search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்- பள்ளிகளுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு
    X

    பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்- பள்ளிகளுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு

    • புதிய உருமாறிய கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.
    • புதுவையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து புதுவை கலெக்டரும், பேரிடர் மேலாண்மைத்துறை செயலருமான வல்லவன் கூறியதாவது:-

    புதிய உருமாறிய கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. புதுவையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் அறிகுறிகளுடன் வருபவர்களை பரிசோதனை செய்யும்போது 15 சதவீதத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

    இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளோம்.

    இதன்படி பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    கடற்கரை சாலை, பூங்கா, திரையரங்கில் மற்றும் பொது இடங்களில் கண்டிப்பாக பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். மருத்துவமனை, ஓட்டல்கள், மதுபார்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், அரசு அலுவலகங்கள், வியாபார வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் கூடங்களில் பணி செய்பவர்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

    அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசால் வெளியிடப்படும் அனைத்து அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    கொரோனா விதிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளை கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் உரிய செல்பாடு நடைமுறைகளை பின்பற்றி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் பிற பணியாளர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர்வுக்கூடங்களை முறையாக சுத்தப்படுத்துவதையும், மாணவர்கள் பயன்பாட்டிற்காக தேர்வுக்கூடங்களில் கிருமி நாசினி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    தேர்வின்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் பயன்பாடு தொடர்பாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டும்.

    மேலும் கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து தேர்வு நடத்தப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவையில் நேற்று 390 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவையில் 13, காரைக்கால் 19, ஏனாம் 5, மாகி 2 என மொத்தம் 39 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு 10சதவீதம் ஆகும். மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது ஜிப்மர், கோரிமேடு அரசு மருத்துவமனை, கோவிட் கேர் சென்டரில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நேற்று 32 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்தனர்.

    Next Story
    ×