என் மலர்
உண்மை எது
இந்தியாவில் ஆன்லைன் கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் இலவச லேப்டாப் வழங்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் டிஜிட்டல் முறையில் மாறி வரும் நிலையில், மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் விர்ச்சுவல் கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் இலவச லேப்டாப் வழங்கப்பட இருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவுகளில் உண்மையில்லை என்றும், இலவச லேப்டாப் வழங்குவது பற்றி எந்த அறிவிப்பையும் மத்திய கல்வித்துறை இதுவரை வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு நிறுவனமான பி.ஐ.பி. (பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது.

முன்னதாக இந்தியாவின் 24 மாநிலங்களை சேர்ந்த சுமார் 2.96 கோடி மாணவர்கள் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் வசதி பெறவில்லை என மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதில் பீகார் மாநிலத்தில் அதிகபட்சமாக 1.43 கோடி மாணவர்களிடம் டிஜிட்டல் சாதனங்கள் இல்லை.
இதைத் தொடர்ந்து ஜார்கண்ட்டில் சுமார் 35.52 லட்சம், கர்நாடகாவில் சுமார் 31.31 லட்சம், அசாமில் சுமார் 31.06 லட்சமும், உத்தரகாண்டில் சுமார் 21 லட்சம் மாணவர்கள் டிஜிட்டல் சாதனங்களை இயக்கும் வசதி கொண்டிருக்கவில்லை.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
வெப்பநிலை வேறுபாட்டை குறிக்கும் புகைப்படங்கள் ஒரே நகரில் எடுக்கப்பட்டதாக கூறி இணையத்தில் பகிரப்படுகின்றன.
மரங்கள் அதிகம் உள்ள தெரு மற்றும் மரங்களே இல்லாத தெரு என இரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மரங்கள் அதிகம் உள்ள தெருவின் வெப்பநிலை குறைவாகவும், மரங்களே இல்லாத தெருவில் வெப்பநிலை அதிகமாகவும் உள்ளது போன்ற தகவலுடன் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
மரங்கள் இல்லாத தெருவின் வெப்பநிலை 36°C முதல் 50°C ஆகவும், மரங்கள் அதிகம் உள்ள தெருவின் வெப்பநிலை 18°C முதல் 26°C ஆகவும் இருக்கிறது என கூறி பலர் இந்த புகைப்படங்களை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இரு புகைப்படங்களும் ஒரே நகரில் எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், முதல் புகைப்படம் அமெரிக்காவின் இடாஹோவில் எடுக்கப்பட்டது என்றும் மற்றொரு புகைப்படம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் பதியில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் இரு புகைப்படங்களும் ஒரே நகரில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
அமெரிக்காவில் கொரோனாவைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதையொட்டி இணையத்தில் வைரலாகும் பகீர் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
அமெரிக்காவில் மீண்டும் கொரோனாவைரஸ் கோரத்தாண்டவம் ஆட துவங்கி இருக்கிறது. நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசி போடாதவர்களை முகாம்களில் தனிமைப்படுத்த அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டு இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அமெரிக்கர்கள், அதனை செலுத்திக் கொள்ளும் வரை தனிமைப்படுத்தி முகாம்களில் தங்க வைக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருக்கிறார்,' என கூறும் செய்தி தொகுப்பின் ஸ்கிரீன்ஷாட் வைரல் பதிவுகளுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அமெரிக்க அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்காததை கேலி செய்யும் வகையில் எழுதப்பட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை இணைய விஷமிகள் பகிர்ந்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.
உண்மையில் இதுபற்றிய செய்தி தொகுப்பு கேலி செய்திகளை வெளியிடும் தனியார் வலைதளம் ஒன்றில் ஜூன் 17 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. செய்தியில், 2022-க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தனிமை முகாம்களில் அடைக்க ஜோ பைடன் உத்தரவு,' எனும் தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
கொரோனா தொற்று தற்போது இருப்பதை விட பல்வேறு வேரியண்ட்களில் நம்மை பாதிக்க இருப்பதாக கூறும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுக்க கொரோனாவைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நீண்ட காலம் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து பல்வேறு வேரியண்ட்கள் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், சர்வதேச சதி திட்டத்தின் விளைவாக குறிப்பிட்ட தேதியில் கொரோனா புது வேரியண்ட்கள் வெளியிடப்பட்டு வருவதாக கூறும் பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் மக்கள் அச்சம் அடைந்து கொரோனா பாதிப்பில் சிக்காமல் இருக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள். இதன்மூலம் நோய் தொற்றை மிக எளிமையாக கட்டுப்படுத்த முடியும் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி மூலம் நம் உடலில் ஒ.எஸ். இன்ஸ்டால் செய்யப்பட்டு, 5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களை கட்டுப்படுத்த முடியும் என்ற தகவலும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் பதிவுகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும் கொரோனா வேரியண்ட் பெயர்கள் அடங்கிய பட்டியலில் உலக சுகாதார மையம், ஜான் ஹாப்கின்ஸ் பலக்லைகழகம், உலக பொருளாதார மையம், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷன் உள்ளிட்ட அமைப்புகளின் சின்னங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
இதுகுறித்த இணைய தேடல்களில் கொரோனாவைரஸ் தொற்று வேரியண்ட்களின் வெளியீட்டு விவரமும், தற்போதுள்ள வேரியண்ட் பரவல் தேதியிலும் பெரும் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற பட்டியல் கற்பனை நோக்கில் உருவாக்கப்பட்டவை என உலக சுகாதார மையம், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம், உலக பொருளாதார மையம், பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் பவுன்டேஷன் போன்ற அமைப்புகள் தெரிவித்து இருக்கின்றன.
இதுமட்டுமின்றி 5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனா பரவலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என உலக சுகாதார மையம் மற்றும் மத்திய அரசு சார்பில் பலமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதுசார்ந்த தவறான தகவல் கொரோனாதொற்று துவங்கியது முதல் இணையத்தில் வலம் வருகிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
மேக வெடிப்பு காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் 19 பேர் மாயமாகி இருக்கின்றனர்.
ஜம்மு கஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள பாதிப்பில் சிக்கி சில உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளின் போது எடுக்கப்பட்டதாக கூறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. புகைப்படங்கள் 'கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக 40 பேர் காணவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போதைய தகவல்களின்படி 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன,' தலைப்பில் பகிரப்பட்டு வருகின்றன.

புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை 2016 வாக்கில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. மேலும் இவை உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் போது எடுக்கப்பட்டவை ஆகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில், வைரல் புகைப்படங்கள் அடங்கிய செய்தி தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன.
அந்த வகையில், வைரல் புகைப்படங்கள் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. தற்போதைய தகவல்களின்படி ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சுமார் ஏழு பேர் உயரிழந்துள்ளனர். மேலும் 17-க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறும் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
மலை பிரதேசம் ஒன்றில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இமாச்சல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பலர் இந்த வீடியோ இமாச்சல பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதே வீடியோ மகாராஷ்டிரா மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறியும் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வீடியோவை இணையத்தில் தேடியபோது, இது பாகிஸ்தான் நாட்டில் உள்ள ககன் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் வலைதளகளில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி ககன் பள்ளத்தாக்கில் பல சுற்றுலா பயணிகள் கூடியதாக செய்தி வெளியிடுப்பட்டுள்ளன. அந்த வகையில் வைரல் வீடியோ இமாச்சல பிரதேசத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் துவக்க விழாவில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2021 துவக்க விழாவில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் பலர் ஒன்றிணைந்து மூவர்ண ஆடை அணிந்தபடி சூர்ய நமஸ்காரம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
வைரல் வீடியோ, 'டோக்கியோ ஒலிம்பிக் துவக்க விழாவில் நம் தேசிய கொடி நிறத்தாலான உடை அணிந்து சூர்ய நமஸ்காரம் செய்யப்படுகிறது' எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலர் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

வைரல் வீடியோவை இணையத்தில் தேடிய போது, அது மங்கோலியாவில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மங்கோலியா சென்ற போது ஆர்ட் ஆப் லிவிங் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோ மே 17, 2015 அன்று எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பிரியா மாலிக் தங்கம் வென்றதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்சில் மீராபாய் சானு இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்று இருக்கிறார். பெண்களுக்கான பளு தூக்குதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்த நிலையில், ரஸ்டலர் பிரியா மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
பிரியா மாலிக் தங்கம் வென்றதற்கு பலர் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பிரியா மாலிக் தங்கம் வென்றது உண்மை தான். ஆனால் அவர் கேடட் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். இதுவரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு பதக்கம் மட்டுமே வென்று இருக்கிறது.

ஹங்கேரியில் நடைபெற்று வரும் கேடட் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா மொத்தம் இரண்டு தங்க பதக்கங்களை வென்றது. 43 கிலோ மற்றும் 73 கிலோ எடை பிரிவுகளில் தானு மாலிக் மற்றும் பிரியா மாலிக் இறுதி போட்டிக்கு முன்னேறி தங்க பதக்கம் வென்றனர். இதுபற்றிய செய்தி தொகுப்புகள் ஜூலை 23 ஆம் தேதி பல்வேறு வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் பிரியா மாலிக் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என பிரான்ஸ் அதிபர் தெரிவித்ததாக கூறும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை வீட்டில் இருக்க உத்தரவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே தகவலை சில செய்தியாளர்களும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
"இனியும், என் உயிரை தியாகம் செய்யும் எண்ணம் இல்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவர்களுக்காக என் மகள்களின் இளமை மற்றும் கல்வி கற்கும் உரிமையை விட்டுக் கொடுக்கப்போவதில்லை." என மேக்ரான் தெரிவித்ததாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்த இணைய தேடல்களில் பிரான்ஸ் அதிபர் இதுபோன்ற கருத்தை தெரிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில், மேக்ரானிற்கு குழந்தைகளே இல்லை. மேக்ரானின் மனைவிக்கும் அவரது முந்தைய கனவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. இவர்களில் அனைவரும் 35 வயதை கடந்தவர்கள் ஆவர்.
மேலும் வைரல் பதிவுகளில் உண்மையில்லை என பலர் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். இத்துடன் முன்னதாக இதே தகவலை முழுமையாக உறுதிப்படுத்தாமல் பதிவிட்டதற்கு தனியார் ஊடக நிறுவன செய்தியாளர் மன்னிப்பு கேட்கும் வகையில் ட்வீட் செய்து இருக்கிறார். அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் கூறியதாக வைரலான தகவல்களில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வுக்கு இது தான் காரணம் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்துடன் எல்.பி.ஜி. சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வுக்கு மாநில அரசு தான் காரணம் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எல்.பி.ஜி. சிலிண்டருக்கு மத்திய அரசு 5 சதவீதமும், மாநில அரசு 55 சதவீதமும் வரி வசூலிக்கிறது என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த இணைய தேடல்களில் எல்.பி.ஜி. சிலிண்டர் ஜி.எஸ்.டி. பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது. எல்.பி.ஜி. சிலிண்டருக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டு அவை மத்திய மற்றும் மாநில அரசுகள் சரிபாதியாக பிரித்துக் கொள்கின்றன.

வைரல் பதிவுகளில் உள்ள வரி விவரங்களில் எல்.பி.ஜி. அல்லது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் எந்த மாநிலத்தின் வரி முறை என்றும் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் எல்.பி.ஜி. விலை வேறுபடும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் இலவச தடுப்பூசி வழங்கப்படுகிறது என அசாம் மாநிலத்துக்கான பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரமோத் சுவாமி ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். மேலும் மற்ற நாடுகளில் தடுப்பூசி கட்டண பட்டியல் ஒன்றையும் இணைத்திருக்கிறார். இவரது ட்விட்டர் பதிவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் இலவச தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூன் 7 ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்னதாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே இலவச தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்தியாவில் அரசு சார்பில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், தனியார் மருத்துவமனைகளில் கட்டண முறையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி கோவிஷீல்டு ரூ. 780, கோவாக்சின் ரூ. 1,410 மற்றும் ஸ்புட்நிக் வி ரூ. 1,145 விலையில் செலுத்தப்படுகிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
ஸ்ரீநகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பள்ளி சிறுமிகள் கல்வீசி தாக்குவதும், மறுபுறம் சிறுவர்கள் கையில் தேசிய கொடி ஏந்தி நிற்கும் காட்சிகள் அடங்கிய இரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகளின் ஆட்சி காலத்தில் காஷ்மீர் நிலை இதுதான் என கூறும் தகவலுடன் இரு புகைப்படங்களும் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இரு புகைப்படங்களை இணையத்தில் தேடிய போது, அவை பா.ஜ.க. ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. இதே புகைப்படங்கள் 2017 செய்தி தொகுப்பிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இவற்றை ஐரோப்பிய பிரஸ்போட்டோ ஏஜன்சியை சேர்ந்த செய்தியாளர் படமாக்கினார்.

உண்மையில் இந்த புகைப்படங்கள், காஷ்மீர் மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே ஏப்ரல் 26, 2017 அன்று ஸ்ரீநகர் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்டவை ஆகும். மேலும் ஏப்ரல் 15, 2017 முதல் அப்பகுதியில் பதற்ற சூழல் நிலவியது. பாதுகாப்பு படை மேற்கொண்ட ஆய்வின்போது மாணவர்கள் காயமுற்றதே இதற்கு காரணம் ஆகும்.
அந்த வகையில் வைரல் புகைப்படங்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது எடுக்கப்பட்டவை இல்லை என உறுதியாகி இருக்கிறது. உண்மையில் இந்த புகைப்படங்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டவை ஆகும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.






