என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கயிற்றால் தூக்கு மாட்டி கணவரின் உடலை தொங்க விட்டு தற்கொலை நாடகமாடி உள்ளார்.
    • தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, எழிலரசியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கிற லோகநாதன் (வயது 52). கட்டிட தொழிலாளி .

    இவரது மனைவி எழிலரசி (48). இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. எனவே எழிலரசி தனது உறவினர் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி லோகநாதன், தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து அவரது மனைவி எழிலரசி அளித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார், தற்கொலை பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் லோகநாதன் சாவு குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை புதுவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் போலீசாரிடம் வழங்கினர். அந்த அறிக்கையில், லோகநாதன் கொலை செய்யப்பட்டதற்கு முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா எழிலரசியிடம் விசாரித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது.

    குழந்தை இல்லாத விரக்தியில் மதுபழக்கத்துக்கு அடிமையான லோகநாதன், தினமும் மதுகுடித்துவிட்டு வந்து எழிலரசியை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

    சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த லோகநாதன், வழக்கம்போல் மனைவியிடம் தகராறு செய்து அவரை அடிக்க பாய்ந்துள்ளார்.

    இதை தடுக்க முயன்ற எழிலரசி, கணவரின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுதிணறி அங்கேயே இறந்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த எழிலரசி, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இந்த விஷயம் போலீசுக்கு தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று நினைத்தார். பின்னர் கயிற்றால் தூக்கு மாட்டி கணவரின் உடலை தொங்க விட்டு தற்கொலை நாடகமாடி உள்ளார்.

    போலீசார் லோகநாதன் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, எழிலரசியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த சில நாட்களாக இங்கு சரிவர தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் வில்லியனூர் கொம்யூன் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
    • சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த உருவையாறு பேட் பகுதியில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. இந்தப் பகுதிக்கு திருக்காஞ்சி மற்றும் உருவையாறு பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக இங்கு சரிவர தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் வில்லியனூர் கொம்யூன் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தற்போது வீடுகளில் நேரடியாக மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். புதிய ஆழ்குழாய் கிணறு போடப்பட்டுள்ளதால் அதன் மூலமாக விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    உப்பு கலந்த குடிநீர் வருவதால் விரைவில் இந்த பகுதியில் வேளாண் துறை அமைச்சரிடம் பேசி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
    • தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து பா.ஜனதா கட்சியில் இணைந்தவர்களுக்கு மாநில தலைவர் சாமிநாதன் சால்வைகள் அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    பாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு ஸ்தாபன தின விழா பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.தொடர்ந்து லாஸ்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனை மாநில தலைவர் சாமிநாதன் பா.ஜனதா நிர்வாகிகளுடன் கேட்டார்.

    நிகழ்ச்சியில், அலுவலக செயலாளர் கவுரிசங்கர், மாநில செயலாளர் ஜெயந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், வல்லுனர் பிரிவு மாநில அமைப்பாளர் ஆசிர்வாத ரமேஷ், இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர், மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, ஓ.பி.சி. அணி செயலாளர் சீனிவாச பெருமாள், லாஸ்பேட் தொகுதி தலைவர் சோமசுந்தரம், மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி, மாவட்ட துணைத் தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து பா.ஜனதா கட்சியில் இணைந்தவர்களுக்கு மாநில தலைவர் சாமிநாதன் சால்வைகள் அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

    இதேபோல் ஸ்தாபன தினத்தை மாநிலம் முழுவதும் அவரவர் தொகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினார்கள்.

    • ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் மதகடிப்பட்டுபாளையம் கிராமத்தில் பண்ணைப்பள்ளியின் 4-ம் வகுப்பு நடைபெற்றது.
    • சாப்ஸ் ஆர்கானிக்ஸ் லிருந்து வருகை புரிந்த லட்சுமி நாராயணன் சோலார் விளக்குப் பொறியின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி செயல்விளக்கமளித்தார்.

    புதுச்சேரி:

    விவசாயிகளுக்கு அனுபவ விவசாயிகளே பயிற்சியளிக்கும் பண்ணைப்பள்ளி புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் மதகடிப்பட்டுபாளையம் கிராமத்தில் பண்ணைப்பள்ளியின் 4-ம் வகுப்பு நடைபெற்றது.

    இதில் வேளாண் அலுவலர் நடராஜன் ஆத்மா திட்டம் மற்றும் பண்ணைப்பள்ளியின் அவசியம் குறித்து பேசினார்.

    சிறப்பு அழைப்பளர்களாக பங்கேற்ற மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரியிலிருந்து வருகை புரிந்த உதவிப் பேராசிரியர் சுந்தரம் காய்கறி பயிர்களில் பயன்படுத்தப்பட வேண்டிய பல்வேறு அங்க இடுபொருட்களை தயாரிக்கும் முறைகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கினார். சாப்ஸ் ஆர்கானிக்ஸ் லிருந்து வருகை புரிந்த லட்சுமி நாராயணன் சோலார் விளக்குப் பொறியின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி செயல்விளக்கமளித்தார்.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, செயல்விளக்க உதவியாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர் விஜயகுமார்சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதிய உருமாறிய கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.
    • புதுவையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து புதுவை கலெக்டரும், பேரிடர் மேலாண்மைத்துறை செயலருமான வல்லவன் கூறியதாவது:-

    புதிய உருமாறிய கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. புதுவையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் அறிகுறிகளுடன் வருபவர்களை பரிசோதனை செய்யும்போது 15 சதவீதத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

    இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளோம்.

    இதன்படி பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    கடற்கரை சாலை, பூங்கா, திரையரங்கில் மற்றும் பொது இடங்களில் கண்டிப்பாக பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். மருத்துவமனை, ஓட்டல்கள், மதுபார்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், அரசு அலுவலகங்கள், வியாபார வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் கூடங்களில் பணி செய்பவர்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

    அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசால் வெளியிடப்படும் அனைத்து அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    கொரோனா விதிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளை கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் உரிய செல்பாடு நடைமுறைகளை பின்பற்றி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் பிற பணியாளர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர்வுக்கூடங்களை முறையாக சுத்தப்படுத்துவதையும், மாணவர்கள் பயன்பாட்டிற்காக தேர்வுக்கூடங்களில் கிருமி நாசினி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    தேர்வின்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் பயன்பாடு தொடர்பாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டும்.

    மேலும் கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து தேர்வு நடத்தப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவையில் நேற்று 390 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவையில் 13, காரைக்கால் 19, ஏனாம் 5, மாகி 2 என மொத்தம் 39 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு 10சதவீதம் ஆகும். மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது ஜிப்மர், கோரிமேடு அரசு மருத்துவமனை, கோவிட் கேர் சென்டரில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நேற்று 32 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்தனர்.

    • புதுவை மின்துறையை தனியாருக்கு முழுமையாக தாரை வார்த்து விட்டீர்களா, இல்லையா?
    • விற்று விடுவது என்று முடிவு செய்து அதற்கான டெண்டர் விட்டுள்ள நிலையில் தற்போது மின்சார கட்டணத்தை அவசர அவசரமாக உயர்த்தியது எதற்கு?

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை மின்துறையை தனியாருக்கு முழுமையாக தாரை வார்த்து விட்டீர்களா, இல்லையா? மின்சாரம் வாங்குவது, பராமரிப்பது, மற்றும் விநியோகிப்பது என்ற மூன்றையுமே தாரை வார்க்க போகிறீர்களா ?

    சட்டமன்றத்தில் அறிவித்தீர்களே, இதில் 51 சதவீதம் யாருக்கு.? 49 சதவீதம் யாருக்கு.? தனியாருக்கு தாரை வார்க்கும் மின் துறையில், சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் செலவு செய்து, டிஜிட்டல் மீட்டர்கள், ப்ரீபெய்டு மீட்டர்கள் மற்றும் சில கருவிகள் வாங்கியது ஏன்?

    விற்று விடுவது என்று முடிவு செய்து அதற்கான டெண்டர் விட்டுள்ள நிலையில் தற்போது மின்சார கட்டணத்தை அவசர அவசரமாக உயர்த்தியது எதற்கு? மின்துறையை வாங்கும் தனியாருக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என்பது மக்களுக்கு நன்றாகவே புரிகிறது.

    விவசாயிகளுக்கு குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பது தொடருமா ? லாபத்தில் இயங்கும் ஆயிரக்கணக்கான பொறியாளர்களும் தொழி லாளர்களும் பணிபுரியும் இந்த மின் துறையை கார்ப்பரேட்டுக்கு விற்பது என்பது மிகவும் நியாயமா.?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுவையில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை மாநில அ.தி.மு.க. செயலாளரும், அன்பழகன் உப்பளம் தலைமைக்கழகத்தில் வழங்கினார்.
    • கமல்தாஸ், வேலவன், குணசேகர், சண்முகதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட அ.தி.மு.க.வினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை மாநில அ.தி.மு.க. செயலாளரும், அன்பழகன் உப்பளம் தலைமைக்கழகத்தில் வழங்கினார்.

    மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ெஜயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில துணைத் தலைவர் ராஜாராமன் , மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள், கருணாநிதி, பி.எல்.கணேசன், நாகமணி வி கே.மூர்த்தி,காந்தி, ஜெய.சேரன், குமுதன்,மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில இலக்கிய அணி செயலாளர்.

    ராமசாமி, மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், தொகுதி கட்சி செயலாளர்கள் பாஸ்கர், கருணாநிதி, துரை, சிவகுமார்,ஆறுமுகம், சம்பத், ராஜா, நடேசன், கிருஷ்ணன், கமல்தாஸ், வேலவன், குணசேகர், சண்முகதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட அ.தி.மு.க.வினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • வாய்க்கால் அமைக்கும் பணி நகராட்சி மூலம் ரூ.1 கோடியே 2 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.
    • இளநிலைப் பொறியாளர் ஞானசேகர், ஊர் பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

     புதுச்சேரி:

    புதுவை கொம்பாக்கம் வார்டுக்குட்பட்ட பாப்பா ஞ்சாவடி, திருவள்ளுவர் நகர், ஒட்டாம்பாளையம் புது தெரு, கொம்பாக்கம் குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் எல் வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நகராட்சி மூலம் ரூ.1 கோடியே 2 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.

    இதற்க்கான பூமி பூஜை விழா நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், இளநிலைப் பொறியாளர் ஞானசேகர், ஊர் பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் தேவையான உணவுகளை ஒட்டல், விடுதிகள் வழங்குகிறது.
    • தெருவோரக் கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவு தயாரிக்கும் மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களை கண்காணித்து தொடர் சோ தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியி ருப்பதாவது:-

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் தேவையான உணவுகளை ஒட்டல், விடுதிகள் வழங்குகிறது. தனியார் உணவு நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் தரமற்ற, கெட்டுப்போன உணவுகளை விநியோகம் செய்யும் ஆபத்தான நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆபத்தை உணர்ந்து அரசும், உணவு கலப்பட தடுப்புப் பிரிவு துறையும் போர்க்கால அடிப்படையில் விடுதிகள், ஒட்டல்கள், தெருவோரக் கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவு தயாரிக்கும் மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களை கண்காணித்து தொடர் சோ தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

    உண்பதற்கு தகுதி இல்லாத உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும். உண்பதற்கு லாயக்கற்ற உணவினை தயாரித்த நிறுவன உரிமங்களையும் ரத்து செய்து கலப்பட உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றுவதற்காக சென்னையில் இருந்து ஒரு கப்பல் புதுச்சேரி வந்தது.
    • திடீரென நீர்மட்டம் குறைந்ததால் எதிர்பாராத விதமாக கப்பல் தரை தட்டி நின்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றுவதற்காக நேற்று சென்னையில் இருந்து ஒரு கப்பல் புதுச்சேரி வந்தது. துறைமுக முகத்துவார பகுதியில் இருந்து துறைமுகத்தின் உள்ளே இழுவை படகுகள் மூலமாக சரக்கு கப்பல் இழுத்துச்செல்லப்பட்டது. அப்போது திடீரென நீர்மட்டம் குறைந்ததால் எதிர்பாராத விதமாக கப்பல் தரை தட்டி நின்றது.

    எனவே கப்பலை துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லும் பணி நிறுத்தப்பட்டது. நீர்மட்டம் உயர்ந்த பின்னர் கப்பலை துறைமுகத்திற்குள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    • பட்ஜெட் அறிவிப்புகளை ஏமாற்று அறிவிப்புக்கள் என நாராயணசாமி வழக்கம் போல் விரக்தியில் கூறி உள்ளார்.
    • ரூ.300 பொதுப்பணி ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பட்ஜெட் அறிவிப்புகளை ஏமாற்று அறிவிப்புக்கள் என நாராயணசாமி வழக்கம் போல் விரக்தியில் கூறி உள்ளார். கடந்த சட்டமன்றத்தில் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டி யுள்ளார்.

    பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, மழைக்கால நிவாரணம், அங்கன்வாடி ஊழியர்கள்பணி நிரந்தரம், 2 ஆயிரம் அரசு துறை காலி பணியிடங்களை நிரப்புதல், விண்ணப்பித்த அனைத்து பயனாளிகளுக்கும் முதியோர் உதவி தொகை, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம், கலப்புத் திருமணம், ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நல திட்ட அறிவிப்புக்கள் செயல் வடிவம் பெற்றுள்ளன.

    கடந்த பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்ட ங்களையும் படிப்படியாக முதல்-அமைச்சர் நிறைவேற்றியுள்ளார். 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்த தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம், ரொட்டிப்பால் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஆஷா, ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பெண் குழந்தைகள் பிறந்தாள் ரூ.50 ஆயிரம டெபாசிட், அனைத்து குடும்பத்தினருக்கும் சிலிண்டர் மானியமாக ரூ.300 பொதுப்பணி ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    தனது ஆட்சிக் காலத்தில் எதையுமே செய்யாமல் இருந்து விட்டு தற்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதை பாராட்ட முடியாமல் மனம் வெதும்பி சாபம் விடுகிறார்.

    கடந்த பட்ஜெட்டில் அறிவிக்காமலேயே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாக புதுவை உள்ளது இவையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பதட்டம் அடைந்து வருகிறார். அவர் மனம் அமைதி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.
    • தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடு, தடையின்றி மின்சார சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து.

    புதுச்சேரி:

    புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    புதுவையில் 38, காரைக்காலில் 143 மையங்களில் தேர்வு நடக்கிறது. புதுவையில் 82 அரசு மற்றும் 147 தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்து 972 மாணவர்களும், காரைக்காலில் 25 அரசு மற்றும் 34 தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 979 மாணவர்களும் எழுதுகின்றனர். வினாத்தாள்கள் 10 வழித்தடமாக பிரித்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது.

    ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடு, தடையின்றி மின்சார சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து. தேர்வுக்கு வரும் மாணவர்கள் செல்போன் உட்பட தகவல் தொடர்பு சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்தது. நுழைவுச்சீட்டு இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப் படவில்லை.

    தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் குற்றத்துக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும் என கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி எச்சரித்துள்ளார். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகள் நம்பிக்கையுடனும், அச்சமில்லாமலும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×