என் மலர்
புதுச்சேரி

காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
- வில்லியனூர் அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
- குடிநீர் விநியோகம் செய்யப்படா ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. குடிநீர் விநியோகம் செய்யப்படா ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை ஒன்று திரண்டு வில்லியனூர்-செல்லிப்பட்டு சாலையில் மரக்கட்டைகளை போட்டு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதனை கிராம மக்கள் ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் வந்து பிரச்சினைக்கு தீர்வு கண்ட பின்னரே மறியலை கைவிடுவோம் என்று உறுதியாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் இதுபற்றி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதி அளித்தனர்.
இதனையேற்று கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். காலை 8 மணி முதல் 8.30 மணி வரை சுமார் அரை மணி நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.






