என் மலர்tooltip icon

    விருதுநகர்

    அமாவாசை நாளான இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    தாணிப்பாறை வனத்துறை காலை 6.30 மணிக்கு கேட் திறக்கப்பட்டதும் பக்தர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தபின்னர் மலையேறி சாமிதரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்தனர். மதியம் 12.30மணியிலிருந்து 2மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

     பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவார பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    விருதுநகர் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது.
    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள செம்பொன்நெருஞ்சியை சேர்ந்தவர் மீனா(வயது 23). இவருக்கும் விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    2 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மீனா கணவரை பிரிந்துவந்து விட்டார். அதன் பிறகு கருப்பசாமி நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருச்சுழியில் அவருடன் 3 ஆண்டுகள் வசித்து வந்தார்.

    அதன் பிறகு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நத்தகுளத்தை சேர்ந்த கார்மேகத்துடன் பழக்கம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

     இந்த நிலையில் கார்மேகம் வேறுபெண்ணை திருமணம் செய்யமுயன்றதை மீனா தட்டிகேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் கார்மேகம் சோளக்காட்டில் வைத்து தன்னை கத்தியால் குத்தியதாக திருச்சுழி போலீசில் புகார் செய்தார். காயமடைந்த அவர் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலியல் வன்கொடுமை நடந்து வீடியோ எடுத்ததாக கூறப்படும் விருதுநகர் பெத்தனாச்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு ஹரிஹரன், ஜூனத் அகமது ஆகிய இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
    விருதுநகர்:

    விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேர் மற்றும் 4 சிறுவர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மதுரை மத்திய சிறையிலும், சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். விருதுநகர் பாண்டியன்நகர் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்டிருந்த இந்த வழக்கு, முதலமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். மேலும் தங்களின் விசாரணையை துரிதப்படுத்தினர். முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

    இந்தநிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் எடுத்தனர். அவர்களிடம் நேற்று முன்தினம் முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் விருதுநகர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் மட்டுமின்றி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

    கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் என ஏராளமானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கைதானவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று 3-ம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலியல் வன்கொடுமை நடந்து வீடியோ எடுத்ததாக கூறப்படும் விருதுநகர் பெத்தனாச்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு ஹரிஹரன், ஜூனத் அகமது ஆகிய இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சில இடங்களுக்கும் அவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மருந்து குடோனில் சில இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை ஊசிகள் மற்றும் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது தொடர்பான தகவல்களை தெரிவிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறுத்து விட்டனர்.



    மத்திய அரசு உடனடியாக பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளில் பேண்டேஜ் மருத்துவத் துணி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. உலக அளவில் பேண்டேஜ் உற்பத்தியில் இப்பகுதி முக்கிய இடம் வகிக்கின்றது.

    சமீப காலமாக இந்தியா முழுவதும் பருத்தி, பஞ்சு, நூல் விலை கடுமையான ஏற்றம் காரணமாக தற்போது கடுமையான சரிவை பேண்டேஜ் மருத்துவத் துணி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

    கடந்த மூன்று மாத காலத்திற்கு முன்பு வரை 356 கிலோ கொண்ட நூல்கண்டு ஒன்றுக்கு ரூ.56,000 வரை இருந்த நிலை மாறி, கடந்த மூன்று மாத காலத்திற்குள் கண்டு விலை ரூ.90,000 எட்டியுள்ளது.

    இந்த விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசு பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் எனவும், பஞ்சு விலையை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயத்தை மாற்றி அமைக்கலாம் எனவும் இப்பகுதியைச் சேர்ந்த பேண்டேஜ் உற்பத்தி தொழில் அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் விசைத்தறிகளில் பேண்டேஜ் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்துதான் அனுப்பப்பட்டு வருகின்றன.

    கடந்த 3 மாத காலத்திற்கு முன்பு பேண்டேஜ் அனுப்புவதற்கு ஆர்டர் எடுத்த நிலையில் அந்த விலையிலிருந்து கடுமையான விலை உயர்ந்து தற்போது அதே விலைக்கு சரக்குகளை அனுப்ப இயலாத நிலை உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

    இதே நிலை நீடித்தால் இந்த தொழிலில் கடுமையான பாதிப்பு இருக்கும் எனவும், சாதாரண ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பேண்டேஜ் விலை உயர்வால் ஏற்கனவே விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்ற பொதுமக்கள் இந்த விலை உயர்வால் மேலும் சிக்கலைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

    எனவே மத்திய அரசு உடனடியாக பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும், மாநில அரசு மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் தந்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் இப்பகுதி தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகரில் நகராட்சி கூட்டத்தை எம்.எல்.ஏ. நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
    விருதுநகர்

    விருதுநகர்  நகரசபை கூட்டம் அதன் தலைவர் மாதவன்  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  துணைத்தலைவர் தனலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பார்வையாளர்களாக பங்கேற்க வேண்டுமென தமிழகஅரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.

    அவருக்கு நகராட்சி தலைவருக்கு அருகில் இருக்கை ஒதுக்கப்பட்டு அதில் அமர்ந்து இருந்தார். அதேநேரம் துணைத்தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர்கள் வரிசையில் அமரவைக்கப்பட்டார். 

    இதுதொடர்பாக சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதனைத்தொடர்ந்து துணைத்தலைவர் தனலட்சுமிக்கு நகராட்சித்தலைவர் அருகே இருக்கை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும், சீனிவாசன் எம்.எல்.ஏ., தான் பதிலளித்தார். இதனால் அவர்தான் கூட்டத்தை நடத்துவது போன்ற நிலை ஏற்பட்டது. நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பார்வையாளர்களாக மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிலை மாறி அவர் கூட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

    கூட்டத்தில் 19தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
    விருதுநகரில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மீது நிலமோசடி, கொலைமிரட்டல் வழக்கு போடப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 44). இவர் சாத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில்,  ராமுதேவன்பட்டியை சேர்ந்த நல்லதம்பி (55) என்பவர் தனது மனைவியின் பெயரில் உள்ள நிலத்தை விற்பதாக தெரிவித்தார். 

    இதையடுத்து அந்த நிலத்துக்கு தொகை பேசி அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை நல்லதம்பியிடம் கொடுத்தேன்.அதன்பின் அந்த நிலத்தின் உரிமை குறித்து விசாரித்தபோது நல்லதம்பி ஏற்கனவே அந்த நிலத்தை வேறொரு நபருக்கு விற்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் முன்பணத்தை திருப்பி தருமாறு நல்ல தம்பியிடம் கேட்டேன். 

    ஆனால் அவர் கொடுக்க மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தார். இதற்கு உடந்தையாக கோட்டையூரை சேர்ந்த தங்கதுரை (42) என்பவரும் இருந்தார். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனுவை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் மாவட்ட போலீ சாருக்கு உத்தரவிட்டது.

    அதன்பேரில் நல்லதம்பி, தங்கதுரை ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மோசடி புகாரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நல்லதம்பி அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஆவார். அவர் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி பங்குனி மாத அமாவாசை, பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நேற்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று திரளான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    பிரதோ‌ஷமான இன்று காலை பக்தர்கள் தாணிப் பாறை அடிவாரத்தில் இருந்து 7 மணிக்கு மலையேற அனுமதிக்கப்பட்டனர். பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. சுந்தர மகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவார பகுதியில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் பச்சிளம் குழந்தையுடன் பெண் படுத்திருந்த இரும்பு கட்டில் உடைந்து பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    அரசு ஆஸ்பத்திரி என்றாலே பொதுமக்கள் செல்ல தயங்கும் நிலையில் பல குறைபாடுகள் அங்குள்ளன. இதன் காரணமாக பலரும் அரசு மருத்துவமனைகளை தவிர்த்து கூடுதல் பணம் செலவானாலும் பரவாயில்லை என தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

    சுகாதார சீர்கேடு, போதிய கவனிப்பின்மை என அடுக்கடுக்கான புகார்களை அரசு ஆஸ்பத்திரி மீது பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் பச்சிளம் குழந்தையுடன் பெண் படுத்திருந்த இரும்பு கட்டில் உடைந்து பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அரசு ஆஸ்பத்திரியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் பரங்கிலி நாதபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி.

    இவர் 2-வது பிரசவத்திற்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 24-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    தொடர்ந்து மகப்பேறு பிரிவில் குழந்தையுடன் தங்கி முத்துலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு குழந்தையுடன் அவர் படுத்திருந்த இரும்பு கட்டில் திடீரென உடைந்து விழுந்தது.

    இதனால் கட்டிலில் படுத்திருந்த முத்துலட்சுமியும், குழந்தையும் கீழே விழுந்தனர். இதில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தைக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது குழந்தையின் தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தையும், தாயும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி கூறுகையில், பிறந்த குழந்தையை பார்க்க வந்த பெண்ணின் உறவினர்கள் கட்டிலில் அமர்ந்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் அவர்கள் அமர்ந்ததால் கட்டில் உடைந்து இருக்கலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து விசாரணை நடத்த உறைவிட மருத்துவர் டாக்டர் முருகேசன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணையை தொடங்கி உள்ளது.

    மகப்பேறு பிரிவில் 30 படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கைகளும் உறுதியாக உள்ளதா? என்பது குறித்து குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். அதன் பிறகு பழுதான கட்டில்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தை நலமாக உள்ளது. தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளது என்றார்.

    விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள்-மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர்.
    விருதுநகர்

    விருதுநகரிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 450 அரசு பஸ்கள் இயக் கப்பட்டு வருவது வழக்கம்.  இன்று வேலைநிறுத்தம் காரணமாக 90சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.

    விருதுநகர் அரசு பணிமனையில் இருந்து இன்று காலை 3 அரசுபஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பெரும்பாலான அரசு பஸ்டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பஸ்களை இயக்கு வதில் சிக்கல் ஏற்பட்டது. 

    வேலைநிறுத்தம் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் 400க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    விருதுநகர் பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்களில் இருந்து பஸ்கள் இயங்காததால் வெளியூர் மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள்  அவதியடைந்தனர்.

    வேலை நிறுத்தம் காரணமாக ஷேர்ஆட்டோக்கள் முழுமையாக இயக்கப்பட்டது. அரசு பஸ்கள் இல்லாததால் பொதுமக்கள் ஷேர்ஆட்டோவை நாடினர். அதிலும் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் பயணம் செய்வதை காண முடிந்தது. 

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில ஷேர்ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.சாத்தூர், சிவகாசி வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி. 

    காரியாபட்டி, பந்தல்குடி, மல்லாங்கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. இதனால் அந்தப்பகுதிகளில் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அதிக பயணகட்டணம் கொடுத்து அவர் கள் ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களில் இலவசமாக பயணம் செய்யும் பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்கள் கிடைக்காமல் தவித்தனர். 

    குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வத்திராயிருப்பு தாலுகாவில் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ& மாணவிகள் நாள்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருவார்கள். 

    இன்று வேலை நிறுத்தம் காரணமாக அவர்களால் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் பஸ்நிலையத் தத்திலேயே காத்திருந்தனர். இந்தப்பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் பயணிகளும், பொதுமக்களும் பஸ்கள் இயங்காததால் பணிக்கு செல்ல முடியாமல் தனியார் பஸ்கள் வரும் வரை காத்திருந்தனர். 

    ராஜபாளையத்தில் மொத்தமுள்ள 85 அரசு பஸ்களில் 80 பஸ்கள் இயங்க வில்லை. பணியாளர்கள் வராத காரணத்தினால் பணிமனையில் பஸ்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் எந்த பஸ்களும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. 

    பழைய பஸ்நிலையத்தில் தனியார் பஸ்கள் மட்டும் இயங்கியதால் ஓரளவு பயணிகள் ஏறி சென்றனர். பெரும்பாலான பஸ்கள் வராததால் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது. ராஜ பாளையத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் அம்பலபுளி பஜார், நகைக்கடை பஜார் போன்றவை மூடப் பட்டிருந்தன. பள்ளிகள், கல்லூரிகள், பஞ்சாலைகள், நூற்பாலைகள் வழக்கம்போல் இயங்கின.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் நகரப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 316 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இன்று 200 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற பஸ்கள் ஓடவில்லை.  

    இதனால் பணிக்கு செல்பவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பஸ் நிலையங்களில் நீண்டநேரம் காத்திருந்தனர். காலை நேரத்தில் குறைந்த பஸ்கள் இயக்கப்பட்டாலும், நேரம் செல்ல செல்ல வழக்கம்போல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் தெரிவித்தார். 

    சிவகங்கை மாவட்டத்திலும் இன்று குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. 50சதவீதத்திற்கும் குறைவான பஸ்களே ஓடின. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பல்வேறு பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் காத்திருப்பதை காணமுடிந்தது.
    ராஜபாளையம் அருகே சேத்தூர் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்தனர்.
    ராஜபாளையம், 

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் தேவர் பொது பண்டுக்கு பாத்தியப்பட்ட  ஏக்கலா தேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பொங்கலை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடத்த ஏற்பாடு  செய்யப்பட்டு 8  நாட்கள் திருவிழா நடைபெற்றது. 

    9வது நாளான நேற்று பூக்குழி திருவிழா நடத்தப்பட்டது. காலையிலேயே  குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு  பெண்கள் எண்ணெய் ஊற்றி வழிபாடு செய்தனர்‌. மாலையில்   ஏக்கலாதேவி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா கொண்டுவரப்பட்டது. 

    சப்பரத்தின் பின்புறம் தீ மிதிக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், முளைப்பாரி, ஆயிரம் கண் பானை, பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வல முடிவில் கோவில் முன்பு வளர்க்கப்பட்ட  குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.  500க்கும் மேற்பட்ட  ஆண்,  பெண் பக்தர்கள் கைக்குழந்தை களுடன் தீ மிதித்தனர். 

    இதற்கான ஏற்பாடுகளை சேத்தூர் தேவர் பொது பண்டு தலைவர் செல்லம் சிங்கம்புலி, செயலாளர் சுந்தரதாஸ், பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    பாதுகாப்பு ஏற்பாடுகளை சேத்தூர் போலீசார்  செய்திருந்தனர்.
    விருதுநகரில் இன்று துப்புரவு ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    விருதுநகர் 

    விருதுநகர் நகராட்சி வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளது. நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப இங்கு அடிப்படை வசதிகளின் தேவை அதிகரித்துள்ளது. நகராட்சியில் தூய்மை பணிக்காக 100 ஒப்பந்த தொழிலாளர்களும், 65 நிரந்தரதொழிலாளர்களும் உள்ளனர்.

    இவர்கள் இன்று காலை திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் விருதுநகர் பழைய பஸ்நிலைய பகுதியில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    விருதுநகர் நகராட்சியில் துப்புரவுபணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக சாலைகள், தெருக்கள் மற்றும் முக்கிய இடங்களில் குப்பைகள் தேங்கின.
    தேவகோட்டையில் சுகாதார பணிகளை நகரசபை தலைவர் ஆய்வு செய்தார்.
    தேவகோட்டை, 

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர்பகுதியில் நகர்மன்றத்தலைவர் சுகாதார பணிகளை ஆய்வு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    தேவகோட்டை நகராட்சியில் நகர்மன்றதலைவர் சுந்தரலிங்கம் நகரின் முக்கியவீதிகளில் சுகாதாரபணிகளை ஆய்வு செய்தார். கண்டதேவி சாலையில அமைந்துள்ள அகதிகள் முகாமில் மர்ம காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதனையறிந்த நகர்மன்றதலைவர் மருத்துவகுழு மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அகதிகள் முகாமிற்கு சென்று அங்குள்ளவர்களிடம் ரத்த பரிசோதனை முகாம் நடத்தி மர்ம காய்ச்சலுக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறார். 

    மேலும் நகரில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் தெரிவித்தால்  நகர்மன்ற தலைவர் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ×