என் மலர்
செய்திகள்

சிக்னல் அமைக்கும் பணியால் நடுவழியில் நின்ற ரெயில்கள் - 8 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது
விருதுநகர்:
தென்மாவட்டங்களில் இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து மதுரை வரை இந்த பணிகள் முடிவு பெற்ற நிலையில், மதுரையில் இருந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வழி தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது பணிகள் மீண்டும் வேகம் அடைந்தன.
பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு அடிக்கடி ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.விருதுநகர்-திருமங்கலம் இடையே பணிகள் நடைபெற்றதால் மதுரையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற சில ரெயில்கள் மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டன.
மேலும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மதுரையில் இருந்தே சென்னைக்கு இயக்கப்பட்டன. பகல் நேர பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற பணிகளின் காரணமாக சில நிலையங்களுக்கு இடையே ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து விட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம்- துலுக்கப்பட்டி பகுதியில் இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வும் நடத்தினார்.
இந்த நிலையில் அங்கு சிக்னல் அமைக்கும் பணி நேற்று நடைபெற இருப்பதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இந்த பணி காலையில் தொடங்கி மாலைக்குள் முடிந்துவிடும் என கருதியதால் ரெயில்கள் இயக்கத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் திட்டமிட்டப்படி சிக்னல் அமைக்கும் பணி முடிவடையவில்லை.
இதன் காரணமாக நேற்று தென்மாவட்ட ரெயில் சேவைகள் முற்றிலும் முடங்கியது. நெல்லை. கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடியில் புறப்பட்ட ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. புறப்படுவதற்கு முன்பே திட்டமிட்டு ரெயில்களை ரத்து செய்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது.
அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். தென்மாவட்டங்களில் இருந்து சென்னை புறப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை, முத்து நகர், கொல்லம், பொதிகை, அனந்தபுரி, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி போன்ற நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இன்று அதிகாலை வரை சிக்னல் அமைப்பு பணி சீர் செய்யப்படாததால் சுமார் 8 மணி நேரம் ரெயில்கள் ஒரே இடத்திலேயே நின்றன. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இதேபோல் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்பட்ட ரெயில்கள் அனைத்தும் கொடை ரோடு, கூடல்நகர், மதுரை, திருப்பரங்குன்றம் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இன்று அதிகாலை சிக்னல் அமைப்பு பணி முடிவடைந்ததை தொடர்ந்து ரெயில்கள் புறப்பட்டு சென்றன. நேற்று மாலை 6 மணிக்கு விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல வேண்டிய கொல்லம்-சென்னை எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3.45 மணிக்கு விருதுநகரில் இருந்து சென்றது.
4 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் விருதுநகர் நிலையத்தை கடந்தது. தொடர்ந்து கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, அனந்தபுரி, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வரிசையாக இயக்கப்பட்டன. அதன் பிறகு சென்னை ரெயில்கள் இயக்கப்பட்டன.

ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பெண்கள் கைக்குழந்தைகளுடன் பெரும் அவதிக்குள்ளானார்கள். இரவு முழுவதும் ரெயில் புறப்படாததால் உணவுக்கும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் பயணிகளுக்கும், ரெயில்வே துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்ட ரெயில்களில் இருந்த பயணிகள் அங்கிருந்த நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது. ரெயில் நிலையம் அல்லாமல் நடுவழியில் நின்ற ரெயில்களில் இருந்தவர்கள் குடிக்க தண்ணீர் வசதியின்றி மிகவும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், திருமங்கலம்- துலுக்கப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் இணைப்பு பணி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.
மதுரை கோட்டத்தை பொறுத்தவரை மின்னணு அடிப்படையில்தான் ரெயில்களின் இயக்கம் அமலில் இருந்தது. தற்போது அவரை கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
அதற்கான பணியில் தொழில்நுட்ப கோளாறு திடீரென ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் சென்னை செல்லும் கொல்லம், பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி, செந்தூர் சிறப்பு ரெயில்கள் மற்றும் நாகர்கோவில்-பெங்களூர் சிறப்பு ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் சென்னை மற்றும் கோவை, பெங்களூர், டெல்லி நிஜாமுதீனில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் ரெயில்களும் தாமதமாகவே இயக்கப்பட்டன. அதிகாலை 3 மணியில் இருந்து ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன என்றார்.






