என் மலர்tooltip icon

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள பெரியகுளம் கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு போனதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் பெரியகுளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை நம்பி 800-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்து கோடை அறுவடையை முடித்தனர்.

    இந்த ஆண்டு பருவமழை இன்னும் தொடங்காத சூழ்நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் முழுவதும் குறைந்து வறண்டு போய் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் எண்ணற்ற பேர் விவசாயத்தை நம்பி தான் பிழைத்து வருகிறோம். பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிணற்றில் இருந்தாலும் கை கொடுப்பது கண்மாய்களில் உள்ள தண்ணீர் தான்.

    பெரியகுளம் கண்மாயை நம்பி நிறைய பேர் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தநிலையில் தற்போது இந்த கண்மாயில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    முதல் போக நெல் நடவிற்கு போதுமான தண்ணீர் கிணறுகளில் இருப்பதால் நெல் நாற்று நடவு பணியை தொடங்கியுள்ளோம். பருவமழை இன்னும் தொடங்கவில்லை. எனவே தற்போது விவசாய பணியினை கிணற்றுப்பாசனம் மூலம் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் பருவமழை பெய்து நீர்நிலைகளிலும், கண்மாய்களிலும் தண்ணீர் வந்தால் மட்டுமே இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை இன்றி நெல் விவசாய பணியினை தொடர்ந்து மேற்கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் மாயமானதையடுத்து அவனை தேடும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள கம்மவார் காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் வெற்றிவேல் (வயது14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருந்த அவர் திடீரென மாயமானார். இதை தொடர்ந்து சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் விருதுநகரில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நவீன நீர்மூழ்கி கேமராவை கொண்டு இரவு 8 மணி வரை மாணவனை தேடினர். அதன் பின்னர் கிணற்றில் இருக்கும் தண்ணீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றி மாணவனை தேடும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த பணி இரவில் நீண்ட நேரம் நீடித்தது.

    மாயமான மாணவன் கதி என்னவென்று தெரியாததால் அவருடைய பெற்றோர், குடும்பத்தினர் பரிதவித்தனர்.


    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வாழ்க்கையில் வெறுப்படைந்த கணவன், மனைவி 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள மேலூர் துரைசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவரது மனைவி தேவி (33). இவர்களுக்கு குருதர்ஷினி (7), தேவதர்ஷினி (1) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    குமார் கேரளாவில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் அங்கேயே வசித்துவந்தார். அப்போது அங்கு ரூ.10 லட்சம் ஒத்திக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

    தற்போது ஊருக்கு வந்த அவர்கள், வீட்டை காலி செய்துவிட்டனர். ஆனால் வீட்டு உரிமையாளர் ரூ. 10 லட்சத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த குமார், வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்துவிட்டால் குடும்பம் நிற்கதியாகிவிடும் என கவலைப்பட்ட அவர், மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுக்க திட்டமிட்டார்.

    அதன்படி மனைவியிடம் தனது நிலையை கூறியுள்ளார். பின்னர் கணவனும், மனைவியும் இரு குழந்தைகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் தாங்களும் அதனை குடித்துவிட்டனர்.

    இன்று காலை 4 பேரும் நீண்ட நேரமாக வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் பார்த்த போதுதான் வி‌ஷம் குடித்திருப்பது தெரியவந்தது. உடனடியாக குமார் மற்றும் அவரது மனைவி உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இரு குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பாத்திமா நகர் பூங்கா தெருவை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 32). புகைப்படத் தொழில் செய்து வரும் இவரது மனைவி திவ்யா (30). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ப்ரீத்தி (9), சஷ்டிகா ஸ்ரீ (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். திவ்யா அழகு நிலையம் நடத்தி வருகிறார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் திவ்யா தனது குழந்தைகளுடன் இந்நகர் கே.கே.எஸ்.எஸ்.என் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றுள்ளார். ஆனால் அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை. இரவில் கணவர் வீட்டிற்கும் வரவில்லை.

    இந்தநிலையில் மகேஷ் குமார், இந்நகர் பஜார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ராஜபாளையம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுரை ரோட்டில் உள்ள டாஸ்மாக்கடையின் பின்புறம் அனுமதியின்றி மது விற்பனை செய்வது தெரியவந்தது. அங்கு மதுவிற்ற பெரியகடை பஜார் தெருவை சேர்ந்த செல்வக்குமார் மகன் சரவணன் (வயது 28) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 73 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் வேட்டை வெங்கடேசபெருமாள் கோவில் பகுதியில் மது விற்ற சங்கரபாண்டியபுரம் தெருவை சேர்ந்த விநாயகம் மகன் ராஜகுரு (36) என்பவரிடம் 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்த தெற்கு போலீசார் அவரை கைது செய்தனர்.
    நீர்பிடிப்பு பகுதியில் சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள கான்சாபுரம், அத்திகோவில், நெடுங்குளம், ரஹ்மத் நகர், கிழவன் கோவில், சேது நாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் விவசாயம் செய்வதற்கு போதுமான தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சினை இன்றி மகிழ்ச்சியாக முதல் போக நெல் சாகுபடியை தற்போது விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு பணிகளை தொடங்கி உள்ளோம். நீர்பிடிப்பு பகுதியில் சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

    தற்போது கண்மாய்களில் நீர் குறைந்து வருவதால் சற்று வேதனையாக இருந்தாலும் கிணற்று நீரை வைத்து நடவு பணியை தொடங்கியுள்ளோம். எந்திர நடவு மற்றும் ஆட்களை கொண்டு நடவு பணியினை தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் பூவாணியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    கூட்டுறவு மில் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்று விட்டது. இந்த விபத்தில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் இறந்த ஆனந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனந்த் மீது மோதி விட்டு சென்ற வாகனம் எது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருதுநகரில் மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் சூலக்கரை மேடுதாதம்பட்டி ரோட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன் (வயது 25). இவருக்கும், பாலவநத்தத்தைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும் திருமணமானது. தற்போது கார்த்திகா 8 மாத கர்ப்பமாக உள்ளார்.

    அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு கார்த்திகாவை அவரது பெற்றோர் அழைத்து சென்று விட்டனர்.

    இது மணிகண்டனுக்கு வேதனையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தனது தந்தையிடம் சொல்லி வருத்தப்பட்டார். மேலும் வெளியூரில் இருக்கும் தனது அண்ணன் நாகராஜ் என்பவரிடமும் சொல்லி வேதனைபட்டார். அவர் தம்பியை சமாதானம் செய்தார்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூலக்கரை போலீசார் விரைந்து சென்று பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    காரியாபட்டி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி:

    திருச்சுழி தாலுகா, இலுப்பைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 49). இவரும், இவருடைய உறவினர் முனியாண்டி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விதை நெல் வாங்குவதற்காக காரியாபட்டிக்கு வருவதற்கு கல்யாணிபுரம் விலக்கு அருகே வந்துகொண்டிருந்தனர். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வசந்தாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்த முத்துமாரியப்பன் (வயது 40) , சிலம்பரசன் (35) , சிதம்பரம் (40), கருப்புசாமி (42) ஆகியோர்களிடமிருந்து தலா 20 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
    விருதுநகர் அருகே டாஸ்மாக் கடையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஜெயிலர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள காரியாபட்டி வில்லிபத்திரி பஞ்சாயத்து தலைவியாக இருந்து வருபவர் முத்துலட்சுமி.

    கடந்த தேர்தலின்போது இந்த பஞ்சாயத்தில் உள்ள 9 வார்டுகளில் 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 6 வார்டுகளில் தேர்தல் நடக்கவில்லை.

    இந்த தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தாரணி என்பவர் தோல்வி அடைந்தார். 6 வார்டுகளுக்கு வருகிற 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தாரணி தரப்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக முத்துலட்சுமி தரப்பினருக்கும், தாரணி தரப்பினருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் முத்துலட்சுமி மகன் பொன்னுப்பாண்டி (24), அவரது நண்பர் முருகன் ஆகியோர் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். அங்கு தாரணி ஆதரவாளரான கார்த்திக், செல்வம் ஆகியோர் வந்தனர். கார்த்திக் அருப்புக்கோட்டை சப்ஜெயிலில் ஜெயிலராக பணியாற்றி வருகிறார்.

    டாஸ்மாக் கடையில் இருதரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் பொன்னுப்பாண்டியும், முருகனும் தாக்கப்பட்டனர். இந்த மோதலில் பொன்னுப்பாண்டி படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் ஜெயிலர் கார்த்திக் மற்றும் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜெயிலர் கார்த்திக் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

    இந்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சுழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
    காரியாபட்டி:

    திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 47). இவருக்கு திருமணம் முடிந்து இவரது கணவருடன் மதுரை அருகே உள்ள பூவந்தி கிராமத்தில் ஒரு விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வருவதாகவும், மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே தனது சொந்த ஊருக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது சொந்த கிராமம் தும்மசின்னம்பட்டிக்கு வந்து விட்டு பின்னர் பூவந்திக்கு வேலைக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மாரியம்மாளின் அக்கா பஞ்சவர்ணம் போன் செய்து உன் வீடு திறந்து கிடப்பதாகவும், பீரோ உடைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

    இதையடுத்து மாரியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. பின்னர் வீட்டில் இருந்த ரூ.5000 மதிப்புள்ள 3 கிராம் எடை கொண்ட ஒரு ஜோடி தோடு திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அதேபோல மாரியம்மாள் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முத்துராஜ் மனைவி திருமேனி செல்வி வீட்டில் ரூ. 5 ஆயிரம், தர்மர் என்பவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×