என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பில் ஒரு நாள் உச்ச கட்டமாக 700 பேர் வரை பாதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்தது.
தற்போது கொரோனா 2-வது அலை பரவல் குறைந்து வருகிறது. கொரோனா 3-வது அலையின் தாக்கம் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
2-வது அலையால் பொதுமக்களின் உடலில் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்புத் திறனை அறிய ‘சீரோசர்விலன்ஸ்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.
இதற்கான பட்டியலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.சி.எம்.ஆர்.) மாவட்ட சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 30 இடங்களில் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் முதல், 2-வது மண்டலங்களில் தலா 3 இடங்களிலும், 3-வது மண்டலத்தில் ஒரு இடத்திலும் பரிசோதனை செய்ய ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.
இதையொட்டி, மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரிடம் இருந்து ரத்த மாதிரி சேகரித்து வருகின்றனர். 30 இடங்களிலும் 30 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அங்கு ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு பொதுமக்களின் நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியப்படும்.
முதற்கட்ட பரிசோதனையில் வேலூர் மாவட்டத்தில் நோய் எதிர்ப்புத் திறன் 33 சதவீதம் பேருக்கும், 2-வது கட்ட பரிசோதனையில் 32 சதவீதம் பேருக்கும் உருவாகியிருந்தது.
தற்போது 3-வது கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாள்கள் இந்த ரத்த மாதிரி சேகரிப்புப் பணி நடைபெறும்.
இந்த பரிசோதனை அடிப்படையில் மக்களின் நோய் எதிர்ப்பு திறன் அறியப்பட்டு 3-வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என கணக்கீடு செய்யப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூரை அடுத்த ஊசூரில் ஆயுர்வேதம், யுனானி மருத்துவம் படித்து விட்டு அலோபதி முறையில் சிகிச்சை அளிப்பதாக வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மினுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் அணைக்கட்டு மருத்துவ அலுவலர், மருந்துகட்டுப்பாட்டு அலுவலர், கிராமநிர்வாக அலுவலர் மற்றும் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஊசூர் பகுதியில் உள்ள கிளினிக்குகளில் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது ஊசூர் கிருஷ்ணாநகரில் உள்ள ஒரு கிளினிக்கில் நடத்திய சோதனையில், வேலூர் தொரப்பாடியை சேர்ந்த விஜயராஜ் (வயது 41) என்பவர் ஆயுர்வேத மருத்துவம் படித்து விட்டு அலோபதி முறையில் சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.
அதையடுத்து அந்த கிளினிக்கை பூட்டி வருவாய்த் துறையினர் ‘சீல்' வைத்தனர். ஆயுர்வேத முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது குறித்து விஜயராஜிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் கொசப்பேட்டை, நல்லான்பிள்ளை 2-வது தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 31). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வேலைக்கு போகாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டுள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அய்யப்பன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அடுத்த நம்பிராஜபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் அஜித் (வயது 23). இவர் சம்பவத்தன்று தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் காட்டுப்புத்தூர் நோக்கி சென்றார்.
காட்டுப்புத்தூர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கும் அதன்பிறகு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதுகுறித்து அரியூர் போலீசில் அவரது மனைவி சிம்ரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 46,826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,317 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 474 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1035 பேர் பலியாகியுள்ளனர். 2-வது அலையில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த வாரம் 250-க்கு கீழ் இருந்தது. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
ஊரடங்கு தளர்வு நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வரவேண்டாம். இதனால் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.
அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கிராமப்புற பகுதிகளிலும் முன்எச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றியப்பகுதிகளில் ஒருநாளைக்கு 2 கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டும். தடுப்பூசி இருப்புகளை பொருத்து தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆரணி தாலுகா விலை கிராமம் பிள்ளையார் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 44). இவரது மகன் சந்துரு. இவரின் உறவினர் பெண் ஒருவருக்கு வேலூர் பாகாயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
குழந்தையை பார்க்க சந்துரு நேற்று முன்தினம் பாகாயம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றார். வேலூர் அருகே சந்தனகொட்டாய் என்ற பகுதியில் சென்றபோது, அந்த வழியாக எதிரே வந்த ஒரு மினிலாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே சந்துரு தூக்கி வீசப்பட்டு பலியானார்.
இந்த விபத்து குறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பொய்கை மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 53). கட்டிட மேஸ்திரி. ராணுவத்தில் வேலை செய்துவந்த இவரது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த ஸ்ரீதர் அவரது நண்பரை பார்க்க மேல்பாடி அருகே உள்ள திகுவப்பள்ளி என்ற பகுதிக்கு சென்றிருந்தார். அங்கும் மகன் இறந்த சோகத்தை மறக்க முடியாமல் இருந்த அவர், நேற்று அங்குள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த மேல்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீதர் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 46,721 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,277 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 413 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1031 பேர் பலியாகியுள்ளனர். 2-வது அலையில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த வாரம் 250-க்கு கீழ் இருந்தது. ஆனால் 2 நாட்களாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று 19 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
ஊரடங்கு தளர்வு நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வரவேண்டாம். இதனால் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.
அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 30 பேரின் மாதிரிகள் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறிய சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கிருந்து பெங்களூரில் உள்ள மத்திய சோதனை ஆய்வகத்துக்கு 30 பேரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
ராணிப்பேட்டையில் இதுகுறித்து வேலூர் சுகாதார அதிகாரிகள் கூறுகையில்:-
வேலூரில் இருந்து கொரோனா நோயாளிகள் 30 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த வகையான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதற்காக அவை அனுப்பி வைக்கப்பட்டது.
ஆய்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் யாருக்கும் டெல்டா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் டெல்டா வைரஸ் பாதிப்பு இல்லை. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது குடியாத்தம் பகுதியில் உள்ள சில ரேஷன் கடைகளில் இந்த மாதம் 25-ந் தேதி ஆகியும் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு விநியோகம் செய்யவில்லை.
இது குறித்து பொதுமக்கள் பல முறை ரேஷன் கடைக்கு வந்து பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்த மாதம் முடிய ஒரு சில தினங்களே இருப்பதால் இந்த மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டால் ஓரிரு தினங்களில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வர வாய்ப்புள்ளதாகவும், அதன்பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். ஆனால் ஓரிரு தினங்களே இருப்பதால் இந்த மாதம் ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைப்பது சந்தேகமே என கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இம்மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேலூர்:
பெட்ரோல் டீசல் விலை இந்த மாதத்தில் 12-வது நாளாக விலை ஏற்றம் அடைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.6 எனவும் பிரிமியம் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.104.2 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் டீசல் 94.03 க்கு விற்பனையானது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.84 க்கு விற்பனையானது. டீசல் ரூ.94.78 ஆக இருந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.4, டீசல் ரூ.94.01ஆகவும் இருந்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி உள்ளது.பெட்ரோல் ஒரு லிட்டர் 99.88, டீசல் ரூ.93.86 ஆக இருந்தது.
பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேல் ஆகவும், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிச் சென்று கொண்டிருப்பது தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட பல தரப்பினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.இந்த விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் விரைவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






