என் மலர்
புதுச்சேரி
- வாழுமுனிக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி தேர்முட்டி வீதியைச் சேர்ந்தவர் வாழுமுனி (வயது 40). ஆட்டோ டிரைவர். வாழுமுனிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று வாழுமுனி குடும்பத்துக்கும், ஹரிகிருஷ்ணன் குடும்பத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு குடும்பத்தினருக்கு இடையே கை கலப்பு ஏற்பட்டது. அப்போது ஹரிகிருஷ்ணன் மகன் செந்தில்குமார், அவரது மனைவி சுமதி ஆகியோர் தாங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை ஏவி வாழுமுனியை கடிக்க விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாழுமுனியின் மனைவி சங்கரி மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோரையும் அவர்கள் தாக்கினர்.
அவர்கள் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றபோது, செந்தில்குமாரின் உறவினர்களான சிங்காரவேலன், மாதேஷ் ஆகியோர் மீண்டும் வாழுமுனியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து வாழுமுனி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்கால் கிளைச் சிறையில் 2 கைதிகளுக்கிடையே ஏற்பட்ட அடிதடியில் இருவரும் லேசான காயம் அடைந்தனர்.
- சிறை துணை கண்காணிப்பாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட கிளைச்சிறை கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இச்சிறையில் சுமார் 25 விசாரணைக் கைதிகள் உள்ளனர். நேற்று இரவு உணவுக்காக கைதிகள் வெளியில் கொண்டு வரப்பட்டனர்.
இதில் விண்சென்ட்ராஜ் (வயது 35), திலீப்குமார் (26) ஆகிய 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இரவு உணவுக்கு வெளியில் வந்த இருவரில், திலீப்குமாரை விண்சென்ட் ராஜ் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி கொண்டனர்.
அப்போது அவர்கள் 2 பேரையும் சிறை வார்டன்கள் விலக்கி, சிறை துணை கண்காணிப்பாளர் கோபிநாத் உத்தரவின் பேரில், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்து, மீண்டும் கிளைச்சிறைக்கு கொண்டு சென்றனர். மேலும், இது குறித்து சிறை துணை கண்காணிப்பாளர் கோபிநாத், காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்துள்ளார்.
- போலீசார் அவர்களை அழைத்து பச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கை விடப்பட்டது.
- பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தப் பட்டன.
புதுச்சேரி:
புதுவை புதிய பஸ்நிலையம் ரூ.30 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக பஸ்நிலையத்தின் மைய பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 500 சதுரமீட்டரில் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதற்காக பணியை எடுத்த ஒப்பந்ததாரர் பஸ்நிலையத்தில் 5 ஆயிரம் சதுரமீட்டர் அளவுக்கு தடுப்பு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் இப்பணியால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பஸ் நிலைய ஆட்டோ டிரை–வர்கள் முற்றுகை யிட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை அழைத்து பச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கை விடப்பட்டது.
இந்நிலையில் இன்று புதிய பஸ் நிலையத்தின் உட்புறம் உள்ள கடை வியாபாரிகள் கடைகளை அடைத்து திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தங்களுக்கு மீண்டும் புதிய கட்டிடத்தில் கடைகள் தருவதை உறுதி செய்ய வேண்டும்.
கட்டுமான பணிகள் முடியும் வரை மாற்று இடம் தர வேண்டும் என வலியுறுத்தினர்.
பஸ்கள் பஸ் நிலையத்தின் உட்புறம் நுழையும் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் மறைமலை அடிகள் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தப் பட்டன.
தகவலறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதிகாரிகளை சந்தித்து பேசி தீர்வு காணும்படியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- 50-க்கும் மேற்பட்டோர் பொதுப் பணித்துறை தலைமை பொறியளார் அலுவலகத்துக்கு வந்தனர்.
- அலுவலகத்தின் நுழைவு வாயில் ஆர்ச் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறையில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் அறிவிப்புக்கு ஒரு சில நாட்கள் முன்பு வவுச்சர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் கமிஷன் இந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. தேர்தலுக்கு பின் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என முதல அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
ஆனால் அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெறவில்லை. இதனால் சட்டசபையில் அறிவித்தபடி தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கடந்தத 30-ந் தேதி தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அன்றைய தினம் ஏற்கனவே தலைமை பொறியாளராக இருந்த சத்தியமூர்த்தி பணி ஓய்வு பெற்றார்.
தற்போது புதிய தலைமை பொறியாளராக பழனிப்பன் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொதுப் பணித்துறை தலைமை பொறியளார் அலுவல கத்துக்கு வந்தனர். அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை யிட்டனர்.
அதில் சிலர் அங்கிருந்த ஏணியை சுவற்றில் சாய்த்து அதன்வழி யாக ஏறி தலைமை பொறியாளர் அலுவலகத்தின் நுழைவு வாயில் ஆர்ச் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர். தொடர்ந்து ஊழியர்கள் ஏணியில் ஏறுவதை போலீசார் தடுத்தனர். இருப்பினும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பாபு, பாரதி, தாரகேஷ் ஆகிய 3 பேர் மேலே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த போலீசார் அங்கு வந்து ஊழியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க. வலியுறுத்தல்
- பெரிய மார்க்கெட் விரிவாக்கம் நவீன படுத்துதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்த ரூ.100 கோடி அளவில் திட்டம் வரையறுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. முதல்- அமைச்சர் ரங்கசாமி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி உருப்படியான திட்டங்களுக்கு முன் உரிமை வழங்கப்பட்டது.
பஸ் நிலைய விரிவாக்கம், நவீன படுத்துதல், பெரிய மார்க்கெட் விரிவாக்கம் நவீன படுத்துதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்த ரூ.100 கோடி அளவில் திட்டம் வரையறுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை செயல்படுத்த விடாமல் சில சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் போர்வையில் முட்டுகட்டை போட்டு தடுத்து வருகின்றனர்.
முதல்- அமைச்சர் ரங்கசாமி இவற்றை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அரசு உறுதி யுடன் செயல்படுத்த உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் நஷ்ட ஈடுகளை மாட்டின் உரிமையாளர்களே வழங்க வேண்டும் என எச்சரிக்கையுடன் அறிவுரையும் வழங்கினர்.
- திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மற்றும் மொரட்டாண்டியில் உள்ள மாட்டு பட்டியில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை- திண்டிவனம் பைபாஸ் சாலையில் மாடுகளால் ஏற்படும் விபத்தால் தொடர் உயிர் பலிகள் ஏற்படுவதாகவும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று மாலை மலரில் செய்தி வெளியானது.
இதனையடுத்து ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மொரட்டாண்டி, நாவற்குளம், பட்டானூர், மாட்டுக்காரன் சாவடி பகுதிகளில் நேற்று மாலை வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் மாடு வளர்ப்போருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
திண்டிவனம்- புதுச்சேரி பைபாஸ் சாலையில் மாடு வளர்ப்போர் மாடுகளை நடமாட விட்டால் காவல்துறை சார்பில் மாட்டை பிடித்து பட்டியில் அடைப்பதாகவும், அந்த மாட்டால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் நஷ்ட ஈடுகளை மாட்டின் உரிமையாளர்களே வழங்க வேண்டும் என எச்சரிக்கையுடன் அறிவுரையும் வழங்கினர்.
இந்நிலையில் நேற்று இரவு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புதுவை திண்டிவனம்-பைபாஸ் சாலை மற்றும் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சந்திப்பில் நடமாடிய 50-க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மற்றும் மொரட்டாண்டியில் உள்ள மாட்டு பட்டியில் அடைத்தனர்.
- மாமனார் -மாமியார் மீது வழக்கு
- பெற்றோர் வீட்டுக்கு சென்று கூடுதலாக 50 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் வாங்கி வரும்படி கூறியதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் அனு(வயது31). பி.டெக் படித்து முடித்த இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முத்தியா ல்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது அனுவுக்கு அவரது பெற்றோர் 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்க ள் வரதட்சணை யாக கொடுத்தனர். திருமணம் முடிந்த சில நாட்களில் அனுவிடம் அவரது கணவர் வினோத்குமார் தேனிலவுக்கு செல்ல பெற்றோ ரிடம் பணம் வாங்கி வருமாறு வலியுறுத்தி னார்.
ஆனால் அனு தான் வேலை பார்த்த பணத்தில் வங்கியில் இருந்து ரூ.60 ஆயிரத்தை எடுத்து கொடுத்தார். அதன் பிறகு 2 மாதத்தில் வினோத்குமார் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். அனு தினமும் வீட்டு வேலை செய்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் வினோத்குமார் வெளி நாட்டுக்கு சென்ற சில நாட்களில் திருமண த்துக்கு வாங்கிய கடன் உள்ளதாக கூறி அனுவிடம் அவரது மாமனார் விநாயகம், மாமனார் புனிதவதி ஆகியோர் 7 பவுன் நகையை வாங்கி வங்கியில் அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் தினமும் அனுவிடம் பெற்றோர் வீட்டுக்கு சென்று கூடுதலாக 50 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் வாங்கி வரும்படி கூறியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அனு கணவரிடம் போனில் தெரிவித்த போது அவர் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்து வந்ததால் அனு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு வந்தும் அனுவை தாலி செயினை கழற்றி தரும்படி மாமனார்-மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனு மாமனார் விநாயகம், மாமியார் புனிதவதி, மைத்துனர் பிரகாஷ், நாத்தனார் சுபத்திரை, அத்தை சூர்யா, மாமா அடலரசு மற்றும் உறவினர் சக்திவேல் ஆகியோர் மீது புதுவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
- மாணவர்களுக்கு ஓவியப்போட்டி , வண்ணம் தீட்டுதல் பேச்சுப்போட்டி, கையெழுத்துப் போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி , வண்ணம் தீட்டுதல் பேச்சுப்போட்டி, கையெழுத்துப் போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தி னராக புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர். போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி காமராஜர் பிறந்த நாள் விழாவன்று பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களான 3 ேபருடன் நாகப்பனூர் ரோடு வழியாக கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டிற்கு வந்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
பாகூர் அடுத்த சேலிய மேடு சின்னப்பேட் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது22). டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களான 3 ேபருடன் நாகப்பனூர் ரோடு வழியாக கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டிற்கு வந்தனர்.
பிறகு கிருமாம்பாக்கத்தில் உள்ள பானி பூரி கடையில் சாப்பிடுவதற்காக வந்த போது கிருமாம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேர் வழிமறித்து எங்கள் ஊருக்குள் நீங்கள் எதற்கு வந்தீர்கள் என கேட்டு குடிபோதையில் கையாளும் கல்லாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் காய மடைந்த 4 பேரும் அருகில் உள்ளஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
- அஞ்சலகத்திலும் பொதுமக்களின் நலன் கருதி 31-ந் தேதி வரை ஆதார் திருத்தம்
- பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பயனடையுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்
புதுச்சேரி:
புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் துரை ராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பொதுமக்களின் நலன் கருதி 31-ந் தேதி வரை ஆதார் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல் போன்ற ஆதார் சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் உள்ளடக்கிய ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பயனடையுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 22-ந் தேதி தெப்பல் உற்சவம், 23-ந் தேதி விடையாற்றி உற்வசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
- விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 20-ந் தேதி காலை 8.15 மணிக்கு நடக்கிறது.
மறுநாள் 21-ந் தேதி தீர்த்தவாரி, வளையல் உற்சவம், 22-ந் தேதி தெப்பல் உற்சவம், 23-ந் தேதி விடையாற்றி உற்வசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
நாள்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடக்கிறது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- மாணவியுடன், சிறுவன் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.
- மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் 16 வயது மதிக்கத்தக்க மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார்.
இவரை அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான 17 வயது நிரம்பிய பிளஸ்-2 படிப்பை பாதியில் கைவிட்ட சிறுவன் காதலித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மாணவியுடன், சிறுவன் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.
சோர்வுடன் காணப்பட்ட சிறுமியை சமீபத்தில் அவரது பெற்றோர் அங்குள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது அந்த மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை அந்த மாணவி கூறினார். உடனடியாக மாணவி மூலமாக சிறுவனிடம் பேசியபோது இச்சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என அவரை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியை கர்ப்பமாக்கி மிரட்டல் விடுத்த சிறுவன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.






