என் மலர்tooltip icon

    விருதுநகர்

    காரியாபட்டி போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, சாமிக்கண்ணு, செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி அச்சம்பட்டி, பழைய தீப்பெட்டி ஆபீஸ் கட்டிட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காரியாபட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 2 பேர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் காரியாபட்டியை சேர்ந்த சாமிக்கண்ணு (வயது 75), சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூரைச்சேர்ந்த செல்வகுமார் (42) என்பதும், அவர்கள் விற்பனைக்காக 10 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காரியாபட்டி போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, சாமிக்கண்ணு, செல்வகுமார் ஆகியோர் மீது காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு பகுதியில் உள்ள காட்டழகர் கோவில், ராஜபாளையம் அய்யனார் கோவில், வத்திராயிருப்பு பகுதியில் சுந்தரமகாலிங்கம் கோவில் பகுதிகளில் சாம்பல் நிற அணில்கள் ஏராளமாக வசித்து வருகின்றன.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை சூழல் கொண்ட பகுதி ஆகும். இந்த இடம் வளமான அரியவகை உயிரினங்களை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது.

    இங்கு சாம்பல் நிற அணில் உயிரின உய்விடம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பகுதி மழை தட்ப வெப்ப நிலையில் பலவித மாறுபாடுகளை கொண்டுள்ளதாகும்.

    இந்த வனப்பகுதி, யானை, மான், வரையாடு, புலி, சிங்கவால் குரங்கு, கரடி, காட்டெருமை, சாம்பல் நிற அணில்கள் ஆகியவற்றின் வாழ்விடமாக திகழ்கிறது.

    மலையின் மடிப்புகள், அகன்ற புல்வெளி, அமைதியான ஆறு, சீறிப்பாயும் சிற்றாறு என பல அம்சங்களை கொண்ட இப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் ஏராளமாக வசித்து வருகிறது.

    அழிந்து வரும் வன விலங்குகளின் பட்டியலில் உள்ள சாம்பல் நிற அணில்கள் குட்டி போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி இனத்தை சேர்ந்தது. ஆண்டுக்கு ஒரு குட்டி வீதம் ஈனும் இதன் கர்ப்பகாலம் 35 முதல் 40 நாட்கள் வரை ஆகும். இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது முதுகில் சாம்பல் நிறமும், மூக்குப் பகுதியில் சிவப்பு நிறமும், வால் நீண்டு வயிறு பெருத்து காணப்படும்.

    தற்போது மலையில் உள்ள இயல்பான சீதோஷ்ணம் மற்றும் பல்வேறு காரணங்களால் இதன் எண்ணிக்கை பெருகியுள்ளது. இந்த வகை அணில்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் உணவு தேடி வெளியே வரும்.

    சாம்பல் நிற அணில்கள் ஆற்றோரம் உள்ள மரங்களில் கூடுகட்டி வசிக்கும். மாம்பழம் புளியம் பழம் மற்றும் இளம் தளிர்களை உணவாக உட்கொண்டு வாழும்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு பகுதியில் உள்ள காட்டழகர் கோவில், ராஜபாளையம் அய்யனார் கோவில், வத்திராயிருப்பு பகுதியில் சுந்தரமகாலிங்கம் கோவில் பகுதிகளில் இந்த சாம்பல் நிற அணில்கள் ஏராளமாக வசித்து வருகின்றன.

    1972-ம் ஆண்டின் வன விலங்குகள் வேட்டை தடுப்பு சட்டப்படி இவற்றை பிடித்தாலும், வேட்டையாடினாலும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

    இந்த வகை அணில்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் இந்த வகை அணில்களை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

    தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 4 நாட்களாக வயிற்று வலி காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை தனது மனைவி மகேஸ்வரியிடம் வேலைக்கு செல்வதாகச் சொல்லி சென்று விட்டார். மகேஸ்வரியும் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வருவதால் அவரும் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று மதியம் மகேஸ்வரி வீடு திரும்பியபோது வீடு உள் பக்கமாக பூட்டி இருந்தது. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லட்சுமணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு மகேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரசு ஆஸ்பத்திரிகளில் 1,528 படுக்கையில் உள்ள நிலையில் 248 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், 1,280 படுக்கைகள் காலியாக உள்ளன.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 44,133 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42,233 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 88 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 780 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 1,528 படுக்கையில் உள்ள நிலையில் 248 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், 1,280 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,740 படுக்கைகள் உள்ள நிலையில் 75 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் 1,765 படுக்கைகள் காலியாக உள்ளன. நேற்று மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது விருதுநகர் ஆமத்தூர் பாண்டியன் நகர் என்.ஜி.ஓ. காலனி, வெள்ளூர், தாதம்பட்டி, சூலக்கரை, முத்துராமன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பாலையம்பட்டி, மீனாட்சிபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, வீரசோழன், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 22 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநில பட்டியலில் 82 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு 2 சதவீதமாக இருந்தது.
    ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு சேகர் மற்றும் போலீஸ்காரர் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் பாலமுருகனை தாக்கி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 15-ந் தேதி அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 மளிகை பொருள் தொகுப்பினை உடனடியாக வழங்குமாறு ரேஷன் கடை ஊழியருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது, அங்கு பணியில் இருந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு சேகர் மற்றும் போலீஸ்காரர் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் பாலமுருகனை தாக்கி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் பாலமுருகனின் உறவினர்கள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதில் போலீசார் இருவரும் பாலமுருகனை பூட்ஸ் காலால் உதைத்து தாக்கியது தெரியவந்தது.

    இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் விசாரணை மேற்கொண்டு போலீஸ் ஏட்டு சேகர் மற்றும் முதல்நிலை போலீஸ்காரர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
    விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 44,049 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42,074 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    நேற்று மட்டும் 110 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 784 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,528 படுக்கைகள் உள்ள நிலையில் 1,249 படுக்கைகள் காலியாக உள்ளன. 279 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சிகிச்சை மையங்களில் 1,842 படுக்கைகள் உள்ள நிலையில் 97 படுக்கைகளில் நோய் பாதிக்கப்படோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,745 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர், சூலக்கரை, ரோசல்பட்டி, அல்லம்பட்டி, பட்டேல் ரோடு, என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் திருச்சுழி, பந்தல்குடி, கரிசல்குளம், கோவிலாங்குளம், கடம்பன்குளம், பனையூர், சொக்கநாதன்புத்தூர், வத்திராயிருப்பு, ஆனைக்குட்டம், ஜமீன் சத்திரப்பட்டி, சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

    மாவட்ட பட்டியலில் 52 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப்பட்டியலில் 91 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 2.5 ஆக உள்ளது.
    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிணற்றில் குளிக்க சென்ற 6-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் பிரவீன்குமார் (வயது11). 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இவன் அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தான்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சாத்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சந்திரா. இவரது மகள் முனீஸ்வரி (வயது26). இவரும், தாயில் பட்டியைச் சேர்ந்த ராம்குமார் (29) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர்.

    இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் முனீஸ்வரி கணவரை பிரிந்து சாத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மனைவியை பார்க்க ராம்குமார் வந்தார். அவர் முனீஸ்வரியை வீட்டுக்கு வருமாறு கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராம்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முனீஸ்வரியை குத்தினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சந்திரா, அவரது தங்கை மாரியம்மாள் என்ற ஆயிரம் மாரியம்மாள் (55) ஆகியோர் ஓடி வந்து தடுக்க முயன்றனர்.

    இதில் அவர்களுக்கும் கத்திக்குத்து விழுந்தது. 3 பேரையும் கத்தியால் குத்தி விட்டு ராம்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த மாரியம்மாள் என்ற ஆயிரம் மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். முனீஸ்வரி, சந்திரா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சாத்தூர் அருகே உள்ள படர்ந்தால் கிராமத்தில் கணவர் வைரமுத்துவுடன் வசித்து வந்த மாரியம்மாள் என்ற ஆயிரம் மாரியம்மாள் சகோதரியை பார்ப்பதற்காக வந்த இடத்தில்தான் கத்திக் குத்தில் பலியாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, சப்- இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி தப்பி ஓடிய ராம்குமாரை கைது செய்தனர்.

    அருப்புக்கோட்டையில் ஊரடங்கினால் சேலைகள் விற்க முடியாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் வாழ்வாதாரம் இழந்து தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.
    அருப்புக்கோட்டை:


    விருதுநகர் மாவட்டத்தில் நெசவுக்கு, ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்ற ஊராக அருப்புகோட்டை திகழ்கிறது. இங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யும் சேலைகள் குஜராத், ஒரிசா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு கடந்த 40 நாட்களுக்கு மேலாக நெசவுத்தறி கூடங்கள் மற்றும் ஜவுளிக்கடைகளை திறக்க அனுமதி மறுத்துள்ளது.

    இதனால் அருப்புக்கோட்டையில் உற்பத்தி செய்யப்பட்ட சேலை ரகங்கள் ஜவுளிக்கடைகள் மூடியதால் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடக்கின்றன. கோடிக்கணக்கான சேலைகள் தேங்கி கிடப்பதால் நெசவு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    எனவே ஜவுளி கடைகளை உடனே திறந்து தேங்கி கிடக்கும் சேலைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

    இவர்கள் தயாரித்த சேலை ரகங்களை விற்க முடியாமலும், தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாமலும், நெசவு செய்த கூலித் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமலும் திணறி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவு கூலித்தொழிலாளர்கள் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா ஊரடங்கினால் நாங்கள் தயாரித்த சேலைகளை விற்க முடியாமல் உள்ளோம். எனவே ஜவுளிக்கடைகளை உடனே திறந்து ஜவுளி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கூலி நெசவுத்தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கியது போல் இந்த ஆண்டும் வழங்க வேண்டும். மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைத்து அதன்மூலம் ஓய்வூதிய திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகை, உற்பத்தி செய்த சேலை ரகங்களை விற்பனை செய்ய ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். நூல் வங்கிகள் அமைத்து நெசவாளர்களுக்கு மானிய விலையில் நூல்கள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 43,957 உயர்ந்துள்ளது. இதுவரை 42,675 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    நேற்று மட்டும் 148 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 803 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 6 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.

    சிகிச்சை மையங்களில 1,853 படுக்கைகள் உள்ள நிலையில் 119 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,734 படுக்கைகள் காலியாக உள்ளன.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 1528 படுக்கைகள் உள்ள நிலையில் 300 படுக்கைகளில் நோய் பாதிக்கப்படட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,228 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் சத்திர ரெட்டியப்பட்டி, சூலக்கரை, அல்லம்பட்டி, பாண்டியன் நகர், என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் நரிக்குடி, புலியூரான், சிங்காரத்தோப்பு, கோவிலாங்குளம், இலுப்பைக்குளம், ஒட்டன் குளம், மகாராஜபுரம், நத்தம்பட்டி, சாமிநத்தம், சிந்தபூளி, இளந்திரைகொண்டான், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சொக்கநாதன்புதூர், மகாராஜபுரம், மணியம்பட்டி, வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்ட பட்டியலில் 61 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பட்டியலில் 98 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 2.5 ஆகும்.
    வெடிவிபத்தின் காரணமாக அந்த வீட்டில் எரிந்த தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதில் 15 பேரின் வீடுகள் சேதம் அடைந்தன.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியில் கலைஞர் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது45). இவர் தனது வீட்டில் ஆட்களை வைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்தார். அவரது வீட்டையொட்டி அக்கம்பக்கத்தில் பல வீடுகள் உள்ளன.

    நேற்று காலை 8 மணிக்கு அவர் வீட்டில் வழக்கம்போல் பேன்சி ரக வெடி தயாரிக்கும் பணி நடைபெற்றது.

    இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த சூர்யா (38), அப்போலோ என்பவரின் மனைவி செல்வமணி (35), காளீஸ்வரன் என்பவரின் மனைவி கற்பகவள்ளி (30) ஆகிய 3 பேர் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து செல்வமணியை பார்க்க அவருடைய மகன் ரெகோபெயம் சல்மான் (5) அங்கு சென்றிருந்தான்.

    அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் மொத்தமாக வெடித்து சிதறின.

    இந்த விபத்தில் சிறுவன் ரெகோபெயம் சல்மான் உள்பட 4 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். செல்வமணியின் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. இதற்கிடையே வெடிவிபத்தின் காரணமாக அந்த வீட்டில் எரிந்த தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதில் 15 பேரின் வீடுகள் சேதம் அடைந்தன. இதில் அந்த வீடுகளில் இருந்த 3 பேர் காயம் அடைந்தனர். தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.

    சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த கற்பகவள்ளி 4 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
    சாத்தூர் அருகே வெடிவிபத்தால் 3 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது  ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

    இந்த வெடிவிபத்தில் சிக்கி மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதேபோல் வெடிவிபத்தால் அருகே இருந்த 3 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன.

    வெடிவிபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×