என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 9 அடி நீளம் கொண்ட தக்கையை காலில் இணைத்து கொண்டு விளையாடினர்.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து மாமல்லபுரம், கோவளம் ஆகிய இடங்களில் நடைபெறும் அலை சறுக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு சம்மேளனம் சார்பில் தேசிய அளவிலான அலைச் சறுக்குப்போட்டி தொடக்க விழா புதுவை தலைமை செயலம் எதிரில் நேற்று நடைபெற்றது.

    இதில் புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் கடலோர மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் 80 பேர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    தக்கை பலகையின் (சர்ப்போர்ட்) மீது வீரர்கள் நின்று கொண்டு சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து சென்று அசத்தினர். 9 அடி நீளம் கொண்ட தக்கையை காலில் இணைத்து கொண்டு விளையாடினர்.

    சீறும் அலைகளில் அதிக நேரம் பயணித்து சாகசம் செய்த வீரர், வீராங்கனைகள் புள்ளிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெளிநாடுகளில் நடப்பது போன்று புதுச்சேரி கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் வீரர், வீராங்கனைகளின் சாகசங்களை கடற்கரைக்கு வந்த உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு வியந்தனர்.

    இதன் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து மாமல்லபுரம், கோவளம் ஆகிய இடங்களில் நடைபெறும் அலை சறுக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    ஒட்டு மொத்தமாக நடக்கும் போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறும் சிறந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் நடை பெறும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

    • தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.
    • தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் தேசிய கல்விக் கொள்கை 3-வது ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், அங்கு சில குறை இருந்தால் சொல்வேன். தமிழ்நாடு பாட திட்டத்துக்கு பதிலாக சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தை அமல்படுத்திய தமிழிசை தமிழின துரோகி என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் கூறியுள்ளார்.

    தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.

    தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து புதுச்சேரி பாடத்திட்டத்தை தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் விமர்சித்துள்ளார்.

    22 மொழிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தெரியாமல் பேசியுள்ளார். தமிழகத்தில் 47 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழிலும், பிளஸ்-2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுதவில்லை.

    ஆனால், நாங்கள் தமிழை வளர்த்துதான், வருகிறோம். எனவே, தமிழை வைத்து எங்களுக்கு மதிப்பெண் போட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருக்கு உரிமை இல்லை.

    புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கிடையாது. இதில் அரசியல் இருப்பதாக முன்னாள் முதல்வர் கூறுகிறார்.

    அவருக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. 22 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.

    மக்கள் பணத்தை எடுத்து என்னுடைய வசதிக்காக செலவு செய்யமாட்டேன் என்றார்.

    • மனித நேய அறக்கட்டளை சார்பில் புனர மைக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • அங்கன்வாடி மையத்துக்கு தேவையான மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதியில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு கழகம் நிர்வாகத்தின் கீழ் உள்ள 2 அங்கன்வாடி மையத்தை மங்கலம் பகுதியில் உள்ள சூப்பர்பில் புரோடக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் நிதி மூலம் வ. .உ. சி. முன்னாள் மாணவர்கள் மனித நேய அறக்கட்டளை சார்பில் புனர மைக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது.

    அங்கன்வாடி மையத்தை வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயகுமார் திறந்து வைத்து அங்கன்வாடி பொறுப்பா ளர்களிடம் ஒப்படைத்தார். விழாவில் வ. உ.சி. அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் நலமேம்பாட்டு கழக இயக்குனர் முத்துமீனா மற்றும் , திட்ட அதிகாரி கருணாநிதி , வட்டார வளர்ச்சி அதிகாரி பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    சூப்பர்பில் புரோடக்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் இளவரசன் மற்றும் சரவணன் அறக்கட்டளை உறுப்பினர்கள் விஜய ராஜா, மணவாளன் , சார்லஸ் ,பாபு,செந்தில்குமார், ஆறுமுகம் முத்து, விஜய், மூர்த்தி கலந்துகொண்டனர்,

    விழாவில் அங்கன்வாடி மையத்துக்கு தேவையான மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், வழங்கப்பட்டது.

    • பயணியை ஏற்றிச்செல்ல சரத்குமார் புதிய பஸ் நிலையம் அருகே காரை நிறுத்தி காத்துக்கொண்டிருந்தார்.
    • காரை எடுத்து வந்து பயணிகளை ஏற்றிச்சென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதிய பஸ்நிலையம் அருகே சவாரி ஏற்றிச்செல்வ தில் ஓலா கார் ஒட்டுநர்-ஆட்டோ டிரைவர்கள் மோதல் ஏற்பட்டது.

    புதுவை பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் ஓலா நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தம் செய்து கார் ஓட்டி வருகிறார்.

    இந்த நிலையில்  சுற்றுலா பயணி ஒருவர் ஆன்லைன் மூலமாக கார் புக்கிங் செய்தார். இதையடுத்து அந்த பயணியை ஏற்றிச்செல்ல சரத்குமார் புதிய பஸ் நிலையம் அருகே காரை நிறுத்தி காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் சிலர் அங்கு வந்தனர்.

    அவர்கள் சரத்குமாரிடம் காரில் பயணியை ஏற்றிச்செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து சரத்குமாரை கையாலும் கல்லாலும் தாக்கினர்.

    மேலும் இனிமேல் இப்பகுதியில் காரை எடுத்து வந்து பயணிகளை ஏற்றிச்சென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து சரத்குமார் உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓலா கார் ஓட்டுநரை ஆட்டோ டிரைவரை தாக்கும் சம்பவம் சமூக வலைதலத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும்.
    • ரூ.300 கோடி வேலை திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.

    புதுச்சேரி:

    அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் புதுவை மாநிலக்குழு சார்பில் சட்டசபை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பழைய பஸ்நிலையம் அருகே தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் புதுவை செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத்தலைவர் லாசர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    புதுவை மாநில தலைவர் வின்சென்ட், பொருளாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர்கள் அரிதாஸ், விநாயகம், இன்னரசு, செல்வராசு, சிவசங்கரி, அன்பழகன், பரிமளா, ரமேஷ், தர்மசிவம், வளர்மதி, பானு, உமாசாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்.

    வீடற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப்பட்டா, வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும். பணியின்போது இறந்தால் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ரூ.300 கோடி வேலை திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.

    பேரணி அண்ணாசாலை, நேருவீதி வழியாக ஆம்பூர்சாலையை அடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
    • விளையாட்டு வீரர்களுக்கு 2017 முதல் 2023 வரை வழங்கவேண்டிய ஊக்கத்தொகை ரூ.8 கோடி விரைவில் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    சென்னையில் ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை விளையாட்டு போட்டி வருகிற 3-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடக்கிறது.

    போட்டிக்கான வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தி ஆக்கி போட்டி குறித்து மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இந்த கோப்பை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த கோப்பை புதுவை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கிற்கு எடுத்து வரப்பட்டது.

    ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.. அனிபால்கென்னடி, புதுவை ஆக்சி சங்க நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    புதுவை அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக தனி துறையும் உருவாக்கப்பட்டுள்ளது. புதுவை ஆக்கி மைதானம் சேதமடைந்துள்ளது. விரைவில் ரூ.7 கோடியில் மைதானம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு 2017 முதல் 2023 வரை வழங்கவேண்டிய ஊக்கத்தொகை ரூ.8 கோடி விரைவில் வழங்கப்படும்.

    புதுவை விளையாட்டு வீரர்கள் உலகளவிலும், தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    புதுவை நகர், கிராமப்புறங்களில் விளை யாட்டு மைதானங்களை சீரமைக்க ரூ.11 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரசின் ஒப்புதல் பெற்று மைதானங்கள் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • புதிய விதிமுறைகளை சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான கமிட்டி பின்பற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாணவர் பெற்றோர் நலச்சஙக தலைவர் வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ கலந்தாய்வு கமிட்டியின் அறிவுறுத்தலின் படி இந்த கல்வியாண்டில் 2023-24 முதல் கட்ட முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 8-ந் தேதி அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    இந்த கல்வியாண்டு 2023-24 மருத்துவ கலந்தாய்வு கமிட்டியின் புதிய விதிமுறைகளின் படி 1 மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வு 3-ம் கட்ட கலந்தாய்வு மற்றும் இறுதி கட்ட கலந்தாய் என 4 கலந்தாய்வினை இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் மாணவர் சேர்க்கை நடை பெறும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு கலந்தாய்வில் கலந்து கொண்டு இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்களும், இறுதிகட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.

    எனவே இந்த 2023-24 கல்வி ஆண்டு மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான கமிட்டி பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பி.எட். 2 ஆண்டு பட்ட படிப்புக்கு புதுவையை சேர்ந்த தகுதியான வர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை கூட்டுறவு கல்வியில் கல்லூரி முதல்வர் செந்தில்வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    புதுவை கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டின் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான பி.எட். 2 ஆண்டு பட்ட படிப்புக்கு புதுவையை சேர்ந்த தகுதியான வர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    கல்லூரி இணைய தளத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ளது. வருகிற 3-ந் தேதி முதல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான நகல், சான்றி தழ்களுடன் தபால் அல்லது நேரில் சமர்பிக்கலாம். இந்த பி.எட். படிப்பு சேர்க்கை கல்வி தகுதிகள், கட்டண விபரத்தை இணையதளம், கல்லூரியில் நேரில் அணுகி பெறலம்.

    வருகிற 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம். புதுவை மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு காலியிடங்கள் இருந்தால் பிற மாநில விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 8-ம் வகுப்பு மாணவிகள் பிரஜூஷா மற்றும் சின்மயா 2-ம் பரிசும் மற்றும் இருவரும் ஒற்றையர் பிரிவில் 3-ம் பரிசும் பெற்று சாதனை படைத்தனர்.
    • மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    புதுச்சேரி:

    பெத்தி செமினார் பள்ளியில் நினைவு பேரரங்கத்தில் முதலாவது பேராயர் சுழற் கோப்பைக்காண பேட்மிட்டன் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் 15-வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவிகள் பிரஜூஷா மற்றும் சின்மயா 2-ம் பரிசும் மற்றும் இருவரும் ஒற்றையர் பிரிவில் 3-ம் பரிசும் பெற்று சாதனை படைத்தனர்.

    சாதனை படைத்த மாணவிகள் புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியின் போது பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் உடன் இருந்தார்.

    • இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில செயலாளர் பிரவீன்குமார், துணை தலைவர் அபிஜித் கண்டன உரையாற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுகிறது என துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

    இந்த அறவிப்பை கண்டித்தும், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த க்கூடாது என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோபி தலைமை வகித்தார்.

    மாநில செயலாளர் பிரவீன்குமார், துணை தலைவர் அபிஜித் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் வந்தனா, சாய், விஜீஷ், நூருதீன் உட்பட மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • வருகிற ஆகஸ்ட் 27-ந் தேதி போட்டித்தேர்வு ந டைபெறும் என பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • சரியான பதிலுக்கு ஒரு மதிப்பெண், தவறான பதிலுக்கு 0.25 மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 165எல்.டி.சி, 55 ஸ்டோர் கீப்பர் கிரேடு 3 பணியிடங்களுக்கு கடந்த நவம்பரில் ஆன்லைனில் விண்ண ப்பங்கள் பெறப்பட்டது.

    மொத்தம் 47 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். எல்.டி.சி, ஸ்டோர்கீப்பர் பணியிடங்களுக்கு வருகிற ஆகஸ்ட் 27-ந் தேதி போட்டித்தேர்வு ந டைபெறும் என பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தேர்வுக்காக தேர்வு மையங்கள் இறுதி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இரு பணியிடங்களுக்கும் பிளஸ்-2 தேர்ச்சியே தகுதியாக உள்ளது.

    எனவே 2 பணிகளுக்கும் ஒரே முறையில் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    போட்டி தேர்வை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் எழுதலாம். 100 மதிப்பெண்களுக்கு 2 மணிநேரம் தேர்வு நடைபெறும். சரியான பதிலுக்கு ஒரு மதிப்பெண், தவறான பதிலுக்கு 0.25 மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.

    சமீபத்தில் யூ.டி.சி தேர்வில் தேர்ச்சி பெறாமல் மன அழுத்தத்தில் இருந்த இளைஞர்களுக்கு அடுத்தபடியாக எல்.டி.சி. தேர்வை உடனடியாக அறிவித்துள்ளது நம்பிக் கையை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை இளைஞர்கள் எல்.டி.சி, ஸ்டோர்கீப்பர் பணி தேர்வுக்கு உற்சாகமாக படிக்க தொடங்கியுள்ளனர்.

    • சிறார் பாதுகாப்பு அமைப்பினர் தவளக்குப்பம் அருகே கொருக்குமேடு கிராமத்தில் உள்ள கிருபாலயா பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்திரை பாளையம் பகுதியில் சுமார் 12 வயது சிறுமி குப்பை பொறுக்கிக் கொண்டு இருந்து வந்துள்ளார்.

    அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் அவரை மீட்டு சிறார் பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து சிறார் பாதுகாப்பு அமைப்பினர் தவளக்குப்பம் அருகே கொருக்குமேடு கிராமத்தில் உள்ள கிருபாலயா பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

    அங்கு அந்த சிறுமியை தங்க வைத்து ஆடைகள் வழங்கி, தனியார் பள்ளியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து அந்த சிறுமி பள்ளிக்கு சென்று படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த (வியாழக்கிழமை) பள்ளிக்குச் சென்று வந்தபின் சாப்பிட்டுவிட்டு சகமாணவிகளுடன் படுத்து தூங்கினாள்.

    பின்னர் காலையில் பார்த்த போது அந்த சிறுமி மயங்கி நிலையில் கிடப்பதை உடன் இருந்த மாணவிகள் பார்த்து பாதுகாவலரிடம் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அந்த மாணவியை உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.   இது சம்பந்தமாக தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×