என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

    புதுவையில் நேற்று 4 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 893 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 801, காரைக்காலில் 60, ஏனாமில் 10, மாகியில் 22 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 112, காரைக்காலில் 14, மாகியில் 11 பேர் என 137 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 20, காரைக்காலில் 8, மாகியில்16 பேர் என 44 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 673 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவையில் 2 ஆயிரத்து 576, காரைக்காலில் 402, ஏனாமில் 14, மாகியில் 74 பேர் என 3 ஆயிரத்து 66 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் இப்போது 3 ஆயிரத்து 203 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவையில் ஒருவர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 883 ஆக உள்ளது.

    புதுவையில் 2-வது தவணை உட்பட 14 லட்சத்து 85 ஆயிரத்து 255 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


    அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தின் 2,600 மணி நேர பன்னாட்டு சங்கம நிர்வாகிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தின் 10-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் 2 ஆயிரத்து 600 மணி நேர  பன்னாட்டு சங்கமம் நிகழ்ச்சி இணையவழியில் நடத்தப்பட்டது.

    இளைஞர்கள், மாண வர்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90&வது  பிறந்தநாளை  மையமாக வைத்து இந்நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது. 

    அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தோடு, தமிழக ஆசிரியர் கல்வியியல்  பல்கலைக்கழகம், சர்வதேச வர்த்தக, கலாச்சார வளர்ச்சி பேரவை,  ராமேஸ்வரம் கலாம் அறக்கட்டளை, இந்தியா பிரைட் புக் ஆப்  ரெக்கார்ட்ஸ்,  வி.ஜி.பி. உலகத்தமிழ் சங்கம், சார்ஜா பிரெயன் ஓ பிரெய்ன்   இன்டர்நேஷனல், கனடா நாட்டு பெண்கள் கூட்டமைப்பு, புதுவை  தி சென் அகாடமி, கவிதை வானில் கவிமன்றம், போஸ்டர்ஸ் அகாடமி, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை  உள்பட பல  நிறுவனங்கள் பங்கேற்றன. 

    நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேர் இணைவழியில் பங்கேற்று கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இது பொதுமக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

    பன்னாட்டு  சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய அசிஸ்ட் உலக சாதனை நிறுவன தலைவர்  ராஜேந்திரன்,  முகைதீன், கவிதா செந்தில்நாதன், கலாவிசு, பிரியா கார்த்திக், குழு ஒருங்கிணைப்பாளர்கள் இசையமைப்பாளர்  தேவ் குரு, ராமச்சந்திரன், அருண்தாமஸ், தேசிய விருதாளர் மணி மாறன் ஆகியோரை முதல்-அமைச்சர் ரங்கசாமி, துணை சபாநாயகர்  ராஜ வேலு ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
    புதுவையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து 11 நாட்களில் ரூ.13.38 லட்சம் வசூலானது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    சினிமா தியேட்டர், வணிக வளாகம், திருமண மண்டபங்களில் 50 சதவீதத்தினரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முக கவசம் அணிவது  கட்டாயம் என விதிகள் அமலாகியுள்ளது. 

    முக கவசம் அணியாத வர்களிடம் போலீசார் ரூ.100 அபராதம் வசூலித்து வருகின்றனர். கொரோனா  கட்டுப்பாடுகளை மீறுவேர் மீது வழக்கும் பதியப்படுகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 11 நாளில் ரூ.13.38 லட்சம் முக கவசம்  அணியாதவர்களிடம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
    புதுவையில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் ஊசுடு அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதில் மத்திய மந்திரி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு ரூ.3 லட்சம் ரொக்க பரிசு வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

    இதன் ஒருபகுதியாக லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த 9-&ந் தேதி தொடங்கி நடந்தது. 

    இதில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டன. இறுதிப் போட்டி நடந்தது. 

    ஆண்கள் பிரிவில் ஊசுடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. 

    விழாவில் மத்திய மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்சள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், கல்யாணசுந்தரம், சிவசங்கர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    முதல் பரிசு பெற்ற ஊசுடு அணிக்கு ரூ.3 லட்சம் ரொக்க தொகை மற்றும் பரிசு கோப்பை  வழங்கப்பட்டது. 2-&வது பரிசு பெற்ற உழவர்கரை  அணிக்கு ரூ.1Ñ லட்சம், 3-&வது பரிசு  பெற்ற காலாப்பட்டு அணிக்கு ரூ.1 லட்சம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது-

    பெண்கள் பிரிவில் லாஸ்பேட்டை அணி முதல் பரிசு பெற்றது. அந்த அணிக்கு ரூ.50ஆயிரம் ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது-. 2-&வது பரிசு பெற்ற மண்ணாடிப்பட்டு அணிக்கு ரூ.40 ஆயிரம், 3-&வது பரிசு பெற்ற அரியாங்குப்பம் அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டது. 10 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பாம் ரவி கொலை தொடர்பாக பிரபல ரவுடியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருந்தி வாழ்ந்த பழைய ரவுடி திப்ளானின் கொலைக்கு பழிக்குப்பழியா இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு தீப்ளானின் நண்பர்களான சிறையில் உள்ள ரவுடியான வினோத், தீன் ஆகியோரின் தூண்டுதலின்பேரிலேயே நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் கொலைக்கு உதவியதாக வினோத்தின் தாய் ரமணி மற்றும் பிரகாஷ், சந்துரு, நவீன், சதீஷ், ராஜேஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர். மேலும் கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் ,ஆயுதம் வழங்கியதாகவும் வேல்ராம்பட்டை சேர்ந்த மோகன், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த  மாணிக்கம், நைனார்மண்டபத்தை சேர்ந்த சூர்யா ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையே இந்த கொலை சம்பத்தில் ஈடுபட்ட வாணரப்பேட்டையை சேர்ந்த அருண் மற்றும் ரெட்டிச்சாவடியை சேர்ந்த பிரவீன் ஆகிய 2 பேர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவிலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை சம்பவத்திற்கு நாட்டு வெடிகுண்டு கொடுத்ததாக கடந்த மாதம் லாஸ்பேட்டையை சேர்ந்த 6 பேரை சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து காலப்பட்டு சிறையில் அடைத்தனர். விசாரணையில் கொலைக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள், நாட்டுவெடிகுண்டு பயங்கர ஆயுதங்கள் ஆகிறவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சிறையில் உள்ள வினோத், தீனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாம் ரவி கொலையில் பா.ஜனதாவை சேர்ந்த இளைஞர் அணி செயலாளர் விக்கி என்ற விக்னேஷ்வரன்  சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலையில்  சிறையில் இருக்கும் பிரபல ரவுடியான மர்டர் மணிகண்டன் சம்பந்தப்பட்டிருப்பது.தெரியவந்தது.

    இந்தநிலையில் முதலியார்பேட்டை போலீசார் புதுவை கோர்ட்டில் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க முறையிட்டனர். அதன்படி கோர்ட்டு அனுமதியளித்ததன் பேரில் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மர்டர் மணிகண்டனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையிலிருந்து அழைத்து வந்தனர். இவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலேயே இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் காரணமானவர்கள் குறித்த பரபரப்பு தகவல் தெரியும்.

    இந்த கொலையில் தொடர்புடைய  காஞ்சிபுரத்தை சேர்ந்த கூலிப்படைத்தலைவன் தியாகு உள்ளிட்ட சிலர் மற்றும் கொலைக்கு பிரான்சிலிருந்து பணம் அனுப்பிய முத்தியால்பேட்டையே சேர்ந்தவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
    புதுவையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 655 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 535, காரைக்காலில் 93, மாகியில் 27 பேர் புதிதாக  தொற்றுடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர். 

    புதுவையில் 99, காரைக்காலில் 15, மாகியில் 16 பேர் என 130 பேர் தொற்றுடன்  மருத்துவ மனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.  புதுவையில் 12, காரைக்காலில் 3, மாகியில் 7 பேர் என 22 பேர் சிகிச்சையில்  குணமடைந்து வீடு   திரும்பினர். புதுவை  மாநிலத்தில் ஒட்டு மொத்த மாக இதுவரை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 866 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 629 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    புதுவையில் ஆயிரத்து 809,  காரைக்காலில் 349, ஏனாமில் 4, மாகியில் 63 பேர் என 2 ஆயிரத்து 225 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  புதுவை  மாநிலத்தில் இப்போது 2 ஆயிரத்து 355 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ள னர். 

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை  ஆயிரத்து 882 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை  உள்பட 14 லட்சத்து 76 ஆயிரத்து 572 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.  இத்தகவலை  சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.  புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும்  பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவலை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. புதுவை தந்தைபெரியார் நகரில் உள்ள பேட்ரிக் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  பள்ளியின் நிர்வாகி பெடரிக் வரவேற்றார். 

    பள்ளி மாணவர்களிடையே கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    நமது நாட்டிலேயே தயாரித்து கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி வருகிறோம்.  பேரிடர் காலத்தில் இந்த தடுப்பூசியை விஞ்ஞானிகள் இரவு, பகல் பாராமல் ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர். இதுவரை 150 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம். 90 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம். 

    கடந்த காலங்களில் தடுப்பூசி வெளிநாடுகளில் இருந்து கிடைக்குமா? என ஏங்கியிருந்தோம். பிரதமரின் ஊக்கத்தால் நம் விஞ்ஞானிகள் நம் நாட்டிலேயே தடுப்பூசி கண்டுபிடித்துள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் நம் நாட்டு விஞ்ஞானிகள், மத்திய, மாநில அரசுகள், நல வழித்துறையினருக்கு நன்றி செலுத்த வேண்டும். 

    மாணவர்கள் பல்வேறு முயற்சிகளை செய்து சாதனை படைக்க வேண்டும். கொரோனாவை தடுக்க முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். மாணவர்கள் அருகில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் அறிவுறுத்த வேண்டும்.  முதல்கட்ட தடுப்பூசியை 85 சதவீதத்தினருக்கு செலுத்தியுள்ளோம். இன்னும் ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
    15 முதல் 18 வயது வரை மொத்தம் 83 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளோம். இன்னும் 3 நாட்களில் மீதமுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி 100 சதவீதம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுவையை மாற்ற திட்டமிட்டுள்ளோம். 

    பள்ளியில் படிக்காத சிறுவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் எச்சரிக்கையோடு கொண்டாட வேண்டும்.  மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொங்கல் பண்டிகை கொண்டாட அனுமதித்துள்ளோம். எனவே கட்டுப்பாடுகளுடன் மக்கள் பண்டிகையை கொண்டாட வேண்டும். காணும் பொங்கல் அன்று அதிகளவில் மக்கள் கூடுவார்கள். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பிருக்கும். எனவே வீடுகளிலேயே இருந்து மற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள். 

    புதுவைக்கு வருபவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை உடையது. உலகம் முழுவதும் 20 சதவீதம், 30 சதவீதம் என பரவி வருகிறது. புத்தாண்டு கொண்டாட பல கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தோம். அந்த கொண்டாட்டத்தால் கொரோனா பரவிவிட்டதாக கருத முடியாது. 
    கொரோனாவையும் கட்டுப்படுத்த வேண்டும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் செயல்படுகிறோம். முதல்-அமைச்சருடன் கலந்து பேசிதான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். முதல்-அமைச்சருடன் இணக்கமாக செயல்படுகிறேன். புதுவை மக்களுக்கு நல்லது கிடைக்கும் வகையில் நாங்கள் செயல்படுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவை பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் 2 மாத நிலுவை சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை சாலை போக்கு வரத்துக்கழக அம்பேத்கர் ஊழியர்கள் சங்கம் சார்பில் பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சங்க பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.  துணைத்தலைவர் சங்கர் வரவேற்றார். தலைவர் பக்கிரிசாமி, செயலாளர்   அமிர்தவேலு, பொருளாளர் பூபாலன் முன்னிலை வகித்தனர். 

    விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் கண்டன உரையாற்றினார். மார்க் சிஸ்டு பெருமாள், பாவா ணன், ஏ.ஐ.டி.யூ.சி. சேதுசெல்வம், மணித் கோவிந்தராஜ், சக்திசிவம், நாகமுத்து, ராஜசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

    பி.ஆர்.டி.சி.யில் 2 ஆண்டாக வழங்கப்படாமல் உள்ள போனஸ், 2 மாத சம்பளத்தை வழங்கக்கோரி இந்த போராட்டம் நடந்தது.
    புதுவை முள்ளோடை நுழைவு வாயிலில் புதுவை வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
    பாகூர்:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

    குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டு  இருக்க வேண்டும், முக கவசம் முறையாக அணிந்திருக்க வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கிருமாம்பாக்கத்தை அடுத்த முள்ளோடை நுழைவு வாயிலில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் (பொறுப்பு), பாகூர் இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் மற்றும் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் லோகேஷ், லோகநாதன்,  போலீஸ் உதவி சப்&இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் ஆகியோர்   தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    கடலூர்   மாவட்டத்தில் இருந்து புதுவை  நோக்கி வரும் இருசக்கர வாகனம், கார், பஸ் அனைத்தையும் நிறுத்தி பரிசோதனை செய்த பின்பு அனுப்பி  வைக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    மணவெளி தொகுதியை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 

    அதுபோல் மணவெளி தொகுதியை சேர்ந்த 336 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மணவெளி புருஷோத்தமன் சமுதாய நலக்கூடத்திலும், தவளக்குப்பம் மீனாட்சி சிவபாக்கியம் மஹால் திருமண நிலையத்திலும் நடந்தது. 

    நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் வழங்கினார்.  இந்த அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திறன் சார்ந்த எல்லா தகவல்களும் உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து திட்டங்களையும் இந்த  அட்டை மூலம் இனி பெற முடியும். 

    மேலும் இந்த அட்டையை அரசின் அனைத்து திட்டத்திற்கும் அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும். இந்த தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் விழாவில் சமூகநலத்துறை துணை இயக்குனர்  கலாவதி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    நிகழ்ச்சியில் மணவெளி தொகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, ரகுபதி, காமராஜ், லட்சுமிகாந்தன், கிருஷ்ணமூர்த்தி தட்சிணாமூர்த்தி, கலைவாணன், செந்தில், சக்திவேல், தணிகாசலம், ஆறுமுகம், குமாரசாமி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    புதுவை பாரதி பூங்காவில் புதர்களில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிகளை போலீசார் விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுச்சேரி:

    சுற்றுலா தலமான புதுவைக்கு தினமும் கடலூர்- விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

    அப்படி வருகை தரும் சுற்றுலா பயணிகள் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்து வருகின்றனர்.

    பாரதி பூங்காவில் காலை மற்றும் மாலை வேளையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாரதி பூங்காவை சுற்றிலும் உள்ள புதர்களில் ஆங்காங்கே காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்து அத்துமீறலில் ஈடுபட்டனர்.

    இந்த செயல் அங்கு பொழுது போக்க வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த பெரியகடை போலீசார் பாரதி பூங்காவில் செடி- கொடிகள் மற்றும் புதரில் ஆங்காங்கே பதுங்கியிருந்த காதல் ஜோடிகளை விரட்டியடித்தனர். இவர்களில் பள்ளி, கல்லூரி சீருடையில் காதல் ஜோடிகளையும் காண முடிந்தது.

    காதல் ஜோடிகளை போலீசார் விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×