என் மலர்
வேலூர்
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த நாகல் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஒலக்காசி பாலாற்றில் இருந்து மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மணலுடன் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தி வந்த ராமாலை காந்தி கணவாய் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூர் கோட்டை பூங்கா, அமிர்தி சிறு வனஉயிரின பூங்கா மற்றும் மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களும் மூட உத்தரவிடப்பட்டது.
வேலூர் கோட்டை பூங்கா எப்போதும் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் காரணமாக நேற்று வேலூர் கோட்டை பூங்காவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு வந்த பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர். மேலும் பூங்கா பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் பூங்கா, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அனைத்து பூங்காக்களும் நேற்று மூடப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோட்டை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 63). ஓய்வுபெற்ற பெல் அதிகாரி. இவர் கடந்த 1-ந் தேதி மதியம் ஸ்ரீராம் நகரில் உள்ள சாவு வீட்டுக்கு சென்றார். வீட்டில் அவரது சித்தப்பா மட்டும் இருந்தார். அந்த நேரத்தில் இவரது வீடு புகுந்து லாக்கரில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பிச்சாண்டியின் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
இதில் பிச்சாண்டி வீட்டில் வேலை செய்து வந்த பர்வீன் (வயது 25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
பர்வீன் அவரது உறவினர் பெண்ணுடன் சேர்ந்து நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. பர்வீன் சொந்த ஊர் ஆற்காடு. அவரது கணவருடன் தகராறு காரணமாக வள்ளலார் தண்ணீர் தொட்டி அருகே உள்ள உறவினர் நஷீர் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார்.
அங்கிருந்து பிச்சாண்டி வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளை செய்து விட்டு செல்வார். சம்பவத்தன்று பிச்சாண்டி குடும்பத்தினர் வெளியே சென்றது குறித்து அவரது உறவினர் பஷீரின் மனைவி பானு (40) என்பவரிடம் கூறினார். இருவரும் சேர்ந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.
பிச்சாண்டி வீட்டுக்கு வந்த இருவரும் லாக்கரில் இருந்த 30 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் பணத்தை கட்டைப் பையில் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். இந்த தகவலை அறிந்த போலீசார் பர்வீன், பானு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சச்சின் குமார் உத்தரவின்படி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் ஏட்டுகள் நரசிம்மராஜ், ஸ்ரீதர், இளையபாரதி, பிரின்ஸ்குமார் சிங் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து விழுப்புரம் செல்லும் புருலியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயிலில் எஸ்.5 பெட்டியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் சேலம் மாவட்டம் சேவபேட்டை, பங்களா தெருவை சேர்ந்த ரவி (வயது 40). வெள்ளி வியாபாரி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.
அதில், கட்டுக்கட்டாக பணம், மற்றும் வெள்ளி கட்டிகள் இருந்தது. ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் ரவியிடம் இல்லை. இதையடுத்து, அவரிடமிருந்த 17 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.4¼ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதற்குள் ரெயில் வாலாஜாபேட்டையை நெருங்கியது. பறிமுதல் செய்த வெள்ளி கட்டிகள், பணத்துடன் ரவியை போலீசார் காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அகரம் புதுமனை கிராமத்தைச் சேர்ந்தவர் சூரிமுத்து (வயது 70). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலா (45) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சூரி முத்துவிற்கு அவரது மனைவி நிர்மலா மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சூரிமுத்து மனைவியுடன் சண்டை போட்டு விட்டு விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டார். அங்கு சூரிமுத்து அவருடைய உறவினர் காந்தராஜ் மற்றும் ஒருவர் என 3 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அடிக்கடி தகராறு செய்ததால் கணவரை கொலை செய்ய நிர்மலா திட்டமிட்டார்.
இதற்காக கணவருக்கு உணவு சமைத்து அதில் விஷம் கலந்தார். பின்னர் விஷம் கலந்த உணவை எடுத்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றார்.
இந்த உணவை சூரி முத்து அவருடைய உறவினர் காந்தராஜ் எடுத்து சாப்பிட்டனர். அப்போது அங்கு வந்த ஒருவர் உணவில் விஷ வாடை வருவதாக கூறினார். இதையடுத்து இருவரும் அந்த உணவை மீண்டும் முகர்ந்து பார்த்த போது உணவில் விஷம் கலந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர்களது. உடல்நிலை மிகவும் மோசமானது. இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு சூரிமூத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் தொடர்ந்து தகராறு செய்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்து உணவில் விஷம் கலந்து நிர்மலா கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நிர்மலாவை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனார். 24 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,035 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46,593 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,095 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது சுமார் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. எனவே பொதுமக்கள் அருகில் உள்ள பகுதியில் நடக்கும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர், மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிண்டு என்ற இளங்கோவன் (வயது 45). இவர் வேலூர் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியின் தந்தை இளங்கோவனிடம் கேட்டபோது, அவரை இளங்கோவன் ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தரப்பில் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.
வேலூர்;
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பாலு (வயது 40). என்பவர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். இவர் இன்று அதிகாலை மார்க்கெட்டுக்கு சென்றார்.
ரவுடிக் கும்பலை சேர்ந்த 3 பேர் அவரை மடக்கி மாமுல் கேட்டனர். அவர் தருவதற்கு மறுத்ததால் ரவுடி கும்பல் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கத்தியால் பாலுவின் தலையில் வெட்டினர்.
இதில் பாலு பலத்த காயமடைந்தார். தொடர்ந்து ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் பாலுவை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் நேதாஜி மார்க்கெட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தினமும் ரவுடி கும்பல் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூல் செய்து வருகின்றனர். பணம் தராத வியாபாரிகளை தாக்கும் சம்பவங்கள் தினந்தோறும் நடந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில்;
நேதாஜி மார்க்கெட் அருகில் டீக்கடை ஒன்று உள்ளது. அதன் அருகே உள்ள ஒரு சந்தில் அதிகாலையில் 4 பேர் கும்பல் வருகின்றனர். அவர்கள் அந்த வழியாக செல்லும் வியாபாரிகளை மிரட்டி செல்போன் பறித்து செல்கின்றனர். மேலும் சிலரிடம் பணத்தையும் பறிக்கின்றனர். ரவுடி கும்பல் வழிப்பறி செய்யும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.ரவுடி கும்பல் அட்டகாசத்தால் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் அத்து மீறி செயல்படும் ரவுடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
குடியாத்தம் தாலுகாவில் இருந்து அணைக்கட்டு தாலுகாவுக்கு அகரம்சேரி வழியாக டிப்பர் லாரியில் மணல் கடத்தி செல்வதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் ராஜி, மணிவண்ணன், விநாயகம் ஆகியோர் நேற்று அதிகாலை 3 மணியளவில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அகரம்சேரியில் இருந்து பள்ளிக்குப்பம் வழியாக ஒரு டிப்பர் லாரி வந்தது. அந்த லாரியை போலீசார் மடக்கி அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் ஒடுகத்தூரை அடுத்த வண்ணான்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம், பெரியசாமி என்றும், மாதனூரைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ராம்குமார் என்றும், அவர்கள் டிப்பர் லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் எழுத்து தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அரசு தேர்வுத் துறை சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தனித்தேர்வு மற்றும் மதிப்பெண் பெற தேர்வு (துணைத்தேர்வு) எழுதுவதற்கு விண்ணப்பித்து வந்தனர். கடைசி நாளான நேற்று வரை வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 துணை தேர்வு எழுதுவதற்கு 141 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்கள் பிளஸ்-2 அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டும். தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது.
விண்ணப்பிக்க தவறிய தேர்வர்கள், சிறப்பு அனுமதி (தட்கல்) திட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஆன்லைனில் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தை பசுமையாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோடை காலங்களில் வேலூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதற்கு போதிய மரங்கள் இல்லாதது ஒரு காரணமாகும். வேலூர் மாநகர் பகுதிகளில் உள்ள மலைகளில் விதைப்பந்துகள் தூவி பசுமையாக்கும் முயற்சியில் சத்துவாச்சாரியை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாநகர் பகுதிகளில் உள்ள மலைகளில் மரங்கள் இல்லை. தற்போது மழைக்காலம் என்பதால் விதைப்பந்துகள் தூவினால் அவை முளைத்து மரங்கள் வளரும். எனவே ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து மாவட்டம் முழுவதும் உள்ள மலைப்பகுதிகளில் அவற்றை தூவ உள்ளோம். இதற்காக இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் விதைப்பந்துகள் வனப்பகுதி மற்றும் மலைகளில் வீசப்படும் என்றார்.
காட்பாடி சட்டசபை தொகுதி வடக்கு ஒன்றிய தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் பொன்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-
நான் இந்த தொகுதியில் 71-ம் ஆண்டு முதல் மகத்தான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று வருகிறேன். குறிப்பாக மேல்பாடி, பொன்னை பிர்கா தி.மு.கவின் கோட்டை என்பேன்.
ஆனால் இந்தமுறை கிட்டதட்ட 6 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி விட்டோம். காட்பாடி யூனியன் கிராமங்களில் பெரும்பாலான பூத்களில் ஓட்டு எண்ணும்போது நாம் பின் தங்கிதான் இருந்தோம். நமது தி.மு.க. நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலைகள் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். அப்படி யாரெல்லாம் உள்ளடி வேலைகள் செய்தார்களோ அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. என்னை தோற்கடிக்க வேண்டும் என நினைத்தார்கள்.
ஆனால் இறைவன் அருளால் நான் வெற்றி பெற்று விட்டேன். இப்போது அவர்களுக்கும் நான்தான் அமைச்சர்.

காட்பாடி யூனியன் என்னை கைவிட்டது என்ற மெத்த வருத்தம் எனக்கு உள்ளது. ஆனாலும் காட்பாடி தாராபடவேட்டிலிருந்து விருதம்பட்டு வரைக்கும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓட்டுகள், ஒருவழியாக உருட்டிபெறட்டி கடைசியில் தபால் ஓட்டுகளில் தான் நாம் வெற்றி பெற்றோம் என சொல்லலாம்.






