search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    2 கோடிக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி தகவல்

    புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரூ.122 கோடியில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப மையம் மற்றும் கருவடிக்குப்பத்தில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபம் ஆகியவற்றையும் காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 25-வது தேசிய இளைஞர் விழா இன்று (12-ந்தேதி) முதல் 16-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7,500 மாணவர்கள் பங்கேற்கும் இளைஞர் விழாவை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி செல்ல இருந்தார்.

    ஒமைக்ரான் தொற்று காரணமாக பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டது. 5 நாள் கொண்டாட இருந்த இந்த விழா 2 நாட்களாக குறைக்கப்பட்டது.

    புதுச்சேரியில் 25-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மாணவர்கள் அவரவர் மாநிலங்களில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

    இதே போல புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரூ.122 கோடியில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப மையம் மற்றும் கருவடிக்குப்பத்தில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபம் ஆகியவற்றையும் காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை, முதல்-மந்திரி ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:-

    2022-ம் ஆண்டு இந்திய இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானது. இன்றைய இளைஞர்கள் நாட்டுக்காக வாழ வேண்டும், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும்.

    இளைஞர்களின் வலிமை இந்தியாவை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும். இன்றைய இளைஞர்களிடம் ‘முடியும்’ என்ற மனப்பான்மை உள்ளது.

    இது ஒவ்வொரு தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கிறது. இளைஞர்களின் பலத்தால் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா மிகவும் முன்னேறியுள்ளது. இன்று இந்திய இளைஞர்கள் உலகளாவிய முன்னேற்றத்துக்கு அச்சாரமிடுகிறார்கள்.

    15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் இளைஞர்களின் பொறுப்புணர்வை பாராட்டுகிறேன்.

    மகன்களும், மகள்களும் சமம் என்று நாங்கள் நம்புகிறோம். இதை நினைத்து மகள்களின் முன்னேற்றத்துக்காக திருமண வயதை 21 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மகள்களும் தங்கள் வாழ்க்கை உருவாக்க முடியும். அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்.

    இன்று இந்தியா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களை கொண்ட வலுவான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது, அவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் கடந்த 6, 7 மாதங்களில் கொரோனா தொற்று நோய் பரவிய காலத்தில் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன.

    போட்டி மற்றும் வெற்றி என்பதே இதன் மந்திரம். இந்தியாவில் எல்லையற்ற 2 சக்திகளாக மக்கள்தொகை மற்றும் ஜனநாயகம் உள்ளன என்பதை உலகம் ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்திய இளைஞர்கள் மக்கள்தொகை சார்ந்தும் அந்த பகுதிகளையும் சார்ந்தும் ஒற்றுமையாக உள்ளனர். இந்தியா தனது இளைஞர்களின் வளர்ச்சியை சார்ந்தே உள்ளது.

    புதுவையில் தொழில்நுட்ப மையம் திறக்கப்பட்டுள்ளது. உலகை மாற்றும் தொழில்நுட்பங்களை நமது இளைஞர்கள் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். புதிய தொழில்நுட்ப மையம் அந்த திசையில் ஒரு முக்கியமான படியாக அமையும்.

    இவ்வாறு மோடி பேசினார்.



    Next Story
    ×