என் மலர்
புதுச்சேரி
புதுவை லாஸ்பேட்டை முத்துலிங்கப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது32). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரில் வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சுந்தர்ராஜன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விபத்தில் பலியான சுந்தர்ராஜனுக்கு திருமணமாகி சில மாதங்கள்தான் ஆவதாக போலீசார் தெரிவித்தனர்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி காந்திநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பஜ்ஜி, வடை விற்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணபாரதி தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ர மணியன், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜா குமார், இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் லட்சுமி காந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் போது பட்டம் பெறுவது போல் உடை அணிந்து வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு அமர்ந்து பஜ்ஜி, வடை விற்பனை செய்தும், செருப்புக்கு பாலீஷ் போட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டத்தின்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 6 மாதத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், 10 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் கூறினார்.
ஆனால் தற்போது பணியிடங்களை நிரப்ப நிதி இல்லை. மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் பணியிடங்களை நிரப்ப முடியும் என்று கூறி வருகிறார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் 14 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். கொரோனா வந்த பிறகு 24 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பிரதமர் மோடி கதையும், முதல்-அமைச்சர் ரங்கசாமி கதையும் ஒன்று தான்.
காவலர் பணியிடங்களை நிரப்ப நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அப்போது கவர்னர் அனுமதி வழங்கவில்லை. தற்போது நிரப்பப்படுகிறது. காமராஜர் மணிமண்டபத்தை நாங்கள் கட்டி முடித்தோம். தற்போது திறந்து வைக்கின்றனர். 10 ஆயிரம் பேருக்கு பென்சன் வழங்க நாங்கள் ஒப்புதல் வாங்கி வைத்ததை தற்போது வழங்கியுள்ளனர்.
புதுச்சேரியை பொறுத்தவரை வாக்குறுதி வழங்கும் அரசாக தான் உள்ளது. அரிசிக்காக ஒதுக்கிய பணத்தை எடுத்துதான் மக்களுக்கு மழைநிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மழை நிவாரணம் வழங்கவில்லை. கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்து வேடிக்கை பார்க்கின்றனர்.
பேரிடர் மீட்பு குழுவின் தலைவர் முதல்-அமைச்சர் தான். ஆனால் அவர் அந்த கூட்டத்தை கூட்டவில்லை. கவர்னர் தான் கூட்டுகிறார். எனவே புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடப்பதாக தெரியவில்லை. ஜனாதிபதி ஆட்சி நடப்பது போல் உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியதால் தான் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது பொங்கல் கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொங்கல் கொண்டாட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். தற்போது உள்ள சூழலில் பா.ஜ.க. அமைச்சர்கள் கபடி விளையாடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மேற்படிப்பு மையத்தில் (புதுவை அரசு ஆஸ்பத்திரி) நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கி உள்ளது.
இதனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கருணாநிதி, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், கொரோனா பொறுப்பு அதிகாரி பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கோவின் இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அவர்களது செல்போன்களில் வரும் குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதைத்தவிர அனைத்து சுகாதார ஊழியர்களும் தங்களுக்கான தடுப்பூசி பூஸ்டர் டோசையும் பெற்றுக்கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த மருத்துவமனையில் தடுப்பூசி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முன்பதிவு செய்த முன்கள பணியாளர்களுக்கும் இங்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்-அமைச்சராக ரங்கசாமி இருந்த போது கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகே ரூ.14 கோடியில் 3.75 ஏக்கரில் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து 2009-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக இந்தப்பணி நிறுத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு ரூ.24 கோடி ஹட்கோ கடனுதவியில் மீண்டும் கட்டுமானப்பணி தொடங்கியது.
அப்போது முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமி 2-வது முறையாக காமராஜர் மணி மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த மணி மண்டபத்தில், ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம், உலகத்தரம் வாய்ந்த நூலகம், 130 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், 4 ஆயிரத்து 417 சதுர அடி தரைத்தளம், காமராஜர் சிலை, அவரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டன.
ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணி மண்டபத்தை 14 ஆண்டுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இதேபோல ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உலகத்தரம் வாய்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில்சார் தொழில்நுட்ப மையம் புதுவை தொழில்நுட்ப மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதி நவீன எந்திரங்களுடன் கூடிய ரூ.122 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 25-வது தேசிய இளைஞர் விழா இன்று (12-ந்தேதி) முதல் 16-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7,500 மாணவர்கள் பங்கேற்கும் இளைஞர் விழாவை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி செல்ல இருந்தார்.
ஒமைக்ரான் தொற்று காரணமாக பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டது. 5 நாள் கொண்டாட இருந்த இந்த விழா 2 நாட்களாக குறைக்கப்பட்டது.
புதுச்சேரியில் 25-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மாணவர்கள் அவரவர் மாநிலங்களில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
இதே போல புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரூ.122 கோடியில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப மையம் மற்றும் கருவடிக்குப்பத்தில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபம் ஆகியவற்றையும் காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை, முதல்-மந்திரி ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:-
2022-ம் ஆண்டு இந்திய இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானது. இன்றைய இளைஞர்கள் நாட்டுக்காக வாழ வேண்டும், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும்.
இளைஞர்களின் வலிமை இந்தியாவை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும். இன்றைய இளைஞர்களிடம் ‘முடியும்’ என்ற மனப்பான்மை உள்ளது.
இது ஒவ்வொரு தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கிறது. இளைஞர்களின் பலத்தால் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா மிகவும் முன்னேறியுள்ளது. இன்று இந்திய இளைஞர்கள் உலகளாவிய முன்னேற்றத்துக்கு அச்சாரமிடுகிறார்கள்.
15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் இளைஞர்களின் பொறுப்புணர்வை பாராட்டுகிறேன்.
மகன்களும், மகள்களும் சமம் என்று நாங்கள் நம்புகிறோம். இதை நினைத்து மகள்களின் முன்னேற்றத்துக்காக திருமண வயதை 21 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மகள்களும் தங்கள் வாழ்க்கை உருவாக்க முடியும். அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்.
இன்று இந்தியா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களை கொண்ட வலுவான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது, அவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் கடந்த 6, 7 மாதங்களில் கொரோனா தொற்று நோய் பரவிய காலத்தில் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன.
போட்டி மற்றும் வெற்றி என்பதே இதன் மந்திரம். இந்தியாவில் எல்லையற்ற 2 சக்திகளாக மக்கள்தொகை மற்றும் ஜனநாயகம் உள்ளன என்பதை உலகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்திய இளைஞர்கள் மக்கள்தொகை சார்ந்தும் அந்த பகுதிகளையும் சார்ந்தும் ஒற்றுமையாக உள்ளனர். இந்தியா தனது இளைஞர்களின் வளர்ச்சியை சார்ந்தே உள்ளது.
புதுவையில் தொழில்நுட்ப மையம் திறக்கப்பட்டுள்ளது. உலகை மாற்றும் தொழில்நுட்பங்களை நமது இளைஞர்கள் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். புதிய தொழில்நுட்ப மையம் அந்த திசையில் ஒரு முக்கியமான படியாக அமையும்.






