என் மலர்
விருதுநகர்

சாத்தூர்:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அவர் பிரசாரம் செய்தபோது பேசியதாவது:-
தமிழ்நாட்டில் இப்போது நடக்கிற ஆட்சி துரோக ஆட்சி. இந்த தொகுதியில் ஒரு சண்டியர் அமைச்சர் இருக்கிறார்.
இப்போது இருக்கிறாரா? அமைச்சர் பதவிக்கு ஒரு மாண்புள்ளது. அதையெல்லாம் மறந்துவிட்டு தெரு சண்டைகாரர் மாதிரி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். சிவகாசியின் மகன் என்றார். ஆனால் சிவகாசியை விட்டு ராஜபாளைத்தில் நிற்கிறார்.
பழனிசாமி எப்படி வந்து சின்னம்மாவிடம் பதவி வாங்கினார்? என்று உங்களுக்கு தெரியும். கேட்டால் கோபம் வருது. துரோகம் பண்ணிட்டீங்க என்று சொன்னால் என் மீது வழக்கு போடுகிறார்கள்.

தெலுங்கு படத்தில் வரும் மந்திரவாதி மாதிரி ஒரு சட்டையை போட்டுகிட்டு கோவில் அரச மரங்களில் கயிறு கட்டுவதை போன்று கையில் கயிறு கட்டி கொண்டு இருக்கிறார்கள். 4 ஆண்டுகளாக போட்ட ஆட்டத்திற்கு முடிவு வந்து விட்டது. சாத்தூர் தொகுதி முதல் தமிழ்நாடு முழுவதும் இவர்களின் கதையை முடித்து விடுங்கள்.
துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு. இப்போது சந்ததி சாக்கில் ஒரு கட்சி வருகிறது. அண்ணன் வருகிறார், வெளிச்சம் தருகிறார் என்றார்கள். ஜாக்கிரதை யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து உள்ளவை என்று சொல்ற மாதிரி இருக்கிறது.
கஜானாவை அண்ணன் பழனிச்சாமி சுத்தமாக காலி செய்து விட்டார். ரூ. 6 லட்சம் கோடி வரை கடன்.அனைத்து தரப்பு மக்களும் தவியாய் தவிக்கிறார்கள். இவங்க பின்னாடி 50 பேர் பினாமிகள். அவர்களை வைத்து ஆட்சி நடத்ததுகிறார்.
நாடு தாங்குமா, கடவுளுக்கு பொறுக்குமா? மக்கள் வரி பணம் எங்கு சென்றாலும் மக்களிடமே வரும். புரட்சி தலைவர் அடையாளம் காட்டிய தீயசக்திகளை ஆட்சியில் கொண்டு வந்தீர்கள் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 30).
இவரது உறவினர் மணிகண்டன் (30). இருவரும் கூலித்தொழிலாளிகள். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் மனைவி கோபித்துக் கொண்டு லெட்சுமியாபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மனைவியை சமாதானப்படுத்துவதற்காக மணிகண்டன் அழகு முத்துவுடன் லெட்சுமியாபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அங்கு அவர்கள் சமாதானம் பேசினார்கள். அப்போது மணிகண்டனின் மனைவி தேர்தல் முடிந்ததும் வீட்டுக்கு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து மணிகண்டனும், அழகு முத்துவும் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது ஒரு அரசியல் கட்சி கூட்டத்துக்காக வந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்தது. அந்த வேனை முந்த முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வேன் மீது மோதி வேகத்தடைக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரிகாடில் விழுந்தனர்.
அழகுமுத்து தனது மடியில் மது பாட்டில் வைத்திருந்தார். கீழே விழுந்ததில் அந்த மது பாட்டில் உடைந்து அழகுமுத்து வயிற்றை கிழித்தது. இதில் அதிக அளவு ரத்தம் வெளியேறியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசார் வேன் டிரைவர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைஅடி வாரத்தில் உள்ளது வனப்பேச்சி அம்மன் கோவில். இது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குல தெய்வம் ஆகும்.
தேர்தலில் நிற்கும் போதும், மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும் ஓ.பன்னீர்செல்வம் இங்கு வந்து குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம்.
அதேபோல் நேற்று அவர் குலதெய்வம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சாத்தூர் சட்டமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகளின்படி வாகனத்தில் வரம்புக்கு மீறிய பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான சங்கரமூர்த்தி பட்டி பஸ் நிறுத்தம் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் ரூ.3 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு சென்றவர் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 50) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வாகனத்தை ஓட்டி வந்தவரையும், அவரிடமிருந்த பணத்தையும் சாத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேஷ், ராஜாமணி ஆகியோர் வசம் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விருதுநகர்:
தென்மாவட்டங்களில் இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து மதுரை வரை இந்த பணிகள் முடிவு பெற்ற நிலையில், மதுரையில் இருந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வழி தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது பணிகள் மீண்டும் வேகம் அடைந்தன.
பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு அடிக்கடி ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.விருதுநகர்-திருமங்கலம் இடையே பணிகள் நடைபெற்றதால் மதுரையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற சில ரெயில்கள் மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டன.
மேலும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மதுரையில் இருந்தே சென்னைக்கு இயக்கப்பட்டன. பகல் நேர பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற பணிகளின் காரணமாக சில நிலையங்களுக்கு இடையே ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து விட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம்- துலுக்கப்பட்டி பகுதியில் இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வும் நடத்தினார்.
இந்த நிலையில் அங்கு சிக்னல் அமைக்கும் பணி நேற்று நடைபெற இருப்பதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இந்த பணி காலையில் தொடங்கி மாலைக்குள் முடிந்துவிடும் என கருதியதால் ரெயில்கள் இயக்கத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் திட்டமிட்டப்படி சிக்னல் அமைக்கும் பணி முடிவடையவில்லை.
இதன் காரணமாக நேற்று தென்மாவட்ட ரெயில் சேவைகள் முற்றிலும் முடங்கியது. நெல்லை. கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடியில் புறப்பட்ட ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. புறப்படுவதற்கு முன்பே திட்டமிட்டு ரெயில்களை ரத்து செய்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது.
அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். தென்மாவட்டங்களில் இருந்து சென்னை புறப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை, முத்து நகர், கொல்லம், பொதிகை, அனந்தபுரி, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி போன்ற நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இன்று அதிகாலை வரை சிக்னல் அமைப்பு பணி சீர் செய்யப்படாததால் சுமார் 8 மணி நேரம் ரெயில்கள் ஒரே இடத்திலேயே நின்றன. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இதேபோல் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்பட்ட ரெயில்கள் அனைத்தும் கொடை ரோடு, கூடல்நகர், மதுரை, திருப்பரங்குன்றம் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இன்று அதிகாலை சிக்னல் அமைப்பு பணி முடிவடைந்ததை தொடர்ந்து ரெயில்கள் புறப்பட்டு சென்றன. நேற்று மாலை 6 மணிக்கு விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல வேண்டிய கொல்லம்-சென்னை எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3.45 மணிக்கு விருதுநகரில் இருந்து சென்றது.
4 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் விருதுநகர் நிலையத்தை கடந்தது. தொடர்ந்து கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, அனந்தபுரி, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வரிசையாக இயக்கப்பட்டன. அதன் பிறகு சென்னை ரெயில்கள் இயக்கப்பட்டன.

ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பெண்கள் கைக்குழந்தைகளுடன் பெரும் அவதிக்குள்ளானார்கள். இரவு முழுவதும் ரெயில் புறப்படாததால் உணவுக்கும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் பயணிகளுக்கும், ரெயில்வே துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்ட ரெயில்களில் இருந்த பயணிகள் அங்கிருந்த நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது. ரெயில் நிலையம் அல்லாமல் நடுவழியில் நின்ற ரெயில்களில் இருந்தவர்கள் குடிக்க தண்ணீர் வசதியின்றி மிகவும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், திருமங்கலம்- துலுக்கப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் இணைப்பு பணி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.
மதுரை கோட்டத்தை பொறுத்தவரை மின்னணு அடிப்படையில்தான் ரெயில்களின் இயக்கம் அமலில் இருந்தது. தற்போது அவரை கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
அதற்கான பணியில் தொழில்நுட்ப கோளாறு திடீரென ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் சென்னை செல்லும் கொல்லம், பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி, செந்தூர் சிறப்பு ரெயில்கள் மற்றும் நாகர்கோவில்-பெங்களூர் சிறப்பு ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் சென்னை மற்றும் கோவை, பெங்களூர், டெல்லி நிஜாமுதீனில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் ரெயில்களும் தாமதமாகவே இயக்கப்பட்டன. அதிகாலை 3 மணியில் இருந்து ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன என்றார்.






