளவுத்துறை மூலமாக மிரட்டியும் தங்கள் பக்கம் இழுத்தனர். 

    புதுவையில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க, பா.ஜ.க. கடைப்பிடித்த யுக்தி இப்போது உத்தரபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் திரும்பி அடிக்கிறது. கட்சி கொள்கை இல்லாமல் பணம், அதிகார பலத்தை நம்பி தேர்தலை சந்திக்கிறார்களோ அவர்களுக்கு அழிவு காலம் வெகுதூரம் இல்லை. 

    புதுவையில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு விழிப்போடு இருக்க வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை ரங்கசாமிக்கும், சுகாதார துறைக்கும் உள்ளது. புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவை மாநிலத்தில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயருகிறது.
    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

    2022--2023-ம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டணம் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வீட்டு உபயோக மின்கட்டணம் உயர்கிறது.  இதன்படி 100 யூனிட்டுக் குள் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 பைசா உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101ல் இருந்து 200 யூனிட் வரை ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 15 பைசா உயர்ந்து ரூ.2.75 ஆகவும் உயர்கிறது. 201 யூனிட்டுக்கு மேல் வீட்டு உபயோக கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. வர்த்தகம், விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. 

    வழக்கமாக ஜனவரி மாதத்தின் இறுதியில் ஆண்டு தோறும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்துக்கு பின் உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.  கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எதிர்ப்பு தெரிவித்தாலும் கட்டணம் குறைக்கப்படவில்லை. 

    இந்த ஆண்டு கொரோனா காரணமாக கருத்து கேட்பு கூட்டம் காணொலி வாயிலாக நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற 28-ந்தேதி கூட்டம் காணொலி வாயிலாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த கூட்டத்துக்கு பின் உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவிக்கப்பட்டு வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.  இதனால் புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்வது உறுதியாகி உள்ளது.
    புதுவை மாநிலத்தில் இதுவரை பொங்கல் பொருட்கள் கிடைக்கவில்லை.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் சார்பில் பொங்கல் பரிசாக பச்சரிசி, 
    வெல்லம், பச்சைப்பயிறு, உளுந்து உட்பட 490 மதிப்பிலான 10 பொருடங்கள் அனைத்து குடும்பத்துக்கும் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    கதிர்காமம் தொகுதியில் ரேசன்கடையில் பொங்கல் பரிசு வழங்கும் பணியையும் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.  இதைத்தொடர்ந்து அனைத்து ரேசன்கடை யிலும் பொங்கலுக்குள் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    ஆனால் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரையிலும் பொங்கல் பரிசு ரேசன் கடைகளுக்கு வந்து சேரவில்லை.  பொதுமக்கள் ரேசன் கடைகளை அணுகி பரிசு பொருள் எப்போது வரும்? என கேட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். 

    அதிலும் 2 கிலோ சர்க்கரை மட்டுமே ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு அறிவிக்கப் பட்ட 10 கிலோ அரிசி யும் இதுவரை வழங்கப்படவில்லை.
    பாகூர் பகுதியில் பனிமூட்டம் நிலவியது.
    புதுச்சேரி:

    பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில்  அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பனிப்பொழிவை பொறுத்தவரை கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.

    வடகிழக்கு பருவமழை காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ளத்தை தமிழகம் மற்றும் புதுவை சந்தித்துள்ளது.  வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பனி  பெய்ய  தொடங்கியது, காலையில் வெயிலும், மாலை நேரத்தில் கடும் குளிரும் நிலவி வந்தது.

    அதேபோல்  12-ந்தேதி மாலை முதல் குளிர் நிலவி வந்தது. இரவு நேரம் செல்ல, செல்ல பனி மூட்டமாக காட்சி அளித்தது. பனி மூட்டம் சாலைகள் தெரியாத அளவுக்கு இருந்தது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரியவில்லை.  இதன்   காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது.

    பாகூர்,   குருவிநத்தம், அரங்கனூர், சேலியமேடு, கரைமேடு, கன்னியகோயில், முள்ளோடை, கிருமாம் பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. புதுவை நகர் மற்றும் சுற்று பகுதியிலும் அதிக பனிமூட்டம் காணப்பட்டது.

    இந்த பனி மூட்டம் காலை 9 மணியை தாண்டியும் நீடித்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். 
    அமைச்சர் நமச்சிவாயத்துக்கு பிப்டிக சேர்மன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அமைச்சரவையில் உள்துறை, கல்வி, மின்துறை, தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருப்பவர் நமச்சிவாயம். 

    இவருக்கு இப்போது பிப்டிக் சேர்மன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதற் கான உத்தரவை கவர்னர் தமிழிசை பிறப் பித்துள்ளார்.  மறு உத்தரவு வரும் வரை பிப்டிக் சேர்மனாக நமச்சிவாயம் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதுவை தொழில்துறை வளர்ச்சியில் பிப்டிக் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் புதிய தொழிற் சாலைகளை கொண்டு வருவது, அனுமதியளிப்பது, சலுகைகள் அளிப்பது, கடனுதவி அளிக்கும் வகையில் பிப்டிக் சேர்மன் பதவியும் அமைச்சர் நமச் சிவாயத்துக்கு வழங்கப் பட்டுள்ளது.
    ஒப்பந்த டாக்டர்களுக்கு சம்பள உயர்வு ஆணையை முதல்&அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு கால்நடைத்  துறையில் பணிபுரியும் ஒப்பந்த மருத்துவர்களுக்கான மாத சம்பளம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சட்ட சபையில் அறிவித்திருந்தார்.

    இதன்படி உயர்த்தப்பட்ட சம்பளத்துக்கான ஆணையை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில்  கால்நடை ஒப்பந்த மருத்துவர்களிடம் வழங்கினார். 
    புதுவையில் கொரோனா தொற்று ஆயிரத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில்  4 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    இதில் புதிதாக ஆயிரத்து 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 956, காரைக்காலில் 126, ஏனாமில் 7, மாகியில் 18 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை  பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 135, காரைக் காலில் 15, ஏனாமில்1, மாகியில் 16 பேர் என 167 பேர் தொற்றுடன்   மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 23, காரைக் காலில் 2, மாகியில் 15 பேர் என 40 பேர் சிகிச்சையில்   குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 866 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து  27 ஆயிரத்து 713 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    புதுவையில் 3  ஆயிரத்து 486,  காரைக்காலில் 525, ஏனாமில் 20, மாகியில் 72 பேர் என 4 ஆயிரத்து 103 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 34ஆயிரத்து 270 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 883 ஆக உள்ளது.  

    புதுவையில்  2&வது தவணை  உட்பட 14 லட்சத்து 91 ஆயிரத்து 798 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை  சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது. 

    இந்த ஆண்டின் புதிய உச்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    நெட்டப்பாக்கம் அருகே தொண்டையில் முட்டை தோசை சிக்கி தொழிலாளி மூச்சு திணறி இறந்து போனார்.
    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை எஸ்.பி.ஆர்.நகர் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது53). தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளாக முருகன் நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை முருகன் தனது மனைவியிடம் உணவு தயாரித்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி சித்ரா முட்டை தோசை தயார் செய்து கணவருக்கு கொடுத்தார். முருகன் அதனை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென முட்டை தோசை தொண்டையில் சிக்கி முருகனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு காரில் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முட்டை தோசை தொண்டையில் சிக்கி தொழிலாளி மூச்சு திணறி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    பட்டப்பகலில் துணிகரம் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சேதராப்பட்டு:

    புதுவை ஆலங்குப்பம் அன்னை நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 49). 

    இவர் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் இயங்கும் ஆரோவில் கிராம செயல்வழிகுழு நிர்வாகத்தில் பணிபுரிந்து வருகிறார். 

    மாலை 3 மணி அளவில் பொன்னம்மாள் அலுவலகத்திலிருந்து திண்டிவனம்&புதுவை பைபாஸ் சாலையில் புதுவை நோக்கி வந்து கொண்டிருந்தார். நாவற்குளம்-பட்டானூர் அருகே சென்றபோது பின்னால் ஹெல்மெட் அணிந்து  மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கத்தக்க மர்மநபர் திடீரென பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன்   தாலி சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றார். 

    அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள் கூச்சலிடவே அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் பொன்னம்மாளிடம் நடந்தவற்றை கேட்டறிந்து அந்த மர்ம நபரை பின்தொடர்ந்து விரட்டினர். ஆனால் செயினை பறித்து சென்றவன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டான். 

    இது குறித்து பொன்னம்மாள் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற ஹெல்மெட் நபரை தேடி வருகிறார். 

    மேலும் அந்த பகுதியில் பதிவாகியிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் பலரும் நடமாடும் வேளையில் பெண்ணிடம் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவை தலைமை செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 900-ஐ தொட்டது.

    தற்போது 2,355 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 629 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    1 லட்சத்து 31 ஆயிரத்து 866 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி புதுவையில் தேசிய இளைஞர் தின விழாவை தொடங்கி வைத்தார். இதற்கான விழா தனியார் ஓட்டலில் நடந்தது.

    விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தலைமை செயலாளர் அஸ்வினி குமார் விழாவிற்கு வந்தார். ஆனால் மேடையில் உட்காராமல் தனியாக நாற்காலியில் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இதனால் அவர் கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    ×