என் மலர்
புதுச்சேரி
- கள்ளச்சாராயம் கடத்தலில் பரபரப்பு தகவல்
- ரசாயன தொழிற்சாலையில் 1200 லிட்டர் மெத்தனால் வாங்கிய ஏழுமலை 600 லிட்டரை மட்டும் வில்லியனூருக்கு கொண்டு வந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம், செங்கல் பட்டில் விஷ சாராயம் குடித்து 23 பேர் இறந்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா என்ற ராஜா , ஏழுமலை சென்னையை சேர்ந்த இளையநம்பி உள்பட 13 பேரை கைது செய்துள்ளனர். கைதான ஏழுமலை மெத்தனாலை அரசு அலுவலகம் அருகே பதுக்கி விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் வீட்டின் அருகே ஏழுமலை கொட்டகை ஒன்றை அமைத்துள்ளார். அங்கு சோப் ஆயில் தயாரிப்பதாக கூறி சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சென்னை உள்ளிட்ட ரசாயன தொழிற்சாலையில் இருந்து கடத்தி வந்து இங்கு பதுக்கி வைத்துள்ளார்.
வில்லியனூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள கொம்யூன் அலுவலகம் அருகே பரசுராமபுரம் என்ற பகுதியில் கடை வாடகைக்கு எடுத்து அங்கு சோப் ஆயில், தண்ணீர்கேன் விற்பனை செய்வதாக விளம்பர பலகை வைத்துள்ளார்.
அவர் எப்போது வருவார் எப்போது போவார் என்பது பக்கத்தில் கடை வைத்திருப் பவர்களுக்கு தெரியாது. திடீரென லோடு வேனில் வந்து கேனில் ஏதோ ஒரு சரக்கு இறங்கும் அது என்னவென்று தெரியாது என்ன அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் கூறினர்.
இந்தக் கடையில் தான் முக்கிய சாராய வியாபாரிகள் டீல் பேசி செல்வார்களாம். கடந்த 11-ம் தேதி சென்னை மதுரவாயலில் உள்ள இளையநம்பி ரசாயன தொழிற்சாலையில் 1200 லிட்டர் மெத்தனால் வாங்கிய ஏழுமலை 600 லிட்டரை மட்டும் வில்லியனூருக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த 600 லிட்டரில் 15 லிட்டர் மெத்தனாலை மரக்காணம் மற்றும் செங்கல்பட்டுக்கு பர்கத்துல்லாவின் டிரைவர் மூலம் அனுப்பி உள்ளார்.
ஏற்கனவே ஏழுமலை போலீசில் அளித்த தகவலில், கொரோனா காலகட்டத்தில் வாங்கி வைத்திருந்த மெத்தனாலையும் சேர்த்து மரக்காணம், செங்கல்பட்டு பகுதிக்கு விற்றதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மரக்காணம் செங்கல்பட்டு பகுதியில் இவர் கொடுத்த மெத்தனாலை சாராயத்தில் கலந்ததால் அது விஷ சாராயமாக மாறி உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வில்லியனூரில் பதுக்கி வைத்திருந்த மெத்தனாலை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துள்ளார். விழுப்புரம் தனிப்படை போலீசார் சென்னை மதுரவாயலில் இருந்த 1200 லிட்டர் மெத்தனாலையும் புதுச்சேரியில் ஏழுமலை பதுக்கி வைத்திருந்த மெத்தனாலையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விரைவில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் வில்லியனூர் பகுதியில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
- அடைக்கலசாமி காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
- இதுகுறித்து, அவரது மனைவி அனிதாமேரி புகார் கொடுத்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் அடுத்த நெடுங்காடு காமராஜர் சாலை, அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கலசாமி (வயது42) லாரி ஓட்டுநர். இவரது மனைவி அனிதாமேரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அனிதாமேரி, காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அடைக்க லசாமி காரைக்காலில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்று லாரி ஒன்று வாங்கினார். கடனை சரிவர செலுத்தாததால், வங்கி நிர்வாகத்தினர், அடைக்கலசாமி லாரியை பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த அடைக்கலசாமி, மது குடிக்க ஆரம்பித்தார். சம்பவத்தன்று வழக்கம் போல், அடைக்கலசாமி அதிகமாக மது குடித்து வீட்டில் சண்டை போட்டு ள்ளார். இதனையடுத்து அடைக்கலசாமி தூங்கி விட்டார். மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது, அடைக்கலசாமி தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மனைவி அனிதாமேரி கொடுத்த புகாரின் பேரில், காரை க்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கவர்னர் தலைமையில் ஆலோசனை
- இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
பிரதமரின் டயாலிசிஸ் திட்டத்தை புதுவை மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, துணை இயக்குநர் அனந்தலட்சுமி, தலைமை மருந்தக அதிகாரி ரமேஷ், குஜராத் ஐ.கே.டி.ஆர்.சி நிறுவனத்தின் இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தற்போது புதுவையில் உள்ள டயாலிசிஸ் சிகிச்சை மையங்களின் செயல்பாடு, டயாலிசிஸ் மையங்களில் உள்ள தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல், அவற்றின் அமைவிடம் ஆகியவற்றை முறைப்படுத்துதல், மனிதவளம், தொழில்நுட்ப வசதிகளை அதிகரித்தல், குஜராத்தைச் சேரந்தை ஐ.கே.டி.ஆர்.சி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள், இணைய வழி சிகிச்சை முறையை அறிமுகப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்தல், பாரதப் பிரதமிரின் டயாலிசிஸ் திட்டச் செயல்பாட்டை துரிதப்படுத்துதல், இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
- ஆட்சிக்கு வந்து 2 ஆண்டில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி பண மதிப்பிழப்பு செய்தனர்.
- தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்த பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
புதுச்சேரி:
2 ஆயிரம் நோட்டு தடையால் எந்த பலனும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீதார்பார ண்யேஸ்வரர், விநாயகர், முருகர், அம்பாள் உள்ளிட் ட சுவாமிகளை அவர் தரிசனம் செய்தார். இறுதியாக சனீஸ்வரர் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி பண மதிப்பிழப்பு செய்தனர். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக கூறுகின்றனர். இது கண்துடைப்பு நாடகம். இதனால் எந்த பலனும் இல்லை. கர்நாட காவில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு விஜயகாந்த் சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பதாக கூறிய தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்த பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தில் அதிக இளம் விதவைகள் உள்ளதாக முன்பு கருத்து கூறிய கனிமொழி எம்.பி. தற்போது அது குறித்து பேச மறுக்கிறார். தமிழகம் முழுவதும் தி.மு.க .வினர் கள்ளச்சா ராயம் விற்பனை யில் ஈடுபட்டுள்ளனர். இது தான் திராவிடமாடலா. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது புதுவை மாநில செயலாளர் வேலு, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கஜபதி உடன் இருந்தனர்.
- மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
- பிளஸ்-2 தேர்விலும் அதிக மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை, காரைக்கால் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்தவில் ஆயிரத்து 677 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிக தோல்வி சதவீதமாகம். புதிய கல்விக் கொள்கை திணிப்பு, சி.பி.எஸ்.இ பாடத்திட்டம், முற்பட்ட சாதி இட ஒதுக்கீடு திணிப்பில் அக்கறை காட்டிய அரசு மாணவர்களுக்கு உரிய நேரத்தில் புத்தகம் வழங்கவில்லை, ஆசிரியர்களை நியமிக்கவில்லை. ஆய்வுக்குழு அமைக்கப்படும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
காரைக்காலில் அதிகளவு மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். ஒரு மாணவன் தற்கொலை செய்துள்ளான். பிளஸ்-2 தேர்விலும் அதிக மானவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இவை அனைத்துக்கும் மக்கள் விரோத திட்டங்களுக்கு காட்டிய முனைப்பை கல்வி போதிப்பதில் காட்டவில்லை என்பதே ஆகும்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.
- அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கேள்வி
- மாணவர்கள் மற்றும் பொது மக்களை திரட்டி அ.தி.மு.க. போராட்டத்தில் ஈடுபடும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தனியார் மருத்துவ கல்லூரி களில் 50 சதவீத இடங்களை அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டும் என மத்திய அரசின் சட்டம் இருந்தும் புதுவை அரசு ஆண்டுதோறும் 36 சதவீத இடங்களில் மட்டும் அரசின் இட ஒதுக்கீடாக பெறுகிறது.
இதனால் ஆண்டுதோறும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த 60 மாணவர்களின் மருத்துவக் கல்வி தனியாருக்கு தாரை வார்க்க ப்படுகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்தம் 450 இடங்களில் சட்டப்படி பெற வேண்டிய 225 இடங்களுக்கு பதிலாக 165 இடங்கள் பெறுவதால் மீதமுள்ள 60 மருத்துவ இடங்கள் ரூ.60 கோடிக்கு தனியார் மருத்துவ கல்லூரி களால் விற்கப்படுகிறது.
டாக்டரான கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த பிரச்சனையில் ஏன் நியாயமான முடிவை எடுக்க தயங்குகிறார்? மேலும், இந்த ஆண்டு 50 சதவீத இடங்களை பெறவில்லை என்றால், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று, மாணவர்கள் மற்றும் பொது மக்களை திரட்டி அ.தி.மு.க. போராட்டத்தில் ஈடுபடும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- தமிழகத்தில் குவாட்டர் பாட்டில் ரூ.160க்கு குறைவாக கிடையாது.
- புதுச்சேரியில் இருந்து கடத்தி செல்லப்படும் சாராயம், தமிழக கிராமங்களில் 100 மி.லி., பாக்கெட் ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு அனுமதியுடன் 130 சாராய கடைகளும், 50 கள்ளுக்கடைகளும் இயங்கி வருகின்றன.
இந்த கடைகளுக்கு, அரசுக்கு சொந்தமான சாராய வடி சாலை மூலமாக சாராயம் சப்ளை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சாராயம் விற்பனை கிடையாது. டாஸ்மாக் மதுபானங்கள் மட்டுமே விற்கப்படுகிறது. தமிழகத்தில் குவாட்டர் பாட்டில் ரூ.160க்கு குறைவாக கிடையாது.
புதுச்சேரியில் இருந்து கடத்தி செல்லப்படும் சாராயம், தமிழக கிராமங்களில் 100 மி.லி., பாக்கெட் ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இன்னொரு பக்கம், வெளி மாநிலத்தில் புதுச்சேரிக்கு கள்ளத்தனமாக கொண்டு வரப்படும் ஆர்.எஸ்.எனப்படும் எரிசாராயம் தமிழக பகுதிகளுக்கு கேன் கேன்களாக கடத்தி செல்லப்படுகிறது.
எரிசாராயத்தில் சரியான அளவு தண்ணீர் கலந்தால், மிதமான போதை தரும் சாராயமாக மாற்றலாம். ஆனால், கடத்தி செல்லும் சாராய வியாபாரிகள் போதைக்காக அதில் சில ரசாயனங்களை கலப்பதால் விஷ சாராயமாக மாறி விடுகிறது.
தமிழக வியாபாரிகளுக்கு சாராயம் கடத்தி செல்வதற்காக தனிக் குழுக்கள் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.
புதுவையில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை இணைக்க 81 சாலை வழிகள் உள்ளது. இந்த கிராமபுற சாலைகள் வழியாகவும், சந்து பொந்துகள் வழியாகவும் எளிதாக சாராயம் கடத்துகின்றனர்.
இந்த பாதைகள் அனைத்தும் கடலுார், விழுப்புரம் மாவட்ட மது விலக்கு போலீசாருக்கு நன்கு தெரியும்.இருந்தபோதும், இந்த வழிகளை விட்டுவிட்டு திண்டிவனம் புறவழிச்சாலையில் கிளியனுார், கடலுார் மஞ்சக்குப்பம், சோரியாங்குப்பம், கெகராம்பாளையம், திருக்கனுார் பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனை மேற்கொள்கின்றனர்.
இதில் பெரும்பாலும் யாரும் சிக்குவதில்லை. புதுச்சேரியில் திருடப்படும் 80 சதவீத பைக்குகள், கடலுார், விழுப்புரம் மாவட்ட சாராய கடத்தல் கும்பலுக்கு விற்கப்படுகிறது. திருட்டு பைக்குகளில் கிராமப்புற உட்புற சாலைகள் வழியாக சாராயம் ரெகுலராக கடத்தப்படுகிறது.
போலீசார் மடக்கினால் சாராயத்துடன், பைக்கையும் விட்டு விட்டு தப்பி விடுகின்றனர்.
- தாளாளர் மெய்வழி.ரவிக்குமார் பாராட்டு
- அதிக மாணவர்கள் 400 முதல் 450 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மூலக்குளம் அருகே அரும்பார்த்தபுரம் ப்ளூ ஸ்டார் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகிறது.
இப்பள்ளி கற்றல், அறிவூட்டல், வழிநடத்தல் ஆகிய 3 தாரக மந்திரங்களைக் கொண்டு மாணவர்களுக்கு கல்வியை போதித்து வருகிறது.
மேலும் இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வழங்கப்படுகிறது. கல்வியுடன் சேர்த்து விளையாட்டு, பொது அறிவு வளர்த்தல், மாணவர்களின் பல்திறன் திறமைகளை ஊக்குவித்தல், மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டை வளர்க்கும் விதத்தில் கல்வி போதிக்கப்படுகிறது.
நடந்து முடிந்த 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இந்த பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்து சாதனை புரிந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் ப்ளூ ஸ்டார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று தொடர் சாதனை புரிந்துள்ளனர். மேலும் அந்தப் பள்ளியின் மாணவி திவ்யா 500-க்கு 495 மதிப்பெண் பெற்று புதுச்சேரி மாநில அளவில் 2-ம் இடமும், பள்ளியின் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இவர் தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்ணும், கணிதத்தில் 100 அறிவியலில் 100 சமூக அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளார். இப்பள்ளியின் மாணவி விஷ்ணு பிரியா 483 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவிகள் ஜீவிகா மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரும் 471 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
கணிதப் பாடத்தில் 2 மாணவிகளும், அறிவியல் பாடத்தில் ஒரு மாணவியும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மாணவர்கள் 400 முதல் 450 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் மெய்வழி ரவிக்குமார், முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார், துணை முதல்வர் சாலை சிவ செல்வம் மற்றும் நிர்வாக அலுவலர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்கள் சிறப்பாக செயல்பட காரணமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இப்பள்ளியில் 2023-2024 கல்வி ஆண்டில் எல்.கே.ஜி முதல் 11 வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று அப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டு கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்தியன் வங்கி அருகாமையில் தொடங்கும் கடலூர் சாலை முதல் வாணரப்பேட்டை இந்திரா நகர்- நேதாஜி நகர் 1 அசோகன் வீதி சந்திப்பில் இணையும் உப்பனாறு வாய்க்கால் வரை ரூ.2.85 கோடி செலவில் ப-வடிவ வாய்க்கால் தூர்வாரப்படுகிறது.
இப்பணியை தொகுதி எம்.எல்.ஏ. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று அப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டு கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. மாநில பிரதிநிதி கணேசன், கிளை செயலாளர் செல்வம், அசோக், ராகேஷ் மற்றும் சகாயம், செழியன் இளைஞர் அணி பஸ்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
- வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு குழும நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்துடன் இணைந்து கடற்கரையை தூய்மை படுத்தி, தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுவை காந்தி திடலில் ஜி20 கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அவர்களுடன் இணைந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் வாழ்க்கை நோக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை, மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் விழிப்புணர்வு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் .
வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் முத்தம்மா, உள்ளாட்சி துறை, நகராட்சி மற்றும் இத்துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேசிய சேவை திட்டம், தேசிய மாணவர் படை பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் தூய்மை நிகழ்ச்சி நடந்தது.
- புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச் செயல்பட்டு வருகிறது.
- பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று பகுதியில் புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச் செயல்பட்டு வருகிறது.
இந்த பாரடைஸ் பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர சுண்ணாம்பாற்று பகுதியில் இருந்து படகு சவாரி இயக்கப்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கம்.
அதற்காக சுண்ணாம்பாற்று கடற்கரை பகுதியில் மரத்திலான படகு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் படகு குழாமுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பாரடைஸ் பீச்சுக்கு படகு சவாரி செய்தனர்.
பின்னர் மாலையில் படகு குழாமுக்கு திரும்ப காத்திருந்தனர். அப்போது ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படகில் செல்வதற்காக மரப் பலகையிலான படகு பாலத்தில் முண்டியடித்து ஏறியதால் பாரம் தாங்காமல் திடீரென பாலம் சரிந்து உள்வாங்கியது.
இதில் தூத்துக்குடி விடுதலை நகரை சேர்ந்த ஜூலி, மேரி, கீதா உள்பட 10-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆற்றில் விழுந்தனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
தண்ணீரில் தத்தளித்தப்படி அலறல் சத்தம் போட்ட அவர்களை உடனடியாக படகு குழாம் ஊழியர்கள் மீட்டனர். அதிர்ஷ்ட வசமாக ஏதும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் ஆற்றில் விழுந்த சுற்றுலா பயணிகளின் செல்போன்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. அந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- கடந்த 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
- 2,000 ரூபாய் ஒழிப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை.
காரைக்கால் :
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தனது இளைய மகன் சண்முக பாண்டியனுடன் நேற்று திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் எந்த கருப்பு பணமும் ஒழிக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல் தான் நடந்துள்ளது. 2,000 ரூபாய் ஒழிப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதெல்லாம் கண் துடிப்பு நாடகம். பொதுவாக ஒரு மாநிலத்தில் ஒரு ஆட்சி இருந்தால், அடுத்த முறை வேறொரு ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள். அந்த வகையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சி தேர்தலின் போது ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. அந்த வாக்குறுதிகளை மக்கள் நலன் கருதி படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது. என்ன நிலைபாடு, எந்த தொகுதியில் போட்டி என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முறைப்படி அறிவிப்பு செய்வோம்.
தமிழகத்தில் கள்ள சாராய சாவு மிகப்பெரிய கொடுமையானது. தி.மு.க.வானது தேர்தல் நேரத்தில் ஒரு நிலைப்பாடு, தேர்தலுக்குப் பிறகு ஒரு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் தி.மு.க. கவுன்சிலர்களால் கள்ளச் சாராயம் அதிக புழக்கத்தில் உள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக புழங்கி வருகிறது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுத்தது போல் மது மற்றும் கஞ்சா ஒழிப்பிற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சொல்லப் போனால், மது மற்றும் கஞ்சாவிற்கு எதிராக இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மது மற்றும் கஞ்சா இல்லாத மாநிலமாக புதுச்சேரி, தமிழகத்தை அந்தந்த மாநில கவர்னர்கள் மாற்ற வேண்டும். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் உள்ளார். எந்த நேரத்தில் வெளியே வர வேண்டுமோ அப்போது நிச்சயம் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.






