என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்கால் கிளைச்சிறை"

    • காரைக்கால் கிளைச் சிறையில் 2 கைதிகளுக்கிடையே ஏற்பட்ட அடிதடியில் இருவரும் லேசான காயம் அடைந்தனர்.
    • சிறை துணை கண்காணிப்பாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட கிளைச்சிறை கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இச்சிறையில் சுமார் 25 விசாரணைக் கைதிகள் உள்ளனர். நேற்று இரவு உணவுக்காக கைதிகள் வெளியில் கொண்டு வரப்பட்டனர்.

    இதில் விண்சென்ட்ராஜ் (வயது 35), திலீப்குமார் (26) ஆகிய 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இரவு உணவுக்கு வெளியில் வந்த இருவரில், திலீப்குமாரை விண்சென்ட் ராஜ் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி கொண்டனர்.

    அப்போது அவர்கள் 2 பேரையும் சிறை வார்டன்கள் விலக்கி, சிறை துணை கண்காணிப்பாளர் கோபிநாத் உத்தரவின் பேரில், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்து, மீண்டும் கிளைச்சிறைக்கு கொண்டு சென்றனர். மேலும், இது குறித்து சிறை துணை கண்காணிப்பாளர் கோபிநாத், காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்துள்ளார்.

    ×