search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு அலுவலகம் அருகே மெத்தனால் பதுக்கி விற்றது அம்பலம்
    X

    மெத்தனால் பதுக்கி வைத்திருந்த கடை.

    அரசு அலுவலகம் அருகே மெத்தனால் பதுக்கி விற்றது அம்பலம்

    • கள்ளச்சாராயம் கடத்தலில் பரபரப்பு தகவல்
    • ரசாயன தொழிற்சாலையில் 1200 லிட்டர் மெத்தனால் வாங்கிய ஏழுமலை 600 லிட்டரை மட்டும் வில்லியனூருக்கு கொண்டு வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம், செங்கல் பட்டில் விஷ சாராயம் குடித்து 23 பேர் இறந்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா என்ற ராஜா , ஏழுமலை சென்னையை சேர்ந்த இளையநம்பி உள்பட 13 பேரை கைது செய்துள்ளனர். கைதான ஏழுமலை மெத்தனாலை அரசு அலுவலகம் அருகே பதுக்கி விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் வீட்டின் அருகே ஏழுமலை கொட்டகை ஒன்றை அமைத்துள்ளார். அங்கு சோப் ஆயில் தயாரிப்பதாக கூறி சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சென்னை உள்ளிட்ட ரசாயன தொழிற்சாலையில் இருந்து கடத்தி வந்து இங்கு பதுக்கி வைத்துள்ளார்.

    வில்லியனூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள கொம்யூன் அலுவலகம் அருகே பரசுராமபுரம் என்ற பகுதியில் கடை வாடகைக்கு எடுத்து அங்கு சோப் ஆயில், தண்ணீர்கேன் விற்பனை செய்வதாக விளம்பர பலகை வைத்துள்ளார்.

    அவர் எப்போது வருவார் எப்போது போவார் என்பது பக்கத்தில் கடை வைத்திருப் பவர்களுக்கு தெரியாது. திடீரென லோடு வேனில் வந்து கேனில் ஏதோ ஒரு சரக்கு இறங்கும் அது என்னவென்று தெரியாது என்ன அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் கூறினர்.

    இந்தக் கடையில் தான் முக்கிய சாராய வியாபாரிகள் டீல் பேசி செல்வார்களாம். கடந்த 11-ம் தேதி சென்னை மதுரவாயலில் உள்ள இளையநம்பி ரசாயன தொழிற்சாலையில் 1200 லிட்டர் மெத்தனால் வாங்கிய ஏழுமலை 600 லிட்டரை மட்டும் வில்லியனூருக்கு கொண்டு வந்துள்ளார்.

    இந்த 600 லிட்டரில் 15 லிட்டர் மெத்தனாலை மரக்காணம் மற்றும் செங்கல்பட்டுக்கு பர்கத்துல்லாவின் டிரைவர் மூலம் அனுப்பி உள்ளார்.

    ஏற்கனவே ஏழுமலை போலீசில் அளித்த தகவலில், கொரோனா காலகட்டத்தில் வாங்கி வைத்திருந்த மெத்தனாலையும் சேர்த்து மரக்காணம், செங்கல்பட்டு பகுதிக்கு விற்றதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் மரக்காணம் செங்கல்பட்டு பகுதியில் இவர் கொடுத்த மெத்தனாலை சாராயத்தில் கலந்ததால் அது விஷ சாராயமாக மாறி உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வில்லியனூரில் பதுக்கி வைத்திருந்த மெத்தனாலை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துள்ளார். விழுப்புரம் தனிப்படை போலீசார் சென்னை மதுரவாயலில் இருந்த 1200 லிட்டர் மெத்தனாலையும் புதுச்சேரியில் ஏழுமலை பதுக்கி வைத்திருந்த மெத்தனாலையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விரைவில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் வில்லியனூர் பகுதியில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×