search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
    X
    புதுவை பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

    மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி- கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

    கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவலை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. புதுவை தந்தைபெரியார் நகரில் உள்ள பேட்ரிக் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  பள்ளியின் நிர்வாகி பெடரிக் வரவேற்றார். 

    பள்ளி மாணவர்களிடையே கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    நமது நாட்டிலேயே தயாரித்து கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி வருகிறோம்.  பேரிடர் காலத்தில் இந்த தடுப்பூசியை விஞ்ஞானிகள் இரவு, பகல் பாராமல் ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர். இதுவரை 150 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம். 90 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம். 

    கடந்த காலங்களில் தடுப்பூசி வெளிநாடுகளில் இருந்து கிடைக்குமா? என ஏங்கியிருந்தோம். பிரதமரின் ஊக்கத்தால் நம் விஞ்ஞானிகள் நம் நாட்டிலேயே தடுப்பூசி கண்டுபிடித்துள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் நம் நாட்டு விஞ்ஞானிகள், மத்திய, மாநில அரசுகள், நல வழித்துறையினருக்கு நன்றி செலுத்த வேண்டும். 

    மாணவர்கள் பல்வேறு முயற்சிகளை செய்து சாதனை படைக்க வேண்டும். கொரோனாவை தடுக்க முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். மாணவர்கள் அருகில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் அறிவுறுத்த வேண்டும்.  முதல்கட்ட தடுப்பூசியை 85 சதவீதத்தினருக்கு செலுத்தியுள்ளோம். இன்னும் ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
    15 முதல் 18 வயது வரை மொத்தம் 83 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளோம். இன்னும் 3 நாட்களில் மீதமுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி 100 சதவீதம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுவையை மாற்ற திட்டமிட்டுள்ளோம். 

    பள்ளியில் படிக்காத சிறுவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் எச்சரிக்கையோடு கொண்டாட வேண்டும்.  மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொங்கல் பண்டிகை கொண்டாட அனுமதித்துள்ளோம். எனவே கட்டுப்பாடுகளுடன் மக்கள் பண்டிகையை கொண்டாட வேண்டும். காணும் பொங்கல் அன்று அதிகளவில் மக்கள் கூடுவார்கள். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பிருக்கும். எனவே வீடுகளிலேயே இருந்து மற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள். 

    புதுவைக்கு வருபவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை உடையது. உலகம் முழுவதும் 20 சதவீதம், 30 சதவீதம் என பரவி வருகிறது. புத்தாண்டு கொண்டாட பல கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தோம். அந்த கொண்டாட்டத்தால் கொரோனா பரவிவிட்டதாக கருத முடியாது. 
    கொரோனாவையும் கட்டுப்படுத்த வேண்டும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் செயல்படுகிறோம். முதல்-அமைச்சருடன் கலந்து பேசிதான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். முதல்-அமைச்சருடன் இணக்கமாக செயல்படுகிறேன். புதுவை மக்களுக்கு நல்லது கிடைக்கும் வகையில் நாங்கள் செயல்படுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×