என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பந்த் போராட்டத்தையொட்டி தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
    • சொற்ப எண்ணிக்கையில் ஓடக்கூடிய புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லைகளுக்கு இயக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

    மாநில அந்தஸ்து கோரிக்கை அவ்வப்போது வலுப்பெறும். சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அதிகாரம் இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    இதையடுத்து மாநில அந்தஸ்து பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. அரசியல் கட்சிகள் மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்த தொடங்கினர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் புதுவைக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடைபெறும் என அதன் மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

    இதற்கு தி.மு.க. மற்றும் வர்த்தக சபையினர், புத்தாண்டு காலம் என்பதால் வியாபாரம், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவர் என எதிர்ப்பு தெரிவித்தனர். வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளை திறக்க பாதுகாப்பு தர போலீசை வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. பந்த் போராட்டத்தையொட்டி தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. சொற்ப எண்ணிக்கையில் ஓடக்கூடிய புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லைகளுக்கு இயக்கப்பட்டது.

    புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்களில் சில பஸ்நிலையம் வந்து சென்றது. பிற தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லையில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றனர். புதுவையில் தனியார் பஸ்களே அதிகளவில் இயக்கப்படுகிறது. இன்று தனியார் பஸ்கள் இயங்காததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    பெரும்பாலான ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. நகரின் பிரதான வீதிகளான மறைமலை அடிகள் சாலை, நேருவீதி, காமராஜர் வீதி, அண்ணாசாலை, படேல் சாலை, மிஷன் வீதி, புஸ்சி வீதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் திறக்கப்படவில்லை. உட்புற பகுதிகளில் இருந்த ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

    புறநகரில் பிரதான வீதிகளில் இருந்த கடைகள் திறக்கப்படவில்லை. மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் இயங்கியது. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. கல்லூரிகள் வழக்கம்போல இயங்கியது. கல்லூரி மாணவர் பஸ்கள் இயக்கப்பட்டது.

    தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு, திருபுவனை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் இயங்கியது. பந்த் போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மக்கள் கூடும் சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    புதிய பஸ்நிலையத்தில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரெண்டு மாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
    • புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை.

    புதுச்சேரி:

    பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    பொது இடங்கள், கடற்கரை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் அனைவரும் கட்டாயம் முக கவம் அணிய வேண்டும்.

    புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை.

    அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சம்பவத்தன்று அசோக் செல்போன் மூலம் லட்சுமியை தொடர்பு கொண்டு அரசு வேலைக்காக ரூ.5 லட்சம் வைத்துள்ளேன்.
    • விடுதி அறையில் பெண்ணை அடைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நாச்சியார்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி லட்சுமி (வயது45). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கடந்த 3 மாதத்துக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மணி இறந்து போனார். இதனால் லட்சுமி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

    இதற்கிடையே நெய்வேலியை சேர்ந்த பிரபாகரன் மூலம் புதுவையை சேர்ந்த அசோக் என்பவர் லட்சுமிக்கு அறிமுகமானார். அப்போது அசோக் தனக்கு அரசு வேலை வாங்கி தர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதால் லட்சுமி ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து ரூ.35 ஆயிரம் பெற்றார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அசோக் செல்போன் மூலம் லட்சுமியை தொடர்பு கொண்டு அரசு வேலைக்காக ரூ.5 லட்சம் வைத்துள்ளேன். அந்த பணத்தை புதுவைக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு அழைத்தார். அதன்படி லட்சுமி அன்று இரவு புதுவைக்கு வந்தார்.

    அப்போது திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு லட்சுமியை அசோக் அழைத்து சென்றார். அதனை நம்பி லட்சுமி விடுதி அறைக்கு சென்ற போது அங்கிருந்த அசோக்கின் நண்பர்கள் பிரபாகரன், சூர்யா, முருகன், சொர்ணராஜ் மற்றும் புவனேஸ் ஆகியோர் கொண்ட கும்பல் விடுதியை பூட்டிக்கொண்டு அசோக் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு மிரட்டினர்.

    மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த தடியால் லட்சுமியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். அதோடு பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். தொடர்ந்து 4 நாட்கள் அவர்கள் இதுபோல் விடுதி அறையில் அடைத்து வைத்து லட்சுமியை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஒருவேளையாக அந்த கும்பல் அசந்து இருந்த நேரத்தில் அவர்களிடமிருந்து தப்பிய லட்சுமி இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டி அ.தி.மு.க. சார்பில் நாளை 28-ந் தேதி பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அண்ணாசிலையில் தொடங்கி அண்ணாசாலை, நேருவீதி, காந்திவீதி, பெரியமார்க்கெட் வீதி வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டி அ.தி.மு.க. சார்பில் நாளை 28-ந் தேதி பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் பிரச்சாரம் செய்தனர். அண்ணாசிலையில் தொடங்கி அண்ணாசாலை, நேருவீதி, காந்திவீதி, பெரியமார்க்கெட் வீதி வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயலாளர் நடராசன், மாநில ஜெ.பேரவை செயலாளர் பாஸ்கர், துணை தலைவர் ராஜாராமன், இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், நகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • வில்லியனூரில் கடன் பிரச்சினையில் மளிகை கடை ஊழியர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • இதற்கிடையே சித்தார்த்தன் கடன் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் கடன் பிரச்சினையில் மளிகை கடை ஊழியர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் பாண்டியன் நகர் விரிவாக்கத்தை அடுத்த சிவவேலன் நகரை சேர்ந்தவர் சித்தார்த்தன் (வயது47). இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தனர்.

    இதற்கிடையே சித்தார்த்தன் கடன் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதுபற்றி அவர் அடிக்கடி தனது மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு ராஜலட்சுமி ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்தார்.

    கடந்த ஒரு வாரமாக கடனை எப்படி அடைப்பேன் என்று தெரியவில்லை. மகனை நன்றாக பார்த்துக்கொள் என்று தொடர்ந்து மனைவியிடம் கூறி வந்தார்.

    சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மளிகை கடைக்கு வேலைக்கு சென்றனர். பின்னர் பகல் 2 மணியளவில் உடல்நிலை சரியில்லை என்று கூறி சித்தார்த்தன் மளிகை கடையில் இருந்து வீட்டுக்கு வந்தார்.

     சித்தார்த்தனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை ராஜலட்சுமி வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார், அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் மருந்து-மாத்திரை கொடுத்து அனுப்பினர்.

    ஆனால் வீட்டுக்கு வந்த போது சித்தார்த்தனுக்கு உடல் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து ராஜலட்சுமி உறவினர்கள் உதவியுடன் கணவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சித்தார்த்தனிடம் டாக்டர்கள் விசாரித்த போது எலி மருந்து தின்று விட்டுவதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி சித்தார்த்தன் பரிதாபாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் தீபன் (வயது 16). லாஸ்பேட்டையைச் சேர்ந்த விநாயகம் இவரது மகன் சண்முகம் (16) இருவரும் ஒரே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
    • இந்நிலையில் மாணவன் தீபன் உடல் கோட்டகுப்பம் அருகே உள்ள நடுக்குப்பத்தில் கரை ஒதுங்கியது.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் தீபன் (வயது 16). லாஸ்பேட்டையைச் சேர்ந்த விநாயகம் இவரது மகன் சண்முகம் (16) இருவரும் ஒரே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இருவரும் இவர்களது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கோட்டகுப்பத்தை அடுத்த சின்ன முதலியார் சாவடியில் கடலில் 6 பேரும் குளித்தனர். அப்போது சண்முகம் மற்றும் தீபன் இருவரும் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டகுப்பம் போலீசார் மாணவர்களின் உடலை தேடினர். ஆனால் மாணவர்கள் உடல் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மாணவன் தீபன் உடல் கோட்டகுப்பம் அருகே உள்ள நடுக்குப்பத்தில் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு கோட்டக்குப்பம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரை ஒதுக்கிய மாணவன் தீபனின் உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மற்றொரு மாணவனின் உடலை மீனவர்கள் உதவியுடன் போலீசார் அப்பகுதியில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • வில்லியனூர் அருகே போலி பத்திரபதிவு செய்து இடம் ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக்கேட்ட தந்தை-மகனுக்கு கத்தி குத்து விழுந்தது.
    • இந்த நிலையில் சண்முகம் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு வந்து செல்வி வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே போலி பத்திரபதிவு செய்து இடம் ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக்கேட்ட தந்தை-மகனுக்கு கத்தி குத்து விழுந்தது.

    வில்லியனூர் அருகே ஏம்பலம் பாலாஜி நகரில் வசித்து வருபவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி செல்வி (வயது49). இவர்கள் குப்புசாமி மற்றும் அவரது மகன் பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான இடத்தை வாங்கி பார்வதி என்பவர் மூலம் பட்டா மாற்றம் செய்து வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே செல்வி வசிக்கும் இடத்தில் ஒரு பகுதியை குப்பு சாமி மற்றும் பிரபாகரன் ஆகியோர் போலி பத்திரம் தயார் செய்து அதனை ஷோபனா என்பவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து ஷோபனாவின் உறவினரான சண்முகம் என்பவர் ஆக்கிரமிப்பு இடத்தில் மணல் கொட்டி செல்வி குடும்பத்தினர் செல்லாத வகையில் இடையூறு செய்திருந்தார். இதனை செல்வி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சண்முகத்தை அழைத்து கண்டித்தனர்.

    இந்த நிலையில் சண்முகம் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு வந்து செல்வி வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். இதனை செல்வி மற்றும் அவரது கணவர் ஹரிகிருஷ்ணன் தட்டிக்கேட்ட போது சண்முகம் தகாத வார்த்தை களால் திட்டி கையில் வைத்திருந்த கத்தியால் ஹரிகிருஷ்ணனை குத்தி னார்.

    இதனால் ஹரிகிரு ஷ்ணனும், அவரது மனைவி செல்வியும் அலறல் சத்தம் போட்டனர்.

    இந்த அலறல் சத்தம் கேட்ட ஹரிகிருஷ்ணனின் மகன் விக்னேஷ்(30) என்பவர் தட்டி கேட்ட போது அவரையும் சண்முகம் கத்தியால் குத்தினார்.

    அதோடு செல்வியை சண்முகத்தின் உறவினர் ஈஸ்வரி என்பவர் கல்லால் தாக்கினார். மேலும் குப்புசாமி மற்றும் பிரபாகரன் ஆகியோர் செல்வியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வி மற்றும் அவரது கணவர் ஹரிகிருஷ்ணன், மகன் விக்னேஷ் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து செல்வி கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோட்டகுப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க 3-ம் ஆண்டு தொடக்க விழா, ஈ.சி.ஆர். சாலையில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா சிறப்புரை ஆற்றினார்.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோட்டகுப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க 3-ம் ஆண்டு தொடக்க விழா, ஈ.சி.ஆர். சாலையில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

    கோட்டகுப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் அன்சர்பாஷா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் முகமதுவக்கீல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொருளாளர் கமால் ஹசேன், உயர்மட்ட குழு நிர்வாகி குமார், துணைத் தலைவர் ஹலீல் பாய் ஆகியோர் வரவேற்றனர். உயர்மட்ட குழு தலைவர்கள் முகமது பாரூக், அஸ்ரப் சேட், முகமது அலி, முகமது இஸ்மாயில், ரவிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோட்ட க்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    வியாபாரிகள் தங்களது நிறுவனங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் அதிகப்படியான வாடிக்கையாளர்கள். உங்களது நிறுவனங்களுக்கு வருவார்கள்.

    சி.சி.டி.வி. கேமராவை வியாபாரிகள் சுயநலத்தோடு கடைக்குள் மட்டும் பொருத்தக் கூடாது சாலைகளிலும் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி கடைக்கு வருபவர்களை கண்காணிக்கும் படியாக செய்ய வேண்டும். வியாபாரிகள் முறையான வருமான வரி செலுத்தினாலே தேசிய வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன்களை பெற்று வியாபாரத்தில் முதலீடு செய்து அதிக லாபங்களை பெறலாம்.

    கந்து வட்டி என்பது வைரஸ் போன்றது. கந்து வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரிகள் தயவு செய்து தொழிலை தொடங்க வேண்டாம். கடனுக்கு வட்டி கொடுத்து உங்கள் வருமானத்தில் தொகையை இழக்க நேரிடும்.

    இவ்வாறு பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் கதிர்வேல், முகமது இலியாஸ், ஹமீது அர்த்த உள்ளார் முஹம்மது பாரூக், சவுரிராஜன், துணை செயலாளர் பாபு என்ற பக்ருதீன், சபீர் அகமது, வீரப்பன் துபைல் அகமது உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்க இன செயலாளர் சாகுல் அமீது என்கிற சையது இப்ராஹிம் நன்றி கூறினார்.

    • 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி உப்பளம் தொகுதியில் உள்ள சோனாம் பாளையம், வம்பாகீரப்பாளையம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    • இதற்காக முதல்-அமை ச்சரிடம் கலந்து ஆலோசித்து வலியுறுத்துவேன் என்று உறுதியளித்தார்.

    புதுச்சேரி:

    18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி உப்பளம் தொகுதியில் உள்ள சோனாம் பாளையம், வம்பாகீரப்பாளையம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இதில் தி.மு.க. மாநில துணை அமைப்பாளரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி கலந்துகொண்டு கடலில் பால் ஊற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது சுனாமி நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து பிரம்மாண்டமாக ஒரு சுனாமி நினைவு சின்னம் கட்டாயம் அமைக்கப்படும்.

    இதற்காக முதல்-அமை ச்சரிடம் கலந்து ஆலோசித்து வலியுறுத்துவேன் என்று உறுதியளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், பொருளாளர் சண்முகம், தி.மு.க. பிரமுகர்கள் நோயல், மணிமாறன், காலப்பன், செங்குட்டு தினேஷ், ரவிக்குமார், அறிவழகன், மாறன், ரகுமான் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் உள்ள வேளாண் அறிவியல் கல்லூரியில் காரைக்கால் விவசாய மாணவர்கள் 3 மாத நேரடி விவசாய பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    • விவசாயிகளுக்கு உற்ற தோழனான பனை மரம் விவசாய நிலத்துக்கும் மண் வளத்துக்கும் எவ்வாறு பயன் அளிக்கிறது

    புதுச்சேரி:

    புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் உள்ள வேளாண் அறிவியல் கல்லூரியில் காரைக்கால் விவசாய மாணவர்கள் 3 மாத நேரடி விவசாய பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடெபுள் சொசைட்டி சார்பில் பூரணாங்குப்பம் ஆனந்தன் மற்றும் புதுவை சிவசந்திரன் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளுக்கு உற்ற தோழனான பனை மரம் விவசாய நிலத்துக்கும் மண் வளத்துக்கும் எவ்வாறு பயன் அளிக்கிறது என்பதனை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி விளக்கம் அளித்தனர்.

    இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.

    • வில்லியனூர் அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • குடிநீர் விநியோகம் செய்யப்படா ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. குடிநீர் விநியோகம் செய்யப்படா ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

    இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை ஒன்று திரண்டு வில்லியனூர்-செல்லிப்பட்டு சாலையில் மரக்கட்டைகளை போட்டு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதனை கிராம மக்கள் ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் வந்து பிரச்சினைக்கு தீர்வு கண்ட பின்னரே மறியலை கைவிடுவோம் என்று உறுதியாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் இதுபற்றி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதி அளித்தனர்.

    இதனையேற்று கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். காலை 8 மணி முதல் 8.30 மணி வரை சுமார் அரை மணி நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    • பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் வாஜ்பாய் பிறந்த தினம், மனதின் குரல் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • விழாவில் மடுவு பேட்டை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி பட்டியல் அணியின் சார்பில் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் வாஜ்பாய் பிறந்த தினம், மனதின் குரல் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மடுவுபேட்டில் நடந்த நிகழ்ச்சியில் கட்சிக்கு பா.ஜனதாவின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவர் நிகழ்ச்சியில் வாஜ் பாய் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி. மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மடுவு பேட்டை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி பட்டியல் அணியின் சார்பில் வழங்கப்பட்டது.

    பிறகு மடுகுபேட்டில் சமபந்தி விருந்து நடத்தப்பட்டது. இதில் மாநில தலைவர் சாமிநாதன், பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன், மாநில மீடியா பொறுப்பாளர் குருசங்கர்,பட்டியல் அ ணியின் பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில துணைத்தலைவர் எஸ்.கே.சி. கஜேந்திரன், சுப்பிரமணி, ராஜேஸ்வரி, சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர் அருள்குமார், மடுகுப்பை பகுதியின் முக்கிய பொறுப்பாளர் விஜய், பூபதி கலந்து கொண்டனர்.

    மனதின் குரல் நிகழ்ச்சியின் போது லாஸ்பேட் மண்டல தலைவர் சோமசுந்தரம் பொறுப்பாளர் தண்டபாணி மகளிர் அணி, மாநில பொதுச் செயலாளர் கனகவல்லி குமார் பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×