என் மலர்
புதுச்சேரி

காப்பகத்தில் தங்கியிருந்த மாணவி மர்ம சாவு-போலீசார் விசாரணை
- சிறார் பாதுகாப்பு அமைப்பினர் தவளக்குப்பம் அருகே கொருக்குமேடு கிராமத்தில் உள்ள கிருபாலயா பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்திரை பாளையம் பகுதியில் சுமார் 12 வயது சிறுமி குப்பை பொறுக்கிக் கொண்டு இருந்து வந்துள்ளார்.
அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் அவரை மீட்டு சிறார் பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து சிறார் பாதுகாப்பு அமைப்பினர் தவளக்குப்பம் அருகே கொருக்குமேடு கிராமத்தில் உள்ள கிருபாலயா பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
அங்கு அந்த சிறுமியை தங்க வைத்து ஆடைகள் வழங்கி, தனியார் பள்ளியில் சேர்த்தனர்.
அங்கிருந்து அந்த சிறுமி பள்ளிக்கு சென்று படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த (வியாழக்கிழமை) பள்ளிக்குச் சென்று வந்தபின் சாப்பிட்டுவிட்டு சகமாணவிகளுடன் படுத்து தூங்கினாள்.
பின்னர் காலையில் பார்த்த போது அந்த சிறுமி மயங்கி நிலையில் கிடப்பதை உடன் இருந்த மாணவிகள் பார்த்து பாதுகாவலரிடம் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அந்த மாணவியை உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






