என் மலர்tooltip icon

    வேலூர்

    கொரோனா பரவல் இன்னும் சில மாதங்கள் தொடர்ந்து இருக்கும் என்று உலக சுகாதார நிறுவன மருத்துவ அலுவலர் சுரேந்திரன் கூறினார்.
    ஆம்பூர்:

    கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மேற்கொண்டு வரும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள், மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்திரன் ஆய்வு செய்தார்.

    கொரோனா பரவலை தடுப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் செய்யப் பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை உரிய முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், வாலாஜா ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் அரசு மருத்துவமனையில் விரைவில் ஆய்வு செய்யப்படும்.

    கொரோனா தொற்று பரவல் இன்னும் சில மாதங்கள் தொடர்ந்து இருக்கும். அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், கை கழுவுதல் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வாலாஜா, ராணிப்பேட்டையில் அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் அதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக சு.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    வாலாஜா:

    ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் அதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக சு.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    இதனைதொடர்ந்து வாலாஜா ராணிப்பேட்டை நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகத்தில் சமைத்து வைத்திருந்த மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அம்மா உணவகத்திற்கு சாப்பிட வந்த பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கினார்.

    இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், நகர செயலாளர்கள் வாலாஜா மோகன், என்.கே.மணி, வாலாஜா முன்னாள் நகரமன்றத் தலைவர் வேதகிரி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி, அம்மா பேரவை பொருளாளர் எஸ்.எம். சுகுமார், ஒன்றிய செயலாளர் விகே.ராதாகிருஷ்ணன், அம்மூர் நகர செயலாளர் தினகரன், பொதுக்குழு உறுப்பினர் வலிஅகமது, வாலாஜா நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, ராணிப்பேட்டை நகர அவைத்தலைவர் குமரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வேலூரில் குஜராத்தில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தங்கவைத்து மருத்துவ பரிசோதனை செய்யவும் அவர்களை 14 நாட்கள் கண்காணிக்கவும் வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இங்கு வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தங்குவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    நேற்று வேலூரை சேர்ந்த 15 பேர் குஜராத் மாநிலத்திலிருந்து பஸ்சில் கிருஷ்ணகிரி வந்தனர். அவர்கள் ஒருவாரம் அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்று அவர்கள் பஸ் மூலம் வேலூர் வந்தனர். அவர்களை வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது ரத்தம் சளி ஆகியவை பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

    குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வயிற்றில் ஈரத் துணி கட்டிக்கொண்டும், வயிற்றில் அடித்துக் கொண்டும் போராட்டம் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வயிற்றில் ஈரத் துணி கட்டிக்கொண்டும், வயிற்றில் அடித்துக் கொண்டும் போராட்டம் செய்தனர்.

    இந்த போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கோட்டீஸ்வரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செந்தமிழ் சுர்ஜித், செல்வகுமார், சுப்பிரமணி, ராஜேந்திரன், மதன், செந்தமிழ் செல்வி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக அரசு ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதை கண்டித்தும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கி வேலையில்லா இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    காட்பாடி அருகே கோயம்பேடு வியாபாரி மூலம் தாய்க்கும் கொரோனா பரவியதால் வேலூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

    காட்பாடி அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வியாபாரத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பினார்.

    அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் வாலிபரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது இன்று உறுதியானது. அவருக்கு 55 வயதாகும். கோயம்பேடு சென்றுவிட்டு வந்த வாலிபர் மூலம் அவரது தாயாருக்கு கொரோனா பரவியதாக தெரிவித்துள்ளனர்.

    எர்த்தாங்கல் கிராமம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் செய்து வருகின்றனர். மேலும் அங்கு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.

    காட்பாடியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலி உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி வஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 28). கடந்த 10-ந் தேதி விருதம்பட்டு சர்க்கார் தொப்பு பலாற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலத்தின் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    போலீஸ் விசாரணையில் சுனிலை அவரது கள்ளக்காதலி வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்து ஆற்றங்கரையோரம் வீசிச் சென்றது தெரியவந்தது.

    மேலும் சுனிலின் கள்ளக்காதலி கோகிலா மாயமானார்.

    டி.எஸ். பி துரைபாண்டியன் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இந்த கொலை சம்பந்தமாக ஆற்காட்டை சேர்ந்த மணிகண்டன் (28), காங்கேயநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் (27) ஆகியோரை கைது செய்தனர். கணவரை பிரிந்து வாழ்ந்த கோகிலாவுக்கு சுனிலுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது கடந்த 5 ஆண்டுகளாக சுனில் கோகிலாவின் வீட்டிற்கு வந்து சென்றார்.

    சுனில் கோகிலாவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதனால் மனமுடைந்த கோகிலா இதுபற்றி அவருடைய கணவரின் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

    அவர்கள் மூலம் கோகிலா தனது வீட்டுக்கு வந்த சுனிலை வெட்டிக் கொலை செய்தனர். கொலையை மறைப்பதற்காக சுனிலின் உடலை பாலாற்றங்கரையில் தூக்கி வீசி விட்டு சென்று விட்டனர்.

    கோகிலா தனது வீட்டில் தரையில் படிந்திருந்த ரத்த கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். போலீசார் தலைமறைவான கோகிலாவை தேடி வந்தனர். மேலும் சுனில் உடலை ஆற்றங்கரைக்கு தூக்கிச் செல்வதற்கு கோகிலாவின் தந்தை முத்து உடந்தையாக இருந்துள்ளார்.

    இதனையடுத்து போலீசார் முத்துவை கைது செய்தனர், மேலும் தலைமறைவாக இருந்த கோகிலாவை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    வேலூரில் சாராயம் கடத்திய 14 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சாராயத்தை அழித்ததோடு, மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சிலர் லாரி டியூப்களில் சாராயம் கடத்திச் சென்றவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஊசூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 23), அத்திரியூரை சேர்ந்த தினேஷ் (27), அருப்பமேடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (41), சேண்பாக்கம் ஜீவாநகரை சேர்ந்த சுரேஷ் (35), சாந்தாராம் (29), தோட்டப்பாளையத்தை சேர்ந்த ஜெகன் (30) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள், 100 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாராயம் கடத்தியதாக சுனில், மேகநாதன், இலக்கிய செல்வன், தினகரன், சத்தியராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 285 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்ததோடு, ஒரு மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேலப்பாடியை சேர்ந்த அருள் (25), வேலூரை சேர்ந்த ஜெயக்குமார் (42), கலங்கமேடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (24) ஆகியோர் லாரி டியூப்களில் சாராயம் கடத்தினர். 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயம், ஒரு மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    வேலூரிலுள்ள மண்டி வீதி, நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் பழைய முறையே பின்பற்றப்படும் என்றும், லாங்கு பஜார், சாரதி மாளிகை, பர்மா பஜார் போன்ற பகுதிகளில் கடைகள் திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வேலூர்:

    கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தில் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 34 வகையான கடைகள் இயங்க திங்கட்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகரம், மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களிலுள்ள அனுமதிக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    அதேசமயம் வேலூரிலுள்ள மண்டி வீதி, நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் பழைய முறையே பின்பற்றப்படும் என்றும், லாங்கு பஜார், சாரதி மாளிகை, பர்மா பஜார் போன்ற பகுதிகளில் கடைகள் திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவற்றில் பணிபுரிபவர்கள் நலன் கருதி இந்தப் பகுதிகளில் கடைகள் திறக்க அனுமதி அளித்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம நடத்தப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட தலைவர் ஞானவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேலூர் மாநகரின் வணிகம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மண்டி வீதி, நேதாஜி மார்க்கெட், லாங்கு பஜார், பர்மா பஜார், சாரதி மாளிகை ஆகியவை அமைந்துள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமுடக்கத்தில் தளர்வு செய்யப்பட்டு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கடைகளை மட்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இந்தப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    ஏற்கனவே மார்ச் 22-ந் தேதி முதல் இந்தப் பகுதிகளிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் கடை வாடகை, குடும்ப பணியாளர்களுக்கு ஊதியம், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் வணிகர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    எனவே வணிகர்களின் நலன் கருதி மண்டி வீதி, நேதாஜி மார்க்கெட், லாங்கு பஜார், பர்மா பஜார், சாரதி மாளிகை ஆகிய பகுதிகளிலும் நேரக்கட்டுப்பாட்டுடன் கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.

    திறக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்பாடு ஆகியவை முறையாக பின்பற்றப்படும். இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குடியாத்தம் நகராட்சி பகுதியில் முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்தவர்கள், வாகனங்களில் சென்றவர்கள், பொதுமக்களிடம் தலா 100 ரூபாய் அபராதம் என 46 பேரிடம் ரூ.4,600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் நகராட்சி ஆணையாளர் எச். ரமேஷ் தலைமையில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது குறிப்பாக முழு சுகாதாரம், கிருமி நாசினி தெளித்தல், வாகனங்கள் மூலம் பிரசாரம், துண்டு பிரசுரம் ஆகியவற்றை வழங்கியும் முக கவசம் அணிவது குறித்து வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத நகராட்சியாக குடியாத்தம் நகராட்சி உள்ளது.

    இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மே 11 ஆம் தேதி முதல் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் ஆகியோருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என துண்டு பிரசுரங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், நகராட்சி சுகாதார அலுவலர் பொறுப்பு பாண்டி செந்தில்குமார் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்தவர்கள், வாகனங்களில் சென்றவர்கள், பொதுமக்களிடம் தலா 100 ரூபாய் அபராதம் என 46 பேரிடம் ரூ.4,600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    தொடர்ந்து முக கவசம் அணிவது குறித்து வலியுறுத்தப்படும் முக கவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச். ரமேஷ் தெரிவித்தார்.

    குடியாத்தம் அருகே காலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற அரசு டாக்டரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் பிச்சனூர் தலையாரி முனிசாமி தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் யுவராஜ் வயது 28 இவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு பலமனேர் சாலை வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் இவரை உரசியபடி சென்றுள்ளனர். இதை அவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களும் டாக்டர் யுவராஜ் தாக்கி மிரட்டி உள்ளனர்.

    இதனையடுத்து டாக்டர் யுவராஜ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப் இன்ஸ்பெக்டர் பாலவெங்கட்ராமன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து டாக்டர் யுவராஜை தாக்கியதாக குடியாத்தம் அடுத்த பீமன் பட்டியை சேர்ந்த குபேந்திரன் (வயது 25), செருவங்கியை சேர்ந்த லோகேஷ் குமார் (24), சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன் (26) ஆகிய 3 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூரில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு சட்டப் பிரிவுகளின்படி ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    ஆம்பூர்:


    திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் சில நிபந்தனைகளுடன் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது.

    கடைகளில் பணிபுரிபவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம், கையுறை அணிய வேண்டும்.

    கிருமிநாசினியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். சமுக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருள்களை வழங்கக் கூடாது.

    பொதுமக்கள் வந்து செல்லும் கடை மற்றும் அந்த பகுதிகளை கிருமிநாசினி கொண்டு தினமும் 5 முறை சுத்தம் செய்ய வேண்டும்.

    வீட்டிலிருந்து வெளியில் செல்லும் பொதுமக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

    விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கொள்ளை நோய் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டங்களின்படி உரிய அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு சட்டப் பிரிவுகளின்படி ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    வாணியம்பாடியில் ஆய்வு செய்த நகராட்சி ஆணையர், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகக் கூறி வியாபாரிகள் வைத்திருந்த பழங்களை சாலையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    வாணியம்பாடி:

    தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அனைத்து வகையான கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கடைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

    அவ்வகையில், வாணியம்பாடியில் பெரும்பாலான கடைகள் செயல்படத் தொடங்கிய நிலையில் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது பழக்கடைகளில் ஊரடங்கு விதியை பின்பற்றவில்லை எனக் கூறி பழங்களை சாலையில் கொட்டினார்.  தள்ளுவண்டி கடைக்கு சென்று, அங்கு தனி மனித இடைவெளியை பின்பற்றவில்லை எனக் கூறி வாழைப்பழங்களை எடுத்து தரையில் வீசினார். விற்பனைக்கு வைத்திருந்த பழங்களோடு தள்ளுவண்டியை கவிழ்த்தார். 

    சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அவர் இவ்வாறு நடந்துகொண்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

    இந்த வீடியோ சமூக வலைத்தத்தில் வெளியாகி, பலரும் அவரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் விளக்கம் அளித்ததுடன், வருத்தமும் தெரிவித்துள்ளார். 

    ‘பல முறை எடுத்துக் கூறியும் வியாபாரிகள் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. சென்னை கோயம்பேடு மார்க்கெட் போல் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவக்கூடிய நிலை வாணியம்பாடி பகுதியிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் இப்படி செய்துவிட்டேன். இது எனக்கே கஷ்டமாக இருந்தது. இதற்காக வருந்துகிறேன்’ என அவர் கூறியுள்ளார்.

    ×