என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ராஜபாளையத்தில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி கார்த்திக் (31)-முனீஸ்வரி தம்பதியர். இவர்களுக்கு குழந்தை இல்லை. முனீஸ்வரி ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கார்த்திக் ராஜபாளையத்தில் கூலி வேலை பார்த்துவந்தவர். தன்னுடன் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விரக்தியில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தூக்கு போட்டுதற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    விருதுநகர் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள மின் வயர்கள் திருட்டு போனது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி பகுதியில் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் இருந்த 2400 மீட்டர் மின்வயர்கள் மற்றும் பல கிலோ எடையுடைய செப்புகம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். 

    இதுகுறித்து சூலக்கரை மின்வாரிய உதவி பொறியாளர் முருகவேல் சூலக்கரை போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் வயர்கள், செப்பு கம்பிகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருடுபோன வயர், செப்பு கம்பியின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
    சிவகாசி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானார்கள்.
    சிவகாசி 

    சிவகாசி அருகே உள்ள நதிக்குடியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகள் கனகராணி(22). இவர் அங்குள்ள தனியார்மில்லில் வேலை பார்த்து வந்தார். 

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற கனகராணி பின்னர் வீடுதிரும்பவில்லை. பலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளை கோட்டையை சேர்ந்த மீனாட்சி(41) என்பவர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவுக்குச் சென்றபோது திடீரென மாயமானார். 

    இதுகுறித்து அவரது தாய் பரமேஸ்வரி (90) கொடுத்த புகாரின்பேரில் அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    விருதுநகர் அருகே 25 கிலோ பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.
    விருதுநகர்

    வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் (வயது 40), கிருஷ்ணசாமி (57). இவர்கள் இருவரும் அனுமதியின்றி 25 கிலோ உதிரிபட்டாசுகள், 30 சரவெடிகள், வெடி தயாரிக்கும் மூலப் பொருட்கள் ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது இதையடுத்து வெம்பக்கோட்டை போலீசார் அதனை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்த செந்தில்குமார் அனுமதியின்றி  38 குரோஸ் கருந்திரிகளை வைத்திருந்ததாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    சிவகாசியில் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை தொடங்குகிறது.
    ராஜபாளையம்

     தமிழ்நாடு 65வது சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் (ரோடு ரேஸ்) சிவகாசி அரசன் கணேசன் தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து நாளை (10ந்தேதி) காலை 7மணிக்கு தொடங்குகிறது. 

    விருதுநகர் சாலையில் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட சைக்கிளிங் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 

    போட்டிகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன்அசோகன், மாநில சைக்கிளின் கழகத் தலைவர் முருகானந்தம், சைக்கிளிங்கழக சேர்மன் திருப்பூர் ஜெயசித்ரா சண்முகம் மாநிலச் செயலாளர் கபடி ராஜா மற்றும் அரசன் பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் உள்பட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்
    விருதுநகரில் பிளஸ்-1 திருப்புதல் தேர்வு வினாத்தாள் உரியநேரத்தில் கிடைக்காததால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
    விருதுநகர்


    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. மொழிப் பாட தேர்வுகள் முடிந்த நிலையில் நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. விருதுநகர் மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 82 பள்ளிகளில் இத்தேர்வு களை மாணவ, மாணவிகள் எழுதினர்.

    வழக்கமாக தேர்வு வினாத்தாள் சென்னையிலிருந்து மாவட்ட கல்வி அலுவலருக்கு சி.டி. மூலம் அனுப்பப்படும். அதன்பின் பிரிண்ட் எடுக்கப்பட்டு உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். 

    விருதுநகர் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு வேதியியல் வினாத்தாள்களை அனுப்ப வேண்டிய நிலையில் 78 பள்ளிகளுக்கு மட்டுமே வினாத்தாள்கள் அனுப்பப் பட்டது. இதனால் சத்திரரெட்டியபட்டி, சூலக்கரை விருதுநகர்  ஆகிய பகுதிகளில் உள்ள 4 அரசு பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் கிடைக்கவில்லை.

    தேர்வு நேரம் கடந்த பின்பும் வினாத்தாள்கள் வராததால் குழப்பமடைந்த ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். அப்போது 4 பள்ளிகளுக்கு வினாத்தாள் கட்டு அனுப்பாது தெரியவந்தது. இதையடுத்து வினாத்தாள் இ-மெயில் மூலம் 4 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது. அவை ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு கொடுத்தபின் தேர்வுகள் தாமதமாக தொடங்கின.

    அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்து வினாத் தாள்களை அனுப்பாததால் 4 அரசு பள்ளிகளில் தேவை யற்ற குழப்பமும், மாணவ மாணவிகளுக்கு பதட்டமும் ஏற்பட்டது. எனவே இதனை தடுக்க இனிமேல் உரிய கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
    விருதுநகர், சிவகங்கையில் ரேசன் விற்பனையாளர்கள் பணி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 94 விற்பனையாளர்கள் மற்றும்  11 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு  கடந்த 26.11.2020 முதல் 15.12.2020 வரை நேர்முக தேர்வு நடந் தது. இந்த நிலையில் 25.8.2021 அன்று நடந்த கூட்டுற வுத்துறை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் பதிவாளர் கடிதத் தினை செயல்படுத்தும் வகை யில் 2020&ம் ஆண்டில் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பு வதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது-.

    இதேபோன்று சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் கோ.ஜினு விடுத்துள்ள செய்தி குறிப் பில், 2020ம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்துசெய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
    விருதுநகரில் 5 இடங்களில் நீர், மோர் பந்தலை அமைச்சர் திறந்து வைத்தார்.
    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனிபொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசியில் 5இடங்களில் நேற்றுகாலை நீர், மோர்பந்தல் திறக்கப்பட்டது. 

    விருதுநகர் மேற்குமாவட்ட அ.தி.மு-க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி நீர்,மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், தண்ணீர்பழம் மற்றும் இயற்கை பானங்களை வழங்கினார். 

    இந்தநிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.என். பாபுராஜ், சிவகாசி நகரசெயலாளர் அசன் பதூருதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    இதற்கான ஏற்பாடுகளை 3வது வட்ட  செயலாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் செய்திருந்தனர்.
    இளம்பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைதான சிறுவர்கள் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி இளைஞர் நீதிமன்ற குழும நீதிபதி உத்தரவிட்டார்.
    விருதுநகர்:

    விருதுநகரில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மதுரை மத்திய ஜெயிலிலும், பள்ளி மாணவர்கள் 4 பேர் சிறுவர்கள் என்பதால் மதுரையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

    இளம்பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதயப்பட்டிருந்தது. பின்னர் முதலமைச்சர் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.

    முதலில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகிய 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

    அவர்களை பாலியல் வன்கொடுமை நடந்த மருந்து குடோன் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து சென்றும் விசாரணை நடத்தினார்கள். அதில் பல்வேறு தகவல்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்தன. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள் 4 பேரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    போலீஸ் காவல் முடிந்து கடந்த 4-ந் தேதி ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல் மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள் 4 பேரிடம் அங்கு வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஹரிகரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் ஆகிய 8 பேருக்கும் நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இதற்காக அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு 5 மணி நேரம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மதுரை மத்திய ஜெயிலுக்கும், பள்ளி மாணவர்கள் 4 பேர் மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள் 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று விருதுநகர் சிறார் நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பு வக்கீல் மனு தாக்கல் செய்தார். அதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    இருந்தபோதிலும் சிறுவர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி இளைஞர் நீதிமன்ற குழும நீதிபதி மருதுபாண்டியன் உத்தரவிட்டார். இதையடுத்து சிறுவர்கள் 4 பேரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து இன்று விடுவிக்கப்படுகின்றனர்.
    அம்பேத்கார் பிறந்தநாள் விழாவையொட்டி வருகிற 19ந் தேதி பேச்சுப்போட்டி நடக்கிறது.
    விருதுநகர்

    அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, 19-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகலிலும் தனித்தனியே  பேச்சுப்போட்டிகள்  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளர்ச்சி மன்றக் கூட்டஅரங்கில் நடக்கின்றன.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000 ,  2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000 என்ற வீதத்திலும் பேச்சுத்திறனை சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் 2பேர் தனியாக தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2000  என்ற வீதத்தி-லும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டு வருகிறார் எனமாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
    சமூக விரோதிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    விருதுநகர்

    தென்மண்டல ஐ.ஜி.யாக அஸ்ராகார்க் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொறுப்பு ஏற்றார். இதையடுத்து அவர் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

    இந்த நிலையில் அவர் வாக்கி டாக்கி மூலம் போலீசாருக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை கூறும் ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது:

    ஒரு பகுதியில் தனிப்பிரிவு போலீசார் கொலை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்பும் பழிக்கு பழி கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தகவல் தெரிவித்த பின்பும் இவ்வாறு பழிக்குப்பழி கொலை சம்பவங்கள் நடந்தால் அந்த பகுதி இன்ஸ் பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தான் பொறுப்பேற்க வேண் டும். சம்பவம் நடந்த சூழலை பொறுத்து தேவைப்பட்டால் துணை போலீஸ் சூப்பிரண் டுக்கும் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    போலீசார் குற்றங்களின் தன்மையை பொருத்து தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழிக்குப்பழி கொலைகள் நடப்பதை தடுக்க வேண்டியது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பாகும்.

    தடை செய்யப்பட்ட லாட்டரி, மணல், கஞ்சா விற்பனை செய்வோர் மீது ஒருசில போலீசார் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் மீது முதல் நடவடிக்கையாக பணியிடமாற்றம், 2வது நடவடிக்கையாக சஸ்பெண்டு, 3&வது நடவடிக்கையாக குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும்.

    காவல்துறையில் 50 சதவீதம் முதல் 60 சதம் போலீசார் உரிய விதிகளை பின்பற்றி பணிகளை செய்து வருகிறார்கள். விதிகளை மீறி செயல்படும் போலீசார் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகள் காக்கப்பட வேண்டும்.

    பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டிய வர்கள், வேண்டாதவர்கள் என்ற பாரபட்சம்கூடாது. மனு மீது முறையான விசாரணை நடத்தினால்தான் பொது மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படும்.

    புகார்மீதான வழக்குகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தாமதம் செய்யக்கூடாது. குற்றவாளிகளுக்கு சாதகம் இல்லாமல் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    சைபர்கிரைம் போலீசாருக்கு 1930 என்ற அவசர எண் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டி.ஜி.பி‌ இது பற்றி சில போலீசாரிடம் கேட்டபோது அவர்களுக்கு அதுகுறித்த தகவல் தெரிய வில்லை‌. எனவே மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்த தகவல்களை போலீசார் அறிய நடவடிக் கை எடுக்கவேண்டும்.

    போலீசாருக்கு விடுமுறை வழங்குவதில் பாரபட்சம் கூடாது. சுழற்சி முறை சரியாக இருக்க வேண்டும். அதில் குழுவாக இணைந்து முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். அனைத்து போலீசாருக்கும் விடுமுறை சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    ஏதேனும் குறைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம். பிற மாவட்டங்களில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களையும் வாட்ஸ்அப் மூலம் என்னிடம் தெரிவிக்கலாம். போலீசார் மற்றும் உயர திகாரிகள் விதிமுறைகளை பின்பற்றி நடக்கின்றார்களா? என்பதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்
    முன்விரோதத்தில் தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 46). தேங்காய் வெட்டும் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

    இதனால் வடிவேலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் அவருடன் அவரது மனைவி பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணாநகர் காதி போர்டு காலனியை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார் (36). இவருக்கும், வடிவேலுவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அது தொடர்பாக கடந்த 2ந்தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது செந்தில்வேல் கத்தியால் வடிவேலை குத்தியுள்ளார். பின்பு கத்திக்குத்து காயத்துடன் வடிவேல் வீட்டிற்கு வந்து இருக்கிறார்.

    வயிற்றில் ரத்தக்காயம் இருந்ததை பார்த்து அவரது மகள் சரவண தேவி கேட்டுள்ளார்.

    அப்போது செந்தில்குமார் கத்தியால் குத்திவிட்ட தகவலை மகளிடம் வடிவேல் தெரிவித்திருக்கிறார். செந்தில்குமார் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் அவருக்கு பயந்து, அவர் கத்தியால் குத்தியது பற்றி போலீசில் கூறாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வடிவேலுவை சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் வடிவேலுவின் மகள் சரவணன் தேவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். வடிவேலை குத்திக் கொன்ற செந்தில்குமாரை கைது செய்தனர். முன்விரோதத்தில் தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×